1.1 தமிழ்மொழியின் தொன்மை

    மக்கள் இனம் முதலில் தோன்றிய நிலப்பகுதியாகத் தென்னகம்
கருதப்படுகின்றது. எனவே, உலக முதன் மொழியாகவும் தமிழைப்
பாராட்டும் நிலை ஏற்பட்டது. மிகப் பழங்காலத்திலேயே சிறந்த
நாகரிகத்தைப் படைத்து உலகின் பல பகுதி மக்களோடும் வாணிக
உறவும் பண்பாட்டு உறவும் கொண்டனர் தமிழ் மக்கள்.
பாபிலோனியா, சுமேரியா, எகிப்து, இத்தாலி, கிரீசு, உரோம்,
மெசபடோமியா முதலான நாடுகளோடு தமிழர் நடத்திய வாணிகம்
பற்றிச் சான்றுகள் உள்ளன. தமிழ்நாட்டுப் பொருள்களான அகில்,
சந்தனம், முத்து, பவழம், பொன், விலைமதிப்புள்ள கல் வகைகள்
ஆகியவற்றைப் பிற நாட்டு மக்கள் விரும்பிப் பெற்றனர். கி.மு.
4000 ஆண்டுகட்குமுன் சுமேரியாவோடு வாணிகம் நடந்தது.
யூதர்களின் தலைவர் மோசசு (கி.மு.1490) தமிழகத்து ஏலக்காயைப்
பயன்படுத்தினார். சாலமன் (கி.மு. 1000) தென் அரேபிய நாட்டு
அரசி ஷீபாவிடமிருந்து காணிக்கையாகப் பெற்ற பொருள்கள்
தமிழகத்தைச் சார்ந்தவையாம். கிரேக்கர்களோடு கி.மு. ஐந்தாம்
நூற்றாண்டிலேயே வணிகம் நிகழ்ந்துள்ளது. கி.மு. 1000 அளவில்
சீனத்தோடு வணிகம் நடந்தது. இந்தியாவின் வடபகுதியோடு
தமிழர்க்கு இருந்த உறவினைக் காத்தியாயனர், பதஞ்சலி, வரருசி,
சாணக்கியர் முதலான பேரறிஞர்கள் தத்தம் நூல்களில்
காட்டியுள்ளனர்.

    இத்தகு பழைய நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழரின்
தாய்மொழி கடந்த 2500 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும்
இலக்கிய வரலாறுடையது. இதன்     தொல்பழமையுடைய
இலக்கணமான தொல்காப்பியமே     கி. மு. ஐந்தாம்
நூற்றாண்டிற்குரியது என்கின்றனர். இதில் சொல்லப்படும்
இலக்கணங்கட்கு அடிப்படையான இலக்கியங்கள் எப்போது
உருவாயின என்று இன்று வரையறுத்துச் சொல்ல முடியவில்லை.
அப்பொழுதே செந்தமிழ் என்ற பிரிவு உருவாகிவிட்ட முதல்மொழி
என்று பாராட்டுவதில் வியப்பு ஒன்றும் இல்லை.

