|   | 
  
  3.1 தோற்கருவி 
 
  
            இசையின் உயிராகத் தோற்கருவிகள் விளங்குகின்றன. தோலால் 
        போர்த்தப்பட்ட கருவிகள் தோற்கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் 
        செய்தி அறிவிக்கத் தோற்கருவிகளே பயன்படுத்தப்பட்டன. போர்ப்பறைகளாகவும், இறைவழி 
        பாட்டுக்கருவியாகவும்,    அரசாணைகளைத் தெரிவிக்கவும், 
        இசை நிகழ்ச்சிகளுக்கும் இக்கருவிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.  
         
     உடுக்கை, உறுமி, கஞ்சிரா, கடம், கிணை, தண்ணுமை, 
 தவில், பம்பை, பறை, மிருதங்கம், முரசு போன்ற 
 தோற்கருவிகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. இவை 
 கருங்காலி, செங்காலி, வேம்பு, பலா, உலோகம், மண் 
 போன்றவற்றால் செய்யப் படுகின்றன. ஆவின் தோல்,
 ஆட்டுத்தோல்,     காளையின் தோல் போன்றவற்றால் 
 போர்த்தப்படுகின்றன. தோல்களை இறுக வளைத்துக்கட்ட 
 தோல் வார்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
   
 
     பறை மிகத் தொன்மையான 
 தோற்கருவியாகும். 
 தொல்காப்பியர் குறிப்பிடும் திணைக்குரிய கருப்பொருள்களில் 
 பறையும் ஒன்றாகும். இப்பறை ஏனைய தோற்கருவிகளைப் போல் தோலால் 
 போர்த்தப்பட்ட கருவியாகும்.வாரால் விசித்து 
 இறுகக்கட்டப்பட்டதாகும் .இது ஒரு முக முடையது. இரட்டை முகங்களுடனும் இருந்துள்ளது. குறுந்தடி கொண்டு 
 பறையடித்து 
 ஒலி எழுப்புவர். பறை     போர்ப்பறை,     வெருப்பறை, 
 வெறியாட்டுப்பறை, பேரோசைப் பறை, தட்டைப்பறை 
 என்று வழங்குவர். தொல்காப்பியர் திணை அடிப்படையில்
 குறிஞ்சிப் பறை, முல்லைப் பறை, மருதப் பறை, நெய்தற் 
 பறை, பாலைப் பறை என்று நிலத்தின் அடிப்படையில் 
 அழைக்கிறார்.
  
     பகைவர் நாட்டைக் கைக் கொண்டபின் பறையறைந்து 
 செய்தி அறிவித்தலும்,வெற்றி பெற்ற பின் வெற்றிப்பறையிடுதலும், 
 தோல்வியைப் பறையறைந்து தெரிவித்தலும் பண்டைய மரபாகும்.
  
     வயலில் வேலை செய்யும் உழவர்கள் ஊக்கம் பெற 
 மருதப்பறை ஒலிப்பர். நெல்லறுக்கும் பொழுது அரிப்பறை 
 முழங்குவர். ஆறலைக் கள்வர் வழிப்பறி செய்யும் பொழுது
 பறை கொட்டுவர். மதம் பிடித்த யானையின் வருகையை 
 அறிவிக்கப் பறை ஒலிப்பர். கழைக் கூத்தாடுபவர் 
 களத்தின் கண் பறை முழங்குவர். செய்தி அறிவிக்கப் பறை 
 முழங்குவர்.
  
     இவ்வாறு தொன்மை மிகு தோற்கருவியான பறை இன்றும் 
 வழக்கில் உள்ளது. நாட்டுப்புற மக்களால் போற்றப்பட்டு
 வருகிறது.
   |