1.2 வகைப்பாடு

பத்துப்பாட்டு நூல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை :

புற நூல்கள்
(ஆற்றுப்படை நூல்கள் 5 +
மதுரைக்காஞ்சி)

-

6

அக நூல்கள்

-

4

        

----
10
-----

1.2.1 ஆற்றுப்படை நூல்கள்

ஆற்றுப்படை     இலக்கியம் என்பது தமிழ் இலக்கிய வகைகளுள்
ஒன்று. ஆறு - வழி; படை - படுத்தல். எனவே, ஆற்றுப்படை
என்றால் வழிப்படுத்தல் அல்லது வழிகாட்டுதல் என்பது பொருள்.

ஆற்றுப்படை - விளக்கம்

பரிசு பெற்ற பாணர் முதலியோர் தாம் பெற்ற பெரும்
செல்வத்தைத் தம் இனத்தைச் சார்ந்தவர்க்குக் கூறித் தம்மைப்
போல் அவர்களும் பயன் பெற, தாம் பரிசுபெற்ற வள்ளல்
அல்லது அரசனிடம் வழிப்படுத்துவது ஆற்றுப்படை ஆகும்.

இதனைச் சற்று விரிவாகப் பின்வருமாறு கூறலாம்:-

வறுமையால் துன்பப்பட்ட ஒருவன் ஓர் அரசனிடம் அல்லது
வள்ளலிடம் சென்றான்; அவனைப் புகழ்ந்து பாடினான்; பரிசுகள் பல
பெற்றான்; தன் வீட்டிற்குத் திரும்பி வருகிறான்.

பரிசு பெற்ற அவன் திரும்பி வரும் பொழுது அவ்வழியில் துன்பம்
கொண்ட முகத்துடன் ஒருவன் எதிரே வருகிறான். அவனிடம்,
“துன்பமும் வாடிய முகமும் உடையவனே! உனது துன்பத்தைத்
தீர்க்கும் ஒருவன் உள்ளான். அவன் இன்ன பெயரை உடையவன்
(அரசன் அல்லது வள்ளல் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுவான்).
அவன் இன்ன ஊரில் இருக்கிறான். அவ்வூருக்குச் செல்லும் வழி
இது. நீ அவனிடம் இவ்வழியாகச் செல்வாயாக. மிகுதியான
பொருளைப் பெற்றுத் துன்பம் நீங்கி வாழ்வாயாக” என்று துன்பம்
தீரும் வழிகளைக் கூறி அவனை அனுப்பி வைப்பான்.

இவ்வாறு பரிசு பெற்ற ஒருவன் பரிசு பெற விரும்பிச் செல்லும்
ஒருவனுக்கு, ஓர் அரசன் அல்லது வள்ளலைப் பற்றியும் அவன்
ஊருக்குச் செல்லும் வழிகளைப் பற்றியும் கூறுவான்.

இவ்வகை     அமைப்பில் பாடல்கள் இருக்கும். இம் மரபிற்கு
ஆற்றுப்படை என்பது பெயர். பத்துப்பாட்டுத் தொகுப்பில் உள்ள
ஆற்றுப்படை நூல்கள்:

திருமுருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

கூத்தராற்றுப்படை அல்லது மலைபடுகடாம்

திருமுருகாற்றுப்படை

இந்நூலின் பாட்டுடைத் தலைவன் (பாடப் பெறுபவன்) முருகக்
கடவுள். இக்கடவுள் இருக்கின்ற இடங்கள், வழிபடும் முறைகள்
ஆகியவற்றைக் கூறி முருகக் கடவுளின் அருளைப் பெறுவதற்கான
வழிகள் இப்பாட்டில் கூறப்பட்டுள்ளன.

எனவே, அரசன் அல்லது வள்ளலிடம் பொருள்களைப்
பெறுவதற்கு உரிய வழிகளைக் (ஆறுகளை) கூறுவது போல, முருகக்
கடவுளின் அருளைப் பெறுவதற்கு உரிய வழிகளை இப்பாடல்
கூறுவதால், இதற்குத் திருமுருகாற்றுப்படை என்னும் பெயர்
வழங்கலாயிற்று. இந்நூலுக்குப் புலவராற்றுப்படை என்னும் பெயரும்
உண்டு.

பொருநராற்றுப்படை

இந்நூலின் பாட்டுடைத் தலைவன் கரிகால் பெருவளத்தான்.

பொருநர் என்றால் புகழ்ந்து பாடுவோர் என்று பொருள். இவர்கள்
ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர்
என்று மூவகையினர். பொருநராற்றுப்படையில் போர்க்களம் பாடுவோர்
குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கரிகால் பெருவளத்தான் என்னும் அரசனிடம் பொருநன் ஒருவன்
பரிசு பெற்று வந்தான். அவன், தன் எதிரில் வந்த வேறு ஒரு
பொருநனிடம் கரிகால் பெருவளத்தானிடம் சென்று பரிசு பெறும்
வகையில் வழிப்படுத்தியதாக இந்நூல் அமைந்துள்ளது.

ஒரு பொருநன் வேறொரு பொருநனை ஆற்றுப்படுத்தியதால்
இந்நூல் பொருநராற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.

சிறுபாணாற்றுப்படை

இந்நூல் பற்றிய செய்திகளை இப்பாடத்தில் 1.3 என்ற பகுதியில்
காணலாம்.

பெரும்பாணாற்றுப்படை

இந்நூலின் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
இவன் ஓர் அரசன்.

