5.1 உரைநடை வளர்ச்சி

    அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் முதலில் மலர்ச்சி
பெற்றது உரைநடையே. பல வகையான கட்டுரை நூல்கள்,
சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வு,
உரையாசிரியர்கள் எனப் பல்பிரிவுகளுள் உரைநடை வளர்ந்தது.
1904-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற தமிழ் உரைநடையின்
வரலாறு
என்ற (History of Tamil Prose) ஆங்கில நூல்
வி.எஸ்.செங்கல்வராய பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது.
தொல்காப்பியத்தில் வரும் உரைநடைக் குறிப்புக்கள்
தொடங்கி, சுந்தரம் பிள்ளை, சூரிய நாராயண சாஸ்திரியார்
வரையிலான தமிழ் உரைநடை வளர்ச்சியைக் காய்தல், உவத்தல்
அகற்றி ஆராயும் இந்நூல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இனி,
தமிழ் உரைநடை வளர்த்த சான்றோர்களைக் காண்போம்.

5.1.1 உரைநடை முன்னோடிகள்

அச்சு இயந்திர அறிமுகம் தமிழ் உரைநடை வளர்ச்சியில்
பெரும் பங்கு வகித்தது. அச்சடித்த உரைநடை நூல்கள் பல
வருவதற்குப் பல அறிஞர்கள் காரணமாகத் திகழ்ந்தார்கள்.
அத்தகைய முன்னோடிகளாகிய தமிழறிஞர்களைப் பற்றி
முதலில் பார்ப்போம்.

• வ.உ.சிதம்பரம் பிள்ளை

    தேச விடுதலைப் போராட்டத்தில்
முன்னணியில் நின்றவர்களும் இலக்கிய
வளர்ச்சிக்குப்     பணிபுரிந்திருக்கிறார்கள்
பத்திரிகையாசிரியராகத்     திகழ்ந்த
வ.உ.சிதம்பரம்     பிள்ளை     அவர்கள்,
மெய்யறிவு, மெய்யறம் என்ற நீதி
நூல்களைத் திருக்குறள் கருத்துக்களை
ஒட்டி     விளக்கி     எழுதியுள்ளார்.
மக்களுக்காகத் தொண்டு செய்ய ஆர்வமும்,
மேடைப்பேச்சுப் பயிற்சியும் இருந்தபடியால்
வ. உ. சி யின்     நடையில் நெகிழ்ச்சி
காணப்படுகிறது என்கிறார் மு.வரதராசனார்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை

    பழைய நாரதர் என்ற புனைபெயர் கொண்டு
நகைச்சுவையும் வீரச்சுவையும் மிகுந்த கட்டுரைகள் பல
எழுதினார் சுப்பிரமணிய சிவா.

• மறைமலையடிகள்

    மறைமலையடிகளால் இயற்றப் பெற்ற பல்வகை உரைநடை
நூல்கள் பின்வருமாறு

1) அறிவியல் நூல்கள்

    மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை (2 பாகம்),
பொருந்தும்     உணவும்     பொருந்தா     உணவும்,
யோகநித்திரை அல்லது அறிதுயில், மனித வசியம்
அல்லது
மனக்கவர்ச்சி.

2) நாவல்

    குமுதவல்லி நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள்.

3) ஆராய்ச்சி நூல்கள்

    சாகுந்தல நாடக ஆராய்ச்சி, பட்டினப்பாலை
ஆராய்ச்சி
, முல்லைப் பாட்டு ஆராய்ச்சி, மாணிக்கவாசகர்
வரலாறும் காலமும்
, சிவஞான போத ஆராய்ச்சி,
திருக்குறள் ஆராய்ச்சி.

4) கட்டுரை நூல்கள்

    தொலைவில் உணர்தல், மரணத்தின்பின் மனிதர்
நிலை, சிந்தனைக் கட்டுரைகள், இளைஞர்க்கான இன்றமிழ்,
சிறுவர்க்கான செந்தமிழ், உரைமணிக்கோவை, அறிவுரைக்
கோவை, வேளாளர் நாகரிகம், பண்டைக்காலத் தமிழரும்
ஆரியரும், முற்கால, பிற்காலத் தமிழ்ப் புலவோர், தமிழர்
மதம், சைவ சித்தாந்த ஞானபோதம், பழந்தமிழ்க்
கொள்கையே சைவ சமயம், கடவுள் நிலைக்கு மாறான
கொள்கைகள் சைவம் ஆகா
என்ற நூல்களுடன் இந்தி
பொது மொழியா
? சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்
என்ற நூல்களும் திருவாசக விரிவுரையும் எழுதி உள்ளார்.
தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்ததால் தனித்தமிழ்
இயக்கத் தந்தை
என்று போற்றப்படுகிறார்.

• திரு.வி.கலியாண சுந்தரனார்


திரு.வி.க

    தமிழாசிரியராக இருந்து பின் பத்திரிகை
ஆசிரியராகி, தொழிலாளர் தலைவராகவும்
விளங்கிய திரு.வி. கல்யாண சுந்தரனாரின்
உரைநடை எளியது; இனியது. இவரது
பத்திரிகைத் தமிழை, தேசபக்தன், நவசக்தி
என்ற பத்திரிகைகள் மூலம் அறியலாம்.
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்,
முருகன் அல்லது அழகு, பெண்ணின்
பெருமை
, தமிழ்ச்சோலை என்ற நூல்களை
எழுதியுள்ளார்.

• பிறர்

    க.ப.சந்தோஷம், மகிழ்நன் என்ற புனை பெயரில்
வடக்கும் தெற்கும் என்ற நூலை எழுதியுள்ளார்.
பா.வே.மாணிக்க நாயக்கர் கம்பன் புளுகும் வால்மீகி
வாய்மையும், அஞ்ஞானம்
என்ற இரண்டு நூல்களை
எழுதியுள்ளார்.     இவ்விருவரும் தமிழில் நகைச்சுவை
இலக்கியத்தை வளர்த்தவர்கள்.

