| எடுத்துக்காட்டு:
 
 
  
            
              
                 
                  | புறம்தந்து இருள்இரியப் பொன்நேமி 
                    உய்த்துச் சிறந்த ஒளிவளர்க்கும் தேரோன் - மறைந்தான்
 புறஆழி சூழ்ந்த புவனத்தே தோன்றி
 இறவாது வாழ்கின்றார் யார்?
 
 |  
 (நேமி = சக்கரத்தை 
            உடைய தேர்;உய்த்து = செலுத்தி; ஆழி 
            = கடல்)
 இப்பாடலின் பொருள் :
 
 உலகைக் காத்து, இருளை ஓடச்செய்து அழகிய சக்கரத்தைச் 
            செலுத்திச் சிறந்த ஒளியைப் பரப்பும் தேரை உடையவனாகிய கதிரவன் மறைந்தான். 
            புறத்தே கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பிறந்து இறவாமல் வாழ்பவர் யார்?
      இப்பாடல் 'இருளை ஓடச்செய்து ஒளிபரப்பிய கதிரவன் 
            மறைந்தான்' என்பது கவிஞர் சொல்லக் கருதிய சிறப்புப் பொருள் 'கடல் சூழ்ந்த 
            உலகில் பிறந்து, இறவாமல் வாழ்வோர் யார்? என்பது அச்சிறப்புப் பொருளை 
            முடிப்பதற்காகக் கூறிய உலகறிந்த பொதுப்பொருள். பொதுப் பொருள் கொண்டு 
            சிறப்புப்     பொருள்     விளக்கப்பட்டமையால் 
                இது வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆயிற்று. பிறந்தவர் 
            இறத்தல் என்பது உலகம் முழுவதிற்கும் பொருந்திய பொதுப்பண்பு ஆதலின் இப்பாடல் 
            முழுவதும் சேறல் என்னும் வகை ஆயிற்று.      பாடலில் கூறப்படும் பொதுப்பொருள் உலகில் உள்ள 
            பொருள்கள் முழுவதிற்கும் உரியதாகாது, ஒரு பகுதிக்கு அல்லது சிலவற்றிற்கு 
            மட்டுமே உரியதாக அமைவது ஒருவழிச் சேறல் எனப்படும்.
 எடுத்துக்காட்டு:
  
            
              
                 
                  | எண்ணும் பயன்தூக்காது, 
                    யார்க்கும் வரையாது மண்உலகில் வாமன் அருள்வளர்க்கும்; -
 
 தண்நறுந்தேன்பூத்துஅளிக்கும் தாராய்! புகழாளர்க்கு எவ்வுயிரும் காத்துஅளிக்கை அன்றோ கடன்?
 
 
 (வரையாது 
                      - அளவில்லாமல்; வாமன் - திருமால்) |  இப்பாடலின் பொருள் :
 
 குளிர்ந்த நல்ல தேனை மலர்ந்து கொடுக்கின்ற மாலையை அணிந்தவனே! கைம்மாறு 
            கருதாமல், யாவர்க்கும் வரையறை இல்லாமல், இவ்வுலகில் திருமால் (வாமன்) 
            கருணையை மிகுதியாகச் செய்தருள்கின்றான். புகழை உடையவர்களுக்கு எல்லா 
            உயிர்களையும் பாதுகாத்து அருள் செய்வது கடமை அன்றோ?
      இப்பாடலில், 'திருமால் யாவர்க்கும் கைம்மாறு 
            கருதாமல் கருணை செய்கின்றான்' என்பது கவிஞர் சொல்லக் கருதிய சிறப்புப் 
            பொருள் ஆகும். எல்லா உயிர்களையும் பாதுகாத்து அருள் செய்வது புகழ் உடையவர்களுக்குக் 
            கடமை அன்றோ? என்பது, அச்சிறப்புப் பொருளை முடிப்பதற்குக் கூறிய உலகறிந்த 
            பொதுப் பொருள் ஆகும். இவ்வாறு சிறப்புப்பொருளைப் பொதுப் பொருள் கொண்டு 
            முடித்துக் கூறியமையால் இப்பாடல் வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆயிற்று. 
            பொதுப் பொருள் உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் பொருந்தாமல், 'புகழாளர்' 
            என்னும் ஒரு பகுதிக்கு மட்டுமே பொருந்துவதால் இப்பாடல், 'ஒருவழிச் சேறல்' 
            என்னும் வகை ஆயிற்று. |