1.3 இடைக்கால உரைநடை
 

கி.பி.10ஆம் நூற்றாண்டு முதல் உரையாசிரியர்களின் உரைகள்
தொடர்ந்து வெளிவரலாயின. தமிழ்உரைநடை உரைகளால் சிறப்பாக
வளர்ச்சியுற்றது. உரைநடை தெளிவாகவும் தருக்கமுறையாகவும் வளரக்
கூடிய வகையில் செய்யுள் வடிவிலானவற்றுக்கு உரை எழுதி விளக்கும்
சூழல் உருவானது. இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர்,
சேனாவரையர், அடியார்க்கு நல்லார் முதலான உரையாசிரியர்கள்
உரைநடையை வளர்த்தனர்.


1.3.1 உரையாசிரியர்களின் உரைப் பணி

 

சங்க     காலத்தில் தமிழைக் காக்கும் பொறுப்பை மன்னர்கள்
பெற்றிருந்தனர். பின் பல்லவர் காலத்தில் ஆழ்வார்களும்
நாயன்மார்களும் தமிழ்ப்பணியை மேற்கொண்டனர். பிற்காலச் சோழர்
காலத்தில்தான் பல உரையாசிரியர்கள் தோன்றித் தமிழின் காவலராய்
விளங்கினர். உரையாசிரியர்களின் இடைவிடாத முயற்சியாலும்
தொடர்பணியாலும்     பழந்தமிழ்     இலக்கியங்கள்     வருங்கால
சந்ததியினருக்கு உதவுகின்றன. தமிழ் நூல்களை,
 

(1) இலக்கியம்

(2) இலக்கணம்

(3) தத்துவம்

(4) கலை

என்ற நான்கு பிரிவிற்குள் அடக்கலாம். இலக்கியம், இலக்கணம்
ஆகியவற்றின் உரைகள் மிகுதியாகத் தோன்றியுள்ளன. தத்துவம்,
கலை ஆகிய பிரிவுகளில் தேவையான அளவு உரைகள்
தோன்றவில்லை. இருட்டறையிலுள்ள எழில்மிக்க ஓவியத்தைக் காணக்
கண்கள் மட்டும் இருந்தால் பயனில்லை. இருளைப் போக்கும் ஒளி
வேண்டும். இனி, பலாப்பழத்தைச் சுவைத்து மகிழ அதனை முறையாக
அறுத்துச் சுளை எடுத்துத் தருபவரின் உதவி வேண்டும். இவ்வாறே
பழம்பெரும் இலக்கண, இலக்கியச் செல்வங்களைக் கற்று மகிழ்வதற்கு,
தக்க உரையாசிரியர்கள் வேண்டும்.
 

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
 

என்ற உயர்ந்த நோக்கத்தோடு உரையாசிரியர்கள் பணியாற்றியுள்ளனர்.
கல்விக் கோயிலின் பெருவாயிலைத் திறந்துவிட்ட சான்றோர்கள்தான்
உரையாசிரியர்கள்.
 

“இந்திய நாட்டிலுள்ள பௌத்த சமய நூல்கள் இக்காலத்தவர்
படித்து இன்புறுவதற்கு ஏற்ற உரை விளக்கங்கள் இல்லாத
காரணத்தால் விளங்காமல் இருக்கின்றன” என்று ஆங்கில
ஆராய்ச்சியாளர் ரைஸ் டேவிட் (Rhys David) கூறியுள்ளார்.
 

“நூலாசிரியரின் அரிய கருத்துகளையெல்லாம் உரையாசிரியர்
உதவியாலேயே உலகம் உணர்ந்து இன்புறுகின்றது. பேருபகாரிகளாகிய
உரையாசிரியர்கள் உதவி இல்லையெனில் பண்டைய உயர்நூல்களாம்
கருவூலங்களில் தொகுத்து வைத்த விலை வரம்பு இல்லாப்
பொருள்மணிக் குவியல்களை யாம் எங்ஙனம் பெறுதல் கூடும்” என்று
பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் கூறியுள்ளார்.
 

இலக்கிய வரலாற்றில் உரைகளுக்கு மிகுந்த உயர் இடம் உண்டு.
தமிழ்மொழி வளர்ச்சிக்கும், இலக்கிய இலக்கணப் பயிற்சிக்கும்
உரைகள் உதவி செய்கின்றன. உரைகள் இல்லாது இருக்குமேயானால்
பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்கள் நமக்கு விளங்காமல்
போயிருக்கும். நமக்குக் கிடைத்துள்ள உரைகள் யாவும் புதையல்
போன்றவையாகும்.
 

