2.2 பக்தி இயக்கம்
தமிழக வரலாற்றில் கி.பி. 600 முதல் கி.பி. 900 முடியவுள்ள
காலப்பகுதியைப் பக்தி இயக்கக் காலம் என்பர். இக்காலக்
கட்டத்தில் தமிழகத்தில்     நிலைபெற்றிருந்தது
பல்லவர் ஆட்சியாகும். பல்லவர் ஆட்சிக் காலம்
பக்தி இயக்கத்தின் உச்சத்தைக் கண்டதாகக்
குறிப்பிடுகிறார் அறிஞர்     தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்.

தமிழ்நாட்டுப் பக்தி இயக்கம் சைவம், வைணவம் என்னும்
இரு கிளைகளாக     ஓங்கியது. பக்தி     இயக்கத்தைத்
துணைக்கொண்ட சைவமும் வைணவமும் புறச்சமயங்களான
சமண, பௌத்தத்தைத் தோற்கடித்தன என்பது வரலாற்று
உண்மை. பக்தி இயக்கத்தின் தோற்றுவாய் வடஇந்திய
இலக்கியங்களிற் காணப்படுகின்றதெனச் சிலர் வாதிப்பர். எனினும்
பக்தி முதன்முதலாக இயக்கமாக விளங்கியது தமிழ்நாட்டிலேயே
- என்பது வரலாற்றறிஞர் பலரின் கருத்தாகும்.

 • முதல் எழுச்சி
 • கிறித்துவுக்குச் சற்று முன்னரே தமிழ்நாட்டில் செழித்திருந்த
  சமண பௌத்தங்களுக்கு எதிராகத் தமிழகத்தின் தொன்மைச்
  சமயங்களான சைவமும் வைணவமும் தொடங்கிய தத்துவ
  போராட்டமே பக்தி இயக்கத்தின் முதல் எழுச்சி எனலாம்.
  தொடர்ந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் பெருகி வரும் மக்கள்
  செல்வாக்குடன் அவ்வியக்கம் முழுவீச்சில் எழுச்சி பெற்றபோது
  பாடலும் இசையும் அதன் கருவிகளாயின.
  2.2.1 பக்தி இயக்கமும் சமணமும்
  வினை, செய்தவனை விடாது வந்து துன்புறுத்தும்,
  அவரவர் செய்த வினைப்பயனை நுகர்ந்தேதான் கழிக்க
  வேண்டும்
  என்பது சமணர் கொள்கை. இதற்கு மாறாகப் பக்தி
  இயக்கத்தால் எழுச்சி பெற்ற சைவ, வைணவ சமயங்கள்
  வினையினின்றும்     பொறியினின்றும்     மனிதனுக்கு
  விடுதலையளித்தன. வினை, வினைப்பயன் யாவற்றிற்கும்
  மேலாக உள்ளவன் இறைவன் என்றும், அவனைச்
  சார்ந்தால் வினை கெடும்
  என்றும் சுருங்கக்கூறி மக்களை
  ஈர்த்தன. பக்தி இயக்கம் மக்கள் இயக்கமாக மாறிச் செல்வாக்குப்
  பெற்றதற்கு இதனையே முதற்காரணமாக அறிஞர்கள் சுட்டிக்
  காட்டியுள்ளனர்.

  ஆழ்வார்களும்     நாயன்மார்களும்     நிலையாமையைப்
  பாடியுள்ளனர். ஆயினும் சமண பௌத்த மதங்களைப்போல
  உலக நிராகரிப்போடு அதனை வலியுறுத்தவில்லை. மனிதனுக்குப்
  பொருள்மீதுள்ள அளவுகடந்த ஆசையை அகற்றி, ஈதலால்
  இசைபட வாழ்தலை     உணர்த்துவதற்காகவே அவர்கள்
  நிலையாமை பற்றிப் பேசினர்.

  சமணசமயம் புலனடக்கத்தை அதிகம் வலியுறுத்தியது; இசை
  முதலான நுண்கலைகள் புலன் உணர்வைத் தூண்டும்
  என்னும் கருத்தில் அவற்றுக்கு எதிராக நின்றது. சைவமும்
  வைணவமும் இதற்கு மாறான நிலை எடுத்ததையும் இங்கு நாம்
  நினைவிற் கொள்ள வேண்டும். இறைபக்திக்கு இன்ப நுகர்ச்சி
  ஒரு தடையாகாது. உலகம் உண்மையானது, உலகியல்
  இன்பங்களை நுகர்ந்து கொண்டே இறைவனிடம் பக்தி
  செலுத்தலாம்
  என்ற     கோட்பாட்டினை இச்சமயங்கள்
  முன்வைத்தன. மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்றார்
  திருஞானசம்பந்தர். என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
  என்றார் திருநாவுக்கரசர். நல்ல பதத்தால் மனைவாழ்வர்
  கொண்ட பெண்டிர் மக்களே
  என்றார் நம்மாழ்வார்.
  பக்திநெறிக் கவிஞர்களின் பாட்டில் கேட்ட இந்த வசீகரமான
  குரல்கள் முன்எப்போதும் இல்லாத முறையில் அக்காலத்
  தமிழர்களைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும்.


