4.4 வடிவ அடிப்படையிலான வகைகள்  

     வடிவ அடிப்படையில் நாட்டிய நாடகங்கள், குறவஞ்சி,  பள்ளு, நொண்டி நாடகம், இசை நாடகம், அரையர்சேவை, யட்சகானம், தெருக்கூத்து என்றெல்லாம் வகைப்படுத்தலாம். இதில் குறவஞ்சி நாட்டிய நாடகங்கள் மிக அதிகமாகப் படைக்கப்பட்டுள்ளதோடு,     அதிகமாக     அரங்கேற்றம் பெற்றவைகளாகவும் உள்ளன. இது பற்றி அடுத்த பாடத்தில் விரிவாகக் காணலாம். எனவே இப்பகுதியில் அரையர் சேவை, யட்சகானம், இசைநாடகம் பற்றிக் காண்போம்.

4.4.1 அரையர் சேவை

    வைணவ ஆலயங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வழிபாடுகளில் ஒன்று அரையர் சேவையாகும். வைணவ இலக்கியங்களான நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடலுக்கான அவிநயம், இச்சேவையில் முக்கியமாக இடம்பெறும். அவிநயித்துக் காணப்படும் நிலையில் இதுவும் நாடகத் தகுதியைப் பெறுகிறது. இது கதையைத் தழுவியமையாமல் ஒரு பாடலுக்கான பொருள் விளக்கம் தரும் நிலையில் அமையும்.

    அரையர், அறையர், விண்ணப்பம் செய்வார், பாடுவான், இசைக்காரர்,     தம்பிரான்மார்     என்றெல்லாம்     இவர்கள் அழைக்கப்படுகின்றனர். நெல்லை மாவட்டம்     ஆழ்வார் திருநகரியிலும், விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூரிலும், திருச்சி மாவட்டம் திருவரங்கத்திலும் இன்றும் இச்சேவையைக் காண இயலும்.     மார்கழி     மாதம்     இராப்பத்து,     பகல்பத்து விழாக்காலங்களிலும், ஆடிப்பூர விழாவின் பொழுதும், சில ஆலயங்களில் வருடம் முழுவதும், இச்சேவை நடைபெற்று வருகிறது.

    அரையர் சேவை, திருக்கோயில் உற்சவர் முன் நடைபெறும். அரையரின் இரு பக்கங்களிலும் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பர். இவ்வமைப்பு நாட்டுப்புற அரங்க அமைப்புப் போல் இருக்கும். இந்நிலையில் அரையர் ஒருவரே பல்வேறு பாத்திரங்களாக வேடப்புனைவு மாறுதல் இன்றி அவிநயிப்பர். காட்சி மாற்றங்களை, மாந்தர் கூற்று வழியே பாகுபடுத்துவர். பஞ்சகச்ச வேட்டியும், திருமண்ணும் தரித்துக், தலையில் கூம்பு வடிவக் குல்லாய் அணிந்திருப்பர். காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். இத்தகு அரிய கலை திருமால் ஆலயங்களில் மட்டும் காணப்படும். பாசுரத்தின் ஒரு தொடருக்குப் பல நிலைகளில் அவிநயம் செய்யும் சிறப்பினை இக்கலையில் காணலாம்.

4.4.2 யட்சகானம்

    யட்சகானம் மரபு வழிப்பட்ட ஒரு நாட்டிய நாடகமாகும். திறந்த வெளியில் சதுர வடிவமான அரங்கில் இரவு முழுவதும் நடைபெறும் பழமையான நாட்டிய நாடகம் இது. கன்னடம், தெலுங்கு மொழிகளில் அதிகம் காணப்பட்டாலும் தமிழில், சுந்தரமூர்த்தி யட்சகானம், சிறுத்தொண்டர் யட்சகானம், நீலா யட்சகானம் போன்றன உள. இவை வட ஆர்க்காடு மாவட்டங்களில் ஆடப்பட்டு வருகின்றன.

