1.3 பெருங்காப்பியமும் சிறுகாப்பியமும்
வடமொழியில் மகாகாவியம். காவியம் என்ற
வகைமையையே பெருங்காப்பியம் - சிறுகாப்பியம் என்று
தமிழில் குறிப்பிடுகின்றனர். வடமொழியில் இதிகாசங்களான
இராமாயண - மகாபாரதக் கிளைக் கதைகளை எடுத்துக்
கொண்டு, அவற்றைக் கலைத் தன்மையுடன் தண்டியலங்காரம்
கூறும் இலக்கணப்படி பாடினர். இவையே மகாகாவியம் -
காவியம் எனப்பட்டன. வடமொழி தமிழ்க்
காப்பியங்களுக்கிடையே பெயரில் இந்த ஒற்றுமை
காணப்பட்டாலும், பாடு பொருளில் இருமொழிக் காப்பியங்களும்
வேறுபடுகின்றன. தமிழில் எந்த ஒரு பெருங்காப்பியமோ
அல்லது சிறு காப்பியமோ இதிகாசத் தழுவலாக இல்லை
என்பது குறிப்பிடத் தக்கது.
1.3.1 பெருங்காப்பிய இலக்கணம்
தமிழ்க் காப்பியக் கொள்கை பற்றிய விரிவான செய்தி
பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இல்லை
எனலாம். வடமொழி மரபை ஒட்டி எழுந்த தண்டியலங்காரமே
முதல்முதலில் காப்பிய இலக்கணம் பற்றி விரிவாகப்
பேசுகின்றது. தொடர்ந்து பன்னிரு பாட்டியல், நவநீதப்
பாட்டியல், மாறன் அலங்காரம் முதலான பாட்டியல் நூல்கள்
இவ்விலக்கணம் பற்றிப் பேசுகின்றன.
பெருங்காப்பியம் தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனைப்
பற்றிய கதையாக அமைய வேண்டும் என்று தண்டியலங்காரம்
கூறுகிறது.
பெருங்காப்பியம் வாழ்த்து, வணக்கம், வருபொருள் கூறித்
தொடங்கப் பட வேண்டும் என்பார் தண்டி; அவையடக்கம்
இடம் பெற வேண்டும் என்பதை மாறன் அலங்காரம்
வலியுறுத்தும். காப்பியப் பாடுபொருள் அறம், பொருள், இன்பம்,
வீடு என்னும் நாற்பொருள் தருவதாக அமைதல் வேண்டும்
என்பது இலக்கண நூலார் அனைவரின் கருத்தாகும்.
பெருங்காப்பிய வருணனைக் கூறுகளாக மலை, கடல்,
நாடு, வளநகர், பருவம், இருசுடர்த் தோற்றம் என்பனவற்றைத்
தண்டி கூறுகிறார். தென்றலின் வருகை, ஆற்று வருணனைகளை
மாறன் அலங்காரம் சுட்டும். நவநீதப் பாட்டியல் மாலை
(பொழுது), குதிரை, யானை, கொடி, முரசு, செங்கோல் பற்றிய
வருணனைகளைச் சேர்க்கும்.
பெருங்காப்பிய நிகழ்ச்சிகளைப் பொது நிகழ்ச்சி, அரசியல்
நிகழ்ச்சி என இரண்டாக வகைப்படுத்தலாம். திருமணம்,
பொழிலாடல், நீராடல், புதல்வர்ப் பேறு, புலவியிற் புலத்தல்,
கலவியில் கலத்தல் ஆகியவற்றைப் பொது நிகழ்வுகளாகத்
தண்டி ஆசிரியர் குறிப்பிடுவார். மாறன் அலங்காரம்
இல்வாழ்க்கை, நிலையாமை, கைக்கிளை ஆகியவற்றைச்
சேர்க்கும். குலவரவு, உலகின் தோற்றம், ஊழின் இறுதி,
தொன்னூற்று அறுவரது இயற்கை, வேதியர் ஒழுக்கம் இவை
பற்றிப் பேச வேண்டும் என்பவற்றைப் புராணக் காப்பிய
நிகழ்வுகளாக வச்சணந்திமாலை முதலான இலக்கண நூல்கள்
குறிப்பிடும்.
பெருங்காப்பிய அரசியல் நிகழ்வுகளாக மந்திரம், தூது,
செலவு, இகல் வென்றி, முடிசூடல் ஆகியவை தண்டி கூறுவன.
இவற்றுடன் ஒற்றாடல், திறை கோடல் ஆகியவற்றை மாறன்
அலங்காரம் சேர்க்கும்.
