4.2 திராவிட மொழிகள்

    தென் இந்தியப் பகுதிகளில் மக்களால் பேசப்படும் மொழிகள்
ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு விளங்குகின்றன. அங்ஙனம்
தொடர்புடைய 30 மொழிகள் திராவிட மொழிகள் என்று
குறிக்கப்படுகின்றன. இவற்றுள் பிராகுயி என்ற மொழி மட்டும்
இந்தியாவின் வடக்கே அயலகத்தில், பலுசிஸ்தான் பகுதிகளில்
பேசப்படுகிறது. குரூக், மால்டோ போன்ற மொழிகள்
பெரும்பாலும் வடஇந்தியாவில் பேசப்படுகின்றன.

    மக்களிடையே வழங்கிய     மொழிகளைப் பரிசீலித்தல்,
ஒவ்வொரு மொழிக்கும் இடையிலான தொடர்புகளை அறிதல்,
வடமொழியுடன் ஒத்துள்ளதா, வேறுபடுகிறதா என்று இனம்
காணல் என்னும் நிலைகளில் வெவ்வேறு காலக் கட்டத்தில்
வெவ்வேறு மொழி ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகள், நிறுவிய
கருத்துகள்தாம் திராவிட மொழிகள் பற்றிய முழு அளவிலான
ஆய்விற்குத் தளம் அமைத்தன. கி.பி. 1856 இல்
"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்"
என்ற நூலைக் கால்டுவெல் வெளியிட்டார்.
‘திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வின்
தந்தை’ என்று கால்டுவெல் அழைக்கப்படுகிறார்.
அவருக்கு     முந்தைய     ஆய்வாளர்தம்
முயற்சிகளைச் சற்றே காணலாம்.


Dr.கால்டுவெல்

4.2.1 திராவிடம் - சொல்

    ‘மலபார் மொழிகள்’ என்றும், ‘தமுலிக்’ என்றும் முதலில்
குறிப்பிட்டனர். தமிழ் மொழியின் பெயராலேயே இவ்வின
மொழிகளைக் குறிப்பிடலாம். ஆனால், ‘தமிழ்’ என்பது ஒரு
குறிப்பிட்ட மொழியைக் குறிக்கும் சொல். பல்வேறு மொழிகளைக்
கொண்ட குடும்பத்தைக் குறிக்கப் பிறிதொரு பெயரை அமைத்தல்
சிறப்புடையது என்று பரிசீலித்து, ‘திராவிடம்’ என்ற சொல்லைத்
தாம் தேர்ந்தெடுத்ததாகக் கால்டுவெல் கூறுகிறார்.

  • ஆந்திர - திராவிட பாஷா என்ற பெயரில் தென்னிந்திய
    மொழியினத்தைக் குமாரிலபட்டர் குறிப்பிட்டுள்ளார். இவர்
    வடமொழி அறிஞர்; கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
  • ‘திராவிடர்’ என்று தென்னிந்திய மக்கள் மனு சுமிருதியில்
    சொல்லப்பட்டுள்ளனர் என்று கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.

    இரவீந்திரநாத தாகூர் எழுதிய தேசிய கீதத்தில் ‘திராவிடம்’
    என்ற சொல் பரந்த பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
    தென்னிந்திய மொழி இனத்தையும் மக்களையும் சுட்டுவதற்குத்
    ‘திராவிடம்’ என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.

    4.2.2 திராவிட மொழி ஆய்வுகள்

        தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு
    மொழிகளுக்கு இடையே தொடர்புகள் உள்ளன. அவை ஒரு
    குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளாகத் திகழ்பவை என்று
    பேராசிரியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் (Francis Whyte
    Ellis) என்பவர் எழுதினார். இவர் கிழக்கிந்தியக் கம்பெனியைச்
    சேர்ந்தவர். தனி நூலாக எழுதவில்லை. ஏ.டி. கேம்பல்
    (A.D. Campbell) என்பவர் தெலுங்கு மொழி இலக்கணம்
    (A Grammar of the Telogoo Language) என்ற நூலை
    எழுதினார். கி.பி. 1816 இல் வெளியான நூல் அது. அதன்
    முன்னுரையை எழுதியவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் ஆவார்.
    அவர் அம் முன்னுரையில் தமிழ், தெலுங்கு, மலையாளம்,
    கன்னட மொழிகளுக்கு இடையிலுள்ள தொடர்புகளைச் சுட்டிக்
    காட்டினார். அவை ஒரு தனிக் குடும்பம் சார்ந்தவை என்று
    குறிப்பிட்டார்.

