2.3 கூட்டு வழிபாட்டு முறையின் தோற்றம்


    பக்தி இயக்கத்தில் அடுத்த நிலையாக அருளாளர்களின்
தோற்றத்தைக் குறிப்பிடலாம். தேவார ஆசிரியர்கள் மூவரும்,
திருவாசகம்     எழுதிய மாணிக்கவாசகரும் இறைவன்
எழுந்தருளியுள்ள தலங்கள் தோறும் சென்று இறைவனைப்
போற்றிப் புகழ்ந்தனர். அவர்களோடு தொண்டர்களும் சென்று
இறைவனை வழிபட்டார்கள். இதனால் பக்தி இயக்கம் கூட்டு
வழிபாடாக மலர்ந்தது எனலாம். இந்த இயக்கம் ஏழாம்,
எட்டாம் நூற்றாண்டுகளில் மிகவும் ஓங்கி உயர்ந்து
வளர்ந்திருந்தது. சீர்காழியில் தோன்றிய ஞானசம்பந்தரும்,
திருவாமூரில் தோன்றிய திருநாவுக்கரசரும் சமகாலத்தில்
வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் தாங்கள் வாழ்ந்த
நகரிலேயே தங்கிப் பணி செய்யாமல் தாங்கள் பிறந்த இடத்தை
விட்டுச் சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்கள்
அமைந்துள்ள ஊர்களுக்குத் தலயாத்திரை செய்தனர்.
ஒவ்வொரு ஊராகச் சென்று அங்குள்ள இறைவனைப் பக்திப்
பரவசத்தால் போற்றிப் பாடினார்கள். அவ்வாறு இவர்கள்
போற்றிப் பாடிய திருத்தலங்கள் பாடல் பெற்ற தலங்கள்
என்று மக்களால் குறிக்கப்பட்டன. அவ்வாறு தலங்கள்
தோறும் யாத்திரை செல்லும் பொழுது அவர்கள் மட்டும்
செல்லாது அவர்களுடன் இசைக்கருவிகள் இசைப்பவர்களும்,
கோயிலுக்குத் தொண்டு செய்பவர்களும் உடன் சென்று
வழிபட்டனர். இதற்கு ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
வாழ்க்கை நிகழ்வுகளில் பல சான்றுகள் உள்ளன. அவற்றில்
ஒரு சில:

 1. ஞானசம்பந்தருடன் சென்ற யாழ் வாசிக்கும் கலைஞர்
  திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஆவார். அவருடன் அவர்
  மனைவியும் உடன் சென்றார். இவர்கள் ஒரு முறை தஞ்சை
  மாவட்டம் சாத்தமங்கை என்ற ஊருக்குச் சென்ற பொழுது
  இவர்கள் தங்குவதற்குத் திருநீலநக்கர் இடம் கொடுத்தார்
  என்ற செய்தி பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ளது.

 2. திருஞானசம்பந்தர் கொங்கு நாட்டுப் பகுதியில் உள்ள
  திருக்கொடி மாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு)
  என்ற திருத்தலத்திற்குச் சென்ற பொழுது பனிக்காலத்தின்
  குளிர் உடன்வந்த அடியார்களை வாட்டியது. அதனை
  அறிந்த ஞானசம்பந்தர் ‘அவ்வினைக்கு இவ்வினை’ என்று
  தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பனிநோயைத் தீர்த்தார்
  என்ற செய்தி அவர் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

 3. திருவீழிமிழலை என்ற திருத்தலத்தில் ஞானசம்பந்தரும்,
  திருநாவுக்கரசரும் தங்கியிருந்த பொழுது நாட்டில் பஞ்சம்
  ஏற்பட்டது. பஞ்சத்தால் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு
  உணவு கிடைக்காமல் பசித் துன்பம் ஏற்பட்டது.
  இத்துன்பத்தைப் போக்குவதற்காக இரு அருளாளர்களும்
  திருவீழிமிழலை இறைவனை வணங்கிப் பொற்காசு பெற்று
  அடியார்களின் பசிநோயைப் போக்கினார்கள் என்பதும்
  வரலாற்றுச் செய்தியாகும்.

