1.3
சிறுகதை வரையறை
கதை ஆசிரியனின் சிந்தனையில்
பிறந்து, வாசகர்களின்
சிந்தனையில் நிறைவு பெறுவது சிறுகதையாகும். சிறுகதைக்கு, அது
பேசக்கூடிய பொருளும் கால எல்லையும், ஒருமைப்பாடு்ம்
மிக முக்கியம். சிறுகதையின் பொருள்
காலத்திற்குக் காலம், எழுத்தாளருக்கு
எழுத்தாளர் மாறுபடலாம். ஆனாலும் அவை
சமுதாயத்தை நுவல் பொருளாகக் கொண்டவை என்று பொதுமைப்
படுத்திவிட முடியும்
1.3.1
சிறுகதைப் பொருள்
சிறுகதை
ஆசிரியர்கள் தாம் கண்டு கேட்டது மட்டுமன்றிக்
காணாததையும் கற்பனையில் கண்டு, தங்கத்துக்குச் செம்பு சேர்ப்பது
போல் சேர்த்து மெருகூட்டுகிறார்கள். பெரும்பாலும் இலக்கியங்கள்
சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியே. சிறுகதைகளும் இதற்கு
விதி விலக்கல்ல. ஆசிரியர் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளைக்
கூர்ந்து கவனித்து அவற்றைக் கதைப்படுத்துகிறார். சிறுகதைகளில்
பேசப்படும் கருப்பொருளை,
தனிமனிதச் சிக்கல்
குடும்பச் சிக்கல்
சமூகச் சிக்கல்
பொருளாதாரச் சிக்கல்
நாட்டு விடுதலை
என்று வகைப்படுத்தலாம். இவற்றைச்
சில தமிழ்ச் சிறுகதைகளின்
துணைகொண்டு விளக்கமாகக் காணலாம்.
தனிமனிதச்
சிக்கல்
தனிமனிதச்
சிக்கலை அடிப்படையாகக் கொண்ட கதைகளில், தனிமனிதனின் அக மனப்
போராட்டம் முதன்மைப்
படுத்தப்படுகின்றது. அகிலனின் பூச்சாண்டி,
கு.ப.ரா வின்
விடியுமா?, கா.நா.சு வின்
மனோதத்துவம்,
லட்சுமியின்
பரீட்சைக் காட்சிகள், புதுமைப் பித்தனின்
மனநிழல், நீல பத்மநாபனின்
திரிபுவன புரம் போன்றவை இத்தன்மையன.
நாரண
துரைக்கண்ணனின் சந்தேகம்
என்ற கதையில், மனைவி அஞ்சுகத்தின்
தூய அன்புள்ளத்தைப் புரிந்து
கொள்ளாமல், கணவன் குருநாதப் பிள்ளை அர்த்தமற்ற சந்தேகம்
கொண்டு மன உளைச்சலில் அவதிப்படுகிறார். இது தனிமனிதச்
சிக்கலைக் காட்டும் அருமையான கதையாகும்.
குடும்பச் சிக்கல்
குடும்ப
வாழ்க்கையில், கணவன் மனைவிக்கு இடையேயும்,
சகோதர சகோதரிக்கிடையேயும், மாமியார் மருமகளுக்கு
இடையேயும், நாத்தனார் அண்ணிக்கு இடையேயும்
ஏற்படும்
பிரச்சினைகளைப் பேசுகின்றன பல கதைகள்.
இத்தகைய
குடும்பக் கதைகளைத் திறம்பட எழுதுவதில் பெண் எழுத்தாளர்கள்
முன்னணி வகிக்கின்றனர். கல்யாணியின்
இளமை,
ஷ்யாமளாவின் பரிவும் பிரிவும்,
ஆர். சூடாமணியின்
தொடர்ச்சி, எஸ்.
ரெங்கநாயகியின் சூரிய அடுப்பு, அகிலனின்
நினைப்பு, ஜெயகாந்தனின்
பிணக்கு, ந.
பிச்சமூர்த்தியின்
ஒருநாள், கு.ப.ரா.வின்
புரியும் கதை
ஆகியவை குடும்பச்
சிக்கல்களைப் பேசும் கதைகளாகும்.
