3.5 பாகவத மேளம்

    பாகவத மேளம் பழம் மரபு வழி வந்த ஒரு நாட்டிய நாடகமாகும். இது பாகவத பஜனை சம்பிரதாயப்படி இலட்சுமி நரசிம்ம ஜெயந்தி அன்று அவரது பக்தர்கள் வழங்கும் நாடகாஞ்சலி முறை, ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாக தஞ்சையை அடுத்துள்ள பல ஊர்களில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பாகவத மேள நாட்டிய நாடகம் போன்ற கலைகளின் நோக்கம் இரு வகைப்பட்டதாகும். முதலாவதாக, இது கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு கலைக்கொடையாக விளங்கியது. இக்கலைகளின் வாயிலாக அடிப்படையான ஆன்மிக இயல் மற்றும் தத்துவ இயல் சார்ந்த உண்மைகளை மக்கள் மனதில் நிலைபெறச் செய்வது. இரண்டாவதாக, இறையன்பின் அடிப்படையில் நல்லொழுக்கமும், அழகு உணர்வும்,    மக்கள் மனத்தில் நிலைபெற இக்கலைகள் உதவின எனவே இத்தகைய நாட்டிய நாடகங்கள் வெறும் பொழுதுபோக்குக் கலையாக அமையாது, சீரிய முறையில் உயர்ந்த நோக்கங்களை உள்ளடக்கியதாக உள்ளன.

3.5.1 கட்டுக்கோப்பு

    பாகவத மேள நாட்டிய நாடகம் கோணங்கி வருகையுடன் தொடங்குகிறது. இவர் பாடலுக்கேற்றவாறு சில அடவுகளைச் செய்து பார்வையாளர்கள் நகைக்கும் வண்ணம் செய்தபின், பார்வையாளர்களைப் பார்த்து சாது சாது அதாவது அமைதியாக நாடகத்தைக் கண்டு களிக்குமாறு வேண்டிய பிறகு மேடையை விட்டு அகல்வார். இதன் பிறகு நாடகத்தில் பங்கேற்கும்     இசைக்கலைஞர்களும்     பக்கவாத்தியக் கலைஞர்களும் மேடையில் ஒருங்கே தோன்றி வழிபாட்டுத் தொடக்கப் பாடலான தோடய மங்கலத்தை இசைக்கின்றனர். அதன் பிறகு அனைவரும் பிரகலாத பட்டாபிசேகம் பாடல்களைப் பாடுகின்றனர். இது பல சொற்கட்டுகளால் அலங்கரிக்கப்படுகிறது.     இந்தப்     பாடல் முடிந்ததும் ஊர்ப்பெரியவர்     ஒருவர்     மேடையில்     தோன்றி இப்பாகவதர்களுக்குச் சந்தனமும் மலர்களும் நல்குவார். இவை போன்ற தொடக்க நடைமுறைகள் அனைத்து நாடகங்களுக்கு முன்பும் நடைபெறுவதில்லை. பிரகலாத நாடகத்தில் மட்டும் காணப்படுகிறது.

· கணபதி வருகை

    தோடய மங்கலம் பாடிய பின் கணபதி வருகை நடைபெறுகிறது. நாடகம் தடையின்றி நடைபெற விநாயகரின் அருளை வேண்டி இக்காட்சி அமைக்கப்படுகிறது. 12 வயதிற்குட்பட்ட இளைஞர்களே கணபதி வேடம் புனைவர். இதற்காக இவருக்குக் கணபதி முகம் போல் செய்யப்பட்ட முகமூடி அணியப்படுகிறது. இவர் பக்க இசைக்கேற்ப, சில அடவுகளைச் செய்வார். அதன்பிறகு மேடையிலேயே விநாயகருக்குப் பழம், பூ, வைத்துச் சூடம் ஏற்றி நாடகம் சிறப்பாக முடிவடைய வேண்டும் என்று வேண்டி வணங்குகின்றார்கள்.

· சூத்திரதாரி

    பாகவத மேள நாடகத்தில் மிருதங்க, மத்தள வாத்தியங்களுடன் அரங்க பூசை நடைபெறும். இதையடுத்து, சூத்திரதாரி அரங்கில் தோன்றி கதையின் சுருக்கத்தை இசையுடனான பாடல்கள் மூலம் கூறுவார். நாடக பாத்திரங்களையும் அறிவித்து, நாடகத்தைப் பார்த்து மகிழும்படி சூத்திரதாரர் கூறி முடிப்பார். இவ்வளவும் திரைக்குப் பின்னால் நடைபெறும்.

    இதன்பின் தலைமைப் பாத்திரங்கள் ஒவ்வொருவராகத் தோன்றி, தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். இது பாத்திரப் பிரவேசம் என்று அழைக்கப்படுகிறது.

3.5.2 நடைமுறை

    பாகவத மேளத்திற்குரிய நாட்டிய நாடகங்களை அமைத்துக் கொடுத்தவர் மெலட்டூர் வெங்கட்ராம சாத்திரி ஆவார். இவர் 12 நாட்டிய நாடகங்களை இயற்றியுள்ளார். இவற்றில் பிரகலாத பக்த விசயம் மற்றும் அரிச்சந்திர நாடகங்கள் புகழ்பெற்றவைகளாக உள்ளன.