 4. இது     போலத் திருமறைக்காடு (வேதாரண்யம்)
  திருத்தலத்தில் வேதங்களால் அடைக்கப் பெற்றிருந்த
  திருக்கோயில் திருக்கதவுகளை இவ்விரு அருளாளர்களும்
  இறைவன் மீது பாடல்கள் பாடி, அவன் திவருளால்
  அக்கதவுகளைத் திறந்தும் அடைத்தும் மக்களின்
  வழிபாட்டிற்கு வகை செய்தனர். இதனைக் கண்ட
  உடன்வந்த அடியார்கள் அனைவரும் இவர்களே தெய்வம்
  எனப் போற்றி வணங்கினார்கள் என்று பெரிய புராணத்தில்
  சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

 5. ஒருமுறை திருப்பூந்துருத்தி என்ற திருத்தலத்தில்
  தங்கியிருந்த திருநாவுக்கரசரைக் காணத் திருஞானசம்பந்தர்
  பல்லக்கில் வந்தார். அவர் வருவதை அறிந்த
  திருநாவுக்கரசர் பல்லக்குத் தூக்குபவர்களோடு தானும்
  சேர்ந்து கொண்டு பல்லக்கைத் தூக்கி வந்தார்.
  அடியார்கள் கூட்டம் உடன் அதிகமாக வந்ததால்
  திருநாவுக்கரசரை அறியாத ஞானசம்பந்தர் ‘அப்பர்
  எங்குற்றார்?’ என்று வினவினார். ‘பல்லக்குத் தாங்கும்
  பேறு பெற்றேன்’ என்று அப்பராம் திருநாவுக்கரசர் பதில்
  கூறினார். அதனைக் கேட்ட ஞானசம்பந்தர் பல்லக்கை
  விட்டுக் கீழிறங்கி நாவுக்கரசரைப் போற்றி வணங்கினார்.
  இதனை மிகச் சிறப்பாகச் சேக்கிழார் பெரிய புராணத்தில்
  குறிப்பிடுகிறார்.

    இத்தகைய நிகழ்ச்சிகளை எல்லாம் காணுகின்ற பொழுது
இவ் அருளாளர்கள் காலத்தில் பக்தி இயக்கமானது தனிப்பட்ட
வழிபாடாக அமையாமல் கூட்டாக இறை அடியார்கள் பலரும்
சேர்ந்து வழிபடுகின்ற வழிபாடாக அமைந்தது எனலாம்.

    இக்கருத்தை மேலும் வலியுறுத்துவது போல,

    “ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமக்கு
                 ஊனமில்லை”

என்ற அப்பர் தேவாரத் தொடரும் இதனை வலியுறுத்தும்.
இவ்விரு     அருளாளர்களைப் போலவே சுந்தரமூர்த்தி
சுவாமிகளும் மாணிக்கவாசகரும் தலங்கள் தோறும் யாத்திரை
செய்து சிவனடியார்களோடு கூட்டு வழிபாடு செய்தார்கள்
என்பது அவரவர்கள் வரலாறுகள் மூலம் தெரிய வருகிறது.

