தன் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளவும், எதிரி நாடுகளை
வெற்றி கொள்ளவும், காலாட்படை, தேர்ப்படை, யானைப்படை,
குதிரைப்படை எனும் நான்கு விதமான படைகளை, சங்காலத்
தமிழ் மன்னர்கள் கொண்டிருந்தனர்.
காலாட்படையில்
முன்னணிப்படை, பின்னணிப்படை என இரு பிரிவுகள் இருந்தன.
பழந்தமிழர், போரை ஒரு கலையாகவே போற்றினர். ஆநிரை
கவர்தல் (பசுக்கூட்டங்களைக் கைப்பற்றுதல்), அவ்வாறு கவர்ந்த
நாட்டின் மீது போர்தொடுத்தல், பகையரசனின்
மதிலை
வளைத்தல், போரிடுதல், வெற்றி பெறுதல் என்பவற்றை வெட்சி,
கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை,
வாகை
எனப் பல திணைகளாகப் பிரித்துப் போற்றினர். ஒவ்வொரு
திணையும் ஒரு பூவின் பெயர் பெற்றது. வெட்சி வீரர் வெட்சிப்
பூவைச் சூடுவர். கரந்தை வீரர் கரந்தை மலரைச்
சூடுவர்.
இவ்வாறு தம்முள் வேறுபாடு அறியப் பூக்களால்
ஆகிய
மாலையைச் சூடிக்கொண்டு போரிடுதல் அக்கால வழக்கமாகும்.
போரில் வெற்றி பெற்ற வேந்தன்
தன் வீரர்களுக்கு
விருந்தளிப்பான். சிறந்த வீரர்களுக்குப் பட்டமும் பரிசில்களும்
அளிப்பது அக்கால நடை முறையாகும். மன்னர்களின்
வெற்றியைப் புகழ்ந்து பாடும் புலவர், பாணர், கூத்தர், விறலி
போன்றவர்களுக்குப் பரிசில்கள் அளிப்பதும் சங்க காலத் தமிழ்
மரபாகும்.