4.5 தொகுப்புரை

இலக்கியத் திறனாய்வின் புதிய பரிமாணங்களில் ஒன்று, பெண்ணியத் திறனாய்வு ஆகும். நவீனத்துவத்தின் ஒரு வெளிப்பாடாகவும்,     உலக அளவில் விடுதலை பற்றிய உணர்வுகளின் ஒரு அங்கமாகவும் தோன்றியது, இது. வரலாறு நெடுகிலும் சமூக அமைப்பில்,     பெண்     அடிமைப்பட்டுக் கிடக்கிறாள்; தான், அடிமைப்பட்டிருப்பதும் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதும் அவளுக்கே தெரியாது. ஆனால்,     அவளுக்குள் ஒடுக்கப்பட்ட நிலைமைகளுக்கு எதிராகப் போராட்ட உணர்வு தோன்றி வருகிறது என்ற கருதுகோள்களைக் கொண்டது,பெண்ணியம்.

இலக்கியத்தில் பெண் சித்திரிக்கப்படுகிறாள். ஆனால், எப்படிப் பட்டவளாக அவள் சித்திரிக்கப்படுகிறாள் - அவளுடைய ஆளுமையும்     அவளுடைய     தனித்தன்மைகளும், வெளிப்படும்படியாகவா - என்ற கேள்வியோடு, பெண்ணியத் திறனாய்வு தோன்றுகிறது. இதுகாறும் வெளிப்படாத பல உண்மைகளையும் சமூக அவலங்களையும் இந்தத் திறனாய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் திறனாய்வில் தருக்கவியலும் உண்டு; கலகக் குரலும் உண்டு.

தமிழ்ச் சூழலில், பெண்ணியத்தை முன்னிலைப்படுத்திய சிந்தனையாளர்களில் மகாகவி பாரதியார், பெரியார் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். பெண்ணியச் சிந்தனையின் வழியாகத் தமிழில் சில நாவல்களும் வெளிவந்துள்ளன. அம்பை, ராஜம்கிருஷ்ணன், உமா மகேசுவரி முதலியவர்களும், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், றஞ்சி, தயாநிதி, மல்லிகா, வசந்திராஜா, கருணா முதலிய ஈழத்துப் புலம்பெயர் (பெண்) எழுத்தாளர்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள், அண்மைக் காலமாகத் தமிழில் பெண் கவிஞர்கள் பலர், உணர்வுப் பூர்வமாகவும் எழுச்சியுடனும் பெண்ணிய நிலைப்பாட்டுடன் எழுதி வருகிறார்கள். பெண்ணியத் திறனாய்வில் ஈடுபாடு கொண்ட / தடம் பதித்த பெண் எழுத்தாளர்கள் குறைவு என்றாலும், இத்துறை மேலும் மேலும் வளர வாய்ப்புக்கள் பல உண்டு.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
பெண்ணியத் திறனாய்வின் வரையறையாக எலைன் ஷோவால்ட்டர் கூறுவது என்ன?
2.
உளவியல்     பகுப்பாய்வை முன்னிறுத்துகிற பெண்ணியத் திறனாய்வு எது?
3.
பெருங்கோப் பெண்டு எதற்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்?

4.

தொழிற்     சங்கங்களிலும்     தொழிலாளர் போராட்டங்களிலும் பெண்களுக்கு உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தும் தமிழ் நாவல் எது? அதன் ஆசிரியர் யார்?

விடை

5.

சங்க இலக்கியத்தில் பெண்ணியச் சிந்தனைக்குத் தளமாக அமையக் கூடிய தொன்மங்கள் உண்டு. அவற்றுள் மூன்றைக் குறிப்பிடுக.

விடை

6.

ஆணின் மொழி எத்தகையது என்று பெண்ணியம் மதிப்பிடுகிறது?

விடை

7.
பெண்ணியத்துக்கு அடிப்படைகளாக இருப்பவை எவை?