2.3 பத்துப்பாட்டு நூல்கள்

    திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து
நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என்று
சான்றோரால் வழங்கப்படுகின்றது. இதனைப் பாட்டு என்றே
வழங்கலும் உண்டு.

    பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் இன்னவை எனக் கூறும்
பழைய வெண்பா ஒன்றுண்டு. அது வருமாறு :-

முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருஇனிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

இவ்வெண்பாவின் படி, அந்நூல்கள்

1. திருமுருகாற்றுப் படை
2. பொருநராற்றுப் படை
3. சிறுபாணாற்றுப் படை
4. பெரும்பாணாற்றுப் படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக் காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப் பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்

என்பனவாகும்.

    பத்துப்பாட்டு என்னும் பெயர் வழக்கு இடைக்காலத்தில்
தோன்றியது.     கி.பி. 11, 12 ஆம்     நூற்றாண்டுக்குரிய
பன்னிருபாட்டியல்
எனும் இலக்கண நூல் பத்துப்பாட்டிற்கு
இலக்கணம் கூறிற்று. கி.பி.15ஆம் நூற்றாண்டினரான மயிலை நாதர்
(நன்னூல் எனும் இலக்கணத்துக்கு உரை எழுதியவர்) பத்துப்
பாட்டு என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.

    பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக்
கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது. இனி,
பத்துப்பாட்டிலுள்ள நூல்களின் வகைப்பாட்டையும் ஒவ்வொரு
வகையிலும் உள்ள செய்யுட்களின் தனித் தனியான சிறப்புகளையும்
காணலாம்.

  • நூல்களின் வகைப்பாடு

  •     பத்துப்பாட்டில் உள்ள செய்யுட்களும் எட்டுத்தொகையில்
    உள்ள நூல்களைப் போலவே அகம், புறம் என்ற இரு பிரிவுகளில்
    அடங்கும்.

        முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு,     பட்டினப் பாலை,
    நெடுநல்வாடை என்ற நான்கும் அகப்பொருள் நூல்களாகும்.

        திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப்
    படை, பொருநராற்றுப் படை, மலைபடுகடாம் என்னும்
    கூத்தராற்றுப்படை, மதுரைக் காஞ்சி ஆகிய ஆறும் புறப்பொருள்
    பற்றியன. இவ்வாறனுள்ளும் முதல் ஐந்தும் ஆற்றுப்படை என்ற
    பிரிவில் அடங்கும். இறுதியானது நிலையாமை பற்றிக் கூறும்
    காஞ்சித்திணையின் பாற்படுவதாகும்.

        இனி ஒவ்வொரு பிரிவிலும் அமைந்த தனித்தனி நூல்கள் பற்றிக்
    காண்போம்.

    2.3.1 முல்லைப் பாட்டு

        பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள்
    உள்ளன. இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப்
    பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். இதற்கு முல்லை
    என்ற பெயரும் உண்டு.

        முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப்
    பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர்
    அமைந்துள்ளது. கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக
    வாக்குறுதி தந்து போர்க்கடமை ஆற்றச் சென்ற தலைவன்
    வரும் வரையில், பிரிவுத் துயரைத் தாங்கி, இல்லறம் காக்கும்
    மனைவியின் ஒழுக்கம் பேசுவதே முல்லைத்திணை.

        இப்பாட்டில்,     தலைவன்     பிரிந்துபோய்ப் பாசறையில்
    இருக்கிறான். தலைவி அரண்மனையில் இருக்கின்றாள். கார்காலம்
    வருகிறது. தலைவன் வாராமை கண்டு அவள் வருந்துகின்றாள்.
    அரண்மனையில் அவளுக்குத் துணையாகவுள்ள முதிய பெண்டிர்,
    தலைவன் வெற்றியோடு திரும்பி வருவான் என உறுதி கூறித்
    தேற்றுகின்றனர். அப்பொழுது தலைவனும் திரும்புகின்றான்.
    இதனை, பாணர், கூத்தர் முதலிய வாயில்கள் தம்முள் கூறிக்
    கொள்வதாக இப்பாட்டுப் புனையப்பட்டுள்ளது.