    செல்வக்கேசவராய முதலியார் திருவள்ளுவர், கம்பநாடர்,
தமிழ், தமிழ் வியாசங்கள், வியாச மஞ்சரி, கண்ணகி கதை,
அவிநவக் கதைகள், பஞ்சலட்சணம் முதலிய நூல்களைப்
பழமொழி கலந்த நடையில் எழுதித் தமிழுக்கு அழகும்
மெருகும் தந்தார்.

    பேராசிரியர் பூரணலிங்கம்பிள்ளை தமிழ்க் கட்டுரைகள்,
மருத்துவன் மகள், கதையும் கற்பனையும் என்ற
நூல்களை எழுதியுள்ளார்.

    பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் உரைநடைக் கோவை
என்ற தனது நூலில் பழைய இலக்கியத்தில் உள்ள சொற்களைப்
பயன்படுத்தி எழுதியுள்ளார். நீண்ட வாக்கியங்களை உடையது
இவர் நடை.

    சோமசுந்தர பாரதியார் தசரதன் குறையும் கைகேயி
நிறையும், சேரர் தாயமுறை
என்ற இரண்டு நூல்களை
எழுதியுள்ளார்.

• பேராசிரியர். ரா.பி.சேதுப்பிள்ளை

    அழகான நடையில் 25க்கும் மேற்பட்ட உரைநடை
நூல்களை எழுதியவர் ரா.பி.சேதுப்பிள்ளை. ஊரும் பேரும்,
வேலும்     வில்லும், செந்தமிழும் கொடுந்தமிழும்,
தமிழின்பம், வீரமாநகர் என்பன அவரியற்றிய சில நூல்கள்.

• பேராசிரியர். அ.சிதம்பரநாத செட்டியார்

    அ.சிதம்பரநாத செட்டியார் பழந்தமிழ்ச் சொற்களை
இடையிடையே கலந்து மெருகு ஊட்டி எழுதுவதில் வல்லவர்.
முன்பனிக்காலம், தமிழோசை, தமிழ்காட்டும் உலகு
என்பன அவர் எழுதிய சில நூல்கள். ஏ.சி.செட்டியார் என்று
அன்புடன் அழைக்கப் பெற்றவரும் இவரே!

• உ.வே.சாமிநாத அய்யர்.

        

    தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே. சாமிநாத
அய்யர் மணிமேகலை கதைச் சுருக்கம், புத்த தர்மம்,
உதயணன் கதைச்சுருக்கம்
போன்ற பல உரைநடை நூல்களை
எழுதியுள்ளார்.

• பேராசிரியர். எஸ்.வையாபுரிப் பிள்ளை

    வையாபுரிப் பிள்ளை தமிழ்ச்சுடர் மணிகள், சொற்கலை
விருந்து, காவிய காலம், இலக்கியச் சிந்தனைகள்,
இலக்கிய உதயம்
முதலிய உரைநடை நூல்களை
எழுதியுள்ளார்.

5.1.2 சிறுகதை

    பாரதியார், வ.வே.சு. ஐயர், புதுமைப்பித்தன் போன்ற
சிறந்த எழுத்தாளர்களால் வளர்க்கப் பெற்ற சிறுகதை
இலக்கியம் அதற்கென ஆரம்பிக்கப் பெற்ற மணிக்கொடி
பத்திரிகையால் மேலும் உரம் பெற்றது.

• பாரதியார்


    பாரதி     பரம்பரை என்றொரு
பரம்பரையே     படைத்திட்ட பாரதி
சிறுகதைத் துறையில் மட்டுமன்றி கவிதை,
பத்திரிகை,     கட்டுரை, விமர்சனம்,
மொழிபெயர்ப்பு எனப் பல்துறையிலும்
சிறந்து விளங்கியவர். இவரது சிறுகதைகள்
பல சொந்தக் கதைகள் கட்டுக்கதைகள்,
நிகழ்வுக்     கோவைகளாகவே     நின்று
விடுகின்றன. உயர்ந்த     கலைவடிவம்
இல்லை. கதைக்கொத்து, நவதந்திரக்

கதைகள்-தொகுதிகள், ஆறில் ஒரு பங்கு, பூலோக ரம்பை, திண்டிம     சாஸ்திரி,     ஸ்வர்ணகுமாரி என்பன
குறிப்பிடத்தக்கன. சின்ன சங்கரன் கதை, சந்திரிகையின்
கதை
என்ற இரண்டும் நாவலைப் போல் அமைந்தவை.
புதுவையில் வசித்த போது 11 தாகூரின் கதைகளை
மொழி பெயர்த்து இருக்கிறார். அதன் நடை உள்ளத்தைக்
கவர்வது, இதுவே சிறுகதைத் துறைக்குப் பாரதி புரிந்த
தொண்டு.

• வ.வே.சு ஐயர்

    தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்று
போற்றப்படும் இவர் சிறுகதை இலக்கணத்திற்கு
ஏற்ற கதைகளை அந்தக் காலத்திலேயே
எழுதியவர். இவரது மங்கையர்க்கரசியின்
காதல்
என்ற நூல் எட்டுக் கதைகளைக்
கொண்டது. குளத்தங்கரை அரசமரம்
என்பது தமிழில் தோன்றிய முதல் சிறுகதை.
குழந்தை மணத்தைக் கருவாகக் கொண்டது
இக்கதை. ஒரு குளக்கரையில் நிற்கும்
அரசமரமே கதை கூறுவதாகக் கொண்டு

அமைகிறது. மொத்தம் 8 கதைகளே படைத்திருந்தாலும்
வடிவம் பற்றிய விழிப்பைத் தொட்டுக் காட்டியவர்.
சிறுகதையில் சில சோதனைகள் செய்து சாதனை புரிந்தவர்.
குளத்தங்கரை அரசமரம் தவிரப் பிற கதைகள் ஆசிரியர் கூற்றாகவே அமைந்தாலும் உயிரோட்டம் மிக்கநடை, காவியச்
சாயல், நாடகப்பாணி என்பன     இவர்     கதைகளில்
அமைந்துள்ளன.