சமூகச் சிக்கல்
குழந்தை
மணம், விதவைக் கொடுமை, பொருந்தா மணம், வரதட்சணைக்
கொடுமை, ஜாதிக் கொடுமை, தீண்டாமை, மூட
நம்பிக்கைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட பல
சமூகக்
கதைகள் தோற்றம் பெற்றன. புதுமைப்பித்தன் ஆண்மை
என்ற கதையில் குழந்தை மணத்தின்
கொடுமையைக் கேலியாகச்
சித்திரித்துள்ளார்.
“ஸ்ரீனிவாசனுக்குக் கலியாணம் ஆனது நினைவில்
இல்லை. ஏனென்றால் அது பெப்பர்மிண்ட் கலியாணம்.
ஸ்ரீனிவாசனி்ன் பெற்றோர்கள் பெரியவர்களாகியும்,
குழந்தைப் பருவம் நீங்காது பொம்மைக் கலியாணம்
செய்ய ஆசைப்பட்டார்கள். வெறும் மரப்பொம்மையை
விட, தங்கள் நாலுவயதுக் குழந்தை சீமாச்சு மேல்
என்று பட்டது. பிறகு என்ன? பெண் கிடைக்காமலா
போய்விடும்? ஆத்தூர்ப் பண்ணை ஐயர் மகள்
ருக்மணிக்கு இரண்டு வயது. கலியாணம் ஏக
தடபுடல். பெற்றோர் மடியிலிருந்தபடியே ஸ்ரீமான்
ஸ்ரீனிவாசனுக்கும் ருக்மணி அம்மாளுக்கும்
திருமணம் நடந்தது.” |
என்று கதைக் காட்சி விரியும்.
இளம்
விதவைகளுக்கு நிகழும் கொடுமைகளைப் பற்றிப்
புதுமைப்பித்தனின் வாடாமல்லிகை, வழி,
கு.ப.ரா.வின் உயிரின் அழைப்பு,
தி.ஜ.ர.வின் ராஜத்தின் கூந்தல், அகிலனின்
சாந்தி,
பி.எஸ்
. ராமையாவின் மலரும்
மணமும் ஆகிய கதைகள் பேசுகின்றன.
சாவு
என்ற கதையில் விதவை ஜக்கம்மாவிற்குச் செய்யும்
மூடச் சடங்குகளைக் கி.ராஜநாராயணன் கீழ்வருமாறு விவரிக்கின்றார்.
‘பதினோராவது நாள் சர்வ அலங்காரங்களும்
பண்ணி ஜக்கம்மாவை வீட்டினுள்ளிருந்து
முற்றத்துக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.
தரையில் வட்டமான பெரிய சொளகு. அதன்
மேல் குவிக்கப்பட்டுள்ள கம்மம்புல் அம்பாரம்.
அதன்மேல் எருமைத் தோலினால் முறுக்கப்பட்ட
உழவு வடங்கள் இரண்டு வைத்திருக்கிறது.
அதன் மேல் ஜக்கம்மாவை ஏற்றி நிற்க
வைக்கிறார்கள். கைகள் நிறையப் புது
வளையல்கள். மஞ்சள் பூசிக் கழுவிய முகத்தின்
நெற்றியில் துலாம்பரமாகத் தெரியும் சிவப்புக்
குங்குமம். கண்களிலிருந்து மாலை மாலையாய்க்
கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது.
அவளை எவ்வளவு அழகுபடுத்த முடியுமோ அவ்வளவும்
செய்திருக்கிறார்கள். இது அவளுடைய சுமங்கலியின்
கடைசிக் கோலம். விடை பெற்றுப் போகச்
சுமங்கலியின் அதிதேவதையே வந்து நிற்கிறாள்” |
இத்தகைய
வர்ணனைகள் மூலம், விதவைகளுக்கு மறுவாழ்வு தேவை என்பதை
மறைமுகமாக வற்புறுத்துகின்றனர் கதை
ஆசிரியர்கள்.
