2.2 விளக்க உரைநடை

ஒரு கருத்தை விளக்கிக் காட்டுவது போல் எழுதப்படுவது
அனைத்துமே விளக்க உரைநடை (Expository prose or
explanatory     prose)
தான்.     பள்ளிக்கூட, கல்லூரிப்
பாடப்புத்தகங்கள்,     அறிவியல் நூல்கள், கலைக்களஞ்சியங்கள்,
பல்வேறு தொழில்களைப் பற்றியும் கலைகளைப் பற்றியும்
எழுதப்படும் விவர விளக்கங்கள் முதலியன இவ்வகையில்
அடங்கும். மனிதனின் தீராத அறிவுப்பசிக்கு உணவாக அமைவது
இவ்வகை உரைநடையே எனலாம்.
 

அறிவுத்துறை சார்ந்த எல்லா நூல்களும் விளக்கம் தருவதையே
முதன்மை நோக்கமாய்க் கொண்டுள்ளன. அறிவியல், தத்துவம்,
வரலாறு, பொருளாதாரம், சமுதாயவியல், அரசியல் போன்ற
துறைசார்ந்த எல்லா நூல்களும் ஏதோ ஒரு கருத்தை விளக்கிக்
கூறவே எழுதப்படுகின்றன. எனவே, விளக்கம் தருவதையே முதன்மை
நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது விளக்க உரைநடை
(Expository prose or explanatory prose)
ஆகும்.
 

விளக்க உரைநடை சில செய்திகளை முன்மொழிகிறது; அவற்றிற்கு
விளக்கம் தருகிறது. மாறுபட்ட கருத்துகளை ஆராய்ந்து முடிவு
கூறுகிறது. முன் மொழிதல், தொகுத்துச் சுட்டல், வகுத்துக் காட்டல்,
விளக்கம் கூறுதல், ஒப்பீடு செய்தல், முடிவு காணல் முதலியன விளக்க
உரைநடையின் செயற்பாங்கு எனலாம்.
 

எதை? யாருக்கு? எப்படி? எனும் இம்மூன்று வினாக்களுக்கும்
தெளிவான விடைகாண வல்லவர்கள் விளக்க உரைநடையில் வெற்றி
காண முடியும்.
 

கற்ற பொருள் கால அளவில் மறைந்தொழிவதற்குப் பொதுவாக
இரண்டு வகையான காரணங்கள் பின்வரும் உரைநடைப் பகுதியில்
கூறப்பட்டுள்ளன.
 

I.   “சூழ்நிலையினின்றும் தூண்டுதல்கள் தொடர்ந்து மனிதன்மேல்
மோதிக் கொண்டே இருக்கின்றன. அதன் காரணமாக அவன் பல்வேறு
செயல்களில்     தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டேயிருக்கிறான்.
செயல்களில் திறன் அடைகிறான். நாளடைவில் ஒரு செயல் மற்றொரு
செயலைப் பாதிக்கிறது. அதனால் அச்செயலுக்குரிய திறனும்
குறைகிறது.
 

மனிதன் உயிர்வாழ அவனுள் பல விடாய்கள் (தாகங்கள்)
உள்ளன. அவ்விடாய்களைப் பூர்த்தி செய்வதற்குரிய உடலுறுப்புகள்
இருக்கின்றன.     இவ்வுறுப்புக்கள்     நுண்ணியவையும் மிகவும்
பெரியவையுமாக உள்ளன. இவற்றின் வளர்ச்சிக்கும் இயக்கத்திற்கும்
கண்ணுக்குப் புலனாகா உயிரணுக்கள் மிகவும் இன்றியமையாதவை.
ஒரு குறிப்பிட்ட வினாடியில் இவை நூற்றுக்கணக்கில் புதிதாக
உற்பத்தியாகின்றன ; அல்லது அழிகின்றன. உயிரணுக்கள் அழிவதன்
காரணமாகவும், உயிரணுக்கள் புதிதாகத் தோன்றுவதன் காரணமாகவும்
கற்றல் திறன் மாறுகிறது. மறதி இந்த இரண்டு காரணங்களினாலோ
அல்லது இவற்றுள் ஒரு காரணத்தினாலோ ஏற்படுகிறது என்று
கருதப்படுகிறது” என்று தா.ஏ.சண்முகம் உளவியல் என்ற நூலில்
குறிப்பிட்டுள்ளார்.
 

