|   | 
  
  3.5 மங்கல 
 இசை 
  
     தமிழகத்தில் 
 நாகசுரம், தவில் கருவியோடு வழங்கப்படும்
 இசையை மங்கல இசை என்பர். இல்லத்திலும், சமுதாய வழிபாட்டிலும், ஆலய வழிபாட்டிலும் 
 இவ்விசை முக்கியப் 
 பங்கு பெறுவதாலும், மங்கல காரணமான செயற்பாடுகளில் முக்கியப் பங்கு பெறுவதாலும் 
 இதனை மங்கல இசை என்பர்.
 தமிழ்க் குடும்பங்களில் நடைபெறும் திருமணம், காதணி விழா, 
 புகுமனை புகுதல் போன்ற இல்லற நிகழ்ச்சிகளின் பொழுதும்,
 சமுதாய விழாக்களில் தொடக்க நிகழ்ச்சியாகவும், ஆலய வழிபாட்டில் காலையில் 
 தொடங்கும் திருப்பள்ளி எழுச்சி
 முதல் இரவில் இறைவனைப் பள்ளி எழுந்தருள வைக்கும் 
 வரை இடம்பெறும் நிகழ்ச்சியாகவும் இது விளங்குவதால் 
 இதனை மங்கல இசை என்று அழைக்கின்றனர்.
  
 
     மங்கலம் என்ற 
 சொல் சுபம், ஆக்கம், பொலிவு, 
 நற்செயல், திருமணம், அறம், வாழ்த்து, வழக்கு என்ற 
 பொருள்களில் கையாளப்படுகிறது. 
 
     மங்கல இசைக் 
 குழுவினை மேளக்காரர் என்றும், இவ்விசையை மேள இசை என்றும் வழங்குவர். மேளம் 
 என்ற 
 சொல் குழு என்ற பொருளில் கையாளப்படுகிறது. நாகசுரம், 
 ஒத்து, தவில், தாளம் என்ற நான்கின் தொகுதி மேளம் என்று அழைக்கப்படுகிறது. 
     இக்கருவிகளை இசைப்பவர்களை 
 மேளக்காரர் என்று அழைப்பர். இதன் அடிப்படையில் கருவிகளுக்குச் சுருதி சேர்ப்பதை 
 மேளங்கட்டுதல் என்பர்.
  
 
     மேளக் குழுவினரைப் 
 பெரிய மேளம் என்று ஆலய 
 வழிபாட்டு மரபில் அழைப்பர். இதில் நாகசுரம், தவில், ஒத்து, 
 தாளம் என்று இசைப்பவர்கள் இருப்பர். இந்நிலையில் 
 ஆலயத்தில் ஆடல் மூலம் இறை வழிபாடு செய்வதனைச் 
 ‘சின்ன மேளம்’ என்று அழைப்பர். ஆலய வழிபாட்டில் ஓர் 
 அங்கமாக விளங்கிய ஆடற்கலை வெளியேறிய பின்பு 
 இவ்வாறு அழைக்கப்படும் மரபும் நின்று விட்டது.
  
 3.5.1 
 நாகசுரம் 
  
     மேளக் குழுவின் 
 முதன்மைக் கருவியாக நாகசுரம் விளங்குகிறது. இது ஒரு குழல் கருவியாகும். இதனைப் 
 பெரு
 வங்கியம் என்றும், நாகசுரம் என்றும், நாயனம் என்றும் 
 அழைப்பர். வங்கியம் என்பதனை இசைக்குழல் என்று நிகண்டு
 குறிப்பிடுகிறது. ‘வங்கியம் பலதேன் விளம்பின’ என்று 
 கம்பராமாயணமும்     குறிப்பிடுகின்றது. புல்லாங்குழலைச்
 சிறுவங்கியம் என்றும், நாகசுரத்தைப் பெருவங்கியம் என்றும்
 அழைப்பர். இக்கருவியின் மூலம் ‘மல்லாரி’ என்ற இசை
 இசைக்கப்படுமானால் இறைவன் வீதி உலா எழுந்தருளும்
 நிகழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது என்பதனை அறிய முடியும் .
  