        ராஸ்க் என்பவர் வடமொழியை ஆராய்ந்தார். பல
    சொற்களைப் பட்டியலிட்டார். அவை வடமொழிச் சொற்கள்
    அல்ல என்றும், ‘மலபார் சொற்கள் அவை’ என்றும்
    பத்தொன்பதாம் நூற்றாண்டில் தெரிவித்த கருத்து, வடமொழி -
    திராவிட மொழிகளுக்கிடையிலான வேறுபாடுகளைப் பரிசீலிக்க
    வழி செய்தது எனலாம்.

        தென்னிந்தியாவில்     வழங்கிய     மொழிகள்     ஒரு
    தனிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று கி.பி. 1844 இல்
    கிறித்தவ லாசர் என்பவர் சுட்டிக் காட்டினார்.

        தமிழ், தெலுங்கு போன்ற மொழிகள் வட இந்திய மொழிகளில்
    இருந்து வேறுபட்டவை. அவை ஒரு தனிக் குடும்பத்தைச்
    சேர்ந்தவை என்று செராம்பூரில் சமயப் பணி செய்து
    கொண்டிருந்த கிறித்தவப் பாதிரியார் வில்லியம் கேரி (William
    Carey) நிறுவினார்.

        எச்.பி. ஹாட்சன் (H.B. Hodgson) என்பவர் 1848, 1856
    ஆண்டுகளில் நடு இந்தியாவிலும் இமய மலைப் பகுதிகளிலும்
    உள்ள பழங்குடி     மக்களின்     சொற்கள் தென்னிந்திய
    மொழிகளுடன் ஒத்திருப்பதைக் காட்டினார்.

        பேராசிரியர் மாக்ஸ்முல்லர் தென்னிந்திய மொழிகள்
    வடமொழியிலிருந்து மாறுபட்டவை. அவற்றை ‘நிஷத மொழிகள்’
    (Nishada Languages) என்று குறிப்பிட்டார்.

  • டாக்டர் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம்
  •     கி.பி. 1856 இல் கால்டுவெல் இம் மொழிகளைத் திராவிடம்
    என்ற பெயரில் குறிப்பிட்டார். இவை ஒரு தனிக் குடும்பத்தைச்
    சேர்ந்தவை. இந்தோ ஐரோப்பிய மொழிகளுடன் தொடர்புடையன
    அல்ல என்று நிறுவினார். திராவிட மொழிகள் சில பண்பட்ட
    மொழிகளைக் கொண்டவை. தமிழ், மலையாளம், தெலுங்கு,
    கன்னடம், துளு
    என்பன பண்பட்ட திராவிட மொழிகள்.
    தோடா, கோடா, கோண்டு, கூ
    என்பன பண்படாத திராவிட
    மொழிகள் என்று கருதினார். 1875 இல், திராவிட மொழிகளின்
    ஒப்பிலக்கணம் நூலின் திருந்திய பதிப்பை வெளியிட்டார். அதில்
    கொடகு
    மொழி திருந்திய திராவிட மொழி என்று குறிப்பிட்டார்.
    ராஜ்மகால், ஒரோவோன்
    ஆகியன திருந்தாத திராவிட
    மொழிகள் என்று குறிப்பிட்டார். திராவிட மொழிகளுக்கும்,
    சித்திய மொழிகளுக்கும் இடையே தொடர்பு இருக்க வேண்டும்
    என நினைத்தார். பேச்சு மொழி, எழுத்து மொழி ஆகியவற்றின்
    வளமை, வளமைக் குறைவின் அடிப்படையில் அவர்
    திருந்திய மொழி (Cultivated Language) திருந்தாத மொழி
    (Uncultivated Language) என்று வரையறுக்க முயன்றார். அவர்
    காலத்தில் வசதிகளும், வாய்ப்புகளும் குறைவாகவே இருந்தன.
    திராவிட மொழிகளில் அவர் செய்த ஆய்விற்கு அவர் டாக்டர்
    பட்டம் பெற்றார். ‘கால்டுவெல்லின் ஆய்வு தென் திராவிட
    மொழிகளைப் பற்றியது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
    என்று பொது நிலையில் சுட்டுவதைவிடத் தென் திராவிட
    மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று அழைப்பது பொருத்தமானது’
    என்பார் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். ‘திராவிட மொழிகள்’
    என்று ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளை இனம்
    கண்டு பதிவு செய்த பணி கால்டுவெல்லின் பணியாகும்.