உரையின் பயன்கள்

உரையாசிரியர்கள் தாம் கற்றுத் தேர்ந்த புலமைச் செல்வத்தை
எல்லாம் தம் உரைகளில் கொட்டி எழுதுவதால் நாம் எளிதாகக்
கருத்துகளைப் புரிந்து கொள்கின்றோம்.
 

சில     பாடல்களுக்கு உரையாசிரியர்கள் மிக விரிவான உரையும்,
நயமிக்க விளக்கமும் எழுதி இருப்பதால், அவை இலக்கியப்
பயிற்சிக்கு வழிகாட்டியாய் அமைகின்றன.
 

தமிழ்மொழியின்     அமைப்பு காலந்தோறும் எவ்வாறு மாறுதல்
அடைந்து வந்துள்ளது என்பதையும், தமிழ் மக்களின் வாழ்க்கை
நிலை, அரசியல் மாறுதல், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றையும்
உரைகள் நமக்கு உணர்த்துகின்றன.
 

மறைந்து போன தமிழ்நூல்களின் பெயர், அந்த நூல்களின் சில
பகுதிகள் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்து வருபவை உரைகளே
ஆகும். இவ்வாறு பல உதவிகள் செய்யும் உரை நூல்களைத் தந்த
உரையாசிரியர்களை நாம் என்றென்றும் போற்ற வேண்டும். தமிழ்
மொழியின் வளர்ச்சி என்பது உரையின் வளர்ச்சியே யாகும். தமிழ்
இலக்கியத்தில் உரைநடை தோன்றிய வரலாற்றைக் காலந்தோறும்
விரிவாகக் கண்டறிய வேண்டும்.


1.3.2 இலக்கண உரைகள்

 

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய சான்றோர்கள் வாழ்ந்த
காலத்தை உரையாசிரியர்கள் காலம் என்கிறோம். இதனை, கி.பி.
10ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 15ஆம் நூற்றாண்டு வரை எனலாம்.
இதன் பின்னரும் இலக்கண இலக்கியங்களுக்கு உரை வகுத்த
பலர் இருந்திருக்கிறார்கள். தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர்,
சேனாவரையர்,     நச்சினார்க்கினியர், கல்லாடர், பேராசிரியர்
போன்றோர் உரை எழுதியுள்ளனர். இன்று நமக்குக் கிடைத்துள்ள
தமிழ் இலக்கண நூல்களுள் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம்.
தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கும் இளம்பூரணரும்,
சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையரும், பொருளதிகாரம் உட்பட
மூன்றுக்கும் நச்சினார்க்கினியரும் உரை எழுதிப் புகழ் பெற்றனர்.
 

இளம்பூரணர் உரை

பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் முழுமைக்கும்
உரை எழுதி அதனைத் “தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு” நன்கு
புலப்படுத்தினார். மற்றவர்கள் உள்ளே புகுந்து காணமுடியாத
வண்ணம் இருண்டு கிடந்த தொல்காப்பியம் என்ற மாளிகைக்குள்
தன் அறிவு என்ற விளக்கைக் கொண்டு தேடி அங்குக் குவிந்து
கிடந்த இரத்தினக் குவியல்களை உலகிற்கு முதன்முதலில் விளக்கிக்
காட்டிய பெருந்தகை இளம்பூரணர்.
 

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்களுள் காலத்தால்
முற்பட்டவர் இளம்பூரணர். இவர் தொல்காப்பியத்திற்கு முதன்
முதலில் உரை எழுதியவர். மேலும் தொல்காப்பியம் முழுமைக்கும்
உரை எழுதியவர். இதனால் உரையாசிரியர் என்ற பொதுப்பெயர்
இவருக்கே உரிய சிறப்புப் பெயராக மாறிற்று. இவரை உரையாசிரியர்
அல்லது உரை முதல்வர் என்று அழைத்தனர்.
 

