5.2 இடைக்காலத்திய இசைக் கலைஞர்கள்

    சங்க     இலக்கியத்தை     அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரத்தில் ஆடலாசிரியர், யாழாசிரியர்,குழலாசிரியர், தண்ணுமை ஆசிரியர்களின் அமைதி பற்றி அறிகிறோம். பதினெண் கீழ்க்கணக்கு நூற்களிலும் இசைக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாண - (கைந்நிலை, 48 : 3)
கொன்றைக் குழலூதிக் கோவலர்      - (ஐந்திணை எழுபது, 22 : 1)

    இவற்றிலிருந்து  யாழ்ப்பாணர்   பற்றியும் குழலூதிக்கோவலர்கள் ஆநிரைகளைக் காத்தமையையும் அறியலாம்.

     பெருங்கதையின் காப்பியத்தலைவனான உதயணனும் தலைவியான     வாசவதத்தையும்     இசைக் கலையில் வல்லவர்களாக விளங்கியுள்ளனர். யசோதர காவியத்தில் குணவதி என்ற பெண் சிறந்த இசைக் கலைஞராக விளங்கியுள்ளாள். சீவக சிந்தாமணியில் அரசன் சீவகனும் காந்தருவதத்தையும் இசைக் கலைஞர்களாக உள்ளனர். பெரியபுராணத்தில்     ஆனாய நாயனார் குழலிசைக் கலைஞராக விளங்குகிறார்.

    புருவம் ஏறாது, கண் ஆடாது, கண்டம் விம்மாது, பல் தோன்றாது, வாய் திறந்து பாடுகிறாளா அல்லது யாழ் தன் நாவை அசைத்துப் பாடியதோ என்று ஐயுறுமாறு யாழோடு    சைத்த     காந்தருவதத்தையைப் பற்றிச் சீவக சிந்தாமணி குறிப்பிட்டுள்ளது. (காந்தரு. 658)

    கி.பி.ஏழாம் நூற்றாண்டில் எழுதப் பெற்ற குடுமியான் மலைக் கல்வெட்டு பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சிறந்த     இசைக் கலைஞனாக     விளங்கியமையை உணர்த்துகிறது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இசைக் கலைஞர்கள், பிடாரர்கள், உடுக்கை, மத்தள இசைக் கருவிகள் இசைப்போர், தளிச்சேரிப் பெண்டுகள் பற்றி உரைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இராசராசன்     காலத்தில்     திருவாரூர்க்     கல்வெட்டு இயற்புலவர்கள் பொருளமைந்த பாடலைப் படைப்பர் என்றும் இசைக் கலைஞர்கள் அப்பாடல்களைப் பாடி மகிழ வைப்பர் என்றும் குறிப்பிடுகின்றது.
 

இயற் புலவரேய் பொருள் வைப்பார் இசைப் பாணரே கடஞ் செய்வார்

    பக்தி இலக்கியப் பாவலர்கள் சிறந்த இசைக் கலைஞர்களாக விளங்கியுள்ளனர். பண்ணிசைப் பாடலால் பரமனை     மகிழ வைத்துள்ளனர். ஞானசம்பந்தரோடு திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியாரும் சேர்ந்து இசை மழை பொழிந்தமையையும் வைணவத்தில் திருப்பாணாழ்வாரையும் காணலாம்.

    இடைக்காலத்தில் மன்னர்களும், அரசியரும், பக்தி இயக்கப் பாவலர்களும்     இசைக் கலைஞர்களாக விளங்கியுள்ளனர்.