சுவை, பாவம் (மெய்ப்பாடுகள்) காப்பியத்தில் இடம் பெற
வேண்டும். அத்துடன் சந்தி, பாவிகம் ஆகிய கதைப் பின்னல்
அமைதல் வேண்டும் என்பார் தண்டி. இதனைச் சற்று விரித்து
வித்து, எண், துளி, கொடி, கருப்பம் எனப் பன்னிரு பாட்டியல்
குறிப்பிடும்.
பெருங்காப்பியக் கட்டமைப்பாகச் சருக்கம், இலம்பகம்,
பரிச்சேதம் ஆகியவை அமையும் என்பார் தண்டி. இவற்றுடன்
படலம், காண்டம் ஆகியவற்றை மாறன் அலங்காரம்
குறிப்பிடும். வெண்பா, விருத்தம், அகவல், கொச்சகம் என்னும்
பாவகை காப்பியம் பாடச் சிறந்தவை எனப் பன்னிரு பாட்டியல்
குறிப்பிடும்.
இவை தவிர வழிப்படுத்துதல், வழிப்பயணம், பந்தாடல்,
அசரீரி, சாபம் முதலான நிகழ்வுகளும்; சுடுகாடு, தீஎரி முதலான
வருணனைக் கூறுகளும்; காதை, புராணம் ஆகிய கட்டமைப்புக்
கூறுகளும் பெருங்காப்பியக் கூறுகளாக அமைவதைக்
காணலாம்.
● தமிழில் பெருங்காப்பியங்கள்
தமிழில் பெருங்காப்பியங்களை ஐம்பெருங் காப்பியங்கள்
என்ற வகையுள் அடங்குகின்றனர். அவை சிலப்பதிகாரம்,
மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி,
குண்டலகேசி ஆகியன. இவற்றுள் சிலப்பதிகாரம்
மணிமேகலை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள்
என்பர். ஆனால் இந்தப் பாகுபாடுகள் எதன் அடிப்படையில்
செய்யப்பட்டன. இப்பாகுபாடு சரிதானா? என்ற சிந்தனை
அறிஞரிடையே இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.
இங்கே குறிக்கப்பட்டுள்ள ஐம்பெருங் காப்பியங்கள் வரிசையில்
குண்டலகேசியும், வளையாபதியும் கிடைக்கப் பெறவில்லை.
அவை எப்படி இருந்தன. அவை பெருங்காப்பிய மரபில் பாடப்
பட்டவைதானா? என்பது யாருக்கும் தெரியாது. நன்னூல்
மயிலைநாதர் உரையில் (நூ.387) ‘ஐம்பெருங் காப்பியம்’ என்ற
பெயர் காணப்படுகிறது. பின்னர் தோன்றிய தமிழ்விடுதூது
‘கற்றார் வழங்கு பஞ்ச காப்பியம்’ என்று குறிப்பிடுகின்றது.
இந்த இரு நூல்களிலும் எவை ‘பஞ்ச காப்பியம்’ என்பது
குறிக்கப் படவில்லை. கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
கந்தப்ப தேசிகர்,
சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்
நந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா
வளையா பதிதருவான் வாசகனுக்கு ஈந்தான்
திளையாத குண்டலகே சிக்கும்
என்று ஐம்பெருங்காப்பியங்களை எண்ணிச் சொல்கிறார்.
1.3.2 சிறுகாப்பிய இலக்கணம்
சிறு காப்பியங்களுக்கான தனி இலக்கணம் மேற்சுட்டிய
இலக்கண நூல்களில் இடம் பெறவில்லை. பெருங்காப்பியம்
தரும் நாற்பொருளில் சில குறைந்து இயல்வது சிறு காப்பியம்
என்பார் தண்டி. தமிழிலுள்ள ஐஞ்சிறு காப்பியங்களில் இவை
அளவில் குறைந்திருப்பது தெரிய வருகிறது. பெருங்காப்பியச்
சுருக்கமும் சிறுகாப்பியமாக எண்ணப் படுகின்றது.
பெருங்காப்பியங்களுக்கு உள்ள உயர்ந்த, பரந்துபட்ட, நாடு
தழுவிய ஓர் உன்னதத் தன்மை சிறுகாப்பியங்களுக்கு இல்லை
என்றே சொல்லலாம். இவை குறிப்பிட்ட ஒரு கருத்தை,
பகுதியை மட்டுமே மையப் படுத்துகின்றன எனலாம்.
● சிறுகாப்பியங்கள்
தமிழில் சிறுகாப்பியங்களை ஐஞ்சிறு காப்பியங்கள் என்று
வகை செய்வர். இந்த வகைப்பாடும் கூடக் கருத்து
வேறுபாடுகளுக்கு உரியதாக உள்ளது. யசோதர காவியம்,
நீலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம்,
சூளாமணி ஆகியவற்றை ஐஞ்சிறு காப்பியங்களாகத் தமிழ்
இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர்.
|