• புதுமைப்பித்தன்

    1933-இல் சிறுகதை வளர்த்த இதழான
மணிக்கொடியில் சிறந்த சிறுகதையாசிரியராகத் திகழ்ந்தவர் சொ. விருத்தாசலம் என்ற
இயற்பெயர்     கொண்ட புதுமைப்பித்தன்.
அவருடைய சிறுகதைகளில் வறுமையின்
விளைவுகள், சமூகச் சிக்கல்கள், மக்களின்
மூட நம்பிக்கைகள் ஆகியன அடிப்படையாக
அமையும். அவரது கதைகளில் கேலியும்
கிண்டலும் நையாண்டியும் நிறைந்து இருக்கும்.

தாம் காணும் காட்சிகளையும் கருதும் கருத்துகளையும்
சிறுகதைகள் வாயிலாகவே தமிழர்க்கு உணர்த்திவிட முடியும்
என நம்பியவர் புதுமைப்பித்தன்.

    புதிய கருக்கள், அதற்கேற்ற புதிய வடிவங்கள், அவற்றை
வெளிப் படுத்தும் புதிய உத்திகள், புதுவகையான நடை,
சமுதாய சுகவாசிகளைக் கண்டு ஏங்கிக் கலங்கும் இரக்க
நெஞ்சம் இவை எல்லாம் அவரது கதைக்குப் புத்துயிர்
ஊட்டின.

    சிறுகதை மன்னன் என்று பாராட்டப் பெறும் இவர்,
உலகத்துச் சிறந்த சிறுகதைகள், தெய்வம் கொடுத்த வரம் என்ற
இரண்டு மொழிபெயர்ப்புத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.
1941-க்கு முன் அகலிகை என்ற கதை எழுதிப் புரட்சி செய்த
இவரே சாப விமோசனம் என்ற மற்றொரு கதையையும்
எழுதிப் புரட்சி செய்கிறார். அகல்யை கதையில் கௌதமர்
அகலிகையையும் இந்திரனையும் மன்னித்து விடுகிறார். ஆனால்
சாப விமோசனம் கதையில் கௌதமர் விரக்தியினால்
துறவியாகிறார். அகலிகை சாபவிமோசனம் கண்டாலும் பாப
விமோசனம் கிடைக்காதா என்று ஏங்குகிறாள். மனதளவில்
கல்லாகிப் போகிறாள் என்பது கதை.

    ஆண்மை, கல்யாணி, பொன்னகரம் போன்ற கதைகளில்
வாழ்க்கைச் சித்திரத்தை வடிக்கிறார் புதுமைப்பித்தன்.
வேதாளம் சொன்ன கதை, கட்டில் பேசுகிறது, கடவுளும்
கந்தசாமிப்பிள்ளையும் என்பன கற்பனைக் கதைகள். காஞ்சனை
என்பது மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமலே உள்ள கதை.
துன்பக்கேணி கதை இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில்
வேலை செய்யும் பெண் பற்றியது. தன்னைக் கெடுத்த மானேஜர்
தன் மகள் கற்பையும் அழித்தான் என அறிந்து அவனைக்
கொலை செய்து விடுகிறாள் அந்தத் தாய். இவ்வாறு
கொடுமையை எதிர்க்கும் பாத்திரங்களையும் புதுமைப்பித்தன்
படைத்துள்ளார்.

• இராஜாஜி

        

    சக்ரவர்த்தி     இராஜகோபாலாச்சாரியார்     சமுதாய
முன்னேற்றம் குறித்த சில கதைகளை எழுதியுள்ளார்.
அன்னையும் பிதாவும், தேவானை, முகுந்தன் பறையனான
கதை
என்பன அவற்றுள் சில.

• கு.ப. இராஜகோபாலன்

    ஆண்-பெண் உறவுகளைக் கதைக்கருவாகப் படைப்பதில்
நிகரற்றவர் கு.ப.இராஜகோபாலன். அவரது கதைகளுள்
விடியுமா என்ற சிறுகதை, சிறுகதை இலக்கணத்திற்குரிய
கூறுகள் அனைத்தும் கொண்டது. காணாமலே காதல்,
புனர்ஜன்மம், கனகாம்பரம்
முதலியன அவரின் சிறுகதைத்
தொகுப்புகளாகும்.

• பி.எஸ். இராமையா

    மணிக்கொடி பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய
பி.எஸ்.இராமையா 300க்கும் மேற்பட்ட கதைகளை எழுதி
உள்ளார். நட்சத்திர குழந்தைகள் என்பது இவர் புகழ் பெற்ற
கதை. மணிக்கொடி காலம் என்ற இவரது நூல் சாகித்ய
அகாதெமி விருது பெற்றது.

• கல்கி

        

    கல்கி அவர்களின் கேதாரியின் தாயார், வீணை
பவானி, கணையாழியின்     கனவு, திருவழுந்தூர்
சிவக்கொழுந்து, மயிலைக்காளை
முதலிய கதைகள் நம்
நெஞ்சம் கவர்பவை.