        இப்பாட்டில், தமிழர்களின் பாசறை அமைப்பும், அதில் மகளிர்
    கச்சணிந்தும், வாள் ஏந்தியும் நின்று பணியாற்றல், கவசம் பூண்ட
    யவன வீரர்கள் காவல்புரிவது, பாவை விளக்கு எரிதல், கன்னல்
    என்னும் கருவியால் நாழிகை கணக்கிடுதல் முதலிய செய்திகள்
    அழகுறக் கூறப் பட்டுள்ளன.

        அரசன் வெற்றியோடு திரும்பி வரும் முல்லை நிலத்தில்
    பல்வேறு மலர்களும் மலர்ந்து மணம் பரப்பி நிற்றலை, நப்பூதனார்
    பாடும் அழகே அழகு!

    2.3.2 குறிஞ்சிப் பாட்டு

        இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும். குறிஞ்சிக்குரிய
    இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்
    பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று. பெருங்குறிஞ்சி என்ற
    பெயரும் இதற்கு உண்டு. இது அறத்தொடு நிற்றல் என்ற
    அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. காதல்
    நோயால் அவதியுறும் தலைவியின் மேனி வேறுபாடுகளைக் கண்ட
    அன்னை, கடவுளர்க்குப் பூசைகள் நிகழ்த்தியும், நிமித்திகர்களைக்
    கலந்தும் (சோதிடர்கள்) துயர் உறுவது கண்ட தோழி, தலைவியின்
    துயருக்கு, அவள் ஒரு மலைநிலத் தலைவனிடம் கொண்ட காதலே
    காரணம் என்று வெளிப்படக் கூறும் வகையில் இப்பாட்டு
    இயற்றப்பட்டுள்ளது. ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத்
    தமிழ் அகத்திணைச் சிறப்பைக் கூறும் நோக்கத்தில் குறிஞ்சிக்
    கபிலர் இயற்றியது இச்செய்யுள் என்பர் அறிஞர். அருவியில்
    நீராடிய பெண்கள் பறித்து, பாசறையில் குவித்துச் சூடி மகிழ்ந்த 99
    வகையான மலர்கள் பற்றிய     வருணனை, கபிலரின்
    இயற்கையீடுபாட்டுக்குச் சான்றாகும்.

        மிளகு உதிர்ந்து பரவிக் கிடக்கும் பாசறையிடையே
    காணப்பட்ட சுனையொன்றில், மாம்பழமும், பலாச்சுளையும்,
    தேனும் விழுந்தமையால் உண்டான தேறலை நீரென்று கருதி
    உண்ட மயிலொன்று மயக்கமுற்றுத் தள்ளாடித் தள்ளாடி நடப்பது,
    பேரூர் ஒன்றில் விழாவில் கயிற்றின்மேல் ஏறி நின்று ஆடும்
    விறலிபோல் தோன்றுவதாகக் கபிலர் பாடுவது சிறப்பாக உள்ளது.

        கதிரவன் மேற்றிசையில் மறையும் மாலைப் பொழுதின் நிகழ்வு
    களையும், தலைவன் வரும் வழியில் தோன்றும் பல்வேறு
    இடையூறுகளையும், தலைவனுடைய உருவத் தோற்றத்தையும்
    கபிலர் தமக்கே உரிய வகையில் விளக்கியுள்ளார்.

    2.3.3 பட்டினப்பாலை

        பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள்
    என்பது இப்பெயரின் பொருள். இங்குப் பட்டினம் என்பது புகார்
    நகர். 301 அடிகள் கொண்ட இதில் வஞ்சியடிகள் கலந்து
    வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர். இதன் தலைவன்
    திருமாவளவன்.     இதனை     இயற்றியவர்     கடியலூர்
    உருத்திரங்கண்ணனார். பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியரும்
    இவரே.

        பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் தன் மனைவியைப்
    பிரிய மனமின்றித் தன் செலவினைக் கைவிட்ட நிலையில்
    பாடப்பட்டது இது. அகப்பொருள் இதனைச் செலவழுங்குதல்
    என்று கூறும்.

