6.5 நாக குமார காவியம்

    ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்படும் நாக குமார காவியமும் சமண சமயத்தைச் சார்ந்ததே. ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி - மூன்றும் சமண சமயச் சார்புடையன; மணிமேகலை, குண்டலகேசி இரண்டும் பௌத்த சமயச் சார்புடையன. ஆனால் ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்துமே சமண சமயச் சார்புடையன. இந்த நாக குமார காவியம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பர். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சென்னைப் பல்கலைக் கழகம் ‘அச்சில் வாரா அருந்தமிழ் நூல்’ வரிசையில் 1973-இல் இந்நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலை மு. சண்முகம் பிள்ளை பதிப்பித்துள்ளார்.

6.5.1 காப்பியக் கட்டமைப்பு

    நாக குமார காவியம் ஐந்து சருக்கங்களையும் 170-விருத்தப்பாக்களையும் கொண்டு அமைகின்றது. வடமொழியில் மல்லிசேனர் எழுதிய நாக பஞ்சமி கதையினை ஒட்டியதாகக் கருதப்படுகிறது. மகத நாட்டு அரசன் நாக குமாரனின் பிறப்பு, அவன் பல பெண்களைத் திருமணம் செய்தது, பல வீர தீரச் செயல்களைச் செய்தது, அவனது முற்பிறப்பு வரலாறு, அவன் செய்த பஞ்சமி நோன்பு, அதனால் அவன் அடைந்த பயன், பின் தன் மகனான இளவரசனுக்கு முடி சூட்டித் துறவு மேற்கொண்டது - ஆகிய கதை நிகழ்ச்சிகளைச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. அருகனை வாழ்த்துவது, அருக சமயக் கோட்பாடுகளை ஆங்காங்கே எடுத்துரைப்பதும் நூலின் நோக்கமாக அமைகின்றது. நூலில் இடம் பெறும் அருக வாழ்த்து சீவக சிந்தாமணி அருக வாழ்த்தை நினைவு கூரச் செய்கிறது. இப்பாடல்கள் பக்திச் சுவையுடன் பாடப்படுகின்றன.

    அறவன்நீ கமலன்நீ ஆதி நீயே
    ஆரியன்நீ சீரியன்நீ அனந்தன் நீயே
    திரிலோக லோகமொடு தேயன் நீயே
    தேவாதி தேவன்எனும் தீர்த்தன் நீயே
    எரிமணிநற் பிறப்புடைய ஈசன் நீயே
    இருநான்கு குணமுடைய இறைவன் நீயே
    திரிபுவனம் தொழுது இறைஞ்சும் செல்வன் நீயே
    சீர்வர்த்த மானன்எனும் தீர்த்தன் நீயே

                 (1:8)

என்ற பாடலில் வரும் அருக வழிபாடு கவிஞரின் சமய உணர்வுக்குச் சான்றாகிறது.