4.4 வழிபாடு
கோயில் வழிபாட்டைப்     பொறுத்தவரை     ஆகம
சாத்திரங்கேளாடு சிற்பச் சாத்திரங்களையும் இணைத்தே
கோயில்களைக் கட்டி, மூர்த்தங்களை நிறுவி வழிபட்டு
வந்துள்ளனர். இவை ஒன்றுக்கொன்று உதவுகின்றவையாக
விளங்குகின்றன. வைணவத்தில் வைகானஸம், பாஞ்சராத்திரம்
என இரண்டு ஆகம வகைகள் உள்ளன. இவை கோவில்களிலும்
வீடுகளிலும் ஆராதிக்கப்படும்     திருமால் விக்கிரகத்தின்
தத்துவத்தைப் பற்றியும், வழிபாட்டு முறைகளைப் பற்றியும் கூறும்
வடமொழி நூல்களாகும். ஆகமம் என்றால் தொன்றுதொட்டு
வரும் பழமையான அறிவு அல்லது சாத்திரம் என்று
பொருளாகும்.
வைணவர்கள் வேதங்களைப் போலவே
ஆகமங்களுக்கும் ஏற்றம் கூறுகின்றனர்.
4.4.1 வைகானசம்
வைணவக் கோயில்களில் வைகானசம், பாஞ்சராத்திரம்
ஆகிய இருவகையான ஆகம நெறிகளும் பின்பற்றப்பட்டு
வருகின்றன. விகநச முனிவரால் உருவாக்கப்பட்ட ஆகம
நெறியினைப் பின்பற்றுவோர் வைகானசர் ஆவர். திருவேங்கடம்
(திருப்பதி) திருமாலிருஞ்சோலை (அழகர்கோயில்) போன்ற


திருப்பதி கோயில்


அழகர் கோயில்

திவ்யதேசங்களில் வைகானச அர்ச்சகர்கள்தாம் பெருமாளுக்கு
ஆராதனம் செய்கிறார்கள். மூலத்திருமேனியைத் தொடும்
உரிமையுடையவர்கள் இவர்கள். இவர்களுக்கு உதவியாகப்
பணிபுரியும் பட்டர்களுக்கும் மூலத்திருமேனியைத் தொடும்
உரிமை இல்லை. இவர்கள் நெறிவேதத்தை அடிப்படையாகக்
கொண்டது. இவர்கள் இராமாநுசரையோ நம்மாழ்வாரையோ தம்
குலகுருவாக     ஏற்றுக் கொள்வதில்லை.     அதனால்
திவ்வியப்பிரபந்தங்களை இவர்கள் ஓதுவதில்லை. பஞ்ச
ஸம்ஸ்காரம்
(வைணவனாக எண்ணப்படுவதற்குத் தேவைப்படும்
ஐவகைத் தூய்மைகள்) என்ற வைணவ தீட்சையை இவர்கள்
பெறுவதுமில்லை. தாயின் கருவிலேயே இம்முத்திரை தங்கட்கு
இடப்பட்டுவிட்டது என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.
பரத்துவம், (வைகுண்டத்தில் உள்ள நிலை) வியூகம் (பாற்கடலில் உள்ள நிலை), விபவம் (அவதாரநிலை), அந்தர்யாமி (உயிரில்
கரந்து நிற்கும் நிலை), அர்ச்சை (கோவில்களி்ல் குடிகொண்டுள்ள
திருவுருவ நிலை) என்னும் வைணவ வழிபாட்டு நெறிகளில்
அர்ச்சாவதாரத்தையே (கண்ணுக்குப் புலனாகும் பொருள்களாற்
செய்யப்பெற்றுக் கோயில்களில் வழிபடப்பெறும் திருமேனிகளை
வணங்குவதையே) வைகானசர் பின்பற்றுகின்றனர். பிற நெறிகளை
ஏற்பதில்லை.