• மௌனி

    சிறுகதை எழுதுவதில் புதுப்போக்கு உடையவர் மௌனி.
ஒருமுறை படித்தவுடன் அவரது கதைகள் புரிந்து விடுவதில்லை.
அழியாச்சுடர், மனக்கோலம், சாவில் பிறந்த சிருஷ்டி,
பிரபஞ்ச கானம்
போன்ற பல சிறந்த சிறுகதைகளை
எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று இவர்
போற்றப்படுகிறார்.

• ந. பிச்சமூர்த்தி

    ந.பிச்சமூர்த்தியின் ஒருநாள், நல்ல வீடு, திருடி,
கலையும்     பெண்ணும்,     முள்ளும்     ரோஜாவும்,
கொலுபொம்மை
போன்ற சிறுகதைகள் மனதில் நிற்பவை.
மணிக்கொடி எழுத்தாளர். சிறுகதை இலக்கணம் பயில
ஏற்புடையன இவர் கதைகள்.

• தி. ஜானகிராமன்

    தஞ்சாவூர்ப் பகுதியை நம் கண்முன் கொண்டு வரும்
எழுத்தாளர்களில் தலைசிறந்தவர் தி. ஜானகிராமன். சிவப்பு
ரிக்ஷா, தேவர் குதிரை, அக்பர் சாஸ்திரி
என்பன
குறிப்பிடத்தகுந்த கதைகள்.

• தி.ஜ. ரங்கநாதன்

    பல்துறை வல்லுநரான தி.ஜ.ரங்கநாதன் சிறப்புப் பெறுவது
தம் சிறுகதைகளால் தான். சந்தனக் காவடி என்பது 1938இல்
வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுதி. நொண்டிக்கிளி,
சமத்து மைனா, வீடும் வண்டியும், காளிதரிசனம், விசை
வாத்து, மஞ்சள் துணி
என்பன முக்கியமான கதைகள்.

• துமிலன்

    துமிலன் என்ற புனைபெயர் கொண்ட ந.ராமசாமி
விந்தையான புத்தகங்கள், ஸ்ரீமதி கண்டக்டர் போன்ற 11
சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

• க.நா. சுப்ரமணியம்

    க.நா. சுப்ரமணியம் ஹைதர் காலம், காட்டுமல்லிகை,
வாடாமலர், தோட்டியை மணந்த அரசகுமாரி
போன்ற
கதைகளை எழுதியுள்ளார். கருவால் சிறந்த வரலாற்றுச்
சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.

• கி.வா. ஜகந்நாதன்

    கலைமகள்     பத்திரிகை     வாயிலாகச்     சிறந்த
கதையாசிரியர்களை அறிமுகப்படுத்தியவர் கி.வா.ஜகந்நாதன்
கலைமகளில் பல தரமான கதைகள் எழுதி உள்ளார். அறுந்த
தந்தி, வளைச் செட்டி, பவள மல்லிகை, கலைஞன்
தியாகம், அசையா விளக்கு, கோவில்மணி, கலைச்செல்வி
என்பன இவரது சிறுகதைத் தொகுதிகள்.

• சிட்டி

    சிட்டி     என்ற பெயருடைய பெ.கோ.சுந்தர்ராஜன்
மணிக்கொடி எழுத்தாளர். மதுவிலக்கு மங்கை, அந்தி
மந்தாரை
, என்ற 2 சிறுகதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார்.
தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலின்
ஆசிரியர்களில் ஒருவர்.

• சி.சு. செல்லப்பா

    மணிக்கொடி எழுத்தாளரான சி.சு,செல்லப்பா புதுமை
இலக்கியப் போராளி. சரஸாவின் பொம்மை, மணல் வீடு,
அறுபது, சத்யாக்ரகி, வெள்ளை
என்ற 5 தொகுதிகள்
இவருடையது.

• கரிச்சான் குஞ்சு

    கலைமகள் இதழில் கதைகளைப் படைத்தவர்.

• லா.ச. ராமாமிருதம்

    தனக்கென்று தனிச் சிந்தனைப்
போக்கும் தனிநடையும் உடையவர் லா.ச.ரா எனப்படும் லா.ச. ராமாமிருதம். அவருடைய கதைகளில் ஒரே விதமான தத்துவம்
அடிக்கடி படைக்கப்படுகிறது.     அது
பலர்க்கும் எளிதில் புரிவதில்லை. ஜனனி,
இதழ்கள்
என்பன அவரது சிறந்த
கதைகள். 5 சிறுகதைத் தொகுப்புகளை
அவர் படைத்துள்ளார்.

• வல்லிக்கண்ணன்

    500 சிறுகதைகளுக்கு மேல் எழுதிப்
புகழ்பெற்றவர் வல்லிக்கண்ணன். சந்திர
காந்தக்கல்
என்பது இவருடைய முதல்
சிறுகதை. கல்யாணி முதலிய கதைகள்,
நாட்டியக்காரி, ஆண் சிங்கம், வாழ
விரும்பியவன்
முதலியன இவரது கதைத்
தொகுதிகள்.

• சிதம்பர இரகுநாதன்

    பொதுவுடமைக் கருத்துக்களை மையமாகக் கொண்டு
எழுதியவர்களில் சிதம்பர இரகுநாதனும் ஒருவர். ஞானோதயம்,
ஆனைத்தீ, சேற்றில் மலர்ந்த செந்தாமரை, அபாய
அறிவிப்பு மனைவி, ஞானமணிப் பதிப்பகம்
போன்ற
கதைகள் பல எழுதி உள்ளார். பிற மொழிகளிலிருந்து
கதைகளையும் நாவல்களையும் மொழிபெயர்ப்புச் செய்து
தந்துள்ளார்.

• கி.ராஜ நாராயணன்

    கரிசல் காட்டு வாழ்வைக் கண்முன்னே
நிறுத்துபவர் கி. ராஜ நாராயணன். கதவு,
கன்னிமை, வேட்டி, கிராமியக் கதைகள்,
தாத்தா சொன்ன கதைகள், கரிசல்
கதைகள்,     கொத்தைப்     பருத்தி,
தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள்
என்பன
இவர் படைப்புகள்.