சி.சு.செல்லப்பாவின்
மஞ்சள் காணி,
தேவனின் சுந்தரம்மாவின்
ஆவி போன்ற கதைகள்
வரதட்சணைப்
பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு
எழுதப்பட்ட
கதைகளாகும்.
வயது
கடந்த முதியவர்கள் இளம்பெண்களை மணந்து
கொள்ளும் வழக்கம் 20ஆம் நூற்றாண்டில்
ஐம்பதுகள் வரை
சர்வ சாதாரணமாக இருந்து வந்துள்ளது.
இப்பிரச்சினையை
அடிப்படையாக வைத்துக் கல்கி சர்மாவின் புனர்விவாகம்,
ஜெயகாந்தன் பேதைப்
பருவம், கு.ப.ரா
எவன்
பிறக்கின்றானோ, புதுமைப்பித்தன் கல்யாணி, இராதா
மணாளன்
மண்ணாய்ப்போகவே என்ற கதைகளை
எழுதியுள்ளனர்.
“மீசை நரைத்த கிழவன் ஒருவனுடைய கரத்தை
மணக்கோலத்துடன் மனைவியாக நின்று கைப்பற்றி
வழிநடந்து கொண்டிருந்தாள் அந்தப் பேதைச் சிறுமி.
அவள் புதுப்புடவை கட்டியிருக்கிறாள்........
இல்லை ; அந்தச் சிறுமியைப் புடவையில்
சுருட்டி வைத்திருக்கிறார்கள்”. |
என்று, பொருந்தா மணத்தின் கொடுமையை ஜெயகாந்தன்
பேதைப் பருவம் என்ற
கதையில் உணர்ச்சியோடு
எடுத்துரைத்துள்ளார்.
மூடநம்பிக்கைகள்,
அறியாமை இவற்றினால் ஏற்படும்
சீர்கேடுகளை ரா.கி. ரங்கராஜனின் கன்னி,
கு.அழகிரிசாமியின்
அக்கினிக் கவசம், ந. பிச்சமூர்த்தியின்
வேப்பமரம், கோ.வி.
மணிசேகரனின் ரேகை,
ஜெயகாந்தனின் அபாயம், அகிலனின்
சரசியின் ஜாதகம், அண்ணாதுரையின்
பலாபலன் ஆகிய
கதைகள் பேசுகின்றன.
ஜாதிக்
கொடுமையைப் பற்றிச் சிற்பியின் கோவில்
பூனை,
புதுமைப்பித்தனின் புதிய நந்தன்,
அகிலனின் மயானத்து
நிலவில், ராஜாஜியின் அறியாக்
குழந்தை ஆகிய கதைகள் பேசுகின்றன.
பொருளாதாரச் சிக்கல்
இன்றைய
சமுதாய வாழ்வில் அன்றாடப் பிரச்சினைகளாக
உள்ள பொருளாதாரப் போராட்டத்தையும்,
வறுமையையும்,
பற்றாக்குறையையும் அதனால் மக்கள் படும் அவதியையும் பல
கதைகள் பேசுகின்றன. அகிலனின் பசி,
கோயில்விளக்கு,
ஏழைப் பிள்ளையார், வ.சுப்ரமணியத்தின்
எச்சில்,
ஆர். சூடாமணியின் மறுபுறம்,
ஜெயகாந்தனின் ஒருபிடிசோறு,
புதுமைப் பித்தனின் தனி ஒருவனுக்கு,
எம்.ஏ. அப்பாஸின் கஞ்சி முதலிய
கதைகள் வறுமையின் கொடுமையைப் படம் பிடித்துள்ளன. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக்
கதைப்படுத்துவதில் விந்தன்
திறமையானவர். அவருக்குப் பின் ஜெயகாந்தன் பொருளாதாரச்
சிக்கலை அதிகம் கதைப்படுத்தியுள்ளார்.
இந்திய நாட்டு
விடுதலை
நாற்பது,
ஐம்பதுகளில் நாட்டு விடுதலைப் போராட்டத்தை
அடிப்படையாக வைத்துப் பலர் கதை எழுதியுள்ளனர்.