ஊரெனப்படுவது உறையூர், நாடெனப்படுவது சோணாடு என்று
இவர் கூறும் சான்றுகளைக் கொண்டு இவர் சோழநாட்டைச்
சேர்ந்தவர் எனப் புலனாகிறது. இவர் தன் உரையின் பல இடங்களில்
அவனுக்குச் சோறிடுக, உழுது வரும் சாத்தன், கூழ் உண்டான்
என்பது போன்ற உழவுத் தொழில் பற்றிய சான்றுகளைத் தருகிறார்.
சமண சமயத்தைச் சார்ந்தவராக இருப்பினும் மற்ற சமயங்களை
வெறுக்கும் பண்பு இவரிடம் இல்லை. பெருந்தன்மையோடு பிற சமயக்
கடவுளர்களையும் ஆங்காங்கே சுட்டிக் காட்டுகின்றார். எனவே இவர்
சமயப்பொறை மிக்கவர் என்பதை அறியலாம். “இவர் உரை தெளிந்த
நீரோடை போன்றது. பற்றற்ற துறவி தூய்மையான வாழ்வு நடத்தி
மூத்து முதிர்ந்து காவி உடையுடன் அருள் பழுத்த நெஞ்சத்துடன்
முகமலர்ந்து நம்மிடம் இன்சொல் பேசுவது போன்ற இன்ப உணர்வை
இவர் உரை உண்டாக்குகிறது” என்று மு.வை.அரவிந்தன்
பாராட்டியுள்ளார். காலப்போக்கில் பல உரைகளும் உரை
ஆசிரியர்களும்     தோன்றுவதற்கு     அடிப்படைக் காரணமாக
விளங்கியவர் இளம்பூரணர் எனலாம். இவர் தனக்குப் பின்னால்
வருபவர்கள்     பின்பற்றத்தக்க     உரைமரபுகள்     பலவற்றைத்
தோற்றுவித்தார். எனவே இவரை உரை முன்னோடி எனலாம்.
இளம்பூரணர் மூல நூலாசிரியரிடத்துப் பெருமதிப்பு வைத்து எழுதுதல்,
பிறமொழிப் பயிற்சியோடு உரை எழுதுதல், வினாவிடைப் பாங்கு,
சொற்பொருள் தருதல், பலதுறை அறிவோடு உரை எழுதுதல், பல
நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுதல், தம் கால வாழ்வியல்
நெறிகளைப் புலப்படுத்துதல் போன்ற உரை மரபுகள் பலவற்றைக்
கையாண்டு உரை எழுதியுள்ளார். புகழ்பெற்ற வடமொழி இலக்கண
நூலான பாணினீயத்தை இரண்டு முறை இளம்பூரணர் தம் உரையில்
பயன்படுத்தியுள்ளார்.
 

சொற்பொருள் தருதல்
 

இளம்பூரணர்     பல இடங்களில் சொற்களின் பொருளை நன்கு
விளக்கிச் சொல்கிறார். மாணாமை என்ற சொல்லிற்கு மிகாமை என்ற
பொருள் கூறுகின்றார். உயர்வு என்ற சொல்லிற்கு விளக்கமாகப்
பின்வருமாறு கூறுகின்றார் : “உயர்வு தாம் பல, குலத்தால் உயர்தலும்,
தவத்தால் உயர்தலும், நிலையால் உயர்தலும், உபகாரத்தால்
உயர்தலும்” என விளக்குகின்றார். எழில் என்பதற்கு அழகு என்று
பொருள் கூறுகின்றார். சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு
போன்ற நூல்களிலிருந்து
பல பாடல்களை மேற்கோள் காட்டுகின்றார்.
 

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான

- (பொருளதிகாரம், 206)    

என்ற நூற்பாவிற்கு உரை எழுதுங்கால்,
 

செறிவு என்பது அடக்கம்
நிறைவு என்பது அமைதி
செம்மை என்பது மனம்கோடாமை
செப்பு என்பது சொல்லுதல்
அறிவு என்பது நன்மை, தீமை பயப்பனவும் அறிதல்
அருமை என்பது உள்ளக்கருத்தினை அறிதல்

இவையெல்லாம் மகளிர்க்கு உரித்தானவை என இளம்பூரணர் விளக்கம்
தருகின்றார். எனவே இளம்பூரணர்க்கு உரை முதல்வர் என்ற பெயர்
முற்றிலும் பொருத்தம் ஆகும்.
 

