3.1 பரத நாட்டியம்

    பரத நாட்டியம் செவ்வியல் ஆடல் வகையைச் சேர்ந்த நடனமாகும். இது தமிழ்நாட்டில் நிகழ்த்தப்படும் கலை வடிவமாகும். முற்காலத்தில் இக்கலையைக் கூத்து என்று அழைத்து வந்தனர். கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் இது சதிர் என்று வழங்கப்பட்டது. பிறகு பரத நாட்டியம் என்ற பெயர் பெற்றது. ஒரு சமூகத்தார்க்குரிய கலையாக இருந்த பொழுது சதிர் என்று அழைக்கப்பட்ட இவ் ஆட்டக்கலை இப்போது எல்லாருக்கும் உரிய கலையாக வளர்ந்துள்ளது.

3.1.1 சொல் விளக்கம்

    பரத நாட்டியம் என்ற பெயர் வந்ததற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. (1) யாழ்நூல் எழுதிய விபுலாநந்தர் தமிழில் பரதம் என்றொரு நூல் இருந்ததாகவும், பண், இரதம், தாளம் என்ற சொல்லினின்று பரதம் என்று வந்தது என்பதாகவும் கூறுகிறார். (2) மற்றொரு     விளக்கப்படி, பாவ, இராக, தாளத்திற்கேற்ப ஆடப்படுவதால் பரதம் என்று பெயர் வந்தது என்கின்றனர். பாவம் என்பது உணர்ச்சிகளை முகத்தினாலும், அங்க அசைவுகளினாலும் வெளிப்படுத்தலாகும். இராகம் என்பது இசை, தாளம் என்பது இலயம். ஆகவே இம்மூன்றும் இணைந்த கலை வடிவமாகத் திகழ்வதால் பரத நாட்டியம் என்ற சொல் வழங்கப்பட்டது என்பர்.

    எப்படியாயினும், சிலப்பதிகாரத்தில் வேனிற் காதையில் 70-93 வரிகளில் காணப்படும் வரிக்கூத்துகளே, பரத நாட்டியமாக உருப்பெற்றன. இதனால், பரத நாட்டியம் அடிப்படையில் தமிழரின் ஆடல் கலை என்பது தெளிவாகும்.

3.1.2 பயிற்சி முறை

    முற்காலத்தில் மாணவர்கள் குருவின் வீட்டில் பல ஆண்டுகள் தங்கி, குருவிற்குரிய பணிகளைச் செய்துவிட்டு, பரத நாட்டியக் கலையையும் கற்றனர். இது குருகுலமுறை என அழைக்கப்பட்டது. ஆனால் அறிவியல் யுகத்தில் மாணவர்கள் குருவின் வீட்டிலோ அல்லது கல்வி நிலையங்களிலோ சில மணி நேரம் மட்டும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    பரத நாட்டியம் பயில வரும் மாணவர்களுக்கு முதலில் தட்டிக் கும்பிடுதல் கற்பிக்கப்படுகிறது. தட்டிக் கும்பிடுதல் என்பது, பூமாதேவியை மிதித்து ஆடுவதால் பூமாதேவிக்கு வணக்கம் செலுத்தி விட்டு,     பிறகு ஆசிரியரையும் பெரியவர்களையும் வணக்கம் செய்வதாகும். இந்த முறை, மேடையில் நிகழ்ச்சி ஆடும் போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. பிறகு அடவுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பரத நாட்டியத்தில் முக்கியமான நிலை அரைமண்டி நிலையில் அமர்ந்து நிற்றலாகும். அரைமண்டி நிலை என்பது பாதங்களைப் பக்கவாட்டில் திருப்பி முழங்கால்களை வளைத்துச் சீராக நிற்பதாகும். பாதங்களுக்கு இடையே நான்கு விரல் அளவுக்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும்.

    அடவுகளை நன்றாகக் கற்ற பிறகு ஆடல் உருப்படிகள், அலாரிப்பு, சதிசுவரம், ஒலி, வண்ணம், பதம், தில்லானா போன்றவை முறைப்படி கற்பிக்க வேண்டும். இவை     மேடையில்     ஆடப்படும் ஆடல் வகைகளாகும். அரங்கில் நடனம் ஆடும் முறையைத் தஞ்சை நால்வர் என்றழைக்கப்படுகின்ற சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு என்பவர்கள் உருவாக்கித் தந்தனர். இவர்கள் தஞ்சை மராட்டியர் காலத்தில் சரபோசி அவையில் இசைவாணர்களாகப் பணியாற்றினர்.

