1.3 தமிழ்நாட்டில் சமண சமயம்


    மகாவீரருக்கு 11 சீடர்கள் இருந்தனர். இவர்களுள் 9 பேர்
மகாவீரர் காலத்திலேயே வீடுபேறு அடைந்தனர். கௌதம
இந்திரபூதி, சுதர்மர்
என்னும் 2 சீடர்கள் மட்டும் மகாவீரருக்குப்
பிறகும் உயிர் வாழ்ந்தனர். மகாவீரர் வீடுபேறு அடைந்த பிறகு
சமண சமயத் தலைவர்களாக விளங்கியவர்களைப் பின்வருமாறு
வரிசைப்படுத்தலாம்.

●  பத்திரபாகு முனிவர்

    பத்திரபாகு முனிவர் கி.மு.317 முதல் கி.மு.297 வரையில்
சமண சமயத் தலைவராக இருந்தார். இவர் காலத்தில்தான் சமண
சமயம் தமிழ்நாட்டிற்கு வந்தது என்பர். இவர் மௌரிய அரசன்
சந்திரகுப்தனுக்கு மத குருவாகவும் இருந்தார். சந்திரகுப்தன்
கிரேக்க அரசனாகிய மகா அலெக்சாந்தர் காலத்தவன்.

1.3.1 சமண சமயம் தமிழகம் வந்த வரலாறு

     சமண சமயம் தமிழ்நாட்டுக்கு வந்த வரலாறு பற்றிய ஒரு
கதை வழங்குவது உண்டு. அக்கதை வருமாறு:

    மகதநாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் கடும்பஞ்சம்
(வற்கடம்) வர இருந்தது. இதை முன்கூட்டியே அறிந்து கொண்ட
பத்திரபாகு முனிவர், அதை அரசனிடம் தெரிவித்தார்.
இப்பஞ்சத்தினின்றும் தப்பிக்க, தம்மைச் சார்ந்திருந்த 12,000
சமண முனிவர்களை அழைத்துக் கொண்டு தென்திசை நோக்கிப்
புறப்பட்டார். சந்திரகுப்த அரசனும், தனது அரச உரிமையைத்
துறந்து துறவு நெறி மேற்கொண்டு பத்திரபாகு முனிவருடன்
வந்தான். பத்திரபாகு முனிவரும் பிற முனிவர்களும் மைசூர்
நாட்டில் சமணர் வெள்ளைக் குளம் என்ற இடத்தில் தங்கினர்.
இவ்விடம்     தற்பொழுது     சிரவணபெள்கொள     என்று
வழங்கப்படுகிறது.

    பத்திரபாகு முனிவர் இங்கிருந்து தம் சீடர்களுள் ஒருவரான
வைசாக முனிவர் என்பவரைக் கொண்டு சோழ நாடு மற்றும்
பாண்டிய நாடுகளில் சமண சமயக் கொள்கைகளைப் பரவச்
செய்தார். கி.மு.297இல் பத்திரபாகு முனிவர் வடக்கிருந்து
(வடதிசைக்கண் அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல்)
வீடுபேறு அடைந்தார். அது போலவே சந்திரகுப்த அரசனும் வடக்கிருந்து வீடுபேறு அடைந்தான்.

    இச்செய்தியை அரிசேனர் என்பவர் இயற்றிய பிருகத்கதா
கோசம்
, தேவசந்திரர் கன்னடமொழியில் இயற்றிய ராஜாவளி
கதெ
ஆகிய நூல்களின் வழி அறியலாம். மேலும் சமணர்களின்
கர்ண பரம்பரைக் கதையாகவும் இது வழங்குகிறது.

    எனவே, கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின்
சீடராகிய வைசாக முனிவர் தமிழ்நாட்டில் சமண சமயத்தைப்
பரப்பினார் என்று கூறலாம்.

1.3.2 சான்றுகள்

     சமண சமயம் தமிழகம் வந்தது பற்றிக் கல்வெட்டுச்
சான்றுகளும், மகாவம்சம் என்னும் நூல் வழங்கும் சான்றுகளும்
இராமாயணத்திலுள்ள குறிப்புகளும் காணத்தக்கன.

