5.1 சாத்திரங்கள்


    சைவ சித்தாந்த தத்துவக் கருத்துகளை வகைப்படுத்திக்
கூறுகின்ற நூல்கள் பதினான்கு ஆகும். சாத்திரம் என்ற தமிழ்ச்
சொல்லுக்கு வடசொல் சாஸ்திரம் என்பதாகும். சாத்திரம் என்ற
சொல்லுக்குப் பொருள் - ஒழுங்கு, கட்டளை, வேதம் என அகராதி
நூல்கள் குறிப்பிடும். சாற்றுதல், சொல்லுதல் என்ற பொருளும்
உண்டு. எனவே சமயக் கருத்துகளை ஒழுங்குபடத் தருகின்ற
(சொல்லுகின்ற) வேதநூல்களே சாத்திரங்கள் ஆகும்.

5.1.1 சாத்திர நூல்கள்

    சாத்திர நூல்கள் வருமாறு:

  1. திருவுந்தியார்
  2. திருக்களிற்றுப்படியார்
  3. சிவஞானபோதம்
  4. சிவஞான சித்தியார்
  5. இருபா இருபஃது
  6. உண்மை விளக்கம்
  7. சிவப்பிரகாசம்
  8. திருவருட்பயன்
  9. வினாவெண்பா
  10. போற்றிப் பஃறொடை
  11. கொடிக்கவி
  12. நெஞ்சுவிடு தூது
  13. உண்மைநெறி விளக்கம்
  14. சங்கற்ப நிராகரணம்

    சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கையும் தொகுத்து
மெய்கண்ட சாத்திரங்களாகச் சைவ சமய     அறிஞர்கள்
குறிப்பிடுகின்றனர். இப்பதினான்கு நூல்களுக்கு முன்னால்
ஞானாமிர்தம் என்ற நூல் வாகீசமுனிவரால் எழுதப் பெற்று
இன்றைக்கும் கிடைக்கிறது. ஆனால் அந்நூலை மேலே குறிப்பிட்ட
மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றாகக் கொள்ளும் மரபு இல்லை.
திருவுந்தியார் முதலான பதினான்கு நூல்களே சைவ சித்தாந்த
சாத்திர நூல்கள் ஆகும். சைவ சித்தாந்த சாத்திர நூல்களில்
மூன்றாவதாக விளங்கும் சிவஞானபோதம் மெய்கண்டாரால்
இயற்றப் பெற்றதாகும். சைவ சித்தாந்த தத்துவக் கருத்துக்களை
முழுமையாக வகைப்படுத்தித் தருவது இந்நூலாகும். தத்துவக்
கருத்துகள் தவிர, சைவ சமய வரலாற்றுச் செய்திகளையோ,
அடியார்கள் வரலாறுகளையோ இடைச் செருகலாகக் கூறாது,
முழுமையும் தத்துவக் கருத்துகளையே கொண்டது இந்நூல்.
எனவேதான் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் இரண்டும்
காலத்தால் முற்பட்டவை என்றாலும் தத்துவக் கருத்துகளை
முழுமையாக உள்ளடக்கிய சிவஞானபோதத்தைத் தந்தருளிய
மெய்கண்டாரையே தலைமையாகக் கொண்டு மெய்கண்ட
சாத்திரங்கள்
என்று இப்பதினான்கு சாத்திரங்களும் வழங்கப்
பெறுகின்றன.