II.   “கார்ல் மார்க்ஸ்தான் முதன் முதலாக சாஸ்திரீய சோஷலிசம் ஒரு
தத்துவமாக, நடைமுறையில் கொணரக்கூடிய ஒரு திட்டமாக
வகுத்தவன். இதனாலேயே இவன் சோஷலிஸத்தின் பிதா என்று
அழைக்கப்படுகிறான்.     இவனுடைய     திட்டம்     ‘சாஸ்திரிய
சோஷலிஸம்’ என்றும் மற்றவர்களுடையது ‘உட்டோப்பியன்
சோஷலிஸம்’ அதாவது கற்பனையில் மட்டுமே கண்டு மகிழக்கூடிய
சோஷலிஸம் என்றும் முறையே அழைக்கப் பெறுகின்றன.
 

சாஸ்திரீய சோஷலிஸம் என்பதுவே பின்னர் மார்க்ஸீயம் என்றும்
‘கம்யூனிசம்’ என்றும் பல பெயர்களை அடைந்தது. இதுவும்
மார்க்ஸின் பிற்காலத்தில் பல கிளைகளாகவும் பல கட்சிகளாகவும்
பிரிந்திருக்கிறது.
 

சோஷலிஸத்தின் அடிப்படையான கோட்பாடுகள் மூன்று. அவை,
 

இந்த     மூன்று கோட்பாடுகளைப் பொறுத்தமட்டில் எல்லா
சோஷலிஸ்ட்டுகளும் ஒன்றுபட்டவர்களே. இவைகளை நடைமுறையில்
கொண்டு வருகிறபோதுதான் கட்சி வேற்றுமைகள் தோன்றுகின்றன.”
 

இப்பகுதி வெ.சாமிநாத சர்மா எழுதிய அரசியல் வரலாறு என்ற
நூலில் இடம் பெற்றுள்ளது.
 

மேற்கண்ட இரு பகுதிகளும் (I,II) எடுத்துக்கொண்ட பொருளை
மிகத் தெளிவாக விளக்குகின்றன. முன்பகுதி உளவியல் கற்கும் உயர்
மாணவர்களை நினைவில் கொண்டு எழுதப்பட்டது. பின்னைய பகுதி
அரசியல் நெறிகளை அறிந்து கொள்ள அவாவும் பொது வாசகனை
நினைவிற் கொண்டு எழுதப்பட்டது. இரண்டுமே, சொல்லும் பொருள்
மனத்தில்     எளிதில் பதியும் வண்ணம், ஒவ்வொன்றாகப்
பகுத்துரைக்கின்றன. ஒன்று, இரண்டு, மூன்று எனக் கருத்துகளை
நிரல்படத் தனித்தனியே கூறும்போது ஒவ்வொன்றும் படிப்போர்
மனத்தில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. இது ஆசிரியர்க்கு
இப்பகுப்பில் சொல்லப்படும் செய்தியில் இருக்கும் தெளிவையே
காட்டுகிறது.
 

பல்வேறுபட்ட கருத்துகளை ஒருங்கு வைத்து ஆராய்ந்து முடிபு
கூறுவதும் விளக்க உரைநடையின் பண்பு என்று முன்னர்க்
கூறினோம். வரலாற்றறிஞர் ஒருவர் களப்பிரர் யார்? என்பது பற்றிய
கருத்துகளை எங்ஙனம் ஆராய்ந்து தீர்ப்புக் கூறுகிறார் என்பதைக்
கீழே காணுங்கள்.
 

“கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியருள் வலி
குன்றிய ஓரரசன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த போது, களப்பிரர்
மரபைச் சேர்ந்த மன்னன் ஒருவன் பாண்டி நாட்டின் மேல்
படையெடுத்துச் சென்று அதனைக் கவர்ந்து கொண்டு அரசாளத்
தொடங்கினான். அதனால், பாண்டியர் தொன்றுதொட்டு ஆட்சி புரிந்து
வந்த தம் நாட்டை இழந்து பெருமை குறைந்து பாண்டி நாட்டில்
ஓரிடத்தில் ஒடுங்கி வதிந்து வருவாராயினர். ஆகவே, அந்நாடு
களப்பிரர் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் அங்கு உயிர் வாழ்ந்து
கொண்டிருந்த பாண்டியர்களைப் பற்றிய செய்திகள் இந்நாளில்
தெரியவில்லை. சங்க நூல்களில் களப்பிரர் என்ற பெயர்
காணப்படாமையானும், வராகமிகிரர் என்பார் தென்னாட்டவரின்
வரிசையில் களப்பிரரைக் கூறாமையானும் அன்னோர் பிராகிருதம்,
பாலி ஆகியவற்றைத் தமக்குரிய மொழிகளாகக் கொண்டு
ஆதரித்துள்ளமையானும் அம்மரபினர் தமிழர் அல்லர் என்பதும்,
வடபுலத்தினின்றும் போந்த ஏதிலார் ஆவார் என்பதும் நன்கு
தெளியப்படும். எனவே, களப்பிரர் தென்னிந்தியாவினரே என்னும் சில
ஆராய்ச்சியாளரின் கொள்கை பொருந்தாமை காண்க. அன்றியும்,
தமிழ்நாட்டுக் குறுநில மன்னர் குடியினராகிய முத்தரையர் என்போர்
களப்பிரரேயாவர் என்று சிலர் கூறுவது சிறிதும் ஏற்புடையதன்று.
களப்பாள் என்ற சோணாட்டூரொன்றில் முற்காலத்தில் வாழ்ந்து
கொண்டிருந்த அரசியல் தலைவன் ஒருவன் களப்பாளன் என்று
சிறப்பித்து வழங்கப் பெற்றமையால், அவன் வழியினர் களப்பாளர்
எனவும்,     களப்பாளராயர் எனவும் குடிப்பெயர் பெற்றுப்
பெருமையோடு வாழ்ந்து வருவாராயினர். எனவே, தமிழராகிய
களப்பாளரும் ஏதிலாராகிய களப்பிரரும் ஒருவரே யாவரென்னும்
முடிவு எவ்வாற்றானும் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று. இதுகாறும்
விளக்கியவற்றால் களப்பிரர் தமிழர் அல்லர் என்பது தேற்றம்.”
இவ்வாறு டி.வி.சதாசிவப் பண்டாரத்தார் பாண்டியர் வரலாறு என்னும்
நூலில் எழுதியுள்ளார்.
 

விளக்க உரைநடை, ஒன்றை ஆராய்ந்து முடிவு கூறுவதற்கு முன்,
ஆய்வுப் பொருளைப் பல வகைகளாகப் பிரிவினை செய்து அதன்
அமைப்பு முறையைத் தெளிவாக எடுத்துக்காட்டும். இப்பகுப்பாய்வு
விளக்கம் உரைநடை ஆசிரியரின் கூர்த்த சிந்தனையின் விளைவே
என்பதை யாரும் மறுக்க முடியாது.


2.2.1 விளக்க உரைநடையில் தருக்கம்

 

விளக்க     உரைநடையின் அடியிழையாக இருப்பது தருக்கம்
(தர்க்கம்). தருக்கமாவது காரண - காரிய இயைபின் (அமைப்பின்)
வழிச் செல்வது. காரணம் - காரியம் என்பன யாவை? காரணம் முன்
நிற்பது ; காரியம் பின்னர் நிகழ்வது.
 

தருக்க     நெறி     சான்ற     உரைநடைக்குச்     சான்றாகப்
பின்வருவனவற்றைக் காணலாம்.
 