        இதில் வரும் கிளவித் தலைவன், கரிகாலன் பெருமைகளை
    யெல்லாம் விவரித்து, அவனால் ஆளப்படும் புகார் நகரின்
    பல்வேறு சிறப்புகளையும் பலபடப் பாராட்டி, அத்தகைய
    பட்டினத்தினையே பெறுவதாக இருப்பினும் தன் மனைவியைப்
    பிரிந்து செல்ல மனமில்லாது செலவைக் கைவிடுவான்.

    முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
    வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய
    வாரேன் வாழியே நெஞ்சே

    என்று தன் நெஞ்சிற்குக் கூறுவான்; தன் செயலுக்குக் காரணம்
    கூறுவான்.

        திருமாவளவன் தன் பகைவரை நோக்கி ஓச்சிய வேலைவிடத்
    தான் செல்ல வேண்டிய பாலை வழி கொடுமையானது என்றும்,
    தன் காதலியின் மெல்லிய பெரிய தோள்கள், சோழனுடைய
    செங்கோலினும் இனிமையானது என்றும் கூறுவான்.

        301 அடிகள் கொண்ட இப்பாட்டில் 217 அடிகள் பட்டினச்
    சிறப்பையே பேசுகின்றன. பண்டைத் தமிழரின் வணிகச்
    சிறப்பையும், கலைச்சிறப்பையும், சமய வழிபாட்டுச் சிறப்பையும்
    பிறவற்றையும் இப்பாட்டு உலகறியச் செய்கிறது. துறைமுகத்தில்
    நடக்கும் ஏற்றுமதியும் இறக்குமதியும், அங்குச் சுங்க அதிகாரிகள்
    புலிச் சின்னம் பொறித்தலும், சுங்கம் பெறுதலும், அறச்சாலைகளில்
    உணவளிக்கும் சிறப்பும், வணிகர்களின் நடுவுநிலைப் பண்பும்,
    அவர்களுடைய அறப் பண்பும் பாராட்டப்படுகின்றன.

        திருமாவளவனின் நாட்டில் பல மொழியாளரும் வந்து
    குழுமியிருந்தனர் என்றும் அவர்கள் பலரும் ஒற்றுமையாக இனிது
    வாழ்ந்தனர் என்றும் புலவர் கூறுவார். திருமாவளவன் பகைவர்
    நாட்டில் செய்த அழிவுச் செயல்களையும், உறையூரை விரிவு
    செய்த தன்மையையும் புலவர் பாராட்டுவார். காடு கொன்று
    நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கியதாகப் பாராட்டுவார்.
    சுருங்கச் சொன்னால், இந்நூல் தமிழக வரலாற்றின் பெட்டகம்
    ஆகும்.

    2.3.4 நெடுநல்வாடை

        இது 188 அடிகள் கொண்ட அகவல். இதனை இயற்றியவர்
    மதுரைக்கணக்காயனார்     மகனார் நக்கீரனார். இவரும்
    திருமுருகாற்றுப்படை
    ஆசிரியரும் வெவ்வேறு புலவர்கள் என்பர்.
    இருவரும் ஒருவரே என்பாரும் உளர்.

        காதலன் பகைவர்மேல் படையெடுத்துச் சென்று பாசறையில்
    இருக்கிறான். காதலி பிரிவுத் துயரால் வாடிக்கிடக்கிறாள்.
    காதலியின் துயரைப் போக்க முடியா அரண்மனைப் பெண்டிர்,
    தலைவன் விரைவில் திரும்பி வருமாறு கொற்றவைக்கு வழிபாடு
    செய்கின்றனர். இதுவே இதன் மையக் கருத்து.

        பிரிவுத் துயரால் வருந்தும் காதலிக்கு வாடைக் காற்று
    நெடியதாகத் தோன்றுகிறது. அதாவது, ஒரு பொழுது ஓர் ஊழி
    போல் காண்கின்றது. ஆனால் பாசறையில் இருக்கும் தலைவன்
    புண்பட்ட வீரர்க்கும், யானைகளுக்கும் குதிரைகளுக்கும் அன்பு
    காட்டி ஆறுதல் செய்கிறான். காமச் சிந்தனையற்றுக் கடமையில்
    கருத்தூன்றுகிறான். இதனால் வாடை அவனுக்கு நல்லதாயிற்று.
    பாட்டின் பெயர்ப் பொருத்தம் இதனால் விளங்கும்.