  திருஞான
  சம்பந்தர்

  திருநாவுக்கரசர்

  நம்மாழ்வார்
  2.2.2 பக்தி இயக்கமும் மக்களும்

  அன்றைய தமிழ்ச் சமூகத்தில் சாதி வேற்றுமை நிலவிய
  போதிலும், இறையடியார் யாவரும் வணங்கத் தக்கவரே
  என்னும் கொள்கையினைப் பக்தி இயக்கம் முன்னிறுத்தியது.
  அதன் விளைவாகத் தொண்டர்குலமே தொழுகுலம் என்னும்
  குரல் அடியார் மனத்தில் எல்லாம் எதிரொலித்தது.

  குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ்இழிந்து, எத்தனை
  நலந்தான் இலாதசண் டாளசண் டாளர்கள் ஆகிலும்,
  வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற்கு ஆள்
  என்று உள்
  கலந்தார், அடியார் தம் அடியார் எம் அடிகேளா

  என்று பாடுகிறார் நம்மாழ்வார்.

  (வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் - வலக்கையில்
  சக்கரப்படையை ஏந்திய திருமால். ஆள் - அடிமை; அடியவர்.
  அடிகள்
  - வணங்கத்தக்க தெய்வம்; தலைவர்.)

  இழிந்த சாதியிற் பிறந்தவராகிச் சிறிதுகூட நல்ல
  குணங்கள் இல்லாதவரேயானாலும், சக்கரப்படையைக்
  கையில் ஏந்திய திருமாலுக்கு அடியார்களாயின் அவர்கள்
  எம்மால் வணங்கத்தக்க     தலைவராவர்
  என்பது
  இத்திருவாய்மொழிப்     பாசுரத்தின்     கருத்தாகும்.
  இதே போன்றதொரு கருத்தினைத் திருநாவுக்கரசரின் பாடல்
  ஒன்றிலும் காணலாம். ஆவுரித்துத்     தின்றுழலும்
  புலையராயினும் சிவபிரானுக்கு அன்பராகில் அவரேயாம்
  வணங்கும் கடவுள்
  என்கிறார் அப்பர். இத்தகைய கருத்துகள்
  அக்காலத் தமிழ் மக்களை ஈர்த்ததில் வியப்பில்லை.


  அப்பர்

  மேலும் பக்தியியக்கம் - முக்தி அடைவதற்குரிய எளிய
  வழியாகவும் பக்தியை அறிமுகம் செய்தது. இழிந்தவனும்
  பக்தனானால் அவனுக்கு     முக்தி உண்டு என்பதைப்
  புராணக்கதைகள் மூலம் எடுத்துக் காட்டியது.

  2.2.3 பக்தி இயக்கமும் பைந்தமிழும்
  மேலும் இத்தகைய கொள்கைகளை எல்லார்க்கும் விளங்கும்
  இனிய தமிழில் - பண்சுமந்த பாடல்களாக்கி இசைத்தமிழில்
  எடுத்து விளக்கியதும் பக்தி இயக்கத்தின் வெற்றிக்குப் பெரிதும்
  உதவியது. இறைவன் கோயில் கொண்டுள்ள ஊர்தோறும் சென்று
  நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனை ஏழிசையாகவும்
  இசைப்பயனாகவும்
  கண்டு     போற்றினர். ஏழிசையின்
  சுவைதானே
  என்று இறைவனை அனுபவித்தார் நம்மாழ்வார்.
  மேலும் அவரே, பண்ணுளாய், கவிதன்னுளாய் என்று
  பண்ணிலும் பாட்டிலுமே இறைவன் உறைவதாகப் பரவி
  மகிழ்ந்தார். பண்ணார், இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
  என்றும், பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் என்றும் இறைவனை
  அழைத்தார் சுந்தரர். தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்
  என்றார் திருநாவுக்கரசர். இசை காமத்தைத் தூண்டுவது
  என்னும் சமணரின் கருத்துக்கு எதிராகப் பக்தி இயக்கம்
  மேற்கொண்ட நிலைப்பாடு இது.
 • பக்தி இலக்கியமும் தமிழ் இலக்கியமும்
 • கற்றோர்க்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட இலக்கியத்தை
  மக்கள் இலக்கியமாக மாற்றிய பெருமையும் பக்தி இயக்கத்திற்கு
  உண்டு. பக்திக் கவிஞர்கள் பேச்சு வழக்கில் உள்ள பழகுதமிழ்ச்
  சொற்களை உயிர்த்துடிப்புடன் கையாண்டனர். நாட்டார்
  மரபுகளைப் பயன்படுத்தியும் பாடல்கள் புனைந்தனர். இத்துடன்
  இசையும் சேரவே எளியமக்களைச் சென்றடைவது அவர்களுக்குச்
  சாத்தியமாயிற்று. இத்தகைய போக்கு, தமிழில் மட்டுமன்றிப் பிற
  இந்திய மொழிகளிலும்     பக்திநெறிக் கவிஞர்களிடத்துக்
  காணப்படுகின்றது.