  
  
     தொடக்கத்தில் 
 நாகசுரம் என்று வழக்கிலிருந்த இந்த 
 இசைக் கருவி, பின்னர் நாதசுவரம் என வழங்கப்பட்டது. 
 இதுவே சரியான வடிவம் என்னும் எண்ணத்தில் எல்லோரும் 
 சொல்ல ஆரம்பித்து, இப்போது நாதசுவரமாகவே நிலைத்து 
 விட்டது. இதன் மூல வடிவம் நாகசுரம் என்பதை நினைவில் 
 கொள்ள வேண்டும். 
  
     நாகசுரத்தில் 
 பாரி, திமிரி, இடைப்பாரி, மத்திம சுருதி 
 என்ற வகைகள் உள்ளன. நாகசுரத்தின் அளவிற்கு ஏற்பவும்
 துளை அமைக்கும் முறையாலும் இவ்வாறு பெயரிடப்படுகின்றன.
 பாரி நாயனம் திருவாரூர்க்குரிய சிறப்பான கருவியாகும். இது
 முகவீணை என்ற கருவிக்கும், இன்று நிலவும் நாகசுரத்திற்கும் இடைப்பட்ட நீளமுடையதாகும். 
 இது சோழர் காலத்துக் 
 கருவியாகத் திகழ்கிறது. சிற்பங்களில் காணப்படும் கருவி இதுவேயாகும். திருவாரூரில் 
 குடமுழா என்ற பஞ்ச முக வாத்தியமும், பாரி நாயனமும் இன்றும் சிறப்புடன் 
 
 போற்றப்பட்டு வருகின்றன. 
  
     மேளக் குழுவில் ஒரு நாகசுரம், ஒரு 
 தவில், ஒரு தாளம்,
 ஒரு சுருதி என்ற நிலையில் இசைக் குழுவினர் இருப்பர். பிறகு
 இக்குழுவில் இரண்டு நாகசுரம், இரண்டு தவில், ஒரு தாளம் 
 ஒரு சுருதிக்காரர் என்ற நிலையில் குழு தோன்றியது. நாகசுர 
 இசை உலகில் இரு நாகசுரக் காரர்கள் சேர்ந்து இசைக்கும் 
 முறையை, திருப்பாம்புரம் சாமிநாதப் பிள்ளை குமாரர்கள் 
 நடராசசுந்தரம், சிவ சுப்ரமணியம் ஆகியோர் தொடங்கி
 வைத்தனர். திருவீழிமிழலை சுப்பிரமணியப் பிள்ளை, நடராச 
 சுந்தரம் பிள்ளையும் தொடர்ந்தனர். இன்று மதுரை 
 சகோதரர்கள், திருப்பாம்புரம் சகோதரர்கள், பின்னை மாநகர் 
 சகோதரர்கள் என்ற நிலையில் இரட்டை நாயன முறை நிலவி 
 வருகிறது. இந்நிலையில் இரு தவில்களும் இடம்பெறலாயின. 
 பிறகு தனித்தவில் என்ற நிலை தோன்றியது. இக்குழுவில் 
 கிடுகிட்டி என்ற ஒரு கருவியையும் சேர்த்துக் கொண்டு 
 இசைத்துள்ளனர். திருவீழிமிழலை கிடுகிட்டி கிருட்டிணன் 
 என்பவர் மிகச் சிறந்த கலைஞராக விளங்கியுள்ளார். 
 3.5.2 
 தவில் 
  
     தவில் கருவி தோற்கருவி 
 வகையைச் சார்ந்ததாகும். இது
 நாகசுரக் குழுவின் பக்கக் கருவியாக உள்ளது. இதனை மேள
 வாத்தியம் என்றும், இராட்சச வாத்தியம் என்றும் அழைப்பர். 
 ஆலயம் தந்த தனிக் கருவியாகவும், ஆலய வழிபாட்டில் 
 வாத்தியம் என்ற பெயரிலும், மேளம் என்ற பெயரிலும் அழைக்கப்படும். இக்கருவி 
 மங்கல இசைக் குழுவோடு 
 நையாண்டி மேளத்திலும் இடம் பெறுகின்றது. தற்போது
 கிளாரினெட், வயலின், மேண்டலின் கருவிகளோடும் இயைந்து
 இசைக்கப்படுகிறது. தற்காலத்தில் நாட்டியக் குழுவில் இடம் 
 பெற்று வருகிறது.  
 