• பிறர்

    இவர்களைத் தவிர டாக்டர் மு.வரதராசனார், விந்தன்,
அகிலன், டி.கே.சீனிவாசன், ஜெகசிற்பியன், ரா.கி.ரங்கராஜன்
போன்றவர்களுடன் அநுத்தமா, லட்சுமி, சூடாமணி, ராஜம்
கிருஷ்ணன், கோமகள், சரஸ்வதி ராம்நாத் போன்ற பெண்
எழுத்தாளர்களும் தோன்றிச் சிறுகதை உலகைச் செழிக்கச்
செய்திருக்கின்றனர்.

5.1.3 நாவல்

    வேதநாயகம் பிள்ளையும் இராஜம் ஐயரும் மாதவையாவும்
தொடங்கி வைத்த நாவல் இலக்கியம் வரலாற்று நாவல்,
துப்பறியும் நாவல், மொழிபெயர்ப்பு நாவல் எனப் பல
கிளைகளாக வளர்ந்தது.

• துப்பறியும் நாவல்கள்

    மேலைநாட்டு நாடகங்களில் வரும் பெயர்களையும்
நிகழ்ச்சிகளையும் தமிழ் நாவல்களில் உலவவிட்டு வெற்றி
கண்டவர் ஆரணி குப்புசாமி முதலியார். வடுவூர் துரைசாமி
ஐயங்கார், வை.மு. கோதை நாயகி அம்மாள், ஜே.ஆர்.
ரங்கராஜூ, தி.ம.பொன்னுச்சாமி, பி.டி.சாமி என்போர்
அக்காலத்தில் துப்பறியும் நாவல்களையும் மர்ம நாவல்களையும்
‘ரெயினால்ட்ஸ்’ என்பவரை அடியொற்றி எழுதிப் புகழ்
பெற்றவர்கள்.

    எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு தாம் நடத்திய பிரஜானுகூலன்
என்ற திங்கள் இதழில் துப்பறியும் மர்மத் தொடர்களையும்
வெளியிட்டுள்ளார். வடமொழி விரவிய நடையில் ஆனந்த
கதாகல்பம்
, பரிமளா என்ற 2 நாவல்களை எழுதியுள்ளார்.

• வரலாற்று நாவல்கள்

    தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் என்று போற்றப்பெறும்
கல்கி அவர்கள் தொடர்கதை படிக்கும் ஆர்வத்தை மக்களிடம்
ஏற்படுத்தியவர். அலையோசை, தியாகபூமி, கள்வனின்
காதலி, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்,
பார்த்திபன் கனவு
போன்ற சிறந்த வரலாற்று நாவல்களைப்
படைத்தவர். இவரது இறுதி நாவலான அமரதாராவை இவர்
மகள் ஆனந்தி முடித்தார்.

    1865-இல் தி.த.சரவண முத்துப்பிள்ளை என்பவரால் எழுதப்
பெற்ற மோகனாங்கி என்ற நாவலே தமிழில் தோன்றிய முதல்
சரித்திர நாவலாகும். நாயக்கர் மன்னர் வரலாற்றை
அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்ற நூல் இது.

• விடுதலை இயக்க நாவல்கள்

    1926-இல் தேசிய விடுதலை உணர்வினை நேரடியாகப்
பேசிய நாவல் பனையப்ப செட்டியாரின் காந்திமதி.
மாணிக்கவாசகன்,     அமிர்தம், சண்முக நாதன்,
சந்திரசேகரன்
என்பன இவர் படைத்த பிற நாவல்கள்.

    1930-இல் தேசிய இயக்க நாவலாக வெளிவந்தது
கே.எஸ்.வேங்கட ரமணியின் தேசபக்தன் கந்தன். ஆசிரியரின்
அடுத்த நாவல் முருகன் ஓர் உழவன்.

    சத்யாக்கிரகம் பற்றிய முதல் நாவல் சாண்டில்யன் எழுதிய
பலாத்காரம் என்பதாகும்.

• பெண் பிரச்சனை நாவல்கள்

    பாரதியின் தலைமைச் சீடரான வ.ரா, சுந்தரி அல்லது
அந்தரப் பிழைப்பு, சின்னச்சாம்பு, கோதைத்தீவு, விஜயம்
என்ற     4     புதினங்கள்     படைத்தார். நான்கிலுமே
பெண்முன்னேற்றச்     சிந்தனைகள்     தான்     உள்ளன.
அக்காலத்திலேயே விதவைத் திருமணம், சமுதாயச் சீர்திருத்த
சிந்தனைகள் பற்றி எழுதியவர் இவரே.

• கிராமிய நாவல்கள்

    மண்மணம் கமழும் நாவல் படைத்தவர்களுள் முன்னோடி
சங்கரராம் என்ற டி.எல்.நடேசன். மண்ணாசை என்ற இவரது
நாவல் முதல் முழுகிராமிய நாவல். இன்ப உலகம், வீர சிற்பி,
நீலா, பானா பரமசிவம், பெண் இனம், பார்வதி, தீயும்
வெடியும்,     நாட்டாண்மைக்காரன்,     காரியதரிசி,
அருள்பண்ணை
என்ற நாவல்களையும் படைத்துள்ளார்.

• சமூகச் சீர்திருத்த நாவல்கள்

    நாகை கோபால கிருஷ்ணப் பிள்ளை, பத்மரேகை
அல்லது கற்பகச் சோலை ரகசியம், தனபாலன்,
சந்திரோதயம், அலைகடல் அரசி
என்ற சமுதாயச் சீர்திருத்த
நாவல்களை இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதி
எதிர்ப்புகள் பல சம்பாதித்தவர்.