        இப்பாட்டில் இடம்பெறும் கூதிர்கால வருணனையொன்றே
    புலவரின் பெருமையை நிலைநாட்ட வல்லது. இவ்வருணனை 70
    அடிகளால் அமைகிறது. பண்டைத் தமிழர் மனையைச் சதுரமாகப்
    பிரித்து வீடு கட்டும் கலையில் தேர்ந்திருந்தமை இப்பாட்டால்
    விளங்கும். கட்டிடச் சிற்பியை நூலறிபுலவர் என்கின்றார் புலவர்.

        அரசியின் கட்டில் வனப்பும், அரண்மனை அமைப்பும்,
    பாசறையின் இயல்பும்; அரசன் வீரன் ஒருவன் துணையுடன்
    இரவுப் பொழுதிலும் வீரரையும் விலங்குகளையும் பார்வையிடும்
    காட்சியும் நிழற்படம் போல் இனிமை செய்கின்றன.

        பாவை விளக்குகளின் அகலில் நெய்யூற்றிப் பெரிய திரிகளில்
    தீக்கொளுவுதல், நிலா முற்றத்தில் இருந்து மழைநீர் குழாய்களின்
    மூலம் வழிதல், குன்றத்தினைக் குடைந்தமைத்தது போல் அமைந்த
    வாயில், வென்றெடுத்த கொடியோடு யானை புகுந்து செல்லும்
    அளவில் இருந்த அதன் உயர்ச்சி ஆகியவற்றைப் புலவர்
    திறம்படக் காட்டியுள்ளார்.

    2.3.5 ஆற்றுப்படை நூல்கள்

        புறப்பொருள் பற்றியவற்றுள் 5 ஆற்றுப்படை நூல்கள் ஆகும்
    அவை பற்றிக் குறிப்புகள் பின்வருமாறு.

  • சிறுபாணாற்றுப் படை

  •     இது ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடனைப் புகழ்ந்து
    இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய 269 அடிகள்
    கொண்ட அகவற்பாட்டு. சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும்
    பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும்
    நிலையில்     பாடப்பட்டமையின்     இப்பெயர்     பெற்றது.
    பெரும்பாணாற்றுப்படையை விட அளவால் சிறியது என்பதால்
    பெற்ற பெயர் இது என்றலும் பொருந்தும்.

        இதில் சீறியாழின் உருவ அமைப்பு அழகாக, உவமைகளுடன்
    விளக்கப்பட்டுள்ளது. நல்லியக்கோடன் நாட்டு வளமும், மக்கள்
    வாழ்வுச் சிறப்பும், விருந்தோம்பும் பண்பும் காட்டப்பட்டுள்ளன.
    கடையெழு     வள்ளல்களின்     வரலாறுகள் சுருக்கமாகக்
    கூறப்பட்டிருத்தலும், மூவேந்தர் நாடுகள் வருணிக்கப்பட்டிருத்தலும்
    இந்நூலின் வரலாற்றுத் தன்மைக்குச் சான்றாகும்.

        நல்லியக் கோடன், கடையெழு வள்ளல்கள் எழுவரும் தாங்கிய
    ஈகையாகிய செவ்விய நுகத்தைத் தான் ஒருவனே தாங்கியதாகப்
    புலவர் புகழ்வார். பாணனுடைய வறுமை நிலை நெஞ்சை உருக்கும்
    வகையில் விளக்கப்படுகிறது.

        ஆமூர், வேலூர், கிடங்கில் என்னும் ஊர்களின் சிறப்பை இப்பாட்டில் காணலாம். விறலியின் மேனியழகினை அழகிய உவமைகளால் புலவர் பாராட்டுவது கற்பாரைக் கவருகிறது. மதுரையைத் “தமிழ்நிலை பெற்ற தாங்கரும் மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” என்று பாராட்டுவார் புலவர்.

