|  
   சங்கத் தொகை நூல்களாகிய     நற்றிணை, 
 குறுந்தொகை  
 ஆகியவற்றிலிருந்து தெரிந்தெடுத்த எழுபது பாடல்களின் துணை  
 கொண்டு தமிழின் மிகப்பழமையான அக இலக்கிய மரபுகளையும்,  
 அம்மரபுகள் உணர்த்தும் தமிழர் வாழ்வியலையும்,பொது அளவில்  
 உயர் மானிட உணர்வோட்டங்களையும் இந்தத் 
 தொகுதி  
 விளக்கிச் சொல்கிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்க் 
 கவிதை வரலாற்றில் இன்றளவும் முதன்மையிடம் வகிக்கின்ற 
  
 சங்கக் கவிதையின்     படைப்பு அழகுகளையும் 
 இத்தொகுதி  
 விளக்கிச் சொல்கிறது. 
 இந்தத் தொகுதியைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? 
   
 மனிதனின் அடிப்படை உணர்வாகிய அன்பு (காமம், காதல்  
 எனும் சொற்களால் சங்க இலக்கியம் 
      உணர்த்துவது)  
 மனநெகிழ்ச்சி, இனிய உணர்வெழுச்சி ஆகியவற்றை இத்தொகுதி  
 மூலம் அறியும் போது மாணவருக்கு - கவிதைச் சுவைஞருக்கு  
 நேரும் மனவிரிவே முதன்மையான பயன். 
   சங்க காலத் 
 தமிழர் வாழ்வின் சில     
 பகுதிகளைத்  
 தகவல்களாகவும், அனுபவங்களாகவும் கண்டு மகிழலாம். 
   வரலாற்று முறையில் 
 இலக்கியப் போக்கின் வளர்ச்சி, 
  
 மாற்றங்களையும்,     படைப்பாளிகளின் 
 படைப்புச்செயல்  
 நுணுக்கங்களையும் உணரும் மாணவர், தாம் வெளிப்படுத்தும்  
 எத்துறை அறிவையும்,     உணர்வையும் 
     செறிவாகவும்  
 செப்பமாகவும் வெளியிடும் திறன் பெறலாம். 
  
 D01111.0 தொகுதி முன்னுரை 
 ’பண்டைய இலக்கியம்’ எனும் பாடத்தில் முதல் தொகுதியாகிய 
  
 நற்றிணையும் குறுந்தொகையும் என்பது தெரிவு செய்யப்பட்ட 30  
 நற்றிணைப் பாடல்களையும் 40 குறுந்தொகைப் பாடல்களையும்  
 கொண்டதாகும். சங்கத் தொகை நூல்களில் 
 முதலாவதும்  
 இரண்டாவதுமாகக் குறிக்கப்படும் நற்றிணையும் குறுந்தொகையும்  
 அக இலக்கியங்கள் ஆகும். அகம் என்பது, உள்ளிருப்பது, 
  
 இத்தகையது என வெளியே புலப்படுத்த முடியாத உணர்வு, 
  
 உள்ளத்தால் உணர்ந்து இன்பமடைவதற்குரியது - 
 அதாவது  
 தலைவன் - தலைவியரின் காதல் வாழ்வையும் மணவாழ்வையும்  
 குறிப்பதாகும்.முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் எனும்  
 ஐந்து திணைகளில் (திணை : ஒழுக்கம்) இக்காதல் 
 வாழ்வு  
 சொல்லப்படுகிறது. புணர்தல் பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல்  
 எனும் ஒழுக்கங்களாகிய ‘உரிப்பொருள்’கள் இடம், காலம் எனும்  
 ‘முதற்பொருள்’களையும், மனிதனைச் சூழ்ந்துள்ள பல்வேறு 
 பொருள்களாகிய     ‘கருப்பொருள்’களையும் பின்னணியாகக் 
  
 கொண்டு கவிதைகளாக வடிவெடுக்கின்றன. ஐந்திணைப் பிரிப்பு,  
 முதல் கரு உரிப்பொருள்கள் முதலியவை பற்றி அகப்பொருள் 
  
 இலக்கணத்தில் விரிவாகப் பயின்றிருப்பீர்கள். 
  சங்க அகப்பாடல்கள் அப்படியே 
 நடப்பியல் வாழ்வைச்  
 சித்திரிப்பவை அல்ல. அழகுபடுத்தப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட,  
 இலட்சியக் காதல் வாழ்வைப் புனைந்து சொல்பவை 
 அவை.  
 எனினும் அவற்றில் கூறப்படும் உணர்வுகள் என்றும் இருக்கும் 
  
 மானிட உணர்வுகளே ஆதலால், எக்காலத்து 
 வாசகனும்  
 அவ்வுணர்வுகளோடு தன் உணர்வுகளை நெருக்கி வைத்துப் 
  
 பார்த்துக் கொள்ள முடிகிறது. இதுவே சங்க அக இலக்கியத்தின்  
 வெற்றி. 
   