    சுதந்திரம் பெற்ற பிறகு நாவல் எழுத்தாளர்களின்
எண்ணிக்கை கூடியது. அவர்கள் எடுத்துக் கொண்ட
கருத்துகளும் பல்வேறு வகையானவை.

5.1.4 மொழிபெயர்ப்பு

    ஆங்கிலக் கல்வி பெற்றுப் பல்வேறு பதவி வகித்த
சான்றோர் பலர் வடமொழியில் இருந்தும், ஆங்கிலத்திலிருந்தும்
தாமறிந்த பிரெஞ்ச், ஸ்வீடிஷ் போன்ற மொழிகளில் இருந்தும்
மொழிபெயர்ப்புச் செய்து தமிழை வளப்படுத்தினர்.

    பண்டிதமணி என்று போற்றப் பெற்ற கதிரேசன்
செட்டியார் மண்ணியல் சிறுதேர், மாலதி மாதவம்,
கௌடிலீயம், சுக்கிர நீதி, பிரதாப ருத்திரீயம்

போன்றவற்றை வடமொழியிலிருந்து மொழிபெயர்த்தார். இவரது
உரைநடை தனித்தன்மை வாய்ந்தது.

    அண்ணல் காந்தியின் ஆங்கிலத்தைத் தமது ஏடுகளில்
சின்னச் சின்ன வாக்கியங்களாக மொழிபெயர்த்து எழுதியவர்
திரு.வி.கலியாண சுந்தரனார்.

    ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கில அறிஞருடைய
கருத்துக்களைத் தமிழ்ப்படுத்தி வ.உ.சி அவர்கள் மனம்போல்
வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம்
என்ற 3
நூல்களாகத் தந்துள்ளார்.

    செந்தமிழ் இதழின் முதல் ஆசிரியரான ரா.ராகவ
ஐயங்கார், பகவத் கீதையையும் சாகுந்தல நாடகத்தையும்
வடமொழியிலிருந்து மொழி பெயர்த்தார்.

    முத்தமிழிலும் வல்ல இலக்குமணப் பிள்ளை ஆங்கில
நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

    வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் மில்டனின்
சுவர்க்க நீக்கம், ஸ்பென்சர் எழுதிய கல்வி என்ற
இரண்டையும் மொழிபெயர்த்தார்.

    தமிழ்     மக்களுக்குத்     தாகூரின்     கவிதைகளை
அறிமுகப்படுத்தியவர்கள்      வி.ஆர்.எம்.செட்டியார்,
அரங்க.சீனிவாசன், இளங்கம்பன் ஆகியோர்.

    ஜமதக்னி என்பவர் இந்தி மொழியிலிருந்து காமன் மகள்
என்ற காப்பியத்தை மொழிபெயர்த்தார். காளிதாசரின் மேக
சந்தேசம்
என்ற நூலும் செய்யுள் வடிவில் இவரால்
மொழிபெயர்க்கப்பட்டது.

    சேக்ஸ்பியர் நாடகங்கள் ஒன்பதைத் தமிழ்க் கவிதையாக
மொழி பெயர்த்துத் தந்துள்ளார் அ.கு. ஆதித்தர், கபீர்தாசர்
பாடல்கள், காளிதாசர் உவமைகள் என்ற நூலையும் எழுதினார்.

    ச.து.சு.யோகியார் வால்ட் விட்மனின் புல்லின் இதழ்கள்,
ஹெமிங்வேயின் கிழவனும் கடலும், வுட்ரோ வில்சனின்
வாழ்க்கை வரலாறு, தாஸ்தாவஸ்கியின் கார்மேஸாவ்
சகோதரர்கள்
, இதுதான் ரஷ்யா என்ற நூல்களை
மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

    உலகத்துச் சிறந்த சிறுகதைகள். தெய்வம் கொடுத்த வரம்
என்ற 2 மொழிபெயர்ப்புத் தொகுதிகளில் உலகத்திலுள்ள சிறந்த
சிறுகதைகளை எல்லாம் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்து
தந்துள்ளார்.

    இந்திய மொழிகளுள்ளேயே மொழிபெயர்ப்புச் செய்வதும்
நம் இந்திய விடுதலைக்கு முன்பே துவங்கி விட்டது.
வங்கமொழியில் இருந்து ஏராளமான கதை, கட்டுரை, கவிதை,
நாவல் என்பன தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. அன்னிய
மொழிகளில் ரஷ்ய மொழியில் இருந்து ஏராளமாக மொழி
பெயர்க்கப்பட்டன. இந்தி, மராத்திய மொழியிலிருந்தும் மொழி
பெயர்க்கப்பட்டன. பிரெஞ்சு, ஜெர்மன், மொழிகளிலிருந்தும்
சிலர் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளனர்.

5.1.5 திறனாய்வு

    விருப்பு வெறுப்பின்றி நடுநிலையில் நின்று ஒரு நூலை
ஆராய்ந்து கூறுதல் திறனாய்வு ஆகும். இவ்வாறு கூறும்
திறனாய்வு பல வகைப்படும். பாராட்டி மட்டும் செல்வது, குறை
மட்டும் கூறுவது, ஒப்பிட்டு மட்டும் கூறுவது, விளக்கி மட்டும்
கூறுவது என்பன அவற்றுள் சில. விடுதலைக்கு முந்திய நம்
தமிழறிஞர்கள் எதையெல்லாம் பற்றித் திறனாய்வு செய்துள்ளனர்
என இனிக் காண்போம்.

    திருவள்ளுவர், சேரர் தாயமுறை, சேரர் பேரூர்,
தசரதன் குறையும் கைகேயியின் நிறையும், நற்றமிழ்
ஆராய்ச்சிகள்
என்ற நூல்களில் தனது வாதத்திறமையை
நிரூபித்தவர் சோமசுந்தர பாரதியார்.