  • பழைமையானது

  •     உலகில் இன்று ஏறத்தாழ 3000 மொழிகள் உள்ளன. இவற்றுள்
    எழுத்து வடிவம் கொண்டன 250 அளவினவே. இன்று அறியப்
    படும் மொழிகளுள் விரல்விட்டு எண்ணத் தக்க சிலவே
    காலப்பழமையும் இலக்கிய வளமையும் உடையன. அவை உயர்
    தனிச்செம்மொழிகள் என்று பாராட்டப்படுகின்றன. அவற்றுள்
    ஒன்றாகத் தமிழ் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனையவை
    வடமொழி, கிரீக்கு, இலத்தீன், ஈபுரு, சீனம் ஆகியனவாகும்.
    இவற்றுள் ஈபுரு, வடமொழி, இலத்தீன் ஆகியவை வழக்கு ஒழிந்து
    விட்டன. எத்தனையோ மொழிகள் உருச்சிதைந்து அடையாளம்
    காணமுடியாமல் ஆகிவிட்ட நிலையிலும், பழைமைக்குப்
    பழைமையானதாயும், புதுமைக்குப் புதுமையானதாகவும் தமிழ்
    விளங்குகிறது. இன்று பேச்சு வழக்கிலுள்ள உலகமொழிகளில்
    தமிழே முதன்மையானது என்று இந்தியக் கலைக் களஞ்சியம்
    மொழிகிறது. திருத்தந்தை சேவியர் தனிநாயகம் அவர்கள்
    தமிழின் கன்னித்தன்மையைப் பாராட்டி, “தமிழ் கிரேக்கம்,
    இலத்தீன், வடமொழி ஆகியன போல் ஓர் உயர்தனிச்
    செம்மொழியாக விளங்குகிறது. ஆனால் தன்னையொத்த பல
    மொழிகள் உருத்தெரியாமல் மறைந்தொழியவும், தமிழ் இன்றும்
    பேச்சுமொழியாக நிலைபெற்றுள்ளது. ஒரு பழைமையான
    உயர்தனிச்     செம்மொழி     இன்றளவும் இளமையோடு
    நிலைபெற்றிருத்தலுக்குத் தமிழே ஒரே சான்றாக விளங்குகிறது”
    என்று கூறுவதனை நோக்குக.

  • சொல் வளம்

  •     வின்சுலோ என்ற அகராதி இயல்     அறிஞர் தமிழ்
    சொல்வளத்திலும், பயன்பட்ட தன்மையிலும் கிரேக்கத்தை
    விடவும், இலத்தீனை விடவும் சிறந்த மொழி என்று
    பாராட்டியுள்ளார்.

  • தொல் திராவிட மொழி


  •     ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியா முழுவதும் பேசப்பட்டு
    வந்த தொல்திராவிட மொழிக்கும் மூத்த உறுப்பினராகத் தமிழ்
    விளங்குகின்றது. இந்தியா முழுவதும் பேசப்பட்ட பழந்தமிழையே
    தொல்திராவிட மொழி என்று மொழியறிஞர்கள் குறிக்கின்றனர்.
    கோலாமி, பர்ஜி, நாய்க்கி, கோந்தி, கூய், குவி, கோண்டா,
    மால்டா, ஒரொவன், கட்பா, குரூக், பிராகூய் என்று பற்பல
    பெயர்களுடன் இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும் தமிழோடு
    உறவுடைய திராவிட மொழிகள் வழங்கி வருகின்றன.

    சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்
    அரியதுனது இலக்கணம் என்று அறைகுவதும் வியப்பாமே

    என்று பெ. சுந்தரம்பிள்ளை பாராட்டுவது சரியானதே. வடஇந்திய
    மொழிகளில் தமிழின் செல்வாக்கு மிகுந்துள்ளதையும், தமிழின்
    தொடர் அமைப்பு வடநாட்டு ஆரியமொழிகளில் செலுத்துகின்ற
    செல்வாக்கினையும் மிகப்பெரிய மொழியறிஞர்கள் சுட்டிக்
    காட்டுகின்றனர்.

        திராவிட மொழிகளில் வழங்கும் சொற்கள் பலவும் தமிழில்
    வழங்குகின்றன. கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் வழங்கும்
    நாடுகளின் மிகப் பழைய கல்வெட்டுகள் வடமொழியில் உள்ளன.
    ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அவை தூய தமிழில் உள்ளன.
    கி.பி. 7, 8 - ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மலையாள மொழிக்
    கல்வெட்டுகளில் தமிழ் இலக்கணச் செல்வாக்கு மிகுந்துள்ளது.
    தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், வடமொழியின்
    செல்வாக்கால் தமிழிலிருந்து வேறுபட்டு விட்டன. ஆனால்
    தமிழ்மட்டும், சிற்சில சொற்களைக் கடன் வாங்குவதோடு தன்
    உறவை மட்டுப் படுத்திக் கொண்டு, தனித்து நிற்கும் பண்பை
    நிலைநாட்டி வருகின்றது. சிந்து சமவெளி நாகரிகத்தின்
    அழிபாடுகளில் கிடைக்கும் எழுத்து வடிவம் தமிழோடு நெருங்கிய
    ஒற்றுமை உடையது என்ற ஈராசு அடிகள் கருத்தும்
    எண்ணத்தக்கது.