4.4 தலைநகர்ச் சிறப்பு

எயிற்பட்டினம்,     வேலூர், ஆமூர் ஆகிய நகரங்களைக் கடந்து
சென்றால்     நல்லியக்கோடனின்     தலைநகரமான கிடங்கிலை
அடையலாம். ஆமூருக்கு மிக அருகில்தான் கிடங்கில் உள்ளது.
ஆங்கே விழாக்கள் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

இதன்     காரணமாக இவ்வூர் முழுவதும் புழுதி பறந்து புகை
மூட்டமாக இருக்கும். வீரம் செறிந்த யானைகளின் மதநீர் அருவி
போல ஓடுவதால் ஓயாத விழாக்களால் ஏற்பட்ட புழுதி அடங்கிப்
போகும்.

இந்த யானைகளைப் பற்றி, நத்தத்தனார் கூறுவதைப் பாருங்கள்:
போர்க்களத்தில் தான் கொன்ற பிணங்களைக் காலால் இடறுவதால்
இரத்தம் தோய்ந்து சிவந்து தோன்றும் கால்களை உடையனவாக இந்த
யானைகள் நிற்கும். யானைகளின் கால் நகங்கள் எவ்வாறு இருந்தன
என்பதற்கு ஓர் உவமை காட்டுகிறார் புலவர். தீப்பிழம்பு சாய்ந்தது
போன்ற நாக்கு, விளங்கும் பற்கள், வெள்ளாட்டுக் குட்டிகளை
அணிகலனாக அணிந்துள்ள செவி, பிளவுபட்ட அடி ஆகியவற்றை
உடைய பெண் பேய் நிணம் தின்று சிரித்தபோது தெரிந்த பற்களைப்
போன்று அவை குருதி தோய்ந்து இருந்தனவாம்.

இத்தகு விழாக்கோலம் நிறைந்தது நல்லியக்கோடனின் தலைநகரம்.
இச்செய்திகளை 196 முதல் 202 வரையிலான அடிகள் கூறுகின்றன.