        பாணரின் அடுக்களையில் நாய்க்குட்டி ஈன்றுள்ளதையும்,
    கண்ணும் திறவாத அதன் குட்டிகள் பாலில்லாத வறுமுலையைப்
    பற்றி இழுத்ததனால் துன்பம் தாளாது தாய் நாய் குரைத்தலையும்
    புலவர்,

    திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
    கறவாப் பான்முலை கவர்தல் நோனாது
    புனிற்று நாய்குரைக்கும் புல்லென் அட்டில்

    (குருளை = குட்டி ; நோனாது = பொறுக்காமல்; புனிற்று =
    அண்மையில் குட்டியீன்ற; புல்லென் = பொலிவு அற்ற; அட்டில்
    = அடுக்களை)

    என்று கூறுவார். பாணர் குடும்பப் பெண் குப்பையில் முளைத்த
    வேளைக் கீரையைக் கொய்து கொண்டு, நீரை உலையாக ஏற்றி
    வேகவைத்து, பிறர் காணாது கதவை அடைத்துத் தன் சுற்றத்தோடு
    உண்ணும் அவலத்தை, புலவர் அழகாகப் படம் பிடித்துள்ளார்.

  • பெரும்பாணாற்றுப் படை

  •     இது கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர்,
    காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனைப் புகழ்ந்து
    பாடிய 500 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும். பேரியாழை
    வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத்
    தனக்குப்     பரிசளித்த     வள்ளலான இளந்திரையனிடம்
    ஆற்றுப்படுத்தும்     நிலையில்     பாடப்பட்டதாதலால்
    பெரும்பாணாற்றுப் படை
    யாயிற்று. 269 அடிகள் கொண்ட
    சிறுபாணாற்றுப் படை
    யை நோக்க இது பெரியது என்பது பற்றி
    இப்பெயர் பெற்றதாகவும் கொள்வர்.

        இது     சொற்சுவையும்,     பொருட்சுவையும் நிறைந்தது.
    இளந்திரையன் நாட்டின் ஐந்திணை வளமும், அவ்வத்திணையில்
    வாழ்ந்த வேடர், எயினர், மறவர், உழவர், பரதவர், ஆயர்,
    அந்தணர் ஆகிய இனத்தவர் வாழ்க்கையும், அவர்களின்
    விருந்தோம்பற் பண்பும் பிறவும் பற்றி விரிவாகப் பேசுகிறது.
    மாந்தரின் குடியிருப்பும் செயல்களும் உண்மைத் தன்மையுடன்
    இதில் பாடப்பட்டுள்ளன.

        திருவெஃகாவில் குடிகொண்ட திருமாலின் கோலத்தையும்,
    கடலோரத்தில்     அமைந்த     விண்ணுயர்ந்த கலங்கரை
    விளக்கத்தையும், தொண்டைமானின்     கொடைத்திறத்தையும்,
    பேரியாழின் வருணனையையும், யானைகள் தவம் செய்யும்
    முனிவர்கட்கு உதவும் திறத்தையும், இளந்திரையன் ஆட்சிச்
    சிறப்பால் இடியும் காட்டுவிலங்குகளும் கூட வழிச் செல்வார்க்குத்
    தீங்கு செய்யாத தன்மையும், உமணர்கள் உப்பு மூட்டைகளை
    வண்டிகளில் ஏற்றி ஊர் ஊராக சேர்தலும், வம்பலர் என்ற
    வணிகர் கவசம் பூண்டும், காலிற் செருப்பணிந்தும், கழுதைச்
    சாத்துடன் (கூட்டத்துடன்) செல்லும் இயல்பும், ஆயர்குடிப் பெண்
    ஆன்படு பொருள்களை (பால் உணவுப்பொருட்களை) விற்றுக்
    குடும்பத்தைக் காத்தலும் பிறவும் இந்நூலில் கற்றுச் சுவைக்கத்
    தக்கனவாகும்.

  • பொருநராற்றுப் படை

  •     சோழன்     கரிகால்     பெருவளத்தானைப் பாட்டுடைத்
    தலைவனாகக் கொண்டு முடத்தாமக் கண்ணியார் இயற்றிய
    இப்பாட்டு 248 அடிகள் கொண்டது. போர்க்களம் பாடும்
    பொருநன் ஒருவன் (கூத்தன்) தனக்குப் பரிசளித்த கரிகாலனிடம்
    இன்னொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக இயற்றப்பட்டது
    இது.