சேனாவரையர் உரை

தொன்மை     இலக்கண     நூலாம்     தொல்காப்பியச்
சொல்லதிகாரத்திற்கு உரை வகுத்தவர்கள் ஐந்து பேர். இந்த ஐந்து
பேரின் உரையுள் சேனாவரையரின் உரையே மிகச் சிறந்தது.
சேனாவரையர் என்ற பெயருக்குப் படைத்தலைவர் என்பது பொருள்.
பண்டைய தமிழ் வேந்தர்கள் படைத் தலைவர்களைச் சேனாவரையர்
என அழைத்தனர். இவ்வாறு அமைந்த சிறப்புப் பெயரே பிற்காலத்தில்
இயற்பெயராக வழங்கி விட்டது. இவருடைய உரை, திட்பமும்
நுட்பமும் வாய்ந்தது. சேனாவரையரின் புலமைப் பெருமிதமும்,
ஆராய்ச்சி வன்மையும், கருத்துத் தெளிவும், உரை முழுமையும்
காணலாம். கற்கண்டை வாயிலிட்டு மெல்ல மெல்லச் சுவைத்து
இன்புறுவதுபோல் இவர் உரையை நாள்தோறும் பயின்று மெல்ல
மெல்ல உணர்ந்து     மகிழ     வேண்டும்.     தொல்காப்பியச்
சொல்லதிகாரத்திற்கு எழுந்த இவருடைய உரை சேனாவரையம்
என்றே குறிக்கப்படும் பான்மை இவருடைய உரைச் சிறப்பினை
உணர்த்தும். ‘வடநூற் கடலை நிலை கண்டுணர்ந்த சேனாவரையர்’
என்று இவர் வழங்கப்படுவதற்குத் தகுந்தாற் போன்று வடநூற்
கருத்துகளை யொட்டிச் சில இடங்களில் தமிழிலக்கணம் கூறுகிறார்.
இவர் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர்.
பாண்டிய நாட்டுக் கொற்கைத் துறைமுகத்திற்கு அருகே உள்ள
ஆற்றூர் என்பது இவரது சொந்த ஊர். சேனாவரையர் வாழ்ந்த போது
அரசாண்ட மன்னர் குலசேகர பாண்டியன். சொல்லதிகார உரையின்
தொடக்கத்தில் இவர் விநாயகர், சிவன், கலைமகள், முருகன்,
அகத்தியர் ஆகியவர்களை வணங்குகின்றார். எனவே இவர் சைவ
சமயத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இவர் ஆசிரியர்
பணியை மேற்கொண்டு இருந்தார். தொல்காப்பியர் வகுத்துள்ள
இலக்கண விதிகளையும் சூத்திரங்களையும் சேனாவரையர் தம்
நுட்பமான அறிவால் உணர்ந்து நுணுகி நோக்கி, நூலாசிரியர்
ஒவ்வொரு சொல்லையும், பொருள் ஆழத்துடன் அமைத்திருக்கின்றார்
என்று கூறியுள்ளார். சேனாவரையர் எது சரி, எது பிழை என
ஆராய்ந்து, தம்     முடிவினை     ஆதாரத்தோடு எடுத்துக்
காட்டுகின்றார். “வடநூற் கடலை நிலை கண்டு உணர்ந்த
சேனாவரையர்” என, சிவஞான முனிவர் பாராட்டியுள்ளார்.
 

இலக்கண விதிகளை விளக்கும் இடத்து நன்னூல் கருத்துகளை
விளக்குகின்றார்.
 

பழையன கழிதலும் புதியன புகுதலும்

என்ற     நூற்பாவை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும்
திருவள்ளுவரைத் தெய்வப் புலவன் என்றே அழைக்கின்றார்.
சேனாவரையர் உரை செறிவும், சுருங்கச் சொல்லி உய்த்துணர
வைக்கும் இயல்பும் உடையது. இதைக் கற்கும் போது சிங்க நோக்காக
நூலின் முன்னும் பின்னும் நோக்கி அவற்றை நன்கு நினைவில்
கொண்டு கற்க வேண்டிய பகுதிகள் பல இருப்பதை உணரலாம்.
 

நச்சினார்க்கினியர் உரை

“உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்ற புகழுரையே
இவர் உரையின் சிறப்பை விளக்கப் போதிய சான்றாகும். இவர் நடை,
அழகும் சற்றுக் கடினமும் பொருந்தியது. சங்க இலக்கியப் பாக்களின்
ஆழ்ந்த பொருள்களை உய்த்தறியும் பேராற்றல் இவரிடம் இருந்தது.
இவர் கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் இருந்தவர் எனலாம்.
இவருடைய உரைநடையில் ஒரு பகுதியைப் பார்ப்போம்.
 

“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப்
பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும்
ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக்
கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து
இன்பமுறுவதோர் பொருளாதலின், அதனை அகம் என்றார்.
எனவே, அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர்
ஆகுபெயராம்.”

- பொருளதிகாரம்

நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டிற்கு உரை எழுதவில்லை யெனில்,
இருளில் மூழ்கி இருக்கும் வண்ண ஓவியமாய்ப் பார்த்துக்
களிப்பாரின்றிப் போய் இருக்கும். பழந்தமிழ் இலக்கியங்களை
மரபறிந்து, பொருள் தெளிவுடன் சுவையாக எடுத்து விளக்கிய
பெருமை நச்சினார்க்கினியருக்கு உண்டு. இவர் நுண்ணறிவு
உடையவர். இவர் தொல்காப்பியத்துக்கும் உரை எழுதியுள்ளார்
என்பதை முன்பே பார்த்தோம்.
 