     தவில், 
 தவுள், தவல், மேளம், கொட்டு என்ற
 பெயர்களில் இக்கருவிக்குத் தவில் என்ற பெயரே
 இயற்பெயராகவும், ஏனையவை இதன் திரிபுகளாகவும் 
 வழங்கப்படுகின்றன. 
 
     தவில் 
 என்ற சொல் பிற்கால வழக்குச் சொல்லாகும். 
 இதனை மணமுழவு என்று அழைத்தனர். மணமுரசு என்ற 
 சொற்றொடரை விழா முரசு என்று சிலப்பதிகார உரை
 குறிப்பிடுகின்றது.  மணமுழவு என்பதனை மருதநிலப் பறை 
 என்று தொல்காப்பியப் பொருளதிகார உரை குறிப்பிடுகின்றது.
 மணக்கோலம், மணப்பொருத்தம், மணம் புரிதல், மணமகன், 
 மணமகள், மணமண்டபம், மணவறை, மணவறைத் தோழன் 
 போன்ற சொற்களில் வரும் மணம் என்ற சொல் 
 திருமணத்தைக் குறிப்பதால்     மணமுழவு     என்பதும்
 திருமணத்திற்குரிய     முழவு     என்ற     பொருளில் 
 வழங்கப்பட்டுள்ளது. இன்றும் திருமண விழாக்களின் பொழுது
 தவில் கருவி பயன்படுத்தப்படுகிறது. திருமாங்கல்யம் 
 திருப்பூட்டுச் செய்யும் பொழுது கெட்டி மேளம் என்ற பெயரில்
 இசைக்கப்படுகிறது. 
 
     தவிலை அவநத்த 
 வாத்தியம் என்பர். அவநத்தம் 
 என்றால் மூடப்படுவது என்பது பொருள். உருளை வடிவமான 
 மரத்தில் குடையப்பட்ட பானையில் இரு புறங்களும் தோலால் 
 மூடப்பட்ட கருவியாதலால் இது அவநத்த வாத்தியமாயிற்று.
  
 
     பானை, 
 வண்டோதரி, குண்டோதரி, கண்கள், தோல், 
 வாள் வளையம், நாபி, புள், கழி உறை போன்ற உறுப்புகளைக் கொண்டிருக்கும், தவில். 
     தவிலில் 
 மந்தார சுருதி தவில், திமிரி தவில் என இரு
 வகைகள் உள. மந்தார சுருதி தவில் திமிரி தவிலைவிட
 அளவில் சற்றுப் பெரியதாக இருக்கும். சிவாலயங்களில்
 மந்தார சுருதி தவில்கள் இருப்பதனை இன்றும் காணலாம்.
 இன்றைய நிலையில் திமிரி தவில்களையே கலைஞர்கள்
 பயன்படுத்தி வருகின்றனர். 
 
     தவிலிசைக்குப் 
 பெருமை சேர்த்த கலைஞர்கள் பலர்
 உள்ளனர். நாகசுரம், தவில், தாளம், ஒத்து என்ற நான்கும் 
 சேர்ந்ததனை நமனம் என்று பழங்காலத்தில் குறிப்பிடுவர். 
 இக்குழுவில் ஒவ்வொருவர் மட்டும் இடம் பெறுவர். இவர்கள் 
 மேற்கொள்ளும் இசை நிகழ்ச்சியைச் சேவகம்  என்பர். ஒரு 
 மேளக் குழுவில் நிரந்தரமாக இடம் பெறும் தவில்
 கலைஞரைத் தவில்காரர் என்பர். இதனால் இவர்களுக்குள் 
 ஓர் ஒருங்கிணைப்பும், நெருக்கமும் இருக்கும். பின்பு 
 இக்குழுவில் தனியாக ஒரு சிறப்பு வாய்ந்த தவில்காரர் இடம் 
 பெறலாயினர். இவரைத் தனித்தவில்காரர் என்பர்.தனித்தவில் இசைக்கும் முறையைத் 
 தவிலிசை மேதை நீடாமங்கலம் 
 மீனாட்சி சுந்தரம் தொடங்கி வைத்தார். இவர்கள் காலத்தில் 
 இசைக் குழுவில் ஒரு தவில் இடம் பெறும் நிலைமாறி இரு 
 தவில்கள் இசைக்கும் முறை தோன்றியது.
   
