4.6 பதிப்பாசிரியர்களும் உரையாசிரியர்களும்

    ஏடுகளில் உள்ள இலக்கியத்தை ஆராய்ந்து, பாட
பேதங்கள் இன்றிப் பிழையின்றிப் பதிப்பித்தல் பதிப்பாசிரியர்
பணியாகும். அச்சு இயந்திரங்களின் வரவால் அருமையான பல
தமிழ் நூல்கள் இன்று பாதுகாக்கப்படுகின்றன. அதன்
பின்னணியில் இருப்பவர்கள் பதிப்பாசிரியர்களே! இக்காலக்
கட்டத்தில்     பழந்தமிழ்     இலக்கியங்களுக்கும்
இலக்கணங்களுக்கும் பலர் உரை எழுதினர்.

4.6.1 சி.வை. தாமோதரம் பிள்ளை

    புதுக்கோட்டை நீதிமன்றத் தலைவராய் விளங்கிய இவர்
சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயரிடம் கல்வி பயின்றார்.
தமிழ் நூல்களை அச்சியற்ற முயன்றவருள் மிக உழைத்தவர்
என, கா.சு. பிள்ளை இவரைப் பாராட்டுவார். வீரசோழியம்,
இறையனாரகப் பொருள், தொல்காப்பியப் பொருள்
அதிகாரம், இலக்கண விளக்கம்
என்னும் பெருநூல்களை
ஆராய்ச்சிமிக்க பதிப்புரையோடு வெளியிட்டார். இவர்தம்
பதிப்புரைகள் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு எடுத்துக்காட்டாக
அமைவன.

4.6.2 பிற பதிப்பாசிரியர்கள்

    பதிப்புத்துறையில் தாமோதரம் பிள்ளையின் பங்களிப்பு
மிகவும் பாராட்டக் கூடிய ஒன்று. அவர் காலத்தில் வேறு பல
பதிப்பாசிரியர்களும் பதிப்பித்தல் பணியைச் செய்தனர்.

• சந்திர சேகர கவிராச பண்டிதர்

    நன்னூல் விருத்தியுரை, தண்டியலங்கார உரை,
வெண்பாப் பாட்டியல் உரை, பழமொழித் திரட்டு,
செய்யுட் கோவை
, அரபத்த நாவலரின் பரத சாத்திரம்,
விஷப்பிரதி விஷத்திரட்டு,     விவேக சூடாமணி,
வச்சணந்தி மாலை
போன்ற நூல்களைப் பதிப்பித்தார்.

• தாண்டவராய முதலியார்

    வீரமாமுனிவரின் சதுரகராதி முதல் மூன்று பாகங்கள்
பதிப்பித்தார். இலக்கணப் பஞ்சகம், சூடாமணி நிகண்டு,
சேந்தன் திவாகரம், கதாமஞ்சரி
என்பவற்றை முதன்
முதலில் அச்சேற்றினார். 1824-இல் பஞ்சதந்திரத்தை
மராத்தியிலிருந்து மொழி பெயர்த்தார்.

• சுப்பராய செட்டியார்

    காங்கேயன் உரிச்சொல் நிகண்டு, சிதம்பர சுவாமிகளின்
திருப்போரூர் சன்னிதி     முறை, மாயூர புராணம்,
நாகைக் காரோணப் புராணம், பதினோராம் திருமுறை

என்பனவற்றைப் பதிப்பித்தார்.

• கோமளபுரம் இராசகோபால பிள்ளை

    தென் திருச்சி புராணம், திருநீலகண்ட நாயனார்
விலாசம், வில்லிபாரதம், சேனாவரையரின் உரை

என்பன பதிப்பித்தார். சேனாவரையத்தை முதலில் பதிப்பித்தவர்
இவரே!

• திருமயிலை சண்முகம் பிள்ளை

    மணிமேகலை காப்பியத்தை முதன்முதலில் அச்சிட்டவர்
இவரே! நன்னூல் விருத்தியுரை, தஞ்சைவாணன் கோவை,
மச்சபுராணம், சிவவாக்கியர் பாடல், மாயப்பிரலாபம்

என்பவற்றைப் பதிப்பித்தார்.

• சரவணப் பெருமாள் ஐயர்

    சிறந்த     உரையாசிரியரான     இவர், திருவாசகம்,
பரிமேலழகர் உரை, நைடதம்
என்பவற்றைப் பதிப்பித்து
உள்ளார். ஒவ்வொரு செய்யுள் முடிவிலும் பயனும்
மெய்ப்பாடும் கூறுவது, அணிகளைக் குறிப்பது இவருரையின்
சிறப்பாகும்.

    இவரது சகோதரரான விசாகப் பெருமாள் ஐயர்
முதற்பதிப்பாசிரியர்களில் ஒருவர். அச்சு எழுத்தை எழுதா
எழுத்து
என்றழைத்தவர்.

4.6.3 உரையாசிரியர்கள்

    பழந்தமிழ்     இலக்கியத்துக்கும்     இலக்கணத்துக்கும்
அனைவரும் பொருள் உணர்ந்து மகிழும்படி செய்தவர்கள்
உரையாசிரியர்கள்.

• இலக்கிய உரையாசிரியர்கள்

    கிறித்துவக் கல்லூரித் தமிழ் விரிவுரையாளரான சடகோப
ராமானுஜாசாரியார் 1888 முதல் பல்கலைக் கழகப் பாடப்
பகுதிகட்கு உரை வரைந்து வந்தார். சீவகசிந்தாமணியில் சில
இலம்பகங்கள், கம்பராமாயணத்தில் சில பகுதிகள், பாரதம்,
சூளாமணி, கந்தபுராண, திருவிளையாடற்புராணப்
பகுதிகள்,
நாலடியார் முழுதும், தண்டியலங்காரம் குறிப்புரை,
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால்களின் பரிமேலழகர்
உரை விளக்கம் என்பவற்றிற்கு, ஆசிரியர் துணையின்றி
உணரும் வகையில் உரை எழுதியுள்ளார்.

இராமாநுச கவிராயர் பரிமேலழகர் உரையில்
63 அதிகாரங்கட்கு உரை எழுதியுள்ளார்.
சோடசாவதானம் சுப்பராய செட்டியார் அயோத்யா
காண்டவுரை
, பரஞ்சோதி திருவிளையாடற்
புராணவுரை, காஞ்சிப் புராண உரை, புலியூர்
வெண்பா உரை
என்பன எழுதியுள்ளார்.
கோமளபுரம் இராசகோபால் பிள்ளை திருவாய்மொழி,
நளவெண்பா, நாலடியார்
என்பவற்றிற்கு உரை
எழுதியுள்ளார்.