தெய்வச்சிலையார் உரை
 

இவர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை இயற்றியுள்ளார்.
இவர் உரை உயிரோட்டமுடையதாய், எளிதாய் உள்ளது. இவரது
உரையின் ஒரு பகுதியில்,
 

காலம் என்பது முன்னும் பின்னும் நடுவும்
ஆகி உள்ளதோர் பொருள்

 

என்று கூறுகின்றார். பல இடங்களில் நெசவுத் தொழில் பற்றி
உதாரணம் காட்டி இருப்பதால் இவர் வாழ்ந்த ஊரில் நெசவு
மிகுதியாக இருந்திருக்கும் என்பர்.
 

கல்லாடர் உரை
 

ஊரின் பெயர் கல்லாடம் ஆதலால் இவருடைய பெயரும்
கல்லாடர் ஆயிற்று. இவரும் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு
உரை இயற்றிய ஆசிரியர் ஆவார்.
 

பேராசிரியர் உரை

உரையாசிரியர்களுள் பேராசிரியர் என்ற சிறப்புப் பெயர்
அமைந்திருப்பது     இவருடைய உரையின் பெருமையினைப்
புலப்படுத்தும். இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை
எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் பொருளதிகாரத்தில்
மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் ஆகிய
நான்கு இயல்களுக்கு மட்டுமே இவரின் உரை கிடைத்துள்ளது.
 

நன்னூல் உரைகள்

தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய இலக்கண நூல்களுள்
பவணந்தியார் இயற்றிய நன்னூலே உயர்வும் சிறப்பும் பெற்று
விளங்குகிறது. சங்கர நமச்சிவாயர், ஆண்டிப் புலவர், ஆறுமுக
நாவலர், சடகோப ராமநுஜாசாரியார், முகவை இராமாநுச கவிராயர்
ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.
 

பிற

அமிதசாகரர் இயற்றிய     யாப்பருங்கல விருத்திக்கும்
யாப்பருங்கலக் காரிகைக்கும் உரை எழுதியவர் குணசாகரர்.
புத்தமித்திரர் இயற்றிய வீரசோழியத்திற்குப் பெருந்தேவனார் உரை
எழுதியுள்ளார்.
 

சிவஞான முனிவர் உரை

சைவமும் தமிழும் தழைத்தோங்க அருள்மழை பொழிந்த
கார்முகில் சிவஞான முனிவர் என்று இவரைப் போற்றுவர். இவரைப்
புலவர் பெருமக்கள் சிவஞான யோகி, சிவஞான சுவாமி, மாதவச்
செல்வர் என்று புகழ்ந்து கொண்டாடுவர். தமிழில் உரைநடை
வேந்தர்களுள் தலை சிறந்தவர் இவரே ஆதலின் இவரை உரை
மன்னர்
என்பர். பெற்றோர் இட்ட பெயர் முக்களாலிங்கர்.
தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தி, நன்னூலின் விருத்தி
போன்ற உரைகளை எழுதியுள்ளார். நன்னூலுக்குச் சங்கர
நமச்சிவாயர் எழுதிய விருத்தியுரையைச் சிவஞான முனிவர்
செப்பனிட்டு விரிவாக்கி எழுதியுள்ளார்.


1.3.3 இலக்கிய உரைகள்

 

நச்சினார்க்கினியர் உரை

நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிற வேறு நூல்களாவன :
 

(1) பத்துப்பாட்டு
(2) கலித்தொகை
(3) சீவக சிந்தாமணி
 

இந்த உரைகள், பிற்காலத்தவர் சங்க இலக்கியங்களுக்கு உரை
காணுவதற்குப் பெரிதும் பயன்பட்டன.
 

திருக்குறள் உரைகள்

தமிழில் தோன்றிய நூல்களில் திருக்குறளுக்குப் பல வகையான
சிறப்புகள் உண்டு. ஒரு நூலுக்குக் காலம் தோறும் உரைகள் தோன்றி
வருவது அந்த நூலின் சிறப்பினையே குறிக்கும். திருக்குறளுக்கு
எண்ணற்ற உரைகள் தோன்றியுள்ளன. இதற்கு நேரடியாக உரை
எழுதியோர் மட்டுமல்லாமல் இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார்,
சேக்கிழார், கம்பர் போன்ற எண்ணற்ற புலவர்கள் தத்தம் நூல்களில்
திருக்குறளை எடுத்தாண்டு விளக்கமும் எழுதியுள்ளனர். நீதி
நூல்களை எழுதிய அனைத்துச் சான்றோர்களும் திருக்குறளுக்கு
உரை வகுத்துள்ளனர் என்றே     கூறலாம். திருக்குறளைப்
பயின்றவர்கள் இதன் சுவையில் ஈடுபட்டுப் புகழ்ந்தும் பாடியுள்ளனர்.
மிகப்பலர் திருக்குறளுக்கு உரை எழுதி இருந்தாலும் பரிமேலழகர்
எழுதிய உரையே சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இவருக்கு முன்னால்
ஒன்பது உரைகள் தோன்றியுள்ளன. பத்தாவது உரையாகப்
பரிமேலழகர் உரை தோன்றியுள்ளது.
 