 3.5.3 
 ஆலய வழிபாடும் தவிலும்
  
     ஆலயம் சார்ந்த அருங்கலையாக நாகசுரம் தவிற்
 கலையாகிய மேளம் திகழ்கிறது. ஆலயங்களில் அன்றாட
 வழிபாட்டிற்குரிய     கலையாகவும்,     விழாக்காலங்களில்
 முக்கியமானதோர் இடத்தை வகிக்கும் நிலையிலும் உள்ளது.
 சிவாலயமாக இருந்தாலும் வைணவ ஆலயமாக இருந்தாலும் 
 கோவில் அர்ச்சகர், மேளக்காரர் குடும்பம்     தவறாமல் 
 இடம்பெறும். இவர்களின் வாழ்க்கை ஆலய வழிபாடு, பணி
 போன்றவற்றை மையமாகக் கொண்டே அமையும். அதனால் 
 இக்குடும்பத்தார் ஓர் ஊரில் பல குடும்பங்கள் சேர்ந்து 
 தங்குவதற்கு வழியில்லை, ஆலயங்களை மையமாகக் 
 கொண்டே இவர்களின் குடியேற்றம் அமைந்திருக்கும்.
 ஆலயத்தையும் ஆலயத்தைச் சுற்றியுள்ள கிராமங்களையும் 
 மையமிட்டே இவர்களின் பொருளாதார நிலையும் வாழ்வியல் 
 நிலையும் அமையும். இவர்களில் மிகச்சிறந்த மேதைகளாக 
 விளங்குபவர் வெளியில் சென்று கச்சேரி செய்து பொருள் 
 ஈட்டுவர்.
  
 
     ஆலயங்களில் 
 பெரும்பாலும், நாள்தோறும் ஐந்து கால
 வழிபாடுகள் நடைபெறும். காலைச்சந்தி, உச்சிக்காலம், 
 சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்த சாமம் என்று ஐந்து 
 கால வழிபாடுகள் நடைபெறும். இவ்வைந்து கால 
 வழிபாடுகளின் பொழுதும், மேளக் குழுவினர் இசைப்பர். காலையில் திருப்பள்ளி 
 எழுச்சி முதல் இரவில் பள்ளிக்கு
 இறைவனை எழுந்தருள வைத்தல் வரை இவர்களின் பணி இருக்கும். இறைவன் பள்ளியிலிருந்து 
 எழுந்தருளும் போது 
 பூபாள இராகம் அல்லது பௌளி இராகம் இசைத்து 
 அதற்குரிய இசைகளை இசைப்பர். 
  
     தேவாரப் பாடலில் திருஞான சம்பந்தர் பாடிய 
 ‘மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை’ என்ற பாடல் பூபாள
 இராகத்தில் அமைந்த பாடலாகும். 
 
     மங்கல இசைக் 
 குழுவிற்காக உரிய இசை உருப்படியாக
 மல்லாரி அமைந்துள்ளது. இசைப் பரிமாணத்திற்குரிய 
 உருப்படியாக இது அமையும். இதனால் இலயக் கருவியான 
 தவிலின் பங்கு இதில் மிகுதி. இறைவன் வீதி உலா 
 எழுந்தருளும் பொழுது கம்பீரநாட்டை இராகத்தில் வீரச் 
 சுவை நிரம்பிய இசை உருப்படியான மல்லாரியை இசைப்பர்.
 இது போல ஆலயச் செயற்பாட்டின் ஒவ்வொரு நிலையிலும்
 அச்செயலுக்கேற்ற மல்லாரி இசைக்கப்படுவதுண்டு.
  