கள்ளுக்
கடை மறியல், அந்நியத் துணி பகிஷ்காரம், உப்புச் சத்தியாகிரகம்,
‘வெள்ளையனே வெளியேறு’ போன்ற
போராட்டங்களை
அடிப்படையாக வைத்து வை.மு. கோதை நாயகி
அம்மாள்,
அகிலன், நா.பார்த்த சாரதி, ராஜம் கிருஷ்ணன் போன்றவர்கள்
சிறு
கதைகள் எழுதியுள்ளனர்.
நவீன
காலத்தில் அறிவியல்
கருத்துகளையும்,
பாலியல் வன்முறை, பெண்களைத் துன்புறுத்தல் (EveTeasing),
கருக்கொலை, பெண்சிசுக் கொலை, தண்ணீர்ப்
பிரச்சினை
என்ற தற்போதைய பிரச்சினைகளையும் அடிப்படையாகக் கொண்டு
சிறு கதைகள் எழுதப்படுகின்றன.
1.3.2
கால எல்லை
“சிறுகதைக்குக்
கால எல்லை இல்லை. ஒருவனுடைய
பிறப்பு முதல் இறப்பு வரையில் சிறுகதையின் காலமாக
இருக்க
முடியும் ; அல்லது ஒருவன் வாழ்க்கையில்
ஒருநாளில், ஒரு
மணியில், ஒரு சில வினாடிகளில் நடக்கும்
மன ஓட்டத்தில் கூடக் கதை எழுதப்படலாம்” என்கிறார்
பி.எம். கண்ணன். கதை
நடக்கும் காலத்தையும் இடத்தையும் தொடக்கத்திலே
கூற
வேண்டுமென்ற தேவையில்லை. கதையைக் கூறிச்
செல்லும்
போது, இடையிடையே காலத்தையும் இடத்தையும்
பற்றிய
குறிப்புகளைக் கொடுக்கலாம். சிறுகதையில் கால
வர்ணனை ஓரிரு தொடர்களில் குறிப்பாக அமைய
வேண்டுமே தவிர
விரிவாக இருத்தல் கூடாது. புராணக் காலம், சரித்திரக்
காலம் இவற்றைக் கூடச் சிறுகதைக்குள் கொண்டுவர முடியும்.
1.3.3
ஒருமைப்பாடு
சிறுகதைகள், முழுக்க
முழுக்க ஒருமுகப்பட்ட தன்மையோடு
இயங்கி முற்றுப் பெறுதல் வேண்டும். கதையின் தொடக்கத்தில்
எந்த உணர்வு காட்டப் படுகிறதோ அதே உணர்வு இடையிலும்
முடிவிலும் வளர்ந்து முற்றுப் பெற வேண்டும். இதை
உணர்ச்சி
விளைவின் ஒருமைப்பாடு (Unity
of Impression) என்று
குறிப்பிடுவார்கள் திறனாய்வாளர்கள். அடுத்ததாக,
சிறுகதையை
ஆசிரியர் படைத்ததன் நோக்கம் ஒருமுகப்பட்டதாக இருத்தல்
வேண்டும். வாசகர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் சிறிதும்
சிதறடிக்காமல், குறிப்பிட்ட இலக்கை நோக்கிக் கதை
சென்று
முடிதல் வேண்டும்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I
|
1.
|
எல்லரி
செட்ஜ்விக் என்ற அறிஞர் சிறுகதைக்குத்
தரும் விளக்கம் யாது? |
விடை |
2.
|
புகழ்பெற்ற
மேலை நாட்டுச் சிறுகதை ஆசிரியர்
சிலரின் பெயரைக் குறிப்பிடுக. |
விடை |
3.
|
சிறுகதைக்கும்
நாவலுக்கும் உள்ள அடிப்படை
ஒற்றுமை என்ன? |
விடை |
4.
|
சிறுகதைக்கும்
நாவலுக்கும் உள்ள வேறுபாடு்கள்
இரண்டைக் குறிப்பிடுக. |
விடை |
5.
|
சிறுகதைகள்
எவற்றைப் பொருளாக / கருவாகக்
கொண்டு எழுதப்படுகின்றன? |
விடை |
|