2.3.1 சமயப் போராட்டங்கள்

    தமிழகத்தில் எந்த ஒரு காலத்திலும் ஒரு சமயம்
மட்டுமே நிலவியதில்லை. பல சமயங்களும் இருந்துகொண்டே
இருக்கும். திருமுறைக் காலங்கள் வரை சமணமும், பௌத்தமும்,
வைணவமும், சைவத்தோடு பரவியிருந்தன. எனவே பக்தி
இயக்கத்தில் பிற சமயங்களோடு சைவம் போராடிய காலங்களும்
உண்டு. அப்போராட்டங்கள் பக்தி இயக்கத்தின் ஒரு
கூறாகவும்     அமைந்தன.     மணிமேகலை     காலத்தில்
சமயங்களுக்குள்ளே இருந்த வாதங்கள், விவாதங்கள்
திருமுறையாளர்கள்     காலத்தில் போராட்டங்களாகவே
அமைந்தன. அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் எந்தச்
சமயத்தைச் சார்ந்திருக்கிறார்களோ அச்சமயத்தைச் சார்ந்த
சமயவாதிகளே செல்வாக்குப் பெற்றனர். செல்வாக்குப் பெற்ற
அச்சமயத்தார் பிற சமயங்களைத் தடை செய்தும், பிற சமய
அன்பர்களைத் தண்டனைக்கு உள்ளாக்கியும் வந்தனர்.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் வரலாற்றில்
இப்போராட்ட நிலை சமண சமயத்திற்கும் சைவத்திற்கும்
நிகழ்ந்தது. திருஞானசம்பந்தர் வரலாற்றில் பாண்டிய நாட்டில்
அரசுபுரிந்த கூன்பாண்டியன் என்ற நின்றசீர் நெடுமாறன்
சமண சமயத்தைச் சார்ந்திருந்ததால் பாண்டிய நாட்டில் சைவ
சமயம் தடை செய்யப் பெற்றிருந்தது. இந்தத் தடையை நீக்கிச்
சமணர்களோடு அனல்வாதமும், புனல் வாதமும் செய்து
திருஞானசம்பந்தர் வெற்றி பெற்றார். இப்போராட்டத்தில்
சமணர்கள் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ
வைத்தனர் என்பதும், அத்தீயிலிருந்து சிவனடியார்களைக்
காப்பாற்றி அத்தீயினைப் பாண்டியனுக்குரிய நோயாக மாற்றி
அவர் வெற்றி பெற்றார் என்பதும் வரலாறு.

    அதுபோலத் திருநாவுக்கரசர் இளமையில் சைவ
சமயத்தைச் சார்ந்திருந்தார். பிறகு சமண சமயத்தால் ஈர்க்கப்
பெற்று அச்சமயத்தைச் சார்ந்தார். தருமசேனர் என்ற பட்டமும்
அவருக்குக் கிடைத்தது. ஆனால் அவருடைய சகோதரியார்
திலகவதியாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப இறைவன்
சூலைநோயை அவருக்கு அருளிச் சைவராக மாற்றினார்.
இதனால் அவர் காலத்தில் வாழ்ந்த பல்லவ மன்னன் மதம்
மாறிய அவருக்குத் தண்டனைகள் கொடுத்தான் என்பதும்,
அத்தண்டனையிலிருந்து மீண்டு நாவுக்கரசர் பல்லவ
மன்னனையே சைவத்திற்கு     மாற்றினார் என்பதும்
திருநாவுக்கரசரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளாகும்.

    மாணிக்கவாசகர் காலத்தில் அவருக்கும் பௌத்த சமய
வாதிகளுக்கும் வாதங்கள் நடைபெற்று, ஊமைப் பெண்ணை
இறைவனின் அருளால் பேச வைத்து அவர் வெற்றி பெற்றார்
என்பது அவருடைய வரலாற்றுச் செய்தியாகும். பெரிய
புராணத்தில் இடம் பெற்றள்ள சாக்கிய நாயனார் சாக்கிய
மதத்தைச் (புத்த மதம்) சார்ந்திருந்தாலும் சிவபெருமானை
வணங்கினார் என்பது அவர் வரலாற்றிலிருந்து தெரிய
வருகிறது.

    இப்போராட்டங்கள் மனித நேயத்திற்கு மாறுபட்டவை
என்றாலும் பக்தி இயக்கத்தின் ஒரு பகுதியாகவே இருந்தன
என்பதை மறுக்க இயலாது.