பரிமேலழகர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பர்.
 

‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’

- (திருவாய்மொழி)    

‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே
                 என்னும்’

- (நம்மாழ்வார்)

இவ்வாறு இவர் எடுத்துக்காட்டாய்க் கூறும் தன்மையை வைத்து,
இவர் வைணவ சமயத்தைச் சார்ந்தவரென்பர்.
 

பாலெல்லாம் நல்ஆவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூல்ஆமோ? - நூலிற்
பரித்தவுரை யெல்லாம் பரிமேலழகர்
தெரித்த வுரையாமோ தெளி

என்ற தொண்டை மண்டல சதகச் செய்யுளால் இவரது உரையின்
பெருமையை அறியலாம்.
 

சங்கத் தொகை நூலாம் பரிபாடலுக்கு இவர் ஓர் அரிய உரையை
வகுத்துள்ளார். பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படைக்கும்
இவர் உரை எழுதியுள்ளார்.
 

உலக மக்களிடையே நன்கு பழகி அவர்களின் பேச்சு, பழக்க
வழக்கம் ஆகியவற்றை அப்படியே குறிப்பிடுகின்றார். ஓரிடத்தில்
“குற்றமே இல்லாதவர் உலகத்து இன்மையில்” என்று கூறுவதிலிருந்து
இவரது உலகியல் அறிவை அறியலாம். மானம் என்ற அதிகாரத்திற்கு
உரை எழுதும் போது உடலின் நிலையின்மையும், மானத்தின் நிலை
பேற்றையும் வலியுறுத்திக் கூறியுள்ளார். மக்கள் பதடி என்னும்
குறளுக்கு (196) “அறிவு என்னும் உள்ளீடு இன்மையின் பதடி
என்றார்” என்பதாக விளக்குகிறார்.
 

“வேண்டாத அடைமொழிகளுக்கு இடம் தராமல் நேரிய
முறையில் உரிய பொருளை விளக்கும் அளவிற்கே
சொற்களை அளந்து பயன்படுத்துவார். செறிவு, நேர்மை
ஆகிய பண்புகள் அமையத் தமிழ் உரைநடையைக்
கையாண்டவர் இவர்.”
 

என்று மு.வரதராசனார் பாராட்டியுள்ளார். பொருட்பாலிலுள்ள
ஒவ்வொரு     அதிகாரத்திலும்     பரிமேலழகரின் அரசியலறிவு
வெளிப்படுகிறது. இசைப் புலமை, மருத்துவ அறிவு. யோக நூலறிவு,
திட்பநுட்ப அறிவு, இலக்கண அறிவு, இலக்கிய அறிவு, சுருங்கச்
சொல்லி விளங்க வைத்தல் ஆகிய இவையனைத்தும் ஒருங்கே
பெற்றவர் பரிமேலழகர்.
 

பேராசிரியர் உரை

இவர் குறுந்தொகைக்கும் உரைஎழுதியிருக்கிறார் என்பர். கோவை
நூல்களில் சிறப்புடையதாய், இராசாக் கோவை என்று கூறப்படும்
மணிவாசகப் பெருமான் அருளிச் செய்த திருக்கோவையாருக்கு இவர்
அழகியதோர் உரையினைச் செய்துள்ளார். இதனால் இவரைச் சைவர்
என்பர். இவர் வறுமை என்பதற்குப் “போகம் துய்க்கப் பெறாத
பற்றுள்ளம்” என்று உரையெழுதிய பான்மை சிறப்புடையதாகும்.
 

