2.1.2 பிள்ளைத்தமிழ் இலக்கணம்
பிள்ளைத்தமிழ் பற்றிய இலக்கணக் குறிப்பை
முதலில் வழங்கும்
நூல் தொல்காப்பியமே ஆகும்.
குழவி மருங்கினும் கிழவது ஆகும் (தொல். பொருள். புறம். 24) |
என்ற தொல்காப்பிய நூற்பா பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு
இலக்கணம் கூறி உள்ளது. குழந்தைப் பருவக்காலத்தில்
குழந்தைகளை விரும்பி அவரது செயல்களைப் பாடுவது உண்டு
என்ற பொருளில் உரையாசிரியர் இளம்பூரணர் உரை எழுதி
உள்ளார்.
இன்னொரு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பிள்ளைத்தமிழ்
இலக்கியத்திற்குரிய பத்துப் பருவங்களைச் சுட்டி
இருக்கிறார். காப்பு,
செங்கீரை, தால், சப்பாணி,
முத்தம், வருகை, அம்புலி, சிற்றில்,
சிறுதேர், சிறுபறை
ஆகியன பிள்ளைத்தமிழின் பத்துப் பருவங்கள்
ஆகும்.
குழந்தையின் மூன்றாம் திங்கள் முதல் இருபத்து ஓராம்
திங்கள் வரையில் உள்ள மாதங்களே பத்துப் பருவங்களாகப்
பகுக்கப் பெறும். இந்தப் பத்துப் பருவங்களில் குழந்தையின்
சிறப்பினைப் பாடுவதாகப்
பிள்ளைத்தமிழ் அமைந்துள்ளது. |