2.3.2 சமுதாயத் தொண்டு

    திருமுறைகள் காலத்தில் சமயப் போராட்டங்கள் ஒரு
பக்கம் நிகழ்ந்தாலும் மற்றொரு பக்கம் சமுதாயத்
தொண்டுகளைச் செய்கின்ற பக்தி இயக்கமும் வளர்ந்து வந்தது.
பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள சிவனடியார்கள் பலர்
இத்தகைய சமுதாயத் தொண்டினைச் செய்தார்கள் எனத்
தெரிகிறது. திருக்கோயிலைச் சார்ந்திருந்த திருக்குளங்களைச்
சுத்தம் செய்து தூர்வாரித் தொண்டு செய்தனர். இதற்குத் தண்டி
அடிகள் நாயனாரின்
வரலாறு சான்றாகும். அதுபோல
அப்பூதி அடிகள் சாலைகளில் தண்ணீர்ப் பந்தல்கள்
அமைத்தும், சோலைகள் வைத்தும் தொண்டு செய்தார்.

    திருஞானசம்பந்தரும்,     திருநாவுக்கரசரும் பஞ்சம்
ஏற்பட்ட பொழுது இறைவன் அருளிய பொற்காசுகளால்
பசிப்பிணியை நீக்கியதையும் குறிப்பிடலாம். மேலும் பல
அடியார்கள் உணவு அளித்தும், உடை கொடுத்தும்,
கோயில்களில்     விளக்கு எரித்தும்,     நறும்புகையிட்டும்
தொண்டுகள் செய்தமை பெரிய புராணச் செய்திகளால் தெரிய
வருகிறது.

    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
    படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.

என்ற திருமந்திரம் இதனை வலியுறுத்தும். இத்தகைய சமய,
சமுதாயத் தொண்டுகளைப் போலவே அக்காலத்தில் வழக்கில்
இருந்த சமண சமயமும், பௌத்த சமயமும் சமுதாயத்
தொண்டுகள் செய்தமை வரலாற்றில் தெரிய வருகிறது.

2.3.3 மனித நேயம்

    சமுதாயப் பணியோடு தனிமனிதர்களுக்கு உதவுகின்ற
நிலையில் பக்தி இயக்கம் வளர்ந்தது. அதாவது இறைவனுடைய
திருக்கோயில்களில் தொண்டு செய்வது போலவே சமுதாயத்தில்
வாழுகின்ற மனிதர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற
அடிப்படையில் பக்தி இயக்கம் வளர்ந்தது. இதற்குப் பல
சான்றுகள் சைவ சமய வரலாற்றில் உள்ளன. அவற்றில் ஒரு
சில:

 1. திருஞானசம்பந்தர், வைப்பூர் என்ற ஊரில் வாழ்ந்த தாமன்
  என்பவனின் மருமகன் பாம்பு தீண்டி இறந்த பொழுது
  “சடையாய் எனுமால்” என்ற திருப்பதிகம் பாடிப் பிழைக்க
  வைத்தமை மனிதநேய நிகழ்ச்சியாகும்.
 2. திருவோத்தூர் திருத்தலத்தில் பயன்படாது இருந்த ஆண்
  பனைமரங்களைப் பெண் பனை மரங்களாக்கிச், சம்பந்தர்,
  மக்களுக்குப் பயன்படச் செய்தமை.
 3. நாவுக்கரசர், அப்பூதியாரின் மூத்த மகன் திருநாவுக்கரசு
  பாம்பு கடித்து இறந்த பொழுது பிழைக்கச் செய்தமை.
 4. சுந்தரர், முதலை உண்ட பாலனை உயிருடன் மீட்டுக்
  கொடுத்தமை.
 5. மணிவாசகர், ஊமைப் பெண்ணைப் பேச வைத்தமை.
 6. நரசிங்க முனையரையர் என்ற அடியார் காமத்தால்
  நோயுற்ற தொழுநோயாளியை ஆதரித்தமை போன்ற
  செய்திகள் மனிதநேயத்தைக் காட்டுவன ஆகும்.

    இவ்வாறு     பக்தி இயக்கமானது கி.பி.12 ஆம்
நூற்றாண்டுவரை அடியார் வழிபாடாகவும்,     இறைத்
தொண்டாகவும், சமுதாயப் பணியாகவும், மனித நேயமாகவும்
வளர்ந்து வந்தது எனலாம்.