அடியார்க்கு நல்லார் உரை
 

சிலப்பதிகாரம் முழுமைக்கும் அடியார்க்கு நல்லார் உரை
எழுதியுள்ளார். எனினும் 18 காதைளுக்கான உரையே கிடைத்துள்ளது
வடமொழியிலும், தமிழிலும் புலமை மிக்கவர் இவர். அக்காலத்திலிருந்த
இசைத் தமிழ், நாடகத் தமிழ் நூல்களைப் பற்றிய கருத்துகளை
யெல்லாம் இவரது உரையில்தான் காண்கிறோம். இவரது உரைநடை
சில இடங்களில் பாட்டிற்குரிய ஓசையுடன் காணப்படுகிறது; இவரது
நடை எதுகை மோனையுடன் செய்யுளுக்குரிய ஓசையுடன்
அமைந்துள்ளது. மேலைநாட்டுத் திறனாய்வாளரைப்     போல
அடியார்க்கு நல்லார் சிலம்பினைப் பல்வேறு கோணங்களில்
ஆராய்ந்துள்ளார். தமது உரையுள் முந்நீர் என்பதற்கு, முச்செயலைக்
கொண்ட முந்நீர் என்று விளக்கம் தருகின்றார். மூன்று
செய்கையாவன மண்ணைப் படைத்தலும், மண்ணைக் காத்தலும்,
மண்ணை அழித்தலும் ஆகும் என்று கூறுமிடம் நயம்மிக்கதாகும்.
பருந்தும் நிழலுமெனப் பாவும் உரையும் பொருந்த எல்லாப்
பொருளும் தெரிந்து நல்அமிர்தம் போன்ற உரையை வகுத்துள்ளார்
என்பர். தமிழிசை மறுமலர்ச்சிக்கு உதவியது இவரது அரங்கேற்று
காதை உரையேயாகும். காப்பிய அமைப்பு, நிகழ்ச்சி ஒருமைப்பாடு,
காப்பிய மாந்தர் பண்புகள், செயல் நிகழும் கால எல்லை, இடம்,
கவியுள்ளம்     இவற்றையெல்லாம்     நுணுகி     ஆராய்ந்து
புலப்படுத்தியுள்ளார். இவற்றால் அடியார்க்கு நல்லார் சிறந்த
திறனாய்வாளராகத் திகழ்கிறார்.
 

சிவஞான முனிவர் உரை
 

சிவஞான பாடியம், சிவஞானபோதச் சிற்றுரை, சிவஞான
சித்தியார் சுபக்கம் உரை, கம்பராமாயண முதற்செய்யுள் விருத்தி
போன்ற உரைகளையும் எழுதியுள்ளார்.
 

சைவ சித்தாந்த உரைகள்
 

இலக்கிய, இலக்கணங்களுக்கு உரை வகுத்த பலரைப் பற்றி
அறிந்து கொண்டோம். இனி, சமய இலக்கியங்களைப் பார்க்கலாம்.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டு என்பது உங்களுக்குத் தெரியும்.
திருமுறைகளுக்கு உரை எழுதுவது பாவம் என்ற கருத்தால்,
அவற்றுக்கு உரை வகுக்க யாரும் முற்படவில்லை. சைவத்தின்
தத்துவம் சைவ சித்தாந்தம் ஆகும். மெய்கண்டார் முதலிய
அருளாளர்கள்     தமது     நூல்களில் சைவ சித்தாந்தத்தை
விளக்கியிருக்கிறார்கள். சைவ சித்தாந்த நூல்கள் பதினான்காகும்.
பதினான்கு சைவ சித்தாந்த நூல்களில் சிவஞான போதம் தலைமை
வாய்ந்தது.     பன்னிரண்டு     சூத்திரங்களையும் எண்பத்தோர்
எடுத்துக்காட்டு     வெண்பாக்களையும்     இந்நூல் தன்னகத்தே
கொண்டுள்ளது. இந்நூலுக்குப் பலர் உரை வகுத்துள்ளனர். எனினும்
சிவஞானமுனிவர் எழுதிய மாபாடியம் தலைசிறந்தது. இந்த நூல்கள்
பதினான்கனுக்கும் பலர் உரை எழுதியுள்ளனர். சைவ மடங்களிலேயே
இவை கற்பிக்கப்பட்டு வந்ததால் உரையாசிரியர்களில் பலர்
துறவிகளாவர். சிவஞானசித்தியார், பரபக்கம், சுபக்கம் என இரு
பகுதிகளைக் கொண்டது. சுபக்கத்துக்கு உரை தந்தவர்கள் ஆறு
அறிஞர்கள். இவர்களின் உரைகளை இணைத்து அறுவர் உரை என்றே
குறிப்பிடுவார்கள்.
 

நாலாயிரத் திவ்வியப் பிரபந்த உரைகள்
 

கடைச்சங்க இலக்கியங்களில் வடசொல் கலப்பு ஒரு விழுக்காடு
இருந்தது. ஏழு, எட்டு நூற்றாண்டுகளில் ஐந்து விழுக்காடு வரை
வடசொற்கள் காணப்பட்டன. இந்த மணிப்பிரவாள நடை
சமணர்களால் தோற்றுவிக்கப்பட்டு வைணவ உரையாசிரியர்களால்
வளர்க்கப்பட்டது. மணியும் முத்தும் கோத்த ஆரம்போல
வடசொல்லும், தமிழ்ச் சொல்லும் கலந்து வர, தமிழ் வாக்கிய
அமைப்பில் அமைந்த நடையே மணிப்பிரவாள நடை எனப்படும்.
 