        பொருநன் கையாண்ட யாழ் பற்றிய வருணனை பாட்டின் முன்
    பகுதியிலேயே அமைந்துள்ளது. (4-22) கொடியவரான ஆறலை
    கள்வரின் (வழிப்பறிசெய்வோர்) கல்மனத்தையும் அருள் மனமாக
    மாற்ற வல்லது பாலை யாழ் என்கிறார் புலவர்.

        யாழ் வருணனையைத் தொடர்ந்து, விறலியின் மேனியழகு
    பற்றிய அழகிய விளக்கம் காணப்படுகிறது (25-47). விறலியின்
    அழகு தகுந்த உவமைகளால் விளக்கப்படுகின்றது. அவள்
    குழையணிந்த காதிற்குக்     கத்தரிக்கோலின் கடைப்பகுதி
    உவமையாகும். அடியின் மென்மைக்கு, ஓடி இளைத்த நாயின்
    நாக்கினை உவமை கூறியுள்ளார்.

        கலைஞர்கட்கு அருள் சுரந்து பரிசளிக்கும் கரிகாலனின்
    வண்மையைப் புலவர் சிறப்புறப் பாராட்டியுள்ளார். கண்ணால்
    பருகுவது போலப் பார்த்து, எலும்பையும் குளிரச் செய்யுமாறு
    அன்பு செலுத்தி, ஈரும் பேனும் தங்கியுள்ள கந்தலாடையினை
    நீக்கி, கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய இழைகளால்
    நெய்யப்பட்ட பட்டாடையை உடுத்தி, உயர்ந்த அரிசியால் சமைத்த
    புலால் உணவினை உண்ணச் செய்து, கன்றொடு கூடிய
    யானைகளைப் பரிசாக அளித்துப் பிரியாவிடை தருவான் கரிகாலன்
    என்கின்றார் புலவர். பால்போல் வெண்மையான நான்கு
    குதிரைகள் பூட்டிய தேரைக் கொடுத்து, காலில் ஏழடிகள் பின்
    சென்று அவர்கட்கு விடையளித்தான் என்கின்றார் புலவர். பல
    திணைகளும் அடுத்தடுத்து இருந்தமையால் ஒவ்வொரு திணை
    மாந்தரும் தம் பொருள்களை அடுத்துள்ள நில மக்களோடு பண்ட
    மாற்றிக் கொண்டனர் என்பதனை விளக்கியவர்,

    குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்
    நறும்பூங் கண்ணி குறவர் சூட,
    கானவர் மருதம் பாட, அகவர்
    நீல்நிற முல்லைப் பஃறிணை நுவல

    என்று அவர்களின் பண்பாட்டுப் பரிமாற்றத்தையும்
    விளக்கியுள்ளார்.

  • மலைபடுகடாம்

  •     வேளிர்குடியைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்பானை
    இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் பாடிய 583 அடிகள்
    கொண்ட அகவற்பாட்டு இது. பரிசில் பெற்ற கூத்தன், அது
    பெறவிரும்பிய     இன்னொரு     கூத்தனை     நன்னனிடம்
    ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது. மலைக்கு யானையை
    உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச்
    சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.

        இதில் பேரியாழும் பிற இசைக் கருவிகளும் அருமையான
    உவமைகளால் விளக்கப்படுகின்றன. ஆகுளி, பாண்டில், கோடு,
    களிற்றுயிர்த் தூம்பு, குறுந்தூம்பு, குழல், தட்டை, எல்லரி, பதலை
    என்பன பிற கருவிகள்.

        மலைச் சாரலில் தோன்றும் பல்வேறு ஓசைகள் பற்றிய
    வருணனையும், நன்னனைக் காணச் சென்ற குறவர்கள் கொண்டு
    போன கையுறைப் பொருள்கள் பற்றிய வருணனையும் நூலின்
    சிறந்த பகுதிகள்.