        டாக்டர் கால்டுவெல் குறிப்பிட்ட திராவிட மொழிகள் 12
    ஆகும். இந்திய மொழிகளின் கள ஆய்வுப் பணி இயக்குநர்
    கிரியர்சன், கொலாமி, நாய்கி ஆகிய மொழிகளும் திராவிட
    மொழிகளே. அவற்றையும் சேர்த்துத் திராவிடமொழிகள் 14 என்று
    குறிப்பிட்டார். குவி மொழியை ஆய்ந்தவர் பிட்ஜெரால்டு
    என்பவர். 1913 இல் குவி மொழியும் திராவிட மொழிக்
    குடும்பத்தைச் சேர்ந்தது என்று அறிவித்தார். 1964 இல்
    ஜூல்ஸ்பிளாக்
    என்பவர் திராவிட மொழிகளின் இலக்கண
    அமைப்பு
    (Structure Grammatical Des Languages
    Dravidiennes) என்னும் நூலை வெளியிட்டார். இது பிரெஞ்சு
    மொழியில் எழுதப்பட்ட நூலாகும். இவரது கருத்துகள் பலரால்
    பின்னர் மறுக்கப்பட்டன.

        ஆக்ஸ்போர்டு     பல்கலைக்கழகத்தில்     சமஸ்கிருதப்
    பேராசிரியராகப் பணிபுரிந்தவர் சர். தாமஸ் பரோ. 1950 இல்,
    பர்ஜி, பெங்கோ மொழிகளும் திராவிட மொழிக் குடும்பத்தைச்
    சார்ந்தவை என்று அறிவித்தார். கலிபோர்னியாப் பல்கலைக்கழகப்
    பேராசிரியர் டாக்டர் எமனோ. அவர், தோடா மொழியை
    ஆய்ந்தவர். திராவிட மொழியியல் இனவியல் நாட்டுப்புறக்
    கதைகள்
    (Dravidian Linguistics, Ethnology and Folk Tales)
    என்று நூல் வெளியிட்டார். டாக்டர் பரோ, டாக்டர் எமனோ
    இருவரும் இணைந்து, திராவிட மொழிகளின் அடிச்சொல்
    அகராதி
    (A Dravidian Etymological Dictionary) நூலைத்
    தயாரித்து வெளியிட்டனர். இந்திய, தமிழக அறிஞர்கள்
    தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக்
    கழகம், திராவிட மொழியியல் கழகம், இந்திய மொழிகளின் மைய
    நிறுவனம் ஆகியவை திராவிட மொழியியலில் குறிப்பிடத் தக்க
    ஆய்வுகளைச் செய்துள்ளன. இப்போது திராவிட மொழிகள் என
    முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் இனங்காணப் பட்டுள்ளன.

    4.2.3 திராவிட மொழிகளின் பண்புகள்

        திராவிட மொழிகளுக்குச் சில பொதுப் பண்புக் கூறுகள்
    காணப்படுகின்றன. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
    என்று காலத்தைக் காட்டும் உருபுகளும், ஆண்பால், பெண்பால்,
    ஒன்றன்பால், பலவின்பால், பலர்பால் என்று பாலைக் குறிக்கும்
    விகுதிகளும் வினையடிகளுடன் இணைந்து வருகின்றன;
    தனியாக வருதல் இல்லை.