     இறைவனின் நீராடலுக்கு நீர் கொண்டு வருவதனைத் திருமஞ்சனம் என்பர். திருமஞ்சன 
 நீர் கொண்டு வரும்
 பொழுது திருமஞ்சன மல்லாரி இசைக்கப்படும்.
  
     இறைவனின் தளிகை உணவு தயாரிக்கும் இடமான மடைப்பள்ளியிலிருந்து தளிகை 
 கொண்டு வரப்படும். 
 அப்பொழுது தளிகை மல்லாரி இசைக்கப்படும்.
  
     ஆலயத் திருவிழாக் காலங்களில் இறைவனைத் தேரில்
 எழுந்தருளச் செய்தல் உண்டு. இது பெரும்பாலும் ஆலயப்
 பெருந்திருவிழாவான ஒன்பதாம் நாள்     நடைபெறும். 
 தொண்டர்கள் தேரின் வடம் பிடித்துத் தேரை இழுப்பர்.
 இவர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் தேர் மல்லாரி இடம் 
 பெறும்.
  
      ஆலயங்களில் இறைவன் வீதியுலா எழுந்தருளும் போது 
 சின்ன மல்லாரி இசைக்கப்படும். சிவாலயங்களில் இறைவன் 
 காளை (இடப) வாகனத்தில் - பஞ்ச மூர்த்திகளும் - 
 எழுந்தருளும் பொழுது பெரிய மல்லாரி இசைக்கப்படும். 
 இவ்விசை அமைதிகளைக் கொண்டு ஆலயத்தில் இன்ன செயற்பாடு நடைபெறுகிறது     என்பதனை 
 உணர்த்தும் 
 அடையாள இசையாக மல்லாரி விளங்குகிறது. ஆலயப் பெருந்திருவிழாவின் இறுதி நாளன்று 
 பெரும்பாலும் மல்லாரி இசைப்பதில்லை. மற்ற நாட்களில் இறைவன் வீதியுலா 
 
 முடிந்ததும் அலங்காரம் களைந்து     பள்ளியறைக்குச் செல்லும்பொழுது ஊஞ்சல் 
 பாட்டு இசைப்பர்.இது முடிந்ததும்
 கதவு தாளிடுவர். தாளிட்டதும் மல்லாரியைக் கொஞ்ச நேரம் 
 இசைக்க வேண்டும். இம்மரபு முறைகள் குருகுலக் கல்வியின் 
 மூலம் மாணவர்களுக்கு ஆசிரியரால் அளிக்கப்படும். 
 
 - கோயில் 
 மேளம், ஏற்பாடு மேளம்
 
  
     ஒவ்வொரு ஆலயத்திலும் 
 அந்த ஆலயத்திற்கென்று
 நிர்ணயம் செய்யப்பட்ட மேளக் குழுவைக் கோயில் மேளம் 
 என்றும், உள்ளூர் மேளம் என்றும் கூறுவர். இவருக்குத்தான் 
 இக்கோயிலின் மரபுகள் அனைத்தும் தெரியும். நாள்வழிபாடு, 
 விழாக்காலங்களில் இவர்கள் இசை வழிபாடு செய்வர்.
 ஆலயங்களில் வாத்திய மண்டபம் உண்டு. இம்மண்டபத்தில் 
 அமர்ந்து இவர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்துவர்.
  
     திருவிழாக் காலங்களில் வெளி ஊரிலிருந்து மேளக்
 குழுவை வரவழைத்துச் சிறப்பு இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு
 செய்வர். இதனை வெளியூர் மேளம் அல்லது ஒற்றை மேளம்
 என்பர். இவர்கள் உள்ளூரின் மேளக்காரரை சார்ந்தே
 இருப்பர். ஆலயங்களில் கோபுர வாசல் வரை உள்ளூர் 
 மேளக்காரரே இசைப்பார். இவர் என்ன வகையான இராகம் 
 தாளங்களில் வாசித்து முடித்தாரோ அதற்கு ஏற்றபடி வெளியூர்
 மேளக்காரர் தொடர்ந்து இசைக்க வேண்டும்.
  
