5.6 பௌத்தர்கள், சமணர்கள் - கட்டடங்களும் பிறவும்

    பௌத்தர்களும், சமணர்களும் கட்டிய கட்டடங்களும் வழிபாட்டு இடங்களும் கட்டடக்     கலை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கன.

5.6.1 பௌத்தர்களின் சைத்தியம், விகாரை

    தென்னாட்டில், சிறப்பாகத் தமிழ்நாட்டில், பௌத்தர்களும் சமணர்களும் தம் மதக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மக்களிடையே பரப்புவதற்கு ஆவன செய்துள்ளனர்; இது வரலாற்றாலும் இலக்கியங்களாலும் உறுதிப்படுகிறது.

    பௌத்த மதத்தவர் வழிபாடு புரிவதற்கு வசதியாகக் கட்டியுள்ள குடைவரையமைப்புக் கட்டடத்தைச் சைத்தியம் என்பர். பௌத்தத் துறவியர் - பிட்சுகள் - தங்கி வசிப்பதற்கு வசதியாக உருவாக்கப்பட்ட கட்டடத்தை விகாரை அல்லது விகாரம் என்பர். அசோக மாமன்னன் காலத்திலிருந்து தூபிகளும் விகாரைகளும் தென்னாட்டில் பெரும்பாலும் பௌத்தச் சின்னங்களாக விளங்கின. அவற்றள் தூபிகள் கருங்கற்களாலும், விகாரைகள் பெரும்பாலும் செங்கற்களாலும்     கருங்கற்களாலும்     இருவகைகளிலும் அமைந்திருந்தன என்று தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    விகாரையில் புத்தரின் பாதபீடிகை அமைப்போ, புத்தரின் நினைவுச் சின்னமோ (நினைவுச் சின்னம் வைக்கப்பெற்ற பெட்டியோ) வழிபாட்டிற்கென வைத்திருந்தனர்.

    முற்காலத்தில் காஞ்சியில் மட்டுமல்லாமல் பொதிகை, உறையூர், வஞ்சி, பூதமங்கலம், சங்கமங்கை, போதிமங்கை, மதுரை முதலிய பல ஊர்களில் பௌத்த உறைவிடங்கள் இருந்தன. நாகப்பட்டினத்தில் பல்லாண்டுகள் பௌத்த விகாரை இருந்ததாகத் தெரிகிறது. இங்கு நரசிங்கப் போத்தரையன் காலத்தில் சீன அரசன் கட்டிய சீனக் கோயிலை மார்க்கோபோலோ கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 1477 - ஆம் ஆண்டில் இதனைப் பர்மிய அரசர் தம் கல்வெட்டில் குறித்துள்ளார்.

    பௌத்தப் பள்ளிகளும் விகாரைகளும் அழிந்துபடினும், திருமாலின் அவதாரங்களுள் ஒன்றாகப் புத்தரவதாரத்தையும் கொள்கின்ற     கொள்கையால்     புத்தர்     என்றும் நினைவிற்கொள்ளப்படுகிறார். ஆலயத்தில் வைத்துச் சாத்தனார், ஐயனார், தருமராசர், போதிராசர் என்று மக்கள் வழிபடுவது பௌத்த வழிபாடு என்றும் கொள்ளலாம்.

    இந்துக்கள் தாம் வழிபடுவதற்கென ஆலயத்தையும், அதனருகே துறவியர் தங்குவதற்கெனத் திருமடத்தினையும் அமைத்துக் கொள்வது இயல்பே; அதுபோலச் சைத்தியமும் விகாரையும் அருகருகே அமைந்திருந்தன. முன்பொரு காலத்தில் சைத்தியங்கள் பெரும்பாலும் குகைக்கோயில்களாக இருந்தன. பிறகு, படிநிலை வளர்ச்சியில் சைத்தியங்கள் நீண்ட மண்டபங்களையும், மண்டபங்களுடன் மண்டபக் கடைசியில் தூபியையும் இணைத்துக் கொண்டன. சைத்தியத்தில் இருவகைகள் உள்ளன. அவை,

1. நீண்ட சதுர முன்மண்டபம்,
2. அரை வட்டவடிவப் பிற்பகுதி,

    சைத்தியங்கள் பற்றிச் சிறப்புக் குறிப்பாகக் கலைக் களஞ்சியம், “பண்டைக் காலத்தில் அரசர் அல்லது அறவோர் இறந்தபின், அவருடைய அஸ்திகளின் மீது மண்ணைக் குவிப்பது வழக்கம். அந்தக் குவியல் வடமொழியில் சைத்தியம் எனப்படும். பின்னர் இவ்வழக்கம் பௌத்தர்களிடமும் ஜைனர்களிடமும் மிகுதியாக வழங்கி வந்தது. மண்குவியலுக்குப் பதிலாகக் கல்லால் அல்லது செங்கல்லால் கும்மட்டம் போன்ற கட்டடம் எழுப்பப்பட்டது. சைத்தியம் என்பது ஒரு மண்டபத்தினுள் புனிதப் பொருள் மீதுள்ள கட்டடத்தையும், ஸ்தூபம் என்பது திறந்து வெளியிலுள்ள கோபுரத்தையும் குறிக்கலாயின. சைத்தியத்தினுள் தங்கம் வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருளால் செய்த     பேழையில் இறந்தவர்களின் அஸ்தி, பல், நகம் போன்றவற்றை வைப்பர். பிற்காலத்தில் இப்பேழையில்லாமலும் சைத்தியங்கள் கட்டப்பட்டன” (தொகுதி ஐந்து, பக் - 229) என்று     விளக்குவது மனம் கொள்ளத்தக்கது.