    சான்று;     வா+ந்+த்+ஆன் - வந்தான்.

    வா - வினையடி
    ந் - சந்தி
    த் - காலம் காட்டும் உருபு
    ஆன் - ஆண்பால் விகுதி

    என்று அமையக் காணலாம். சொற்களின் முக்கியப் பகுதி
    வேர்ச்சொல் (Root Word) அடிச்சொல் (Basic Vocabulary)
    எனப்படும். திராவிட மொழிகளின் சொற்களைப் பரிசீலித்தால்,
    அவை பொதுவான அடிச்சொற்களைக் கொண்டிருப்பதைக் காண
    முடிகிறது.

    சான்று :

    அடிச்சொல்
    - திராவிட மொழிகள்
    கண் - தமிழ்
    கண்ணு - மலையாளம்
    கன்னு - தெலுங்கு
    ஃகன் - குரூக்
    கென் - பர்ஜி

    திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர்கள் ஒன்று போலவே
    அமைந்துள்ளன.

    மூன்று - தமிழ்
    மூனு - மலையாளம்
    மூன்னு
    மூறு
    - தெலுங்கு
    - கன்னடம்

    என்று அமைந்திருத்தலைக் காட்டலாம். திராவிட மொழிகளில்
    உயிர் எழுத்துகள், குறில், நெடில் என்றுள்ளன. இவை பொருளை
    வேறுபடுத்தத் துணை செய்கின்றன.

    சான்று:

    டி - குறில்
    டி - நெடில்
    ளி - குறில்
    வாளி - நெடில்

    4.2.4 திராவிட மொழிகளின் பகுப்பு

        கால்டுவெல் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள்
    என்றும் திருந்தா மொழிகள் என்றும் இரு வகைகளாகக்
    குறிப்பிட்டார். இப்பகுப்பு பண்பாட்டு ஆய்விற்குத் துணை
    செய்யும். ஆனால் மொழி ஆய்விற்குத் துணை செய்வது இல்லை.
    டாக்டர் ஸ்டென்கெனா (Sten Konow) திராவிட மொழிகளைத்
    தமிழ்த் தொகுதி
    (Tamil Group) என்றும், தெலுங்குத்
    தொகுதி
    (Telegu Group) என்றும் இரண்டாக வகைப்
    படுத்துவார். மொழிநூல் அறிஞர்கள் திராவிட மொழிகளை அவை
    பேசப்படும் இடத்தின் அடிப்படையிலும், அவைகளுக்கிடையே
    காணப்படும் அடிப்படைப் பண்புகள் மற்றும் பொதுமைப்
    பண்புகளின் அடிப்படையிலும் வகை செய்வார்கள். நிலப்பரப்பின்
    அடிப்படையில்

  • தென் திராவிட மொழிகள்
  • நடுத் திராவிட மொழிகள்
  • வடக்குத் திராவிட மொழிகள்

    என்று மூன்றாக வகைப்படுத்துகின்றனர்.



    தன் மதிப்பீடு : வினாக்கள் I

    1.
    இந்திய அரசியல் சாசனம் எத்தனை மொழிகளைத்
    தேசிய மொழிகளாக அறிவித்துள்ளது? ஆட்சிமொழி,
    இணைப்புமொழி யாவை?
    2.
    இந்தியாவில் வழங்கும் மொழிகளை எவ்வாறு
    பகுக்கலாம்?
    3.
    அண்மையில் மத்திய அரசால் ‘செம்மொழி’ என்று
    எந்த மொழி அறிவிக்கப்பட்டுள்ளது?
    4.
    இந்திய மொழிகளின் கள ஆய்வுத் திட்டம் பற்றிக்
    குறிப்பு வரைக.
    5.
    ‘திராவிடம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் யார்?
    திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வு நூல் எது?
    6.
    திராவிட மொழிகளின் பண்புகள் மூன்றனைக் கூறுக.