    நரசிம்ம வேடம் புனைபவர் இறைவனை வணங்கி விரதம் இருந்து இந்த வேடத்தைப் புனைவார். விசய நகர ஆட்சிக் காலத்தில் பாகவத மேளம் தென்னிந்தியாவில் தோன்றியதால், தெலுங்கு மொழியில் பாடல்கள் இயற்றப்பட்டன. அதற்குப் பிறகு வந்த மராட்டியர்களும் இக்கலையை ஆதரித்தனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச்     சார்ந்தவர்கள் இக்கலையை நிகழ்த்துகின்றனர். இக்கலை அந்த ஊர் மக்களின் வாழ்க்கையின் ஒன்றெனக் கலந்து விட்டது.

    இவற்றில் பெண் வேடத்தையும் ஆண்களே ஏற்று நடிப்பர். சமூகம் மாற்றம் அடைந்தாலும் இதில் பெண்கள் இடம்பெற மாட்டார்கள். தற்பொழுது ஒரு சிறந்த நடன ஆசிரியரைக்     கொண்டு நடனத்தை அமைக்கின்றனர். கதாபாத்திரம் அனைவரும் நட்டுவனார் தட்டும் தாள ஒலிக்கேற்ப ஒவ்வொரு பகுதியையும் நிகழ்த்துகின்றனர்.

    பாகவத மேள நாடகங்களில் வைணவ புராணக் கதைகள் மட்டுமின்றிச் சைவ சமய புராணக் கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவ்வகையில் பார்வதி கல்யாணம், மார்க்கண்டேயா, அரிகரலீலா விலாசம் போன்ற நாடகங்கள் நடைபெறுகின்றன.

    தெலுங்கு மொழி தந்த நாட்டிய நாடகக் கொடை பாகவத மேளமாகும். மன்னர் அச்சுதப்ப நாயக்கர் தஞ்சையை ஆண்டபோது, ஆந்திராவிலிருந்து 510 அந்தணக் குடும்பங்களைத் தஞ்சைக்கருகில் குடியமர்த்தி, அவர்களுக்கு வீடும், நிலங்களும் தானமாகக் கொடுத்துப் பாகவதமேள நாடகம் தஞ்சையில் நடக்க ஏற்பாடு செய்தார். பாகவதமேள நாடக மரபு கி.பி.1502-ஆம் ஆண்டில் ஆந்திராவில் நிலவி வந்துள்ளதற்கான சான்றுகள் விசயநகரப் பேரரசு பற்றிய ஆவணங்களில் காணக் கிடைக்கின்றன.

    அதன் பிறகு தான் தமிழ்நாட்டில் இக்கலை பரவ ஆரம்பித்தது. நாயக்கர் காலத்தில் இக்கலை தஞ்சாவூருக்கு அருகில் உள்ள சூலமங்கலம், ஊத்துக்காடு, நல்லூர், சாலிய மங்கலம், தேப்பெருமாள் நல்லூர் என்ற கிராமங்களிலும் நிகழ்த்தப் பெற்றுள்ளது. காலப் போக்கில் இங்கெல்லாம் இந்நாடகம் நின்று போயிற்று. தற்போது மெலட்டூர், சாலியமங்கலம் என்ற இரு இடங்களில் மட்டும் நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று நடைபெற்று வருகின்றது.

    முந்தைய தலைமுறையில் மெலட்டூர் நடேசய்யர், சூலமங்கலம் சீதாராம பாகவதர், ஊத்துக்காடு சுவாமி பாகவதர் போன்றோர் இக்கலையை மிக உன்னத நிலைக்கு உயர்த்தினர். மெலட்டூரிலும் இந்நாடக மரபு ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிட்டது. 1931இல் நடேசய்யர் இறந்தமையால் சில காலம் நாடகம் நடத்தப்பெறாமல் இருந்தது. இவரது சீடராகிய கோதண்டராமையர் எடுத்துக்கொண்ட முயற்சியால் மறுபடியும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு நாடகங்கள் நடைபெற்றன. மீண்டும் இம்மரபு அறுபட்டது.    பின்னர் 1936இல் பாலு பாகவதர் இக்கலை வளர அரும்பாடுபட்டார். கி.பி.1951இல் அப்போதைய தமிழ்நாடு இயலிசை நாடக மன்றச் செயலாளராக இருந்த கிருட்டிணயர் இக்கலைக்குப் புத்துயிர் ஊட்டினார். இக்கலைக் குழுவை அங்கீகாரம் பெற்ற கலைக்குழுவாக மாற்றி, தமிழ்நாடு இயலிசை நாடக மன்றத்தின் பொருளுதவியைப்     பெற்றுத்     தந்து     இக்கலையின் மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டார். தற்பொழுது இந்நாடகம் மெலட்டூரில் இரு இடங்களில் நடைபெற்று வருகிறது.

    திரு.நடராசன் குழுவினர் கோவில்களிலும் திரு.மகாலிங்கம் குழுவினர் வயல்வெளியிலும்    இந்நாடகங்களை    நடத்தி வருகின்றனர். பக்தியில் முகிழ்த்த, பழமையான நாடக மரபைப் பின்பற்றிய செவ்வியல் நாடகங்களாக இவை அமைந்துள்ளன.