5.1 குறவஞ்சி நாட்டிய நாடகங்கள்

    குறவஞ்சி     நாட்டிய     நாடகத்தின்     வித்தினைத் தொல்காப்பியத்தில் காணமுடிகின்றது.

    அகத்திணையில் களவியலில் இதைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அகத்திணை ஒழுகலாறுகளுள் செவிலி, நற்றாய் பற்றிய செயல்களைக் கூறும் பொழுது தலைவியின் வேறுபாடும் புதிய நடைமுறைகளையும் கண்டு ஐயமுற்று, இதன் காரணம் அறிய விரும்புகின்றனர். அப்பொழுது குறத்தி வாயிலாக இதனை அறிந்து கொள்ள முயல்வர். இவள் கட்டினும் கழங்கினும் (குறிபார்த்தல்) வைத்துக் குறி சொல்வாள் என்று குறிப்பிடுகின்றது.

    கட்டினும் கழங்கினும் வெறியென இவரும்
    ஒட்டிய திறத்தால் செய்திக் கண்ணும்   
      (தொல்-களவியல் நூற்பா எண் : 25)

குறத்தி சங்க இலக்கியத்தில் அகவன் மகள் என்று அழைக்கப்படுகிறாள். இவள் கைக்குறி, மெய்க்குறி, முகக்குறி பார்த்துத் தலைவியின் நிலையைக் கூறுவாள். குறி சொல்லுதலைத் தொழிலாகக் கொண்டவள் ஆவாள். கையில் ஒரு கோலை வைத்துக் கொண்டு குறி சொல்வாள் என்பதனைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

    வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்
             (குறுந்தொகை- 298)  
   நுண்கோல் அகவுநர்      (அகநானூறு - 152)

· வளர்ச்சி

    சிற்றிலக்கிய வகைகளுள், குறம், குறவஞ்சி, குறத்திப்பாட்டு என்ற இலக்கிய வகையைக் காண முடிகின்றது. இம்மூன்றினும் குறத்தி இடம் பெறுகிறாள். குறத்திப்பாட்டுப் பற்றி, பன்னிரு பாட்டியல் விளக்குகிறது. இப்பாட்டு இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலம் பற்றிக் கூறும் என்கிறது.

    இறப்புநிகழ் வெதிர்வென்னும் முக்காலமும் 
   திறம்பட உரைப்பது குறத்திப் பாட்டே (பன்-217)

குறத்திப்பாட்டு என்ற தலைப்பில் எந்த நூலும் கிடைக்கவில்லை.

5.1.1 குறம்

    குறம் என்ற தலைப்பில் நூல்கள் பல கிடைத்துள்ளன. இந்த நூலின் இலக்கணம் பற்றி எந்த நாட்டிய நூலும் கூறவில்லை. குறத்தி குறி கூறும் நிலையில் இது அமையும். முதல் குறநூலாக குமரகுருபரர் எழுதிய மீனாட்சியம்மை குறம் திகழ்கிறது.

· மதுரை மீனாட்சியம்மை குறம்

    மதுரை மீனாட்சியம்மை குறம் குமரகுருபரரால் படைக்கப்பட்டது. மீனாட்சியம்மை சொக்கலிங்கப் பெருமான் மீது கருத்திழந்த பொழுது பொதிய மலையில் வாழும் குறத்தி ஒருத்தி குறி சொல்வதாக அமைந்துள்ளது. தரையை மெழுகி, பிள்ளையார் பிடித்து வைத்துக் கோலமிட்டு நிறைநாழி நெல்வைத்துத் தலைவியின் கைக்குறி, முகக்குறி, கவுளிசொல், கன்னிமார் வாக்கு, இடக்கண் துடித்தல் இவற்றை ஆராய்ந்து பார்த்து, சொக்கநாதப் பெருமானோடு அளவளாவும் பேறு கிடைக்கும் என்கிறாள்.

    “நான் சொல்லும் குறி மோசமானால் இந்த உலகில் யாருடைய வார்த்தையும் பொருளற்ற வார்த்தையாக அமைந்து விடும். ஆடையும் காசும் வை. சொக்கநாதப் பெருமான் உன்னை நிச்சயமாக அடைவார்” என்கிறாள்.

    இவள் பொதிய மலைக் குறத்தியாவாள். தனது பொதிய மலையின் சிறப்பைப் போற்றிப் பாடுகிறாள்.

    திங்கள் முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை
    தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை  
   அங்கயற்க ணம்மைதிரு வருள்சுரந்து பொழிவதெனப்
    பொங்கருவி தூங்குமலை பொதியமலையே

தனது குலத்தின் சிறப்பினை எடுத்துரைக்கிறாள். முருகனுக்குத்  தம் குறக் குலப்பெண் கொடுத்ததால் தம் குலம் உயர்குலமாயிற்று என்கிறாள்.