        நன்னன் நாட்டு மக்கள் பலரும் வாழும் வாழ்க்கை முறைகளும்,
    அவர்களின் விருந்தோம்பல் சிறப்பும் அழகாகக் கூறப்பட்டுள்ளன.
    நன்னன் ஊரின் பெருமையும், அவன் கலைஞர்கட்குப் பரிசளிக்கும்
    சிறப்பும் கூறப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரும் உண்ட
    உணவுகள் பற்றியும், மலைவழியில் போவார் எதிர்கொள்ளும்
    இடையூறுகளும் கூறப்பட்டுள்ளன.

        நன்னன் மலையான நவிரத்தில் தோன்றும் சேயாற்றின்
    தன்மையும், அங்குக் குடிகொண்ட காரி உண்டிக் கடவுளும்
    (சிவபெருமான்) பற்றிய செய்தியும் இதில் காணப்படுகின்றன.

  • திருமுருகாற்றுப் படை

  •     பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது
    திருமுருகாற்றுப்படை. இது 317 அடிகள் கொண்ட அகவல்.
    முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும்
    இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக
    அமைந்த இதனை     இயற்றியவர்     நக்கீரர். இவரும்
    நெடுநல்வாடை
    யைப் பாடியவரும் ஒருவரே என்பார் பலர்.
    இருவரும் வெவ்வேறு ஆசிரியர்கள் என்பாரும் உளர்.
    ஆற்றுப்படுத்தப் படுவோன் பெயர் நூலுக்கு அமைவது ஏனைய
    ஆற்றுப்படைகளின் பண்பு. இது, அதற்கு மாறாக, பாட்டுடைத்
    தலைவன் பெயரால் அழைக்கப்படுகிறது. இதற்குப் புலவராற்றுப்
    படை
    என்றும் ஒரு பெயர் உண்டு.

        இதில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆறுபடை
    வீடுகள் பற்றியும், ஆங்காங்கு நடக்கும் வழிபாடுகள் பற்றியும்
    கூறப்பட்டுள்ளன. முருகப் பெருமானின் திருஉருவச் சிறப்பும்,
    அவர் மார்பில் அசையும் மாலையழகும், சூரரமகளிர் இயல்பும்,
    பெருமான் சூரபன்மனை அழித்த செயலும், மதுரையின்
    பெருமையும், திருப்பரங்குன்றத்தின்     இயற்கை அழகும்
    முதற்பகுதியில் இடம்பெறுகின்றன.

        பெருமான் ஏறும் பிணிமுகம் என்னும் யானையின் இயல்பு,
    அவருடைய ஆறு திருமுகங்கள், பன்னிரு திருக்கைகளின்
    செயல்கள், அவர் திருச்சீரலைவாயில் (திருச்செந்தூரில்)
    எழுந்தருளியிருக்கும் மேன்மை ஆகியன இரண்டாம் பகுதியில்
    இடம்பெறுகின்றன.

        மூன்றாம் பகுதியில் திருவாவினன்குடியில் (பழனியில்)
    முனிவர்கள் பெருமானை வழிபடும் முறையும், சிவபெருமானும்,
    திருமாலும், பிறதேவர்களும் பெருமானைக் காண வருதலும்
    விளக்கப்படுகின்றன.

        நான்காவது பகுதியில், பெருமான் ஏரகத்தே (சுவாமிமலை)
    எழுந்தருளியிருத்தலும், அந்தணர் ஆறெழுத்து மந்திரத்தை
    உச்சரித்து வழிபடலும் கூறப்பட்டுள்ளன. அம்மந்திரம் “நமோ
    குமராய” என்பார் நச்சினார்க்கினியர்.

        ஐந்தாவது பகுதியில் பெருமான் ஒவ்வொரு குன்றிலும் ஆடும்
    பண்பு விளக்கப்படுகிறது. ஆறாம் பகுதி முருகப் பெருமான் ஊர்
    தோறும் கொண்டாடப்படும் விழாவிலும், வெறியாடும் களத்திலும்,
    காட்டிலும், சோலையிலும், ஆற்றிடைக் குறைகளிலும் (திட்டு),
    ஆறுகளிலும், குளங்களிலும் சதுக்கங்களிலும் மன்றங்களிலும்
    பிறவிடங்களிலும் உறையும் நிலை விளக்கப்பட்டுள்ளது. குறவர்கள்
    தமக்கே உரிய முறையில் உயிர்க் கொலையுடன் முருகனை
    வழிபடும் பண்பு இப்பாட்டில் விளக்கப்படுவது சிறப்பு.

