1.3 சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை பத்துப்பாட்டுள் மூன்றாவது நூலாக
இடம் பெற்றுள்ளது. இஃது ஆசிரியப்பாவால் ஆனது. 269 அடிகளைக்
கொண்டது. பழம் பெரும் உரையாசிரியர் நச்சினார்க்கினியர்
இந்நூலுக்கு உரை எழுதி உள்ளார். பிற்காலத்தில் பெருமழைப்
புலவர் பொ.வே.சோமசுந்தரனாரும் வேறு சிலரும் இந்நூலுக்கு
உரை எழுதி உள்ளனர்.

1.3.1 பெயர்ப் பொருத்தம்

குழல், யாழ் முதலான இனிமையான இசை தரும் கருவிகளை
இசைப்பதில் (வாசிப்பதில்) திறம் பெற்றவர்களைப் பாணர் என்பர்.

மிடற்று வழியாக (குரல் வழியாக-வாய் வழியே) இன்னிசையை
இசைப்பவர் (பாடுபவர்) இசைப்பாணர் ஆவர்.

யாழ் என்னும் இசைக்கருவியை இசைப்பதில் திறம் பெற்றவர்களை
யாழ்ப்பாணர் என்பர்.

யாழ்ப்பாணர்களுள் பெரிய யாழை இசைப்பவர் பெரும்பாணர்,
சிறிய யாழை இசைப்பவர் சிறுபாணர்.

நல்லியக்கோடன் என்பவன் ஒரு சிற்றரசன். இவனைப் புகழ்ந்து
பாடிய சிறுபாணன் ஒருவன் பரிசு பெற்று வருகிறான். இவன், தன்
எதிரில் வந்த வேறு ஒரு சிறுபாணனை இம்மன்னனிடம் சென்று பரிசு
பெறும் வகையில் நெறிப் படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.

ஒரு சிறுபாணன் வேறு ஒரு சிறுபாணனை ஆற்றுப்படுத்தியதால்
இந்நூல் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.

1.3.2 பாடியவரும் பாடப்பட்டோரும்

சிறுபாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய புலவர் பற்றித்
தெரிய வரும் செய்திகளும் பாடப்பட்டவர்கள் பற்றிய செய்திகளும்
கீழே கூறப்பட்டுள்ளன.

பாடியவர்

சிறுபாணாற்றுப்படையைப் பாடியவர் இடைக்கழி நாட்டு
நல்லூர்
நத்தத்தனார். இப் பெயரில் மூன்று செய்திகள் அடங்கி
உள்ளன. அவை:

1)

நத்தத்தனார்
-
இது புலவரின் இயற்பெயர். சிலர், தத்தனார்
என்பதே இயற்பெயர்      என்பர்.
சான்றோர்களின்     பெயர்களுக்கு
முன்னால் 'ந' சேர்ப்பது பழங்கால மரபு
என்பதால் ந + தத்தனார் என்பது
நத்தத்தனார் என்று இலக்கண முறைப்படி
வந்தது என்று கூறுவர்.

2)

நல்லூர்
-
இஃது அவர் பிறந்த ஊர்.

3)

இடைக்கழி நாடு - நல்லூர் என்னும் ஊர் இருந்த நாடு இஃது
என்றும், சென்னைக்குத் தென் மேற்கில்
மதுராந்தகத்துக்கு அருகில் எடக்கு நாடு
என்னும் பெயரில் இன்றும் உள்ளது என்றும்
கூறுவர்.

1.3.3 பாடப்பட்டோர்

சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்    நல்லியக்
கோடன். இவன் ஓய்மா நாட்டை ஆண்ட ஒரு சிற்றரசன். எனவே,
இவன் ஓய்மா நாட்டு நல்லியக் கோடன் என்று சிறப்பித்துக்
கூறப்பட்டான்.

ஓய்மா நாடு என்பது இப்பொழுதைய திண்டிவனத்தை ஒட்டி
உள்ள பகுதி. இந்நாட்டின் தலைநகர் கிடங்கில் என்னும் ஊர்.