| |
பெரிய திருக்கோயில்களோடு இணைந்து கல்வி நிலையங்களும்,
மருத்துவ, ஆதுலர்(வறியோர்) சாலைகளும் செயல்படுமாறு செய்தனர் என்பதை, சோழர்
கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. சமஸ்கிருதம், தமிழ் போன்ற மொழிகளைக் கற்பிக்க,
கோயில்களுடன் இணைந்து செயல்பட்டது கல்விச்சாலைகள் பெரிதும் உதவின. சுந்தரசோழ
ஆதுலர் சாலை போன்ற கோயில்களுடன் இணைந்து செயல்பட்ட மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்டவர்களுக்குப்
படுக்கை வசதி, இலவச மருந்துகள், செவிலியர் பணி, அறுவைச் சிகிச்சை ஆகிய உதவிகள்
செய்யப்பட்டதற்கான சான்றுகளைக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
|
| |
கோயில்கள் எடுக்கும் கலை சோழர் ஆட்சிக்காலத்தில்
தான் உச்சநிலை அடைந்தது. மன்னர்கள் பண்டைய செங்கற்கோயில்களைக் கற்றளிகளாக
மாற்றி அமைத்தனர். சிற்பம், ஓவியம், செப்புத்திருமேனிகள் வார்த்தல், அணிகலன்கள்
செய்தல் போன்ற பல கலைகள் கோயில்களைச் சார்ந்து வளர்ந்தன. சோழர்காலக் கோயிற்கலைக்குச்
சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வது நார்த்தாமலை விஜயாலய சோழீச்சரம், குடந்தை
நாகேஸ்வரன் கோயில், தஞ்சை இராஜராஜேச்சரம், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம்,
திரிபுவனம், திருவாரூர், தில்லைப்பெருங்கோயில் ஆகியவையாகும்.
கோயில்கள் என்பவை சமய நிலையங்களாக மட்டும் திகழாமல்
சமுதாய கேந்திரங்களாகவும் விளங்கின. ஊர்ச் சபைகள் கூடுதல், கவின்கலைகளை வளர்த்தல்,
கல்வி நிலையங்களாகச் செயல்படுதல், மருத்துவமனைகளையும் இன்னபிற அறநிலையங்களையும்
சார்பு அமைப்புக்களாகக் கொள்ளல் எனப் பல்வேறு கோணங்களிலும் திருக்கோயில்கள்
செயல்பட்டன.
சோழ மன்னர்கள் தாம் படைத்த கோயில்களில்
தங்கள் உருவத்தைக் கற்சிற்பமாகவோ அல்லது செப்புப்படிமமாகவோ வடித்துள்ளனர்.
ஆதித்தசோழனில் தொடங்கி மூன்றாம் குலோத்துங்கன் ஈறாகப் பல்வேறு சோழ அரசர்கள்,
அரசிகள், தலைவர்கள், அருளாளர்கள், புலவர்கள் ஆகியவர்களின் உருவச்சிலைகள்
பல கிடைத்துள்ளன.
|
| |
சோழப்பேரரசர்கள், தமிழ், வடமொழியாகிய சமஸ்கிருதம்
ஆகிய இரு மொழிகளுக்கும் ஆக்கம் தந்து போற்றினர். சமஸ்கிருத மொழி தமிழகத்தில்
கிரந்தம் எனும் எழுத்தால் மட்டுமே எழுதப்பெற்றது.
கலிங்கத்துப்பரணி, மூவருலா, தக்கயாகப்பரணி,
குலோத்துங்கன்பிள்ளைத்தமிழ், கம்பராமாயணம்,
திருத்தொண்டர்புராணம், தண்டியலங்காரம்,
திருத்தொண்டர் திருவந்தாதி, நளவெண்பா
போன்ற பல நூல்கள் சோழ அரசர்கள் காலத்தில் மலர்ந்த தமிழ் நூல்களாகும். ஆகம
சிற்ப நூல்கள், பரதக்கலை உணர்த்தும் நூல்கள், இலக்கண நூல்கள், நாடக நூல்கள்
எனப் பல்துறை சார்ந்த வடமொழி நூல்களும் மன்னர்களின் ஊக்குவிப்பால் உதித்தன.
|