 தலைப்புகள்  
  ஆறு பாடங்களாகப் பகுக்கப்பட்டுள்ள இத்தொகுதியில் 
 தெரிவு  
 செய்யப்பட்டுள்ள பாடல்கள் கீழ்வருமாறு :  
 பாடம் எண் 1: நற்றிணை - பாடல் எண்கள் : 1, 2, 3, 4, 6, 
 7, 9,  
 10, 13, 16. 
 பாடம் எண் 2: நற்றிணை - பாடல் எண்கள் : 21, 32, 45, 60, 65,  
 69, 70, 110,  
 149, 172. 
 பாடம் எண் 3: நற்றிணை - பாடல் எண்கள் : 242, 260, 284, 289,  
 294, 295,  
 330, 361, 364, 377. 
 பாடம் எண் 4: குறுந்தொகை - பாடல் எண்கள் : 2, 6, 8, 16, 18,  
 21, 23, 25, 27, 40, 49, 58, 85. 
 பாடம் எண் 5: குறுந்தொகை - பாடல் எண்கள் : 98, 123, 131, 147,  
 163, 167, 172, 176, 196, 202, 210, 220, 229. 
 பாடம் எண் 6: குறுந்தொகை - பாடல் எண்கள் : 238, 246, 271,  
 280, 283, 290, 292, 294, 305, 324, 354, 364, 387, 399. 
 ஒவ்வொரு பாடத்திலும் பாடல்களின் சிறப்புகளை மூன்று  
 தலைப்புகளில் காண இருக்கிறோம். 
 1. பாடல்களின் உள்ளடக்கம் 
  பாடல் காட்டும் நிகழ்வு, அந்நிகழ்வில் தோன்றும் 
 உணர்ச்சி,  
 கருத்து,     பாடல் வரிகளால்     அல்லாமல் 
 குறிப்பாகப்  
 புலப்படுத்தப்படும் எண்ணங்கள் ஆகியவை இத்தலைப்பில் 
  
 எடுத்துக்காட்டப்படும். 
 2. வெளிப்பாட்டு முறைகள்  
  ஒரு குறிப்பிட்ட கருத்தை, உணர்வை அல்லது 
 எண்ணத்தைக்  
 கவிதையாக்குவதற்குக் கவிஞன் பயன்படுத்தும் 
 உத்திகளே  
 வெளிப்பாட்டு முறைகள் எனப்படும். 
 இவற்றை நான்கு வகைகளாகப் பார்க்கலாம்.  
 அ) உள்ளுறை, இறைச்சி ஆகிய குறிப்புகள் 
 ஆ) தன்மை (இயல்பு) நவிற்சி 
 இ) பேச்சு முறை 
 ஈ) வரலாற்றுக் குறிப்பு 
 அ) பண்டைய இலக்கிய மரபே தெளிவான வெளிப்பாட்டு முறை 
  
 ஒன்றை வகுத்துத் தந்துள்ளது. காதல் 
     ஒழுக்கங்களை  
 (உரிப்பொருளை) இடம்,     காலம்     மற்றும் 
 இயற்கைப்  
 பின்னணிகளோடு பொருத்தமாக இணைத்துக் 
 கவிதையை  
 உருவாக்கல் என்பது, அக இலக்கியம் 
 அனைத்துக்கும்  
 பொதுவான உத்தி. வாழ்வும் இயற்கையும் இடைவெளியில்லாமல்  
 இணைந்து தோன்றுகின்றன. வருணனைகள் கொண்டும், 
  
 உவமைகள் கொண்டும், உள்ளுறை, இறைச்சி 
 போன்ற  
 குறிப்புணர்த்தல்கள் கொண்டும் இவ்விதமான 
 இணைப்பைச்  
 செய்கிறான் கவிஞன். 
   