    வெள்ளிமலைக் குறவன்மகன் பழனிமலைக்
    குறவனெங்கள் வீட்டிற் கொண்ட
    வள்ளிதனக்கேகுறவர் மலையாட்சி
    சீதனமா வழங்கி னரால் (20)

வள்ளியை மணம் கொண்ட காரணத்தால் மலையாட்சியை முருகனுக்குச் சீதனமாக வழங்கினோம் என்கிறாள்.

5.1.2 குறவஞ்சி

    குறம் என்ற இலக்கிய வகையையொட்டி எழுந்த இலக்கியமாகக் குறவஞ்சி விளங்குகின்றது. ஆயினும் குறத்தில் குறத்தி கூற்று மட்டும் அமைந்திருக்கும். குறவஞ்சியில் வேறு பலரின் கூற்றும் இடம்பெறும்.

    குறவஞ்சி இலக்கியங்கள் கடவுள், அரசர், வள்ளல்கள் ஆகியோரில் ஒருவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. பாட்டுடைத் தலைவன் உலா வருகின்றான். இதனைக் கண்ட தலைவி தலைவன் மீது மையல் கொள்கிறாள். மையலுற்ற தலைவி நிலா, தென்றல் போன்றவற்றைக் கண்டு காம மிகுதியால் புலம்புகிறாள். காம மிகுதியினால் துயர் உறும் தலைவிக்குக் குறத்தி ஒருத்தி குறி கூறி ஆறுதல் சொல்கிறாள். குறத்தியைக் காணாமல் குறவன் புலம்புகிறான். வேட்டையாடிக் கொண்டு வரும் குறவன் குறத்தியைச் சந்திக்கிறான். இருவரிடையே உரையாடல்கள் நிகழ்கின்றன. இருவரும் பாட்டுடைத் தலைவனை வாழ்த்தி விடை பெறுகின்றனர். இந்நிலையில் குறவஞ்சி நூல்கள் அமைந்துள்ளன.

    கும்பேசர் குறவஞ்சி, அர்த்த நாரீசுவரர் குறவஞ்சி முதலான குறவஞ்சி நூல்கள் இறைவன் பெயரால் பெயர் பெற்றுள்ளன.

    கிரு좮ணமாரி     குறவஞ்சி,     மாத்தளைமுத்து மாரியம்மன் குறவஞ்சி ஆகியவை இறைவியின் பெயரால் பெயர் பெற்றுள்ளன.

    குறுக்குத் துறைக் குறவஞ்சி, சிதம்பரக் குறவஞ்சி, சிவன்மலைக் குறவஞ்சி போன்றவை தலத்தின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளன.

    குன்றக்குடி சிவ சுப்பிரமணியக் கடவுள் குறவஞ்சி, சிக்கல் நவநீதேசுவர சுவாமி குறவஞ்சி ஆகியவை தலப்பெயருடன் இறைவன் பெயரையும்     சேர்த்துப் பெயரிடப்பட்டுள்ளன.

    சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, சக்கிராசன் குறவஞ்சி ஆகியன மன்னன் பெயராலும் தமிழரசி குறவஞ்சி பாட்டுடைத் தலைவி பெயராலும் தலைப்பிடப்பட்டுள்ளன.

    பாம்பன் காங்கேயன் குறவஞ்சியும், சுப்பிரமணிய முதலியார் குறவஞ்சியும் வள்ளல்கள் பெயராலும், ஞானக் குறவஞ்சி, மெய்ஞானக் குறவஞ்சி, முத்தானந்தர் ஞானக் குறவஞ்சி ஆகியவை உள்ளடக்கமாகிய ஞானத்தின் பெயராலும் பெயர் பெற்றுள்ளன.

   குறவஞ்சி நூல்கள் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளன.

· அமைப்பு

    குறவஞ்சி நாட்டிய நாடகங்கள் பொதுவாகப் பின் வருமாறு அமையும்.

    கடவுள் வாழ்த்துடன் தொடங்கும் தமிழ் மரபைப் பின்பற்றி, கடவுள் காப்புப் பாடலுடன் தொடங்கும். எல்லோரும் சேர்ந்து பாடும் தோடயம் இடம்பெறும்.

    இது கடவுளை வாழ்த்திக் குழுவாகப் பாடும் பாடலாகும். எல்லோருக்கும் வாழ்த்துகளும், மங்கல வாழ்த்துப் பாடலும்  இடம்பெறும். காப்பும் மங்கலமும் கூறிய பின்பு விநாயகர் வருகை இடம்பெறும், இதனை அடுத்து, நாட்டிய நாடகத்தைக் கொண்டு செலுத்தும். கட்டியங்காரன் தோன்றி தலைவன் உலா வருதலை அறிவிப்பான். பாட்டுடைத் தலைவனின் உலா இடம்பெறும். இவ்வுலாவினைக் காணப் பெண்கள் வருவர். உலாவரும் தலைவனைக் கண்டு மயங்குகின்றனர். உலா வரும் தலைவன்  யார் என ஐயுறுகின்றனர். தோழி தலைவன் பற்றி உரைக்கிறான். இதனைக் கேட்ட தலைவி காதல் வயப்படுகிறாள்.

