3.0 பாட முன்னுரை

    தமிழ் இனத்தின் பொற்காலம் சங்க காலம் என்பது. கி.பி.
மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியோடு முடிவுற்றது. உலகம்
போற்ற வாழ்ந்த மூவேந்தரும் தம் உரிமையை இழந்தனர்.
பாண்டிய நாட்டைக் களப்பிரரும் தொண்டை நாட்டைப்
பல்லவரும் பிடித்துக் கொண்டனர். பின்னர் இடைப்பட்ட
சோழநாடும் இவர்கட்கு அடிமைப்பட்டது. கி.பி. ஐந்தாம்
நூற்றாண்டு வரை தமிழகத்தில் இருள் சூழ்ந்தது. தமிழர் மொழியும்,
கலையும், பிற பண்பாட்டுக் கூறுகளும் பெரும் மாற்றத்துக்கு
ஆட்பட்டன. பாலியும், பிராகிருதமும், வடமொழியும் செல்வாக்குப்
பெற்றன. சமணமும் பௌத்தமும் பெருமை பெற்றன.
வைதிகர்களுக்கும், சமண பௌத்தர்கட்கும் இடையே பூசல்கள்
நிகழ்ந்தன. இத்தகைய காலத்தில் உருவான 18 நூல்களையே
இலக்கிய வரலாற்றாசிரியர்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
என்கின்றனர். இவற்றுள் பெரும்பான்மையானவை நீதிநூல்கள்.
எனவே இக்காலப்பகுதியை நீதிநூல் காலம் என்பது பொருந்தும்.
இதே காலத்தில்தான் (கி.பி. 470) மதுரையில் வச்சிரநந்தி என்ற
சமணப் பெரியவர் நான்காம் தமிழ்ச்சங்கத்தினை நிறுவினார்
என்பர். இச்சங்கத்தில் பல நீதிநூல்கள் உருவாயின என்பர்
அறிஞர்.

    இப்பாடத்தில் பதினெண்கீழ்க்கணக்கு என்ற பெயர் வரலாறு,
இத்தொகுப்பில் இடம் பெறும் பதினெட்டு நூல்களின் பெயர்கள்,
பொருள்பற்றிய இவற்றின் வகைப்பாடுகள், இவற்றில் இடம்பெறும்
ஒவ்வொரு நூலையும்     பற்றிய செய்திகள் ஆகியவை
விளக்கப்படுகின்றன.