 
     நாகசுரம் தாளம் 
 ஆலய வழிபாட்டின் கருவி்கள் 
 என்பதனை நினைவுபடுத்தும் நிலையில் இக்கருவிகளுக்குரிய 
 துணி உறைகள், பட்டைகள் வரை காவி நிறத்தில் 
 
 தைக்கப்படும். காலப் போக்கில் இவையும் மாறி வந்துள்ளன. 
 இறைவன் வீதி உலா முடிந்து கோயிலுக்குள் வந்ததும் 
 இறைவனை நிறுத்தி மேளக் குழுவினரும் பண்ணிசைக் 
 குழுவினரும் முறை சுற்றி வருவர். இதனைத் தட்டிச் சுற்று 
 என்பர். இது நடைபெறும் மண்டபத்திற்குத்  தட்டிச் சுற்று 
 மண்டபம்  என்பர். திருவீழிமிழலை, திருவிடைமருதூர், 
 
 திருவாவடுதுறையில் உள்ள ஆலயங்களில் இதனைக் காணலாம்.   
 3.5.4 
 மங்கல இசை மன்னர்கள்
  
     புகழ்பெற்ற மங்கல இசை மன்னர்கள் பலர் இசைக்கலை
 உலகிற்குக் அளப்பரிய சேவைகள் செய்துள்ளனர். இந்தியக் 
 கண்டமெங்கும், உலகெங்கும் சென்று நமது இசை மரபைப் 
 பரப்பி வெற்றி பெற்றவராக வந்துள்ளனர். புரவலர் 
 பெருமக்களால் இசைகள் கௌரவிக்கப்பட்டு வருகின்றன. 
 உலகின் ஒருங்கிணைப்பு நிலையமான ஐ.நா. சபையில் 
 இவ்விசை முழங்கியது. இந்தியத் திருநாட்டின் சுதந்திரப் 
 பிரகடனம் செய்யப்பட்ட பொழுது, நாகசுர மேதை திருவாடு
 துறை டி.என். இராசரத்தினம் மங்கல இசையோடு சுதந்திரப் 
 பிரகடனம் செய்யப்பட்டது. இவ்வகையில் தலை சிறந்த
 நாகசுரக் கலைஞர்கள் தவிற் கலைஞர்களாகிய மங்கல இசை
 மன்னர்களின் கலைச் சேவை பற்றி இப்பகுதியில் காண்போம். 
 
 - புகழ்பெற்ற 
 நாகசுரக் கலைஞர்கள்
 
  
     நாகசுரக் 
 கலைக்குச் சமுதாயத்தில் மிக உயரிய 
 இடத்தைத் தந்தவராக திருவாடுதுறை இராசரத்தினம்
 (1848-47) விளங்கினார். தோடி என்ற இராகம் இசைப்பதில்
 வல்லவர். ஆதலால் தோடி     இராசரத்தினம் என்று 
 போற்றப்பட்டார். இவரது மங்கல இசை முழக்கத்தோடு 
 இந்தியச்     சுதந்திர பிரகடனம் 15.8.1947 அன்று 
 ஒலிபரப்பப்பட்டது.
  
     சாவேரி கீழ்வேளூர் கந்தசாமி பிள்ளை (1826-1894) 
 சாவேரி இராகம் இசைப்பதில் வல்லவர். கீழ்வேளூர்
 கேடிலியப்பர் ஆலய இசைக் கலைஞராக விளங்கினார்.
  
     கோட்டை சுப்பராயப் பிள்ளை (1843-1919) காம்போதி, 
 தோடி இராகங்கள் இசைப்பதில் வல்லவர். இவர் சுமார் 300
 வர்ண இசை உருப்படிகளை இசைப்பதில் கைதேர்ந்தவர் 
 என்று போற்றப்பட்டார்.
  