3.1.3 ஒப்பனை முறை

    பரத நாட்டியம் ஆண், பெண், இருவரும் ஆடும் ஆடலாகும். முற்காலத்தில் பெண்களே அதிக அளவு ஆடி வந்தனர். ஆனால் தற்காலத்தில் ஆண்களும் அதிக அளவில் ஆடி வருகின்றனர். பரத நாட்டியம் ஒப்பனை ஆண், பெண் இருவருக்கும் ஒரே விதத்தில் அமையும். முகத்தில் அவரவர் நிறத்திற்கு ஏற்ப ஒப்பனை புனையப்படும். பல வண்ண நிறங்களில் அதாவது பச்சை, சிவப்பு, நீலம் போன்ற நிறங்களில் ஆடைகள் அணியப்படும். தங்க நிறத்தில் அல்லது வெள்ளை, பச்சை, சிவப்பு நிறத்தில் நகைகளும் முத்து ஆபரணங்களும் அணியப்படும்.

· சலங்கை

    பரத நாட்டியத்தில் காலில் அணியப்படும் சலங்கை மிக முக்கியமானதாகும். இதனைச் சதங்கை என்றும் கூறுவர். இந்தச் சலங்கை வெண்கலம், செம்பு, வெள்ளி ஆகிய மூன்றில்     ஏதேனும் ஒன்றால்     செய்யப்பட்டு நல்ல நாதமுடையதாய், பாடுபவர் சுருதிக்கு நன்கு ஒத்திருப்பதாய், காண்பதற்கு அழகாய் இருக்கும். அவிழாத வண்ணம் கயிற்றால் கட்டி முடிபோட்டிருக்க வேண்டும். இவை ஒன்றுக்கொன்று ஒவ்வொரு அங்குலம் இடைவெளிவிட்டுக் கட்டப்பட்டிருக்க வேண்டும். தற்காலத்தில் இது தோலில் வைத்துத் தைத்துக் காலில் அணியப்படுகிறது. மணிகள் சிறியதாய் உருண்டை வடிவில் அமைய வேண்டும். ஒரு காலுக்கு நூறு அல்லது இருநூறு சலங்கைகள் அணிய வேண்டும். ஆனால் தற்காலத்தில ஐம்பது அல்லது அறுபது சலங்கைகளைத் தோலில் தைத்து அணியும் வழக்கம் நிலவி வருகிறது.

· வகைகள்

    பரத நாட்டியம் இருமுறைகளில் ஆடப்படுகிறது. ஒன்று ஆடல் உருப்படிகள் கொண்டு நிகழ்த்தப்படும் ஆடல். மற்றொன்று கதை தழுவி வரும் நாட்டிய நாடகமாகும். இது தனிநபர் ஆடல், குழு ஆடல் எனப்படும். ஆடல் உருப்படிகளைக் கொண்டு நிகழ்த்தப்படும் ஆடலைத் தனியாகவும், இரண்டு மூன்று பேர் இணைந்தும் ஆடலாம். ஆனால் கதை தழுவி வரும் நாட்டிய நாடகத்தைக் குறைந்தது ஏழு அல்லது எட்டுப்பேர் கொண்டே நிகழ்த்த முடியும். தனிநபர் நடனத்தில் வெவ்வேறு கதைச் சூழலை ஒருவரே அவிநயத்தின் மூலம் வெளிப்படுத்துவார். ஆனால், நாட்டிய நாடகத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு வேடத்தை ஏற்று நடிப்பர்.

3.1.4 இசைக் கருவிகள்

    பரத நாட்டியம் கோவிலில் ஆடப்பட்ட போது இக்கலையைச் சின்ன மேளம் என்று அழைத்தனர். இதில் நட்டுவனார், வாய்ப்பாட்டு, மிருதங்கம், முகவீணை, துத்தி, ஆடுமகள் போன்றோர் இடம் பெறுவர். பின்னர் முக வீணைக்குப் பதில் கிளாரினெட்டும், துத்திக்குப் பதில் தம்புராவும் இடம் பெற்றன. தற்பொழுது வீணை, வயலின், குழல் போன்ற கருவிகள் இடம் பெற்று வருகின்றன. பக்க வாத்தியப் பிரிவினரில் ஒருவரான நட்டுவனார் ஆடல் நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் பெறுவார். இவர் இல்லாத நாட்டிய நிகழ்ச்சிகளே இல்லை எனலாம். தற்காலத்தில் இவர் இல்லாமலும் ஒரு சிலர் ஆடி வருகின்றனர். இவர் ஆடுபவருக்குப் பயிற்சி அளிப்பவராகவும் மேடையில் சொற்கட்டுகள் சொல்பவராகவும் பக்கவாத்தியக்காரர்களை வழி நடத்திச்     செல்பவராகவும்     செயல்படுவர். சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடும்     பொழுது, பக்கவாத்தியக்காரர்கள் ஆடுபவருக்குப் பின்னால் நடந்தவாறே செயல்படுவர். இம்முறை சென்ற நூற்றாண்டின் தொடக்கம் வரை காணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் ஆடுபவருக்கு வலது பக்கத்தில் அமர்ந்து செயல்படுகின்றனர்.