ஆழ்வார்கள், ஆசார்யர்கள்     காலத்தில் உருவான
கொள்கைகளை அவர்கள்     ஏற்றுக்கொள்ள மறுப்பதால்,
ஆழ்வார்கள் காலத்திற்கு முன்பே வைகானசர் தமிழ்நாட்டுக்
கோயில்களில் பணியாளராக நிலைபெற்றிருக்க வேண்டும் என்று
ஆய்வாளர்கள் கருதுகின்றனர். “எனவே தமிழ்நிலத்து நெறிகளில்
காலூன்றாமல் தங்களது தனித்தன்மையினைக் காப்பவர்களாக
(puritans) இவர்கள் உள்ளனர். இவர்கள் வடமொழி வேதங்களை
மட்டும் ஏற்றுக்கொள்வதற்கும் அதுவே காரணமாதல் வேண்டும்”
என்பது அறிஞர்களின் முடிவாகும்.
4.4.2 பாஞ்சராத்திரம்
ஐந்து     இரவுகளில்     திருமாலாகிய     இறைவனால்
உபதேசிக்கப்பட்டதாகக் கருகப்படுவது பாஞ்சராத்திர நெறியாகும்.
இதனை வேதத்துக்கு இணையாக (வேதசமம்)க் கருதினார்
இராமாநுசர்.

வைகானச ஆகம விதிகள் வைகானச பிராமணர்களையே
சடங்குகளில் அனுமதிக்கின்றன. பாஞ்சராத்திர ஆகம விதிகள்
தீட்சை பெற்றுக்கொண்ட பிராமணர்கள் எல்லோரையும் கோயில்
பூசைகளில் அனுமதிக்கின்றன. திருவிலச்சினை முதலிய பஞ்ச
ஸம்ஸ்காரங்கள் பெற்றுக்கொண்ட பிராமணர் அல்லாதவரையும்
சில காரியங்களில் அவை ஏற்கின்றன. கிராமப்புறத் திருமால்
கோயில்களில் சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள் இன்றும் பூசைகள்
செய்து வருகின்றனர்.

வைகானச வழிபாட்டு முறையில் மந்திரங்கள் பெரும்பங்கு
வகிக்கின்றன. பாஞ்சராத்திர     முறையில்     தந்திரங்களும்
முத்திரைகளும் கிரியை (சடங்கு)களில் முக்கிய இடம்
பெறுகின்றன.

வழிபாட்டின்போது தூப தீபங்கள் காட்டுவதிலும் வரிசைமுறை
வேறுபடுகின்றது.

திவ்வியப்பிரபந்தத்தில் வைணவ தீட்சையான திருவிலச்சினை
வலியுறுத்தப்படுகிறது. நின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு
என்று பெரியாழ்வார்     பாடக்     காணலாம். ஆதலால்
திவ்வியப்பிரபந்தங்கள்     பாஞ்சராத்திர     நெறியினை
ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கருதலாம்.
  • இரு கண்கள்
  • இவ்விரு நெறிகளுக்கும் இடையில் உள்ள வேற்றுமைகளை
    நோக்கி இவற்றுள் எது சிறந்தது? ஏற்கத்தக்கது எது? என்னும்
    வினாக்கள் எழக்கூடும். இதற்கு விடை கூறுவது போல சுதர்சனர்
    கிருஷ்ணசாமி அய்யங்கார்
    தரும் விளக்கம் இங்கு
    எடுத்துக்காட்டத்தக்கது.

    “பரமஆசார்யரான     ஆளவந்தாரும்     தமது
    ஆகமப்ராமாண்யத்தில்     பாஞ்சராத்ரத்தைப் போலே
    வைகாநஸமும் பாகவதமதம்
    என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
    ஸ்ரீவேதாந்ததேசிகரும் தமது சரணாகதி தீபிகையில்
    எம்பெருமானைத் தத்தம்     முறையில் ஆராதிக்கும்
    பாஞ்சராத்ரிகளும் வைகாநஸர்களும் பாக்கியசாலிகள்
    என்று
    பாராட்டியிருக்கிறார். ஆகையால் பாஞ்சராத்ரமும் வைகாநஸமும்
    ஸ்ரீவைஷ்ணவ மதத்துக்கு இரண்டு கண் போன்றவை என்றே
    கொள்ளவேண்டும்.”