2.1 உரைநடை - விளக்கமும் வகைப்பாடும் |
உலக
வழக்காகப் பேசப்படுவதும் எழுதப்படுவதும்
உரைநடை
அல்லது உரைவாசகம் எனப்படும். உரைநடை என்பது பொருளின்
தன்மையை உள்ளது உள்ளவாறு உரைப்பதாகும். |
உரைநடைக்குச்
சொற்கள் தான் அடிப்படை என்றாலும், வெறும்
சொற்களால் மட்டும் உயிரோட்டமுள்ள கலைநயமான நடை
அமைந்துவிடுவதில்லை. கருத்தோட்டம், சொல் சேர்க்கை, ஒலிநயம்,
வேகம், அழுத்தம் முதலிய கூறுகளும் அதில் அடங்கியிருக்கும்.
இலக்கியப் பயிற்சி, சிந்தனைத் திறம், கற்பனை வளம், அனுபவப்
பார்வை, வீச்சு, மனப்பண்பு இவற்றுக்கு
ஏற்பவே நடைநயமும்
அமைகிறது. 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்' வாக்கினிலே
ஒளி உண்டாம் என்ற பாரதியார் வாக்கையும் நாம் நினைவில்
வைத்துக் கொள்வது நல்லது. |
எல்லார்க்கும்
விளங்க வேண்டும், அதனோடு உரைநடைப் பண்புகளும் உடன் வளர வேண்டும். நல்ல உரைநடையைப் படிக்க மக்கட்குப் பயிற்சி கொடுப்பது எழுதுவோர் பொறுப்பு. எழுத்தாளர்கள் சிறுசிறு தொடர்களையே உரைநடையமைப்பாகக் கருதிப் பின்பற்ற வேண்டும். எழுத்து வழக்கில் பலரும் படிக்கத்தக்க பொதுத்தன்மை அமைய வேண்டும். பேச்சுப் பகுதிகளை எளிய இயல்பு நடையில் அமைக்கலாம். நல்ல தமிழ்ச் சொல்லும் பொருந்திய தொடரும் பெருவரவாக அமைந்தால் நல்ல தமிழ் உரைநடை அமையும். |
2.1.1 உரைநடையாட்சி
|
இன்று
எங்கும் உரைநடை, எல்லாம்
உரைநடை. நாட்
செய்தித்தாள் என்ற
தரைப்படையாலும், கிழமையிதழ் என்ற
கடற்படையாலும், மேடைப் பேச்சு
என்ற வானப்படையாலும்
கவிதை என்னும் முதிய மன்னனிடமிருந்து, மொழி
என்னும்
பரந்த நிலத்தை இளைய உரைநடை
வேந்தன் கைப்பற்றிக்
கொண்டான். |
இருபதாம்
நூற்றாண்டை உரைநடைக் காலம் எனலாம். ஆங்கிலக்
கல்வியின் பயனால் புதுமைப் படைப்புகளை ஆக்கும் முயற்சியில்
ஈடுபட்டதனால் தமிழ் உரைநடையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
ஏற்பட்டது. அரசியல் விழிப்பும், விடுதலை வேட்கையும் ஏற்பட்ட
பிறகு வளர்ச்சி பெருமளவில் பெருகியது. நாட்டு விடுதலை உணர்வு,
சீர்திருத்த உணர்வு, மொழி உணர்வு அனைத்தும் இணைந்து
உரைநடை வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக அமைந்தன. மேலைநாட்டில்
முன்னேறிய கலை, அறிவியல் நம் நாட்டிலும் பரவத் தொடங்கியது.
அதன் விளைவாகவும் உரைநடை புதுவகையில் வளர்ச்சி பெறத்
தொடங்கியது. அக்காலத்தில் செய்யுள் பெற்றிருந்த இடத்தை
இக்காலத்தில் உரைநடை பெற்றுள்ளது எனலாம். |
2.1.2 உரைநடை வகைப்பாடு
|
தமிழ்
உரைநடை ஒரு நூற்றாண்டிற்குள்
மாபெரும் வளர்ச்சி
பெற்றது. பன்முகத் துறையில்
பயன்படுத்தப்படும் இவ்வுரைநடையை,
பயன்படுத்தப்படும்
சூழலின் அடிப்படையில் மேடைத் தமிழ்நடை,
அறிவியல் தமிழ் நடை, பத்திரிகைத் தமிழ் நடை, நாடக உரைநடை
என்று பொதுவாக நான்காகப் பிரிக்கலாம். |
எத்தகைய
பொருளையும்
வெளிப்படுத்தும் முறையின் அடிப்படையில் உரைநடையைப் பல வகையாகப் பிரிக்கலாம். ஓர் உரைநடைப் பகுதியை நாம் ஆராயும்போது,
அது எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டது என்பதையும் மனத்திற்கொண்டே ஆராய வேண்டும். ஏனெனில் அந்தப் பயன் நோக்கமே அதன் நடையை நிர்ணயம் செய்கிறது. உரைநடையின்
பொதுவான பாகுபாடுகள், விளக்க
உரைநடை, வருணனை உரைநடை,
எடுத்துரை உரைநடை, நாடக உரைநடை, சிந்தனை உரைநடை.
அளவை உரைநடை எனப் பல
வகைப்படும். மேலே கண்ட
பாகுபாடுகள் அனைத்தும் முடிந்த முடிபானவை
அன்று. அவரவர்கள்
தத்தம் மனப்போக்கிற்கு ஏற்பக்
கூட்டியோ குறைத்தோ சில
அடிப்படையான பாகுபாடுகளைச் செய்வர். |