     ஆடற்கலை ஆசானாகக் கலை உலகில்அறிமுகமாகி 
 நாகசுரக் கலைஞராகத் திகழ்ந்தவர் கூறைநாடு நடேசபிள்ளை 
 (1830-1905) ஆவார். கோட்டை சுப்பராயப் பிள்ளையிடம்
 நாகசுரப் பயிற்சிப் பெற்றார். இராக ஆலாபனை, கீர்த்தனை இசைப்பதில் வல்லவர். 
 இவரின் ஆடற்கலை நாகசுரக் கலை 
 மேம்பாட்டிற்குப் புதுப் பொலிவினைத் தந்தது. தான 
 வர்ணங்கள் அமைப்பதிலும், இசைப்பதிலும் வல்லவர். தில்லை 
 கோவிந்தராசர் ஆலயக் கோயில் மாலை எனும் நூலை உருவாக்கினார்.
  
     நாகசுர உலகில் சின்ன பக்கிரி என்று அழைக்கப்
 பட்டவர் மன்னார்குடி சின்னபக்கிரி ஆவார். நாகசுரச்
 சக்கரவர்த்தி இராசரத்தினம் பிள்ளைக்கு முன்னோடியாக
 விளங்கினார். இவர் கீர்த்தனை, இராக ஆலாபனை, பல்லவி 
 போன்ற அனைத்து நிலைகளிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.
  
     யானைத்தந்தத்தில் அமைந்த நாகசுரம் இசைக்கும் 
 பரம்பரைக் காரராக, திருவாரூர் சாமிநாதப் பிள்ளை 
 திகழ்ந்தார். இவர்களை நயினார்க் கடியார் பரம்பரையினர் 
 என்று அழைப்பர். 
  
      திருவையாறு தியாகராசர் ஆராதனை விழாவினைச் சிறப்போடு நடத்திய திருவீழிமிழலை 
 சுப்ரமணிய பிள்ளை,
 நடராச சுந்தரம்பிள்ளை ஆகியவர்கள் தியாகராசர் 
 கீர்த்தனைகளையும் பிற கீர்த்தனைகளையும் இசைப்பதில்
 வல்லவர்களாகத் திகழ்ந்தனர்.
  
     திருப்பாம்புரம் சிவசுப்ரமணியபிள்ளை, நடராச சுந்தரம்
 பிள்ளைச் சகோதரர்கள் இரண்டு பேர் நாகசுரம் சேர்ந்து
 இசைக்கும்     மரபினைத்     தோற்றுவித்தவர்களாக 
 விளங்குகின்றனர்.
  
     ஆண்டிக் கோயில் கருப்பையா, வேதாரண்யம் வேத
 மூர்த்தி, குழித்தலை பிச்சப்பா பிள்ளை, நாமகிரிப் பேட்டை
 கிருஷ்ணன் போன்ற தலை சிறந்த மேதைகள் பலர்
 இக்கலையை வளர்த்த பெரியவர்களாகத் திகழ்கின்றனர்.
  
     தற்போது வளர்ந்து வரும் கலைஞர்கள் பலர் கலைச் 
 சேவை பலவற்றைச் செய்து வருகின்றனர். ஆண்டார்கோயில்
 செல்வரத்தினம்     பிள்ளை,     மாநகர்     சகோதரர்கள், 
 திருப்புறம்பயம் சகோதரர்கள், மதுரை பொன்னுசாமி 
 சகோதரர்கள் போன்றோரின் பணி பாராட்டுதலுக்குரியதாகும். 
 
