6.1 மராட்டியர் காலம்

    சோழர் ஆட்சிக்குப் பிறகு தமிழகத்தில் ஆற்றல் மிகுந்த
ஆட்சியின்மையால் குழப்பங்கள் தலை தூக்கின. பாண்டியர்
மறுபடியும் ஓங்க முடியாத காரணத்தால் ஹொய்சளர்
தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெறத் தொடங்கினர். வடநாட்டு
அலாவுதீன் கில்ஜியால் அனுப்பப்பட்ட அவன் படைத்தலைவன்
மாலிக்கபூர் தெற்கே இருந்த அரசுகளை அமைதி இழக்கச்
செய்தான். ஆந்திரத்தில் விஜயநகர ஆட்சி ஏற்படும் வரை நாடு
அமைதி இன்றி விளங்கியது. தென்னிந்தியா முழுவதும்
விஜயநகர ஆட்சியின் கீழ் வந்தவுடன் மதுரையில் நாயக்கர்கள்
ஆட்சி ஏற்படுத்தினார்கள். தஞ்சாவூர்ப் பகுதியான சோழ நாடும்
நாயக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதற்குப் பிறகு
அந்தப் பகுதி மராட்டியர் ஆட்சிக்கு மாறியது. கருநாடக நவாபு
தமிழகத்தின்     வடபகுதியைக் கைப்பற்றி ஆட்சியைத்
தொடங்கினான்.     போர்களும் போராட்டங்களும் பல
நடைபெற்றன. நாட்டில் அமைதியான சூழல் இல்லை. இத்தகைய
சூழலின் இடையே மராட்டியர் தஞ்சைப் பகுதியை ஆளத்
தொடங்கினர். எனவே, இக்காலப் பகுதியில் வாழ்ந்த
கவிஞர்களில் பலர், காலத்தின் கோலத்திற்கு ஏற்பச்
சிற்றிலக்கியங்களையே படைத்தனர்.

6.1.1 இலக்கியங்கள்

    தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களின் ஆதரவாலும்
பல நூல்கள் வெளிவந்தன. சமயச் சான்றோர்கள் தோன்றிச்
சிறந்த நூல்களைப் படைத்தனர். பழைய சமய நூல்களுக்கு
விரிவான விளக்கம் அளித்தனர். புலவர்கள் தல புராணங்களைப்
பாடி அந்தந்த ஊர் மக்களை மகிழ்வித்தார்கள். சிறு சிறு
நூல்கள் இயற்றி ஆங்காங்கே இருந்த செல்வர்களையும்
சிற்றரசர்களையும் மகிழ்வித்தார்கள். அரசையும், செல்வரையும்
பொருட் படுத்தாது வாழ்ந்த சித்தர் என்னும் ஒருவகை
ஞானிகள் உயர்ந்த தத்துவப் பாடல்களை அனைவரும் புரிந்து
கொள்ளுமாறு எளிய தமிழில் பாடினர். தத்துவராயர் முதலான
ஞானிகளும் வாழ்ந்து உலகியல் கடந்த ஞானப் பாடல்கள்
பாடினர்.

    கி.பி.1676 இல் ஏகோஜி என்னும் மராட்டிய மன்னன்
தஞ்சையைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த பின்னர், ஏறத்தாழ
நூற்று எண்பது ஆண்டுகள் மராட்டியரது ஆட்சி நடைபெற்றது.
அக்காலக் கட்டத்தில் தமிழ், தெலுங்கு, மராட்டி, வடமொழி
ஆகிய மொழிகளில் எல்லாம் பல்வேறு இலக்கியங்கள்
எழுதப்பட்டன.

    தஞ்சை சரபோஜி மன்னர் உலகப் புகழ் வாய்ந்த
நூலகமான சரசுவதி மகாலை உருவாக்கியதால் பல நன்மைகள்
ஏற்பட்டன. இலக்கியம், இசை, நடனம், வேதாந்தம், காவியம்,
மருத்துவம், வானவியல் தொடர்பான பல சுவடிகள் அவர்
காலத்தில் தொகுக்கப்பட்டன. கிடைத்தற்கு அரிய நூல்கள்,
நாணயங்கள், ஓவியங்கள், பழஞ்சுவடிகள் பல கண்டறிந்து
தொகுக்கப் பட்டன.

    இம்மராட்டியரது ஆட்சிக் காலத்திலே தூது, உலா,
நாடகம், கோவை, சதகம், அம்மானை, புராணம்,
சாத்திரங்கள்
என இவை தொடர்பான எழுபது நூல்கள்
தோன்றி, தமிழைச் சிறந்தோங்கச் செய்தன. புலவர்கள் முயன்றி
ருந்தால் ஒப்பற்ற பெரிய காப்பியங்களையும் இயற்றியிருக்க
முடியும். சில நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அரசியல்
தாக்கத்தால்     இலக்கியப்     படைப்பில்     பெரும்பயன்
விளையவில்லை. எனினும், சிறிய அளவிலேனும் படைப்புகள்
வெளிவந்த வண்ணம்தான் இருந்தன.

• பிற ஆதாரங்கள்

    மராட்டியர் காலத் தமிழை இலக்கியங்கள் மட்டும் அன்றிக்
கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆவணங்கள் போன்றன
கொண்டும் அறிய முடியும். மராத்தி மொழிக் கல்வெட்டுகள்
நாகரி எழுத்துகளில் பொறிக்கப்பட்டன. அரசு ஆவணங்கள்
பல மோடி எழுத்துகளில் எழுதப் பெற்றுள்ளன. செ.இராசு
அவர்கள் எழுதியுள்ள தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள்,
தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்
என்ற தஞ்சைப் பல்கலைக்
கழகத்தின் இரு நூல்களைக் கொண்டும் மராட்டியர் காலத்
தமிழ்மொழியை ஓரளவு அறிந்து கொள்ள இயலும்.