        முருகப் பெருமானை வழிபடும் முனிவர்களின் உருவத்
    தோற்றத்தையும், பழமுதிர்சோலையின் இயற்கை அழகையும்
    விளக்கும் பகுதிகள் நக்கீரர் புலமைக்குச் சான்று.

        இந்நூலின் அருமை கருதி, பிற்காலத்தில் சைவத்
    திருமுறைகளுள் பதினோராம் திருமுறையில் ஒரு பகுதியாக
    இதனைச் சேர்த்துள்ளனர். இது, சைவர்களின் வழிபாட்டு நூலாக
    விளங்குகிறது.

    2.3.6 மதுரைக் காஞ்சி

        பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782
    அடிகளைக் கொண்டது. இது, தலையாலங்காணத்துச் செரு வென்ற
    பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு, நிலையாமையை எடுத்துக்கூறி,
    தனக்கென வரையறுத்த நாட்களை நல்ல முறையில் வாழுமாறு
    அறிவுறுத்தும் வகையில் மாங்குடி மருதனார் இயற்றிய
    காஞ்சித்திணைப் பாட்டாகும். மதுரை மன்னனுக்குக் கூறிய
    காஞ்சியாகையால்      மதுரைக்காஞ்சியாயிற்று     (காஞ்சி -
    நிலையாமை).

        இதில்     பாண்டிய     நாட்டின்     ஐந்திணை வளம்,
    அவ்வந்நிலங்களில் நடக்கும் வாழ்க்கை முறைகள், பாண்டியன்
    பகைவர் நாட்டை அழித்தல், பணிந்தார்க்கு நலம் செய்தல்,
    இருபெருவேந்தரையும்     ஐம்பெருவேளிரையும் வென்றமை,
    சாலியூரையும்,     முதுவென்னிலையும்     கைக்கொண்டமை,
    பரதவர்களை வென்றமை முதலான வெற்றிச் செயல்கள் ஆகியன
    விரிவாகக் கூறப்படுகின்றன.

        வையையாற்று வளம், மதுரையைச் சூழ்ந்த அகழி, இரவும்
    பகலும் நடக்கும் அல்லங்காடி, நாளங்காடியின் தன்மைகள்,
    அந்தணர் இருக்கை, சாவகர், சமணர், பௌத்தர்களின்
    இருக்கைகள், பெரியோர்களின் ஒழுகலாறுகள் ஆகியவற்றை
    ஆசிரியர் இனிதே விளக்கியுள்ளார். மாலை முதல் விடியற்காலம்
    வரையில் பல்வேறு மாந்தரின் செயல்களை அழகுறக் காட்டும்
    புலவர், பரத்தையர் தம்மை அழகுறுத்திக் கொண்டு செல்வக்குடி
    இளைஞர்களை மயக்கிப் பொருள் பறித்தலையும், உளியும்,
    நூலேணியும் கொண்டு களவாடப்போகும் கள்வர் இயல்பையும்,
    அவர்களைப் பற்றுதற்கு மறைந்து செல்லும் காவலர் இயல்பையும்
    காட்டுவது இதனுள் அழகாகவுள்ளது.

        அமைச்சர்கள் காவிதிப் பட்டம் பெறுதல், அறங்கூர்
    அவையத்தின் சிறப்பு, சங்கறுத்து வளையல் செய்தல் முதலிய
    தொழில் வல்லுநரின் இயல்புகள், பாணர்களின் நிலை, அவர்களின்
    கலைவன்மை, கட்டிடக்கலை, நெசவுக்கலை முதலியவற்றின்
    மேம்பாடு     என்பவை     இப்பாட்டில்     விளக்கப்படுவது
    சிறப்பாகவுள்ளது.

        மதுரைக் காஞ்சி கூறும் நிலையாமை உலக வாழ்க்கையை
    இகழ்ந்து ஒதுக்குவது அன்று. உலகம் நிலையானது. இதில்
    நிலைத்த புகழை நிலைநிறுத்த வேண்டும் என்பதே புலவரின்
    அறிவுரை.