    தலைவியின் காதல் வேட்கையால் நிலா, தென்றல், கடல், குயில், அன்னம் போன்றவற்றைப் பழித்துரைக்கிறாள். தன்னுடைய நிலையைத் தலைவனுக்கு எடுத்துரைக்குமாறு தோழியிடம் தலைவி கூறுகிறாள். தலைவனிடம் தோழி தூது செல்கிறாள். தூது செல்பவள் எதிரில் குறிசொல்லும் குறத்தியைக் காண்கிறாள். தலைவியின் அனுமதியோடு குறத்தியை அழைத்து வருகிறாள். குறத்தி நாட்டுவளம், மலைவளம், நதிவளம், சாதிவளம், ஊர்வளம், வாசல்வளம் இவைகளையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு ஆடிப்பாடிக் காட்டுகிறாள். குறத்தி தலைவிக்குக் குறி சொல்கிறாள். தலைவியின் விருப்பத்தை எடுத்துரைக்கிறாள். நீ விரும்பும் தலைவன் உன்னை நிச்சயம் மணப்பான் என்கிறாள்.

    குறத்தியின் கணவன் தன் நண்பர்களோடு வேட்டைக்கு வருகிறான். வேட்டைக்கு வலையமைக்கும் முறைபற்றிக் கூறுகிறான். குறவன் குறத்தியைக் காணாமல் பிரிவாற்றாமையால் வருந்துகின்றான். குறவன் குறத்தியைக் காண்கிறான். பண்டைய தோற்றப் பொலிவிலிருந்து     மாறிப் புத்தாடை, புது அணிகலன்களோடும் விளங்கும் நிலைபற்றி வினவுகின்றான். குறத்தி இவைகளை எல்லாம் குறி சொல்லிப் பெற்றேன் என்று கூறுவதோடு, தலைவியின் கொடை வளம் பற்றி உரைக்கிறாள். இருவரும் பாட்டுடைத் தலைவனை வாழ்த்தி விடை பெறுகின்றனர்.

5.1.3 குளுவ நாடகம்

    குறம், குறவஞ்சிக்கு அடுத்த நிலையில் தோன்றுவது குளுவ நாடகமாகும். இவ்வகை நாடகங்கள் குறம், குறவஞ்சி பெயரில் அதிகம் கிடைக்கவில்லை, ஐந்து வகையான குளுவ நாடகங்கள் இருந்துள்ளமையை டாக்டர். நிர்மலா மோகன் குறவஞ்சி இலக்கணம் என்ற தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

  1. சின்ன மகிபன் குளுவ நாடகம்
  2. அருணாசலம் குளுவ நாடகம்
  3. கோட்டூர் கலியனார் குளுவ நாடகம்
  4. கறுப்பர் குளுவ நாடகம்
  5. ஏழு நகரத்தார் குளுவ நாடகம்

இவற்றில் ஏழு நகரத்தார் குளுவ நாடகம் முழுமையாகக் கிடைக்கவில்லை என்கிறார். (ப.85) குறத்தியைப் பிரிந்திருந்த குறவன் தனது வேட்டைத் தொழிலைச் சிறப்புறச் செய்யாமல் தோல்வியுறுகிறான். இக்குறையைத் தீர்க்கும் வகையில் குளுவ நாடகம் தோன்றியது என்பர். இதில் குளுவனே தலைமை மாந்தராகப் படைக்கப்படுகிறான். குளுவன் என்பது பறவை வேட்டையாடுபவனைக் குறிக்கும். ஊரற்பறவை எனப்படும் நீர்வாழ் பறவையைக் குளுவை என்பர். அதனால் இலன் குளுவன் என்று அழைக்கப்பட்டான். இது குறவன் திறன் பாடும் இலக்கியமாகும்.

    இந்த நாடகங்களில் குளுவனின் தோற்றம், குளுவனின் சித்தும் மருந்தும், குளுவனின் துணைவன் சிறப்பு, பறவை வேட்டையாடும் திறம், பறவைகளைத் தெய்வங்களுக்குக் காணிக்கையாக்கல், சிங்கி வருகை, சிங்கன் சிங்கி உரையாடல் போன்ற செய்திகள் இடம்பெறும். இதிலும் காப்பு, தோடயம், மங்கலம், பாத்திர அறிமுகம் போன்ற பகுதிகள் இடம் பெறுகின்றன.