5.5 வளையாபதி உணர்த்தும் அறம்

    வளையாபதியின் கடவுள் வாழ்த்தே வாலறிவன் அருகனை வாழ்த்துகிறது. மேலும், ‘தொல்வினை நீங்குக’ என்றும் வேண்டப்படுகிறது. இங்கு வினைப்பயன் நீங்கி வீடுபேறு பெற வேண்டும் என்ற ஆசிரியர் எண்ணம் வெளிப்படுகிறது.

5.5.1 அரிய பிறப்பு

    மனிதப் பிறவி மிக உயர்ந்தது. அதுவும் செல்வராக, உயர்குடிப் பிறப்பாளராக, ஊனமில்லாத யாக்கை உடையவராக, கல்வி கேள்விகளில் சிறந்தவராகப் பிறப்பது அரிது என்கிறார் ஆசிரியர்.

    வினைபல வலியினாலே வேறுவேறு யாக்கை ஆகி
    நனிபல பிறவி தன்னுள் துன்புறூஉம் நல்லுயிர்க்கு
    மனிதரின் அரியதாகும் தோன்றுதல் தோன்றினாலும்
    இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்னதேயாம்

    உயர்குடி நனியுள் தோன்றல்
        ஊனம்இல் யாக்கை யாதல்
    மயர்வறு கல்வி கேள்வித்
        தன்மையால் வல்லர் ஆதல்
    பெரிதுணர் அறிவே ஆதல்
        பேரறம் கோடல் என்றாங்கு
    அரிதிவை பெறுதல் ஏடா
        பெற்றவர் மக்கள் என்பார்

(நனிபல பிறவி = பல பிறவிகள்; மயர்வறு = மயங்குதல் இல்லாத; ஏடா? = ஏடா என முன்னிலையாரை அழைத்தல்)

5.5.2 நல்ல அறம்

    எல்லா நீதி நூல்களும் சொல்வது போல, கொலை, களவு, கள், காமம், பொய் நீங்குக, பிறரை ஏசாதே, புறங்கூறாதே, வன்சொல் சொல்லாதே, பிறரை எளியர் என்று எள்ளி நகையாடாதே, ஏதில் பெண் தழுவாதே, உயிர்கள் மாட்டு அன்பு கொள். மானம் போற்றுக; புலால் உண்ணற்க; உலகில் குற்றமே செய்யாதார் எவரும் இலர்; பொருளாசை கொள்ளற்க; அருளொடு அறம் செய்க; சீற்றம் நீங்குக; தவம் செய்க; தேர்ந்து தெளிக; இளமையும் இன்பமும் செல்வமும் நில்லாது நீங்கும்; நாளும் துன்பமே; நல்லதை யாரும் மதிக்க மாட்டார்; கல்வியும் கைப்பொருளும் இல்லாதார் சொல் புல்லாய் மதிக்கப் பெறும் என்று முழுக்க முழுக்க, அறம் சொல்வதாகவே நமக்குக் கிடைத்துள்ள வளையாபதிப் பாடல்கள் அமைகின்றன.

5.5.3 பெண்கள்

    பெண் மனம் நிலையற்றது; அதிலும் குறிப்பாகப் பொருட்பெண்டிர் மனம் மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போன்றது. புல்மேயும் மாடுகள் புல் தீர, பிறிதொரு புல்வயல் நாடுவது போலப் பொருட்பெண்டிர் அமைவர் என்று குறிப்பிடப்படுகிறது.

    மேய்புலம் புல்அற மற்றோர் புலம்புகும்
    மாவும் புரைப மலரன்ன கண்ணார்

(புரைப = ஒப்பர்)

    பெண்ணால் வருவது பெருந்துன்பம். அதைவிடப் பெருந்துன்பம் வேறு இல்லை. ஆழமான நீர் நிலையில் வாழும் மீன்கள் புது வெள்ளம் காணின் அதை நோக்கிப் பாயும். அதுபோலப் பெண் காமனொடு உறவு கொண்டாலும் அவர்தம் உள்ளம் பிறிதொன்றை எதிர்நோக்கி உருகும். உண்டி, பொருள் மற்றும் கல்வி இவற்றைக் கூட காக்கலாம். ஆனால் பெண்ணைக் காப்பது, கட்டுப்படுத்துவது என்பது இயலாத ஒன்று. இவ்வாறு பெண்ணை ஒருவகையில் இழிவாகப் பேசுவது இங்குக் குறிப்பிடத்தக்கது.

5.5.4 குழந்தைச் செல்வம்

    ‘குழல் இனிது, யாழ் இனிது என்ப, தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்’ என்று குழந்தைச் செல்வம் பற்றி வள்ளுவர் பேசுவார். இதுபோன்று குழந்தைச் செல்வம் பற்றி எதிர்மறை உவமானத்துடன் சிறப்பிக்கிறார் வளையாபதி ஆசிரியர். அப்பாடல் இதோ:

பொறைஇலா அறிவு போகப்புணர்வு இலா இளமை மேவத் துறைஇலா வசைவாவி துகில்இலாக் கோலத் தூய்மை நறைஇலா மாலை கல்வி நலம்இலாப் புலமை நன்னீர்ச் சிறையிலா நகரம் போலும் சேய் இலாச் செல்வம் அன்றே

பொருள்:

    பொறுமை இல்லாத அறிவு, போகம் (காம இன்பம்), துய்க்காத இளமை, படித்துறை இல்லாத நீர்நிலை (குளம்), ஆடை அணியாத தூய்மை, மணமற்ற மாலை, மேலும் மேலும் கல்லாத புலமை, காவல் அகழிகள் இல்லாத நகரம் இவை போன்றது குழந்தை இல்லாத செல்வம் என்கிறார்.

    ‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார் வள்ளுவர். அதுபோல வளையாபதி ஆசிரியர். “காக்கப் படுவன இந்திரியம் (ஐம்புலன்கள் - கண், வாய், செவி, மூக்கு, உடல்) ஐந்தினும், நாக்கு அல்லது இல்லை’ என்கிறார். இங்ஙனம் முழுக்க முழுக்க அறக் கருத்துகளையே மையப்பொருளாகக் கொண்டுள்ளன வளையாபதிப் பாடல்கள் என்றால் அது மிகையாகாது.

5.5.5 கற்பனை வளம்

    கிடைத்துள்ள வளையாபதிப் பாடல்கள் சமய, தத்துவ, அறச் சிந்தனைகள் தொடர்பானவை என்றாலும், கற்பனை நயம் மிக்க பாடல்களும் உண்டு. இயற்கை வளம் பற்றிப் பேசும் கவிஞரின் கற்பனைக்கு இதோ ஒரு சான்று.

    செந்நெல்அம் கரும்பினோடு இகலும் தீஞ்சுவைக்
    கன்னல்அம் கரும்பு கமுகைக் காய்ந்து எழும்
    இன்னவை காண்கிலன் என்று பூகமும்
    முன்னிய முகில்களால் முகம் புதைக்குமே

(இகலும் = போட்டியிட்டு வளரும்; கன்னல்அம் = சுவை மிக்க; கமுகு = பாக்கு மரம்; காய்ந்து எழும் = போட்டியிட்டு வளரும்; பூகம் = பாக்கு மரம்)

பொருள்:

    நெற்பயிர் கரும்புடன் போட்டி போட்டுக் கொண்டு அதனினும் உயரமாக வளரும். பாக்கு மரத்துடன் போட்டியிட்டுக் கரும்பு உயரமாக வளரும். இதனைக் காண விரும்பாத பாக்கு மரம் மேகத்திடை தன் முகத்தை மறைத்துக் கொள்ளும்.

● இடை மடக்குப் பாடல்

    உவமை நயம் மிக்க பல பாடல்கள் இடம் பெறுவதுடன் சொற்பின்வரு நிலையாகவும், இடை மடக்காக வரும் பாடல்களும் இங்கு இடம் பெறுவது வளையாபதியின் இலக்கிய நயத்திற்குச் சான்றாகின்றன. இடை மடக்குப் பாடல் ஒன்று இதோ:

    நீல நிறத்தவனவாய் நெய்கனிந்து போது அவிழ்ந்து
    கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே
    கோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும்
    காலக் கனல்எரியில் வேம்வாழி நெஞ்சே
    காலக் கனல் எரியில் வேவன கண்டாலும்
    சால மயங்குவதுஎன்? வாழி நெஞ்சே

பொருள்:

    இது ஒரு அகப்பாடல். நீல நிறமுடைய, எண்ணெய் தேய்த்துப் பூச்சூடி கோலம் செய்யப்பட்ட கூந்தலானது, காலமாகிய தீயில் வெந்து அழியும். அவ்வாறு வெந்து அழிவது கண்டும் நெஞ்சே! நீ மயங்குவது ஏன்? என்று காதல் வயப்பட தலைவி வருந்துவதாக அமையும் இப்பாடல், இடைமடக்கு அணி நயம் பெற்றுச் சிறப்பதைக் காணலாம். இங்கு இரண்டாவது அடி மூன்றாவது அடியாகவும், நான்காவது அடி ஐந்தாவது அடியாகவும் மடக்கி வருவதைக் காணலாம்.

● சொற் பின்வரு நிலை

    இது போன்றே சொற்பின்வரு நிலையாக அமையும் பாடல் ஒன்றும் வளையாபதியின் இலக்கியச் சிறப்பினை மெய்ப்பிக்கும். பாடல் இதோ:

    நாடொறு நாடொறு நந்திய காதலை
    நாடொறு நாடொறு நைய ஒழுகலின்
    நாடொறு நாடொறு நந்திஉயர்வு எய்தி
    நாடொறுந் தேயும் நகைமதி ஒப்ப

(நாடொறு = நாள்தோறும்; நந்திய = வளர்ந்த; நைய = துய்ந்துத் தீர்க்க)

    இங்குத் தினம் தினம் வளர்ந்து கொண்டே இருக்கும் காதலைத் துய்த்துத் தீர்ப்போம் என்று கூறுவது இயலாத ஒன்று. அது துய்க்கத் துய்க்க (அனுபவிக்க அனுபவிக்க) வளர்ந்து கொண்டே வரும். இது தேய்ந்து வளரும் மதி போன்றது. எனவே காதல் உணர்வைத் துய்த்துத் தீர்ப்போம் (அழிப்போம்) என்பது இயலாத ஒன்று என்கிறார் ஆசிரியர். இங்கு நாடொறு என்ற சொல் தொடர்ந்து நான்கு அடிகளிலும் வருவது குறிப்பிடத்தக்கது. எனவே வளையாபதி காவியம், தக்கயாகப் பரணி உரையாசிரியர் குறிப்பிட்டது போலக் ‘கவியழகு மிக்க ஒரு காவியமே’ என்பது தெரிகிறது.