 - புகழ்சால் 
 தவிற் கலைஞர்கள்
 
  
     தவிலிசைக்குப் 
 பெருமை கூட்டிய கலைஞர்கள் பலர்
 உள்ளனர். தவிலிசையால் அவர்களும், அவர்களால்
 தவிலிசையும் மேன்மை பெற்றதை அறிவோம். தவில் உலகில் 
 தனிப்பெரும் இடத்தைப் பெற்றவராக அம்மாப்பேட்டை
 பக்கிரிப்பிள்ளை விளங்கினார். நாகசுர உலகில் “தவிலிசைக்கு
 ஒரு பக்கிரி” என்று சொல்லும் வகையில் வாழ்ந்தார். 
 புகழ்பெற்ற நாகசுரக் கலைஞர்களோடு இவர் வாசித்துள்ளார்.
  
     தவிலிசை உலகில் முக்கிய இடம் பெற்றவர்களுள் 
 அம்மா சத்திரம் கண்ணுசாமி பிள்ளை குறிப்பிடத் தக்கவர் 
 ஆவார். 14 வயதிலேயே மிகச் சிறப்பாக விளங்கினார். 
 தவிலை மிருதங்கம் போல் இசைப்பதிலும் இவர் வல்லவர்.
  
     நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தவில் உலகில்
 (1894-1949) தனக்கு மிக்காரும் ஒப்பாரும் இல்லை என்ற
 நிலையில் வாழ்ந்தவர். ஒரு காலக்கட்டத்தில் தவில்காரர் 
 என்ற சொல் இவரையே குறித்தது. தனித்தவில் வாசிக்கும்
 முறையை இவரே அறிமுகப்படுத்தினார்.
  
     திருக்கடையூர் சின்னையா பிள்ளை (1900-1976) தாளக்
 கணக்கில் வல்லவர். இலயச் சிம்மம் என்று போற்றப்பட்ட 
 சிதம்பரம் வைத்திய நாகசுரக்காரர் குழுவில் இருந்தவர் இவர்.
 1927-ல் தருமபுர ஆதீன கர்த்தரால் சிங்கமுகத் தவிற் 
 சிலையும், இராமநாதபுர அரசரால் தங்கப் பதக்கமும் 
 வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
  
     தவில் கலைஞரான மலைக்கோட்டை பஞ்சாமிப்பிள்ளை
 (1905-1935) தவிற்கலையில் வல்லவராகத் திகழ்ந்ததோடு 
 இசைக் கீர்த்தனைகள் இயற்றுவதிலும் வல்லவராகத்
 திகழ்ந்தார்.
  
     யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி (1933-1975) தவில் 
 வானின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தார். இலயக் கணக்கிலே 
 வேகமும் கொண்டவர். சங்கீர்ணம் என்ற தாள சாதியை 
 மகேந்திர பல்லவன் கண்டு பிடித்தது போல, 11 
 அட்சரமுடைய மற்றொரு முறையை இவர் உருவாக்கினார்.
  
     சிறப்பாகத் தவில் வாசித்தலில் புகழ் பெற்றவர் பலர். ஆசிரியராக இருந்து 
     பலருக்கு     வாழ்வளித்தவராக 
 திருவாழபுத்தூர் பசுபதிப் பிள்ளை (1879-1958) விளங்கினார். 
 தஞ்சை மாவட்டத்தில் சிறப்புடன் விளங்கிய பலருக்கு இவரே 
 குரு ஆவார்.
  
     வாழ்ந்து வரும் 
 தவிற் கலைஞர் பலர் மிக உன்னதச் 
 சிறப்புடன் இக்கலை மேம்பாட்டிற்காக உழைத்து வருகின்றனர். 
 நாகசுரத்திற்குப் பக்க வாத்தியமாக விளங்கிய தவிற்கலையை 
 முதன்மைக்     கலையாக்கிய     பெருமைக்குரியவர்களாக 
 அரித்துவார மங்கலம் பழனிவேலு,     திருவாழபுத்தூர்
 கலியமூர்த்தி, தஞ்சை கோவிந்தராசன், வேதாரண்யம் பாலு, வலையப்பட்டி சுப்பிரமணியன் 
 போன்றோர் விளங்குகின்றனர். 
 பல்வேறு இசைக் கருவிகளை இசைப்பதோடு ஆடற்கலை
 வளர்ப்பதிலும் பலர் வெற்றி கண்டு வருகின்றனர்.
  
  |