    யட்சகானத்தில் கணபதி வழிபாடு, விதூசகன் வருகையைத் தொடர்ந்து நாட்டிய நாடகம் தொடங்கும். பரதரின் நாட்டிய சாத்திரத்தில் கூறப்படும் பூர்வாங்க அவிநயம் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படும். கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து நாடகத்தைத் தொடங்குவர். சிறப்பான இசைவளமும், நாட்டிய வளமும் கொண்ட நாடகமாக விளங்கும். உணர்ச்சிக்குத் தக்கவாறு காலடி அசைவுகளும் பொருளுக்கேற்ற அவிநய முத்திரைகளும் சிறப்பான இசையமைப்பும் கொண்ட நாட்டிய நாடகமாக இது விளங்குகிறது.

4.4.3 இசை நாடகங்கள்

    இசைநாடகம் என்ற பெயரில் நாட்டிய நாடகங்கள் பல உள. இதனைச் சங்கீத நாடகம் என்றும் (ஆங்கிலத்தில் OPERA) அழைப்பர். ஒரு கதையைத் தழுவி, தரு, கீர்த்தனை, சிந்து முதலிய இசை     வடிவங்களுடன் கலித்துறை, வெண்பா, ஆசிரியப்பா, தாழிசை, விருத்தம் என்ற யாப்பு வடிவங்களில் இந்த இசை நாட்டிய நாடகங்கள் அமையும். கதைத் தொடர்பிற்காக இடையிடையே உரைநடை (வசனங்களும்) இடம்பெறும். முதல் தமிழ் இசை நாடகப் படைப்பாகச் சீர்காழி அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனை விளங்குகிறது. இது இசை நயமும், கவிதை நயமும் பின்னிப் பிணைந்த நாட்டிய நாடகமாக அமைந்துள்ளது. கோபால கிருட்டின பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மிகச் சிறப்பான நாடகமாக விளங்கியுள்ளது. மேலும் இவர் திருநீலகண்ட நாயனார் சரித்திரம், இயற்பகை நாயனார் சரித்திரம், காரைக்கால் அம்மையார் சரித்திரம் என்ற இசை நாடகங்களையும் தந்துள்ளார்.

    கம்பரின் இராம காதையைத் தழுவி இசை நாடகமாக அருணாச்சல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனை அமைந்துள்ளது. இதில் 258 இசைப் பகுதிகள் அமைந்துள்ளது.

தோடயம்

-

1

தரு என்ற கீர்த்தனைப் பகுதி

-

197

திபதை என்ற பகுதி

-

60

------

258

------

    கதைப் பகுதியை விளக்கும் கீர்த்தனையைத் தரு என்பர். இவ்வகையில் அமைந்த எட்டு வகையான தருக்கள் நாட்டிய நாடகங்களில் இடம் பெறும்.

(1) பிரவேசிகா தரு

    நாடக மாந்தர்களை அறிமுகப்படுத்தும் பகுதியைப் பிரவேசிகா தரு என்பர்.

    “கூனி வந்தாளே பொல்லாத கூனி வந்தாளே”

(2) வருணனைத் தரு

    நிகழ்ச்சியை வருணிக்கும் நிலையில் அமைவதனை, வருணிப்பதை, வருணனைத் தரு என்பர். இயற்கை எழிற்காட்சி, வருணனை, பண்புநல வருணனை, செயல்நிலை வருணனைகள் இவ்வகையில் அமையும். இவ்வாறே சம்வாத தரு முதலிய 8 தருக்கள் இடம் பெறுகின்றன.

    திபதை என்பதும் ஒரு வகைக் கீர்த்தனையாகும். இதன் மூலம் நாடகத்தில் நீண்ட உரையாடலை அமைக்க முடியும். இதில் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற நிலைகள் இடம் பெறாமல் கண்ணிப்பாடல்களாகவும் அமையும்.

    இசை நாடகங்களின் தொடக்கப் பகுதியாகத் தோடயம் அமையும். பழந்தமிழ் நூல்கள் இதனைத் தேவபாணி என்று குறிப்பிடுகின்றன.