சேனாவரையர் உரைநடை
 

சேனாவரையர்     வடமொழி மரபைத் தழுவி உரை எழுதினார்.
அவ்வுரை செறிவும் திட்பமும் வாய்ந்ததோடு தர்க்க முறையிலும்
அமைந்ததாகும்.
 

“இறப்பாவது தொழிலது கழிவு. நிகழ்வாவது தொழில்
தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலைமை, எதிர்வாவது
தொழில்     பிறவாமை,     தொழிலாவது,     பொருளினது
புடைபெயர்ச்சியாகலின் அஃது ஒரு கணம் நிற்பது அல்லது
இரண்டு கணம் நில்லாமையின், நிகழ்ச்சி என்பது ஒன்று
அதற்கு இல்லையாயினும், உண்டல், தின்றல் எனப்
பல்தொழில் தொகுதியை ஒரு தொழிலாகக் கோடலின்
உண்ணாநின்றான். வாரா     நின்றான் என நிகழ்ச்சியும்
உடைத்தாயிற்று என்பது” (தொல்காப்பியம், சொல். வினையியல்)
 

மேலேயுள்ள சேனாவரையரது உரைநடை அறிவுச் செறிவும் தர்க்க
- நியாய சாஸ்திரங்களின் நுண்மையும் கொண்டது. இவரது
வடமொழிப் புலமை தமிழ்ப் புலமை போல் சிறப்புமிக்கது. இவரது
உரைநடையின் செறிவு, நுண்மை, நயம் கருதியே ‘சொல்லுக்குச்
சேனாவரையம்’ என்கிற வழக்கு நிலைபெற்றது.
 

சிவஞான முனிவரின் உரைநடை

சேனாவரையர் உரைநடையின் தாக்கத்தைச் சிவஞான முனிவரின்
மாபாடியத்தில் காணலாம். சிவஞானபோதம் என்னும் நூலுக்குச்
சிவஞான முனிவர் எழுதிய பேருரை மாபாடியம் என்று
குறிப்பிடப்படுகிறது.
 

திருவாவடுதுறை     ஆதீனத்தைச் சார்ந்த சிவஞான முனிவர்
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். வடமொழி,
தமிழ் இவ்விரண்டிலும் புலமையுடையவர். சிவஞானபோத மாபாடியம்,
இலக்கண விளக்கச் சூறாவளி, தொல்காப்பியச் சூத்திர விருத்தி

முதலிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார். மேலை நாட்டார்
பேச்சுவழக்கையொட்டி உரைநடை நூல்கள் எழுதிய காலத்தில்
சிவஞானமுனிவர் தூய செந்தமிழ் நடையில் தர்க்க முறையில் உயர்ந்த
நடையில் எழுதியது இங்குக் குறிப்பிடத்தக்கது.
 

“அதிகாரம் - அதிகரித்தல். அஃது இரு வகைப்படும். அவற்றுள்
ஒன்று வேந்தன் இருந்துழி இருந்து தன்நிலம் முழுவதும்
தன்னாணையின் நடக்கச் செய்வது போல, சொல் நின்றுழி நின்று பல
சூத்திரங்களும் பல ஓத்துக்களும் தன் பொருளே நுதலிவரச் செய்வது.
ஒன்று சென்று நடாத்தும் தண்டத்தலைவர் போல ஓரிடத்து நின்ற
சொல் பல சூத்திரங்களோடும் சென்று இயைந்து தன் பொருளைப்
பயப்பிப்பது. இவற்றிற்கு முறையே வடநூலார் யதோத்தேசபக்கம்
எனவும், காரிய கால பக்கம் எனவும் கூறுப. இது சேனாவரையர்
உரையானும் உணர்க.” (நன்னூல், விருத்தியுரை)
 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிவஞான முனிவரின் உரைநடை
நுட்பமான பொருளைத் தெளிவாக விளக்கமாகத் தர்க்க ரீதியாக
ஆராய்ந்து கூறும் தன்மையுடையது என்பதை உணரலாம்.