2.1 தமிழகத்தில் களப்பிரர்
கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (கி.பி. 250)
தமிழகத்தை ஆண்ட மூவேந்தரின் ஆட்சி முடிவடைந்தது.
மூவேந்தர்களையும்     அவர்களின்     கீழ் அடங்கியிருந்த
சிற்றரசர்களையும் களப்பிரர்     என்னும்     இனத்தவர் வென்றதாக வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது. இக்களப்பிரர்
ஆட்சி தமிழகத்தில் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள்
நடைபெற்றது எனவும் அவர்களின் ஆட்சிக்காலம் தமிழக
வரலாற்றில் இருண்ட காலம் (obscure period) எனவும்
வரலாற்றாசிரியர்கள்     குறிப்பிடுகின்றனர். கி.பி. 250-இல்
தொடங்கிய களப்பிரர் ஆட்சி 575-இல் முடிவுற்றது. பாண்டியன்
கடுங்கோனும், பல்லவன் சிம்ம விஷ்ணுவும் களப்பிரர் ஆட்சிக்கு
முடிவு கட்டினர். கி.பி் 575-இல் அல்லது அதற்குச் சற்று
முன்பாகப் பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்றிருக்க
வேண்டும் என்பர்.
2.1.1 களப்பிரர்கால மதங்களின் செல்வாக்கு
தமிழ்நாட்டில் இருந்த பழமையான மதங்கள் சைவமும்
வைணவமும் ஆகும். ஆயினும் இவை சமண, பௌத்த
மதங்களின் வரவாலும் வளர்ச்சியினாலும் தம் பிடிப்பை இழக்கத்
தொடங்கின.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சந்திரகுப்த மௌரியன்
காலத்திலும் அவனுடைய பேரனான அசோக சக்கரவர்த்தி
காலத்திலும் சமண பௌத்த சமயங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தன.
வந்து, மெல்லமெல்லத் தமிழகத்தில் பரவிக்கொண்டிருந்தன.
தமிழகத்தில் களப்பிரர் ஆட்சி வேரூன்றியது, அம்மதங்களின்
வளர்ச்சிக்கு நீரூற்றியது போல் ஆயிற்று. எனவே அவை
மேன்மேலும் சிறப்புப் பெற்றுப் பெருகி வளர்ந்தன. இதற்குக்
காரணம் அரசின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்ததாகும்.
“பொதுவாகக் களப்பிர அரசர்கள் சமண பௌத்த மதங்களுக்குச்
சார்பாக இருந்தார்கள்” என்னும் ஒரு கருத்து உண்டு.

இங்ஙனம் அரசின் ஆதரவைப் பெற்ற அச்சமயங்கள்
மக்களிடத்துச் செல்வாக்குப் பெற்றதற்கு வேறுசில காரணங்களும்
இருந்திருக்கக்கூடும். போரிலும் புலன் இன்பங்களிலும் ஈடுபட்ட
சங்ககால வாழ்க்கை முறைக்கு மா(ற்)றாக - கட்டுப்பாடுகள்
நிறைந்த வாழ்க்கையையும் ஒழுக்கத்தையும் தமிழ் மக்கள்
விரும்பியிருக்கலாம். இவ்விருப்பத்தாலேயே சமண, பௌத்தக்
கொள்கைகள் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருக்க
வேண்டும். கட்டுப்பாடான வாழ்க்கையை வற்புறுத்துவதில்
பௌத்தர்களைக் காட்டிலும் சமணர்களே தீவிரம் காட்டியதால்,
தமிழ் மக்கள் சமணக் கொள்கைகளில் அதிகம் ஈடுபட்டிருக்கக்
கூடும். இக்காலக் கட்டத்தில் தமிழில் தோன்றிய நூல்கள் பலவும்
சமணம் சார்ந்தவைகளாய் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே
“தமிழ் மக்களிடையே சமண, பௌத்தர் பெற்ற செல்வாக்கே
களப்பிரரும் சமண பௌத்தரை ஆதரித்து நின்றதற்குக்
காரணமாகலாம்” என்பர் அறிஞர். தமிழ்நாட்டிலிருந்து களப்பிரர்
ஆட்சியை ஒழித்த பாண்டியரும் பல்லவரும் கூடக் கி.பி. ஏழாம்
நூற்றாண்டில் சமணத்தை ஏற்றது. தமிழ்மக்கள் மத்தியிற் சமணம்
பெற்றிருந்த செல்வாக்கையே காட்டுகின்றது.

சைவ - வைணவ சமயங்கள் எழுச்சி பெற்ற பக்தி
இயக்கக்காலத்துக்கு முந்திய தமிழகத்துச் சூழ்நிலை இது.