  இவையனைத்துக்கும் மேலாகப் பக்தி இயக்கம் தமிழுக்குத்
  தந்த ஏற்றத்தையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.
  வேதங்களையும் உபநிடதங்களையும் கொண்ட வடமொழிக்கு
  இணையாகத் தமிழைத் தெய்வ மொழியாக உயர்த்தி உணர்ச்சிப்
  பெருக்குடன் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியுள்ளனர்.
  சங்கச் சான்றோர் செய்யுட்களிற் காணப்படாத இப்புதிய பண்பு
  பக்தி இலக்கியத்திற் புகுந்து கொள்கின்றது. தமிழ் தமிழ்
  என்றும் ஆவேசக்குரலை இவ்விலக்கியங்களில் நாம் காதாரக்
  கேட்கலாம்.
  செந்திறத்த தமிழோசை வடசொல் ஆகிய
  தென்னன் தமிழை, வடமொழியை

  என்று திருமங்கையாழ்வாரும்,

  பன்னிய நூற்றமிழ்மாலை பாடுவித்து
  என்சிந்தை மயக்கறுத்த திருவருளினானை

  என்று அப்பரும்,

  செந்தமிழர் தெய்வமறை நாவர்

  என்று திருஞானசம்பந்தரும்,

  திணைகொள் செந்தமிழ்

  என்று சுந்தரரும் பாடியிருத்தல் இங்கு நினைக்கத்தகும்.
  மொழிப்பற்றை முன்னிறுத்திப் பாடிய இவ்வடிகள், இன்றைய
  தமிழியக்க உணர்வுக்கான வேர்களாக விளங்குவது நம்மை
  வியப்பில் ஆழ்த்துகிறது.

  சமண பௌத்த சமயத்தினர் பேரின்பக் காதலைப் பாடும்
  நாயக - நாயகி பாவ
  த்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால்
  ஆழ்வார்களும் நாயன்மார்களும் பழைய அகத்திணை மரபைத்
  தழுவி, நாயகி பாவனையில் தெய்வத்தின்பால் கொண்ட
  மானுடக் காதலைப் பாடியுள்ளனர்.     உலகியல்     காதல்
  அடிப்படையில் செய்த இப்புதுமை அன்றுமுதல் இன்றுவரை
  கற்போர்க்குப் பெருவிருந்து படைத்துக் கொண்டிருக்கிறது.

  இத்தகைய பல்வேறு காரணங்களால் சிறப்புற்ற பக்தி இயக்கக்
  காலத்தைப் பிற்காலச் சோழப்பேரரசுக்கான முன்னோடிக்காலம்
  எனவும், களப்பிரர் ஆட்சியில் பின்னோக்கித் தள்ளப்பட்ட
  தமிழகத்தின்     எழுச்சிக்காலம்     எனவும்     அறிஞர்கள்
  மதிப்பிடுகின்றனர். காவிரியாறு தந்த வளத்துடன் மக்கள்
  இயக்கமாக விளங்கிய பக்தி இயக்கம் தந்த சக்தியும்
  கலந்தபோது சோழநாடு பேரரசு ஆகியது. அந்தப் பேரரசுக்
  காலத்தில் தோன்றிய கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகிய
  ஒப்பற்ற இருநூல்களும் பக்தி இயக்கத்தின் விளைவே என்பதை
  நாம் மனங்கொள்ள வேண்டும். “சைவருடைய பக்தியியக்கம்
  பெரியபுராணத்திற் பூரணத்துவம் பெற்றது போல, வைணவருடைய
  பக்தியியக்கம் கம்பராமாயணத்திற் பூரணத்துவம் பெற்றது” என்பது
  அறிஞர்களின் கருத்தாகும்.


  தன் மதிப்பீடு : வினாக்கள் I

  1.
  களப்பிரர் பற்றி அறிய உதவுவது எது?
  2.
  தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சிக்காலம் எப்போது முடிவுற்றது?
  3.
  பக்தி இயக்கக் காலம் என்பது எது?
  4.
  பக்தி இயக்கக் காலத்தில் எழுச்சி பெற்ற சமயங்கள்
  யாவை?