    தமிழிலக்கியங்களைப் பற்றிய கால ஆராய்ச்சியில் இறங்கி
முதன் முதலில் அதிர்ச்சி தரத்தக்க ஆராய்ச்சி முடிவுகளை
அளித்தவர் வையாபுரிப் பிள்ளை. தமிழ்ச்சுடர் மணிகள்,
இலக்கியதீபம், இலக்கிய உதயம், இலக்கியச் சிந்தனைகள்,
சொற்கலை விருந்து, காவிய காலம், தமிழின் மறுமலர்ச்சி,
தமிழர்     பண்பாடு,     உலக     இலக்கியங்கள்,
திருமுருகாற்றுப்படை உரை, கம்பன் காவியம், இலக்கணச்
சிந்தனைகள்
என்ற 12 நூல்கள் படைத்தவர். இலக்கியங்களில்
அறிவாராய்ச்சி     அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர்.
திறனாய்வுக் கலையின் திறப்பாளர்.

    சொல்லின் செல்வர்     என்று புகழப் பெறும்
ரா.பி.சேதுப்பிள்ளை சொல்லாராய்ச்சியில் வல்லவர். Tamil words
and their significance
என்பது இவரது நூல்.

    தமிழ் ஆய்விற்குத் தடம் போட்டுத் தந்தவர் என்ற
பெருமைக்கு     உரியவர்     மு.இராகவையங்கார்.     தம்
கல்வெட்டறிவின் துணையால் ஆழ்வார்கள் காலநிலை,
சாசனத் தமிழ்க் கவிசரிதம், இலக்கியச் சாசன வழக்குகள்
என்ற நூல்களைப் படைத்துள்ளார்.

    வேங்கடராஜூலு ரெட்டியார் வடமொழியும் திராவிட
மொழிகளும்     அறிந்தவர்.     அந்த     மொழிகளின்
இலக்கணங்களையும், சொல் அமைப்பையும் ஒப்பிடும்
ஆராய்ச்சியில் தேர்ந்தவர். பழைய இலக்கண நடையில் பல
கட்டுரைகளும் சில ஆராய்ச்சி நூல்களும் எழுதியுள்ளார்.

    ஒழுங்காகவும் தெளிவாகவும் எழுதப்பட்ட வரலாற்று
நூல்களின் ஆசிரியர் மயிலை.சீனி.வேங்கடசாமி. கிறித்தவமும்
தமிழும், சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், தமிழர்
வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூல்கள் அவரது
நுண்ணறிவைக் காட்டும்.

    இந்திய அரசால், National Professor of Humanities என்ற
விருது வழங்கிச் சிறப்பிக்கப் பெற்ற தெ.பொ.மீ அவர்கள் தமிழ்
மொழியியலின் தந்தையாவார். வள்ளுவரும் மகளிரும்,
அன்புமுடி, பிறந்தது எப்படியோ? கானல்வரி, குடிமக்கள்
காப்பியம், தமிழும் பிற பண்பாடும், பாட்டிலே புரட்சி,
சமணத் தமிழ் இலக்கிய வரலாறு, வாழும் கலை, தேனிப்பு
எனப் பல நூல்களை இயற்றியுள்ளார்.

    தனியொரு நூலைப் பலர் பலகோணங்களில் இருந்து
திறனாய்வு செய்து புகழ் பெற்றுள்ளனர். சிலம்பைப் பற்றித்
திறனாய்வு செய்தவர்களில் மார்க்கபந்து சர்மா, மா.பொ.சி, மு.வ,
ந.சஞ்சீவி, வ.சுப.மாணிக்கம் என்போர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

    கம்பராமாயணத் திறனாய்வு என்றவுடன் டி.கே.சி. பி.ஸ்ரீ,
அ.சீனிவாச ராகவன், அ.ச.ஞானசம்பந்தன், கி.வா.ஜகந்நாதன்,
மகாராசன், ராமகிருஷ்ணன் போன்ற அறிஞர்கள் நினைவிற்கு
வருவர்.

    திருக்குறள் திறனாய்வு என்றாலே திரு.வி.க., நாமக்கல்
கவிஞர், பாரதிதாசன், தெ.பொ.மீ, மு.வ., கோதண்டபாணி
பிள்ளை என்போருடைய நூல்கள் நினைவிற்கு வரும்.

    சங்க இலக்கியங்களைப் பற்றிய திறனாய்வில் கி.வா.ஜ.
தெ.பொ.மீ, இலக்குவனார், வேங்கடராம செட்டியார்,
கு.ராஜவேலு, அ.ச.ஞான சம்பந்தன், மு.வ., ந.சஞ்சீவி
முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

5.1.6 உரையாசிரியர்கள்

    ராபர்ட்-டி.நொபிலி, அருளானந்த அடிகள், வீரமா
முனிவர்,     கால்டுவெல்,     போப்ஐயர் என்பவர்களால்
வளர்க்கப்பட்ட தமிழ் உரை நடையானது 19ஆம் நூற்றாண்டு
முதல் விரைந்து சிறந்தது. ஆங்கிலேயர் ஆட்சி நாட்டில்
நிலைபெற்ற பின் நாடெங்கும் அச்சகங்கள் தோன்றின.
கிறித்துவ மிஷனரிகளும் இந்துக்களும் போட்டிபோட்டுக்
கொண்டு நூல்களை வெளியிட்டனர். சென்னைக் கல்விச்
சங்கமும் சென்னைப் புத்தகக் கழகமும் பாட நூல்களையும்
மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டதால் உரைநடை நல்ல
நிலையை அடைந்தது.