ஆழ்வார்கள் எழுதிய பக்திப் பாசுரங்கள் நாலாயிரத் திவ்வியப்
பிரபந்தம்
என அழைக்கப்படும். இப்பாடல்களுக்கு 14, 15ஆம்
நூற்றாண்டுகளில் இவ்வுரைகள் எழுந்தன. இவையாவும் வடமொழிச்
சொற்கள் மிகுதியாகவும், தமிழ்ச் சொற்களைக் குறைவாகவும் கொண்ட
மணிப்பிரவாள நடையில் அமைந்தன. இதனால் தமிழின் தூய
தனித்தன்மை பாதிக்கப்பட்டது. இப்போக்கினால் தமிழ் மொழியில்
ஏராளமான வடசொற்கள் புகத் தொடங்கின.
 

இந்நூற்றாண்டுகளில் தோன்றிய வில்லிபாரதம், திருப்புகழ்
முதலிய நூல்களில் வடசொற்கள் மிகுதியாக உள்ளமைக்கு
இப்போக்கே ஒரு காரணம்.
 

தமிழிலக்கிய உலகத்தில் இடைக்காலத்தில் செந்தமிழை வளர்த்து
செழிக்கச் செய்த பெருமை ஆழ்வார்களுக்கும் உரியது. இலக்கியச்
சுவை முதிர்ந்த வளமான கவிதைக் கனிகளை நல்கித் தமிழ்
இலக்கியத்தில் அளப்பருந் தொண்டுகளை     அவர்கள்
செய்திருக்கிறார்கள். ஆழ்வார்கள் பன்னிருவரும் திருமாலை வணங்கி
வாழ்த்தி அவரது பெருமைகளைப் புகழ்ந்து பாடிய பாடல்களின்
தொகுப்பு நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப்பட்டது.
ஆழ்வார்களின் பாடல்களை நாதமுனி என்பார் கி.பி 9ஆம்
நூற்றாண்டின் முற்பகுதியில் தொகுத்தார் என்பர். ஆழ்வார்களின்
பாடலுக்கு உரை இயற்றிய வைணவப் பெரியோர் தாம் கற்ற கலைகள்
அனைத்தையும் தம் உரைகளில் வழங்கிச் சென்றுள்ளனர். மிக
நயம்படப் புலப்படுத்தி எழுதியுள்ளனர். வைணவ உரையாசிரியர்கள்
தாம் செய்த விளக்க உரையை     வியாக்கியானம்     என்று
குறிப்பிட்டுள்ளனர். வைணவர்களின் வேத நூலாகிய இந்த
நாலாயிரத் திவ்வியப் பிரபந்த உரையாசிரியர்களின் சிறப்பை
உ.வே.சாமிநாத ஐயர், “ஆழ்வார்களுடைய உரையில் ஒரு பாடலுக்கு
உரை கேட்டுவிட்டால் மனம் வேறு ஒன்றில் செல்லாது” என்று
கூறி, அதன் பெருமையை வெளிப்படுத்துகின்றார்.
 

ஆறாயிரப்படியே முதன் முதலில் எழுத்து வடிவில் தோன்றிய
திருவாய்மொழி வியாக்கியானம் ஆகும். இதுவே பிற்கால வைணவ
உரைகளுக்கு ஆரம்பமாகும். இதை எழுதியவர் இராமானுஜரின்
மாணாக்கர் பிள்ளான் ஆவார். இவர் எழுதிய வியாக்கியானத்தைக்
கண்டு மகிழ்ந்த இராமானுஜர் இவருக்குத் திருக்குருகைப் பிரான்
என்று பெயரிட்டார்.
 

பெரியவாச்சான் பிள்ளை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
முழுமைக்கும் மிகச் சிறப்பாக வியாக்கியானம் எழுதி வியாக்கியானச்
சக்ரவர்த்தி
என்ற சிறப்புப் பெயர் பெற்றார். தற்கால உரைநடையின்
முந்தைய நிலையினை இவ்உரையாசிரியர் நடையில் காணலாம்.
 

வைணவப் பிரபந்த உரையாசிரியர்கள் மணிப்பிரவாள நடையில்
எழுதினர் ; அவர்கள் காலத்தோடு இந்நடை மறையலாயிற்று.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.

தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூல் எது?

விடை

2.

தொல்காப்பியத்தை எழுதியவர் யார்?

விடை

3.

சிலப்பதிகாரம் முழுமைக்கும் உரை எழுதியவர் யார்?

விடை

4.

நக்கீரர் உரை எத்தகையது?

விடை

5.

நச்சினார்க்கினியர் உரை எழுதிய நூல்கள் யாவை?

விடை

6.

உரையாசிரியர்களின் காலம் எது?

விடை

7.

திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் யார்?

விடை