●  கல்வெட்டுச் சான்று

    தமிழ்நாட்டில் சமண சமயம் கி.மு.3ஆம் நூற்றாண்டில்
பரவி இருந்ததை உறுதி செய்யும் வகையில் ஆய்வாளர்கள்
கல்வெட்டுகளைச் சான்று காட்டுவர். பாண்டிய நாட்டின்
மதுரை மாவட்டத்தில் பிராமிக் கல்வெட்டுகள் பல உள்ளன.
இக்கல்வெட்டுகள் கி.மு.3ஆம் நூற்றாண்டில் சமணர்களால்
எழுதப்பட்டவை என்று தொல்லியல் துறை அறிஞர்கள்
குறிப்பிடுகின்றனர். இவர்கள் குறிப்பிடும் இக்காலமும் பத்திரபாகு
முனிவர் தென்திசை நோக்கி வந்த காலமும் பெரிதும்
ஒத்திருக்கிறது. எனவே, சமண சமயம் கி.மு.3ஆம் நூற்றாண்டில்
தமிழகத்தில் பரவியது என்று உறுதியாக நம்பலாம்.

●  மகாவம்சம்

    சமண சமயம் கி.மு.3ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பரவி
இருந்தது என்பதற்கு வேறொரு சான்றும் உள்ளது.

    மகாவம்சம் என்ற பௌத்த நூல் கி.மு.3ஆம்
நூற்றாண்டிற்கு முன்பே சமண சமயம் இலங்கையில் இருந்ததாகக்
கூறுகிறது. கி.மு.377 முதல் கி.மு.307 வரையில் இலங்கையை
ஆண்ட மன்னன் பாண்டுகாபாயன். சந்திரகுப்த அரசனும்
இம்மன்னனும் ஏறக்குறைய ஒரே காலத்தவர்கள்.

    பாண்டுகாபாயன் காலத்தில் அதாவது கி.மு.3ஆம்
நூற்றாண்டில் இலங்கையில் சமண சமயம் இருந்தது என்றால் அது
தமிழ்நாட்டிலிருந்தே இலங்கைக்குச் சென்றிருக்க வேண்டும்;
ஏனெனில், சமணத் துறவிகள் நீண்ட நீர்நிலைகளான கடலில்
பயணம் செய்தல் கூடாது. ஆனால் ஆறு போன்ற சிறு
நீர்நிலைகளைக் கடந்து செல்லலாம். எனவே, சமணத் துறவிகள்
வட இந்தியாவிலிருந்து கப்பலில் பயணம் செய்து இலங்கையில்
சமண சமயத்தைப் பரப்பியிருக்க முடியாது; தமிழகத்தில் இருந்தே
சென்று இருக்க வேண்டும். இலங்கைக்கும் பாண்டிய நாட்டுக்கும்
இடையில் உள்ள மன்னார் வளைகுடாக் கடல் அக்காலத்தில்,
மிகக் குறுகி ஆழமற்று ஒரே நாளில் இலங்கைக்குச்
செல்லக்கூடிய அண்மையில் இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.

    ஆகவே, சமண சமயம் கி.மு.3ஆம் நூற்றாண்டு
அளவிலே தமிழகத்திலும் இலங்கையிலும் பரவியிருந்ததை
உணரலாம்.

●  இராமாயணம்

    பத்திரபாகு முனிவர் மைசூருக்கு வந்த காலத்துக்கு முன்பே
அதாவது கி.மு.3ஆம் நூற்றாண்டுக்கு முன்பே சமணம்
தமிழகத்தில் இருந்ததாக வான்மீகி இராமாயணம் கூறுகிறது.

    இராமன் காடுறை வாழ்விற்காகத் தென்னகம் வந்தபோது
சமண முனிவர்களைச் சந்தித்தான் என்று வான்மீகி
இராமாயணம்
குறிப்பிடுகிறது. வான்மீகி இராமாயணத்தின்
காலம் கி.மு.8ஆம் நூற்றாண்டு என்பர். எனவே, வான்மீகி
இராமாயண
காலத்திலேயே சமண சமயம் தமிழகத்தில் பரவி
இருந்தது என்று குறிப்பிடுவர்.