 உள்ளுறை உவமம் 
  தாமரையை விட்டுப் பிரிந்த ஒரு 
 வண்டு, பல வண்டுகள்  
 மொய்த்த குவளையைத் தேடிச் சேரும் 
 என்பது ஒரு  
 பாடற்பொருள். இதில் மறைமுகமாகச் சொல்லப்பட்டிருப்பது 
  
 ‘தலைவியைப்பிரிந்த தலைவன் பரத்தையைச் 
 சேர்ந்தான்’  
 என்பதாகும்.இப்பொருளை நாமே ஊகித்தறிகிறோம். கவிதையில்  
 சொல்லப்பட்ட பொருள்,     ஊகித்தறியப்படும் 
 குறிப்புப்  
 பொருளுக்கு உவமைபோல அமைவதால் இது உள்ளுறை 
  
 உவமம் ஆகிறது. நிலத்தில் தோன்றும் கருப் பொருள்களைக் 
  
 (தெய்வம் நீங்கிய பொருள்கள்) கொண்டு உள்ளுறை 
 உவமம்  
 அமையும்.(உள்ளுறை - உள்ளே மறைந்திருப்பது) 
   
 இறைச்சி 
  இதுவும் கருப்பொருள் கொண்டு உணர்த்தப்படும் 
 குறிப்புப்  
 பொருளே. ஆனால் உவமைபோல முழுமையாகப் பொருத்திப்  
 பார்க்க முடியாது போகலாம். மேலும் வெளிப்படைப் பொருள், 
  
 குறிப்புப் பொருள் இரண்டையும் தாண்டிப் பின்னும் ஆராய்ந்து  
 காணும் ஒரு மூன்றாவது பொருளும் தெரியலாம். இது இறைச்சி  
 ஆகும். ‘மலையில் இரண்டு யானைகள் போரிட்டன. அதனால்  
 வேங்கைமரம் முறிந்து வீழ்ந்தது ; குறப்பெண்கள் மரம் ஏறாமல்  
 எளிதாக வேங்கைப் பூப் பறித்தனர்’ என்பது வெளிப்படைப் 
  
 பொருள். இதிலிருந்து குறிப்பாகப் பெறப்படும் 
 பொருள்  
 பெண்கேட்டு வந்த தலைவனின் பெற்றோருக்குத் தலைவியின் 
  
 பெற்றோர் உடன்படாததால் தலைவன் அவமானப்பட்டான் 
  
 (வேங்கைமரம் வீழ்தல்). அவ்வாறிருந்தும் தலைவிக்கு அருளே 
  
 புரிந்தான் (மலர்கொய்தல் எளிமையாதல்) என்பது. 
 இதனைத்  
 தாண்டித் தலைவி தலைவனுடன்     உடன்போக்கிற்கு 
 (பிறர்  
 அறியாமல் தலைவனுடன் சென்றுவிடல்) ஒப்புக்கொள்கிறாள்  
 என்பது மேலும் ஊகித்துணரக் கூடிய பொருள். (இறைச்சி -  
 உள்ளே செறிவாக அமைந்துள்ள மறைபொருள்) 
   
 பிற குறிப்புப் பொருள்கள்  
 அகப்பொருளில் பெரும்பாலும் எல்லாப் 
 பேச்சுக்களுமே  
 சொல்லுக்கு அப்பாற்பட்டு வேறு குறிப்புப் பொருள் தருபவையே.  
 அவற்றை அந்தந்தத் துறைகளில் நாம் காணலாம். 
 ஆ) சங்க இலக்கியத்தில் காட்டப்படும் 
 வாழ்வு நடப்பியலும்  
 புனைவும் கலந்தது என முன்பு கண்டோம். புலவர்கள் அதனை வெளிப்படுத்தும் 
 முறை வேறுபாடானது. சங்க இலக்கியத்தில்  
 நாம் காணும் தனிச்சிறப்பான வெளிப்பாடு, மிகையின்மை. 
  
 நிகழ்வுகளும் உணர்ச்சிகளும் பெரும்பாலும் உள்ளதை உள்ளபடி  
 கூறும் தன்மை நவிற்சியாகவே அமையும். 
 உணர்ச்சிகள்  
 அடக்கமாகவும் அதேநேரம் அழுத்தமாகவும் வெளிப்படும். 
  