    கற்ற பண்டிதர்க்கு ஒரு நடை, கல்லாத பாமரர் கேட்டு
ரசிக்க ஒரு நடை, சமயக் கருத்துக்களைக் கூற ஒரு நடை என
மூவகை நடை வீரமாமுனிவர் காலத்திலேயே வழங்கினாலும்
இருபதாம் நூற்றாண்டின் உரைநடை வேந்தராக ஒளிர்பவர்
ஆறுமுக நாவலர். இலக்கணப் பிழைகள் அற்ற எளிய, இனிய,
தெளிந்த நடையைத் தோற்றுவித்ததால் இவரை தமிழ்க்
காவலர்
என்றும் தற்காலத் தமிழ் உரைநடையின் தந்தை
என்றும் கூறுவர். இலங்கையைச் சார்ந்த ஆறுமுக நாவலர்
உரைநடையை வளர்த்தாலும், தமிழகத்தில் உரைநடைக்கு உயிர்
ஊட்டியவர் பாரதியார். என்றாலும் கவிதைத் துறை போல
உரைநடையில் அவரால் புகழ்பெற இயலவில்லை. காலத்தின்
போக்கிற்கு ஏற்ப, இவரும் வடமொழிச் சொற்களைக் கலந்து
எழுதத் தயங்கவில்லை.

    தொடக்கத்தில் பண்டிதர் நடையில் எழுதி வந்த உ.வே.சா
அவர்களும் காலப் போக்குணர்ந்த பின் மாறி எளிய நடையில்
எழுதினார். இவரது பதிப்புரைகளே அதற்குச் சான்று.

    கற்றோர்க்கே     விளங்கும்     தமிழில் எழுதியவர்
பரிதிமாற்கலைஞர். (வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார்)
உரையாசிரியர்களையும் மிஞ்சும் படி செறிவான நடையில் இவர்
எழுதினார்.

    தனித்தமிழ் நடையின் தந்தை என்று
போற்றப் பெறும் மறைமலையடிகள்
வடமொழிச் சொற்கள் கலக்காமல் தனித்
தமிழில் எழுதும் முறையினைத் தொடங்கி
வைத்தார். சங்கத் தமிழின் சாயல் கொண்ட ஏற்றமான நடை இவரது நடை எனலாம்.
இளவழகனார்,     தேவநேயப் பாவாணர்,
பெருஞ்சித்திரனார், டாக்டர்.வ.சுப. மாணிக்கம்
போன்றோர் அடிகளின் போக்கைப்
பின்பற்றினர் எனினும் இயக்கம் வந்த வேகம்
குறைந்து காலப் போக்கில் கைவிடப்பட்டது
எனலாம்.

ñ¬øñ¬ô
அ®è÷¢

    சமூகம், பொருளியல், அரசியல் என எத்துறையாயினும்
தமிழில் எளிய நடையில் எழுத முடியும் எனக் காட்டியவர்.
மென்றமிழ் உரைநடையின் முதல்வர் என்று போற்றப்படும்
திரு.வி.க. ஆவார்.

    பண்டைய புலவர்களின் செந்தமிழ் நடையினைப் பின்பற்றி
இக்காலத்தில் பண்டிதமணி, நாட்டார், செல்வக்கேசவராயர்,
விபுலானந்தர் போன்றவர்கள் எழுதினர்.

    சொல்லின்பம் மிக்க, ஓசைச் சிறப்புடைய நடைக்குச்
சொந்தக்காரர்     ரா.பி.சேதுப்பிள்ளை.     தெளிந்த,
வெள்ேளாட்டமான நடையில் எழுதியவர்கள் கா.சு.பிள்ளை,
ஜெகவீரபாண்டியனார், ஒளவை துரைசாமி என்பவர்கள்.

    சிந்தனையும் செறிவும் கொண்ட நடை எழுதியவர்கள்
பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களும்
பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ அவர்களும். மு.வ அவர்களின்
நடை தெளிவு எளிமை ஆகியவற்றுடன் அமைந்துள்ளது.

    சான்றோர் உரை செய்த நூல்கள் பின்வருமாறு:

ஆறுமுக
நாவலர்
- பெரிய புராணம்,
திருவிளையாடல்புராணம்
உ.வே.சா - புறநானூறு, பத்துப்பாட்டு,
பதிற்றுப்பத்து, உரைக்குறிப்புகள்
பின்னத்தூர்
நாராயணசாமி அய்யர்
- நற்றிணை
வி.கோ.சூ
(பரிதிமாற்கலைஞர்)
- நாடகவியல்
மறைமலையடிகள் - முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை
திரு.வி.க - பெரியபுராணக் குறிப்புரை,
திருக்குறள்
பண்டிதமணி - திருவாசகம்
சி.கே.சுப்பிரமணிய
முதலியார்
- பெரிய புராணம்
கா.சு. பிள்ளை - திருவாசகம்
வேங்கடசாமி
நாட்டார்
- காரிகையுரைத் திருத்தம்,
திருவிளையாடற் புராணம்,
சிலம்பு, மேகலை,
இன்னா நாற்பது, இனியவை
நாற்பது, களவழி நாற்பது,
கார் நாற்பது
ரா. ராகவ ஐயங்கார் - குறுந்தொகை
சோமசுந்தர பாரதியார் - தொல்காப்பியத்தின்
சில பகுதிகள்
ஒளவை
துரைசாமிப் பிள்ளை
- ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,
புறநானூறு
வை.மு.கோ - கம்ப ராமாயணம் முழுவதும்
சே.கிருஷ்ணமாச்சாரியார் - வில்லிபாரதம்

    உரையாசிரியர்களால் உரைநடை வளர்ந்தது; செய்யுளைச்
சுவைக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிற்காலத்தில் தமிழ் மேலும்
பல துறைகளில் வளர உதவியது.