2.0 பாடமுன்னுரை


    சங்க காலத்தில் (கி.மு.3ஆம் நூற்றாண்டு - கி.பி.3ஆம்
நூற்றாண்டு) தமிழகம் சேரர், சோழர், பாண்டியர், சத்திய புத்திரர்
(அதியர்) ஆகிய மரபுகளைச் சேர்ந்த மன்னர்களாலும், பின்னர்,
சங்கம் மருவிய காலத்தில் களப்பிரர்களாலும், ஒரு பகுதி
முற்காலப் பல்லவர்களாலும் ஆளப்பெற்றதை முன்னர்க்
கண்டோம். அக்காலத்திய வரலாற்றைத் தெளிவாக அறிந்திடப்
போதிய வரலாற்று ஆவணங்களோ     
(Historical Documents)
தொல்லியல் சான்றுகளோ கிடைக்கவில்லை என்பதால், தமிழக
வரலாறு பின்னர் வந்த பல்லவர் காலந்தொட்டே (கி.பி. 6ஆம்
நூற்றாண்டு முதல்) போதிய சான்றுகளின் அடிப்படையில்
வரலாற்று     அறிஞர்களால் தொகுக்கப்பட்டு வருகின்றது.
கி.பி.6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.9ஆம் நூற்றாண்டு முடிய
காஞ்சிபுரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ
மரபு அரசர்களின் ஆட்சியைத் தான் பல்லவர்கால வரலாறாக
நாம் கொள்கிறோம். இதைப் பற்றிய செய்திகள் இந்தப்
பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.