5.6.2 சமணர்களின் நிசீதிகை, பள்ளி, பாழி

    சமண முனிவர்கள் மிகவும் கடுந்தவம் மேற்கொண்டு, சமணக் கோட்பாடுகளையே     உயிர்நிலையாகக்     கொண்டவர்கள். அத்தகையோர் சிலர் உண்ணா நோன்பிருந்து உயிர்துறக்கவும் துணிவர். அவ்வாறு உயிர் நீத்த இடத்தில் மக்கள் நினைவுச் சின்னம் எழுப்பிப் போற்றி வணங்குவர்.

    சங்க காலம் தொட்டுத் தம் கொள்கைக்காக அரசர்களும் பெரும்புலவர்களும் வடக்கிருத்தல் என்ற கடுங்கோட்பாட்டில் உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்ததை இலக்கியங்கள் கூறும். அதுபோலவே சமணத் துறவியரும் தம் கொள்கைக்காக உயிர் துறப்பர். உயிர் துறந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடமே நிசீதிகை ஆயிற்று. இதற்குச் சான்றாகத் திருநாதர் குன்றில் காணலாகும் கல்வெட்டு ஒன்றில் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டு), ஐம்பத்தேழு சைனந் நோற்ற சந்திர சந்தி ஆசிரியர் நிசீதிகை என வருதலைக் காணலாம்.

    சமணர்கள் தம் வாழ்க்கையில் துறவு பூண்டு வாழும் இடங்களைப் பாழி, பள்ளி, அதிட்டானம் என வழங்கினர். உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த இடமே நிசீதிகை எனப்பட்டது. இத்தகைய சிறப்பிற்குரிய இடங்களும் அவை தொடர்பான கல்வெட்டுகளும் கழுகு மலையிலும், மதுரை மாவட்டத்து ஆனைமலையிலும், திருப்பரங்குன்றத்திலும்,     மாங்குளத்திலும், விக்கிர மங்கலத்திலும், திருச்சி மாவட்டத்துப் புகளூர்க் குன்றிலும், புதுக்கோட்டை மாவட்டத்துச் சித்தன்னவாசலிலும் காணப்படுகின்றன.

5.6.3 சமணர் கோயில்கள்

    தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காகவும், சிறப்பாக அறநூல் வளர்ச்சிக்காகவும் பெரிதும் பாடுபட்டவர்கள் சமணப் பெரியோர்கள். சமணர்கள் வழிபாடு புரிந்த ஆலயங்கள் ஜினாலயங்கள் எனப்பட்டன. அவற்றில் சமண அருளாளர்களாகிய தீர்த்தங்கரர்கள் (சமண சமய அருளாளர் - முதல் தீர்த்தங்கரராகிய ரிஷபநாதர் என்ற ஆதிபகவன் தொடங்கி, வர்த்தமான மகாவீரர் ஆகிய கடைசி தீர்த்தங்கரர் வரையிலுள்ளவர்கள்) சிலைவடிவில் வழிபடப்படுகின்றனர்.

    மதுரையில் சமணர்களின் சிறுகோயில்கள் பல இருந்தன. மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள ஜடாமுனி கோயில் தெருவில் 23ஆவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் கோயிலும், மீனாட்சி கோயில் தெருவில் 5ஆவது தீர்த்தங்கரர் சுமதிநாதர் கோயிலும் இருத்தலை இன்றும் காணலாம்.

    குமரி மாவட்டத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம்     நூற்றாண்டு     வரையில்     சமண     மதம் தழைத்தோங்கியிருந்தது; இதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. திருக்கோட்டாறு, திருச்சாரணத்துமலை (சிதரால்), திருநந்திக்கரை, திருக்குறண்டி ஆகிய இடங்கள் சமணப் பிரசாரத் தாவளங்களாகத் திகழ்ந்தன. (தாவளம் = தங்குமிடம்)

    திருச்சாரணத்து மலையின் உச்சியில் இயற்கையாக அமைந்த தொங்கு பாதையின் அடியில் மண்டபம், தாழ்வாரம், பலிபீடம், மடப்பள்ளி ஆகியவை அமைந்த ஒரு கோயில் உள்ளது. உட்கோயில் 3 அறைகளைக் கொண்டது. நடு அறையில் மகாவீரர் பத்மாசன நிலையில் காட்சியளிக்கிறார். அவர் அமர்ந்துள்ள பீடத்தின் கீழ், சிங்கமுத்திரையும், உச்சியில் முக்குடையும் அமைந்திருக்கக் காணலாம். மகாவீரரது இடபபக்கத்தில் படமெடுத்த பாம்பினடியில் நிர்வாண நிலையில் மூன்றாவது தீர்த்தங்கரர் பார்சுவநாதரும், மகாவீரரின் வலப்பக்கம் பத்மாவதிதேவியும் நின்று அருள்புரிவதையும் காணலாம்.

    தொங்கு பாதையின் மேலே பாழடைந்த நிலையில் ஒரு கோபுரம் உள்ளது. கோயிலின் வடக்கே அமைந்த பாறையில் தீர்த்தங்கரர் இருபத்து நால்வர் திருவுருவங்களும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருத்தலையும் காணலாம்.