1.2 கரணம்

    கரணம் என்ற சொல் இயக்கம் அல்லது செய்கை என்றும் பொருள் தரும். இதனைச் சொக்கம் என்றும் சுத்த நிருத்தம் என்றும் கூறுவர். தோப்புக் கரணம், குட்டிக் கரணம், கரணம் தப்பினால் மரணம் என்ற வழக்காறுகள் செய்கை என்ற பொருளில் வரும் கரணத்தோடு இணைந்த சொற்களாக அமைந்துள்ளன. உடல் உறுப்புகளால் செய்யும் செய்கை கரணம் என்று அழைக்கப்படுகின்றது. குறிப்பாக, கரணங்கள் செய்யப்படும் செய்கையைக் குறிக்கும். கர+அண்+அம் = கரணம். கரணத்தால் செய்யப்படும் செய்கைகள் என்று தமிழிசைக் கலைக் களஞ்சியத் தொகுதி II (V.45) விளக்கம் உரைக்கின்றது.

1.2.1 கரண வகைகள்

    கரணங்கள் நீண்ட பயிற்சியின் அடிப்படையில் உடலை வருத்திச் செய்யக் கூடிய ஒன்றாகும். இவ்வகையில் அமையும் கரணங்கள் 108 ஆகும். வர்த்திகம், பாதாபவித்தகம், இலளிதம், உன்மந்தகம், விருச்சிகம், லதாவிருச்சிகம், விருச்சிகரேசிதம் என 108 கரணங்கள் உள்ளன. சிதம்பரத்தில் ஆடல் வல்லான்கோயில் கோபுரத்தில் இந்த 108 கரணங்கள் ஒரு பெண் ஆடும் நிலையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    தஞ்சை, கும்பகோணம் கோயில்களில் இவ்வகைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் 81 கரணங்கள் மட்டும் காணப்படுகின்றன. சிதம்பரம் கோயில்     சிற்பங்களில்     அவற்றின்     பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டு :

(1) தலபுட்பபுடம் - என்பது மலர்களால் வழிபடுதல் என்று     பொருள்படும். (2) வர்த்திதம் என்பது ஒருவகைக் கரணமாகும். இருமணிக்     கட்டுகளை வளைத்துத் தொடையின் பக்கத்தில் கைகளைத்     தொங்க விடும் நிலையில் தோன்றும். (3) சமநகம் என்பதும் கரண வகைகளுள் ஒன்றாகும். கால்     நகங்களை நேராகத் தெரியும்படி வைத்து, கொடி போலத்      துவண்டு தொங்குகிற கைகளுடன், உடல் வளையாமலும்     நிமிராமலும் இயல்பாக இருக்கும் நிலையில் இக்கரணம்      தோன்றும்.

இவை போல ஏனைய கரணங்களும் அமையும்.