இவனிடம் பரிசு பெற்று வந்த ஒரு பெரும்பாணன், அவன் எதிரில்
வந்த வேறு ஒரு பெரும்பாணனை அம்மன்னனிடம் சென்று பரிசு
பெறும் வகையில் வழிகாட்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

ஒரு பெரும்பாணன் வேறொரு பெரும்பாணனை
ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் பெரும்பாணாற்றுப்படை என்னும்
பெயர் பெற்றது.

கூத்தராற்றுப்படை

இந்நூலின் பாட்டுடைத் தலைவன் நன்னன் சேய் நன்னன்.
இந்நூலுக்கு மலைபடுகடாம் என்னும் பெயரும் உண்டு.

மலையில் அருவிநீர் விழுகின்ற பொழுது இனிய ஓசை ஏற்படும்.
இவ்வோசையைக் கடாம் என்று சிறப்பித்துக் கூறுவதால்
மலைபடுகடாம் என்னும் பெயர் வழங்கலாயிற்று என்று கூறுவர்.

சிலர், யானையை மலையாகவும், அதன் மத நீரை அருவியாகவும்
கற்பனை செய்து புலவர் பாடியமையால் மலைபடுகடாம் என்னும்
பெயர் வழங்கலாயிற்று என்று கூறுவர்.

நன்னன் என்ற மன்னனிடம் பரிசு பெற்று வந்த கூத்தன் ஒருவன்,
தன் எதிரில் வந்த வேறு ஒரு கூத்தனை அம் மன்னனிடம் சென்று
பரிசு பெறும் வகையில் வழிப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.

ஒரு கூத்தன் வேறொரு கூத்தனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல்
கூத்தராற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.

1.2.2 மதுரைக்காஞ்சி

பத்துப்பாட்டில் இடம் பெற்றுள்ள மற்றொரு புற நூல் உளது,
அது
மதுரைக்காஞ்சி.

இந்நூலுக்குக் கூடல் தமிழ் என்னும் பெயரும் உண்டு. இந்நூலின்
பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.

உலகில் உள்ள அனைத்தும் நிலை இல்லாதவை. காஞ்சி என்றால்
நிலையாமையை     வலியுறுத்துவது.     பாண்டிய     அரசன்
நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை எடுத்துக் கூறி அவனை
நல்வழிப் படுத்தும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

1.2.3 அக நூல்கள்

பத்துப்பாட்டில் நான்கு நூல்கள் அகப்பொருள் செய்திகளைக்
கூறுகின்றன. அகப்பொருள் என்பது தலைவன் - தலைவி (காதலன்
- காதலி; கணவன் - மனைவி) இவர்களது அக வாழ்க்கைச்
செய்திகளைக் கூறுவது ஆகும். அகப்பொருள் கூறும் நூல்களாவன:

முல்லைப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு

நெடுநல்வாடை

பட்டினப்பாலை

அக இலக்கிய நூல்களில் பாட்டுடைத் தலைவனின் (பாடப்படும்
தலைவனின்) பெயர் கூறுவது வழக்கம் இல்லை.

முல்லைப்பாட்டு

தமிழில் அன்பின் அகத்திணைகள் ஐந்து. அவை :

குறிஞ்சி

முல்லை

மருதம்

நெய்தல்

பாலை

இவற்றுள் முல்லைத் திணைக்கு உரிய அகப்பொருள் மரபுகளைப்
(கொள்கைகளை) பின்பற்றி எழுதப்பட்ட நூல் முல்லைப்பாட்டு
ஆகும்.

குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சித் திணைக்கு உரிய அகப்பொருள் மரபுகளைப் பின்பற்றி
எழுதப்பட்ட நூல் குறிஞ்சிப்பாட்டு ஆகும்.

நெடுநல்வாடை


அதாவது, தலைவனைப் பிரிந்த தலைவிக்கும் தலைவியைப்
பிரிந்த தலைவனுக்கும் பிரிவினால் துன்பம் ஏற்படும் ; இத்துன்பம்
கார்காலத்தில் வீசும் வாடைக்காற்றால் மிகுதிப்படும்.

இந்த வாடைக்காற்று, தலைவனைப் பிரிந்தமையால் தலைவிக்கு
நீண்ட (நெடிய) வாடையாக உள்ளது. போரில் வெற்றி பெற்ற
தலைவனுக்கு நல்ல வாடையாக உள்ளது. இவ்வாடைக்காற்றினால்
ஏற்படும் துன்பம் பற்றிக் கூறும் இந்நூல் நெடுநல்வாடை என்னும்
பெயர் பெற்றது. இந்நூல் அகப்பொருள் மரபுகளை மீறி
அமைந்துள்ளதாகக் கூறி, சிலர் இதனைப் புறநூல் என்பர் (புற நூல்
= புறப்பொருள் அடிப்படையில் அமைந்த நூல்).

பட்டினப்பாலை

பட்டினத்தைச் (காவிரிப்பூம்பட்டினம்) சிறப்பித்துக் கூறுவதால்
இந்நூல் பட்டினப்பாலை என்னும் பெயர் பெற்றது. இதற்கு வஞ்சி
நெடும்பாட்டு
என்னும் வேறு பெயரும் உண்டு.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.

பத்துப்பாட்டு என்பதை விளக்குக.

விடை

2.

ஆற்றுப்படை நூல்கள் எத்தனை?

விடை

3.

திருமுருகாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

விடை

4.

கூத்தராற்றுப்படையின் வேறு பெயர் யாது?

விடை

5.

பத்துப்பாட்டு நூல்களை எவ்வகையில் பிரித்துக்
காணலாம்?

விடை