 வெளிப்பாட்டில் அறிவுப்பாங்கு மேலோங்கித்தெரியும். 
 இ) சங்க அக இலக்கிய வெளியீட்டு 
 முறைகளில் மற்றொரு  
 சிறப்பியல்பு, பாடல்கள் அனைத்தும் தலைவன் தலைவி போன்ற  
 பாத்திரங்களின் பேச்சாக அமைந்திருப்பதாகும். 
 ஆசிரியர்  
 பேச்சோ குறுக்கீடோ இல்லை. ஒரு பாத்திரம் 
 பேசுகிறது;  
 வேறொரு பாத்திரம் கேட்கிறது; பதில் எதுவும் சொல்வதில்லை.  
 பேசுவது யார்,கேட்பது யார், என்பதை அறியப் பல சமயங்களில்  
 உரையாசிரியர் கொடுத்துள்ள துறை விளக்கம் தேவையாகிறது. 
  
 பேச்சைக் கொண்டே உணர்ச்சிகளையும், நிகழ்ச்சிகளையும் 
  
 காட்சிகளாக்கி, நம் மனத்திரையில் நிகழவிடும் 
 கவிஞனின்  
 கலைத்திறம் அற்புதமானது. ஒருவரோடு 
 ஒருவர் என்று  
 மட்டுமல்லாமல், அஃறிணைப் பொருள்களோடு பேசுவதாகவும்,  
 தன்னொடுதான் பேசுவதாகவும், கண்டகனவோடு பேசுவதாகவும்  
 கூடப் பேச்சு அமைகிறது. 
 ஈ) பரணர், மாமூலனார் போன்ற புலவர் சிலர் அகப் 
 பொருள்  
 பாடல்களில் உவமையாகவோ வருணனையாகவோ உண்மை  
 மனிதர்களையும் (அரசர்கள், வள்ளல்கள், வீரர்கள்) உண்மை 
  
 இடங்களையும் பெயர் குறிப்பிட்டு 
 இணைத்துப் பாடிப்  
 புதுவகையான ஒரு வெளியீட்டு முறையைக் கையாளுகின்றனர்.  
 கற்பனைக் காதல் நாடகத்தினிடையே உண்மை மனிதர்களை 
  
 ஊடாட விடுவது கற்பனையை உண்மை போலக் காட்டுகிறது.  
 3. வடிவம் 
  புறவடிவம், அகவடிவம் என இரண்டாக இதனைப் பகுக்கலாம். 
  
 புறவடிவம் யாப்பு, மொழி அடிப்படையில் 
 அமைவது.  
 நற்றிணையும் குறுந்தொகையும்      
 ஆசிரியப் பாவால்  
 அமைந்தவை. பாவகைகளுள் ஆசிரியப்பா நெகிழ்வான வடிவம்  
 கொண்டது ; எண்ணங்களைச் செறிவாகவும் சுருக்கமாகவும் 
  
 சொல்ல ஏற்றது ; இலக்கணக் கட்டுக்கோப்பு 
 குறைவு  
 என்பதனால் கவிஞன் தன் பொருளை முழு கவனத்தோடு 
  
 ஆழமாகச் சொல்ல முடியும். நற்றிணை, 
 குறுந்தொகைப்  
 பாடல்கள் அனைத்தும் இவ்வுண்மைக்குச் 
 சான்று.  
 குறுந்தொகையில் அடி எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் 
 (4 முதல் 8 அடிகள் வரை) வருணனைகள் குறைவாகவும் 
  
 சுருக்கமாகவும் அமைந்திருக்கின்றன; நற்றிணையில் 
 அடி  
 எண்ணிக்கை சற்றே அதிகம் என்பதனால் (9முதல்12 அடிவரை)  
 வருணனைகள் ஓரளவு அதிகமாக உள்ளன. 
 இவ்விரு  
 நூல்களுக்குமிடையே புறவடிவத்தில் உள்ள 
 வேறுபாடு  
 இதுவேயாகும்.அகவடிவம் என்பது உணர்வுகளை வெளிப்படுத்தி  
 முன்பின்னாக நிறுத்தும் முறையில் அமைவதாகும். இதனைப் 
  
 பாடல்கள் வரும்போது ஆங்காங்கே காணலாம். பாடல்களின்  
 தொடக்கம், முடிவு, இடையே தோன்றும் கருத்து - உணர்வு 
  
 மாற்றங்கள் ஆகிய இவையும் பாடலின் அகவடிவை முடிவு 
  
 செய்வன ஆகும். 
  |