2.3 வருணனை உரைநடை

புலன் உணர்வு மூலம் ஏற்படும் அனுபவங்களை வருணித்துக்
காட்டும் உரைநடையை வருணனை உரைநடை (Descriptive
prose)
என்பர். இதைத் தனியே கொள்ளாமல் கருத்துரைக்கும்
உரைநடையிலேயே சிலர் அடக்கிக் காட்டுவதும் உண்டு.
மனிதர்களையும், பொருள்களையும் இவை வருணிக்கும். படிப்போரின்
உணர்வுகளைத் தட்டி எழுப்பும் ஆற்றல் இதற்கு உண்டு.
 

எழுதுவோர் ஒரு பொருளையோ மனிதரையோ இடத்தையோ
வருணிக்கும் நிலையில் அவ்வகை உரைநடையை வருணனை
உரைநடை
என அறிஞர்கள் பாகுபாடு செய்வர். புனைகதைகளிலும்,
பயண நூல்களிலும், கட்டுரைகளிலும் வருணனை பேரளவு
இடம்பெறும். விளக்க உரைநடையிலும் வருணனைக்கு இடம் உண்டு.
வருணனை எல்லா வகையான உரைநடையிலும் உண்டு.


2.3.1 வருணனையின் வகைகள்

 

புலன்களால் உணர்வனவற்றை அல்லது புலன்களின் வாயிலாக
உணரும் புறக்காட்சிகளைச் சொற்களில் மொழிபெயர்த்துக் காட்டுவதே
வருணனை ஆகும். நாம் ஒரு பொருளை நேரே பார்த்து
வருணிக்கலாம் ; பிறர் வாயிலாகக் கேட்டும் வருணிக்கலாம்.
நோக்குவோன் அல்லது கேட்போன், நோக்கப்படும் பொருள் அல்லது
கேட்கப்படும் பொருள் ஆகிய இரண்டே வருணனையின் அடிப்படை.
வருணனை உலகப் பொருள்களின் தோற்றத்தோடு தொடர்புடையது
என்று முன்னர்க் கூறினோம். பொருள் எவ்வாறு காட்சி தருகிறது
என்பதையும், அது எத்தகைய மனப்பதிவுகளை நம்மில்
உருவாக்குகிறது என்பதையும் வருணனை உணர்த்துகிறது. சுவை, ஒளி,
ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்தின் வகை தெரிவோனே
வருணனையில் வெற்றி பெற முடியும்.
 

நோக்குவோனுக்கும் நோக்கப்படும் பொருளுக்கும் உள்ள உறவை
ஒட்டி, புறநிலை நோக்கில் அமையும் வருணனை, அகநிலை நோக்கில்
அமையும் வருணனை என வருணனை இருவகைப்படும்.
 

புறநிலை நோக்கில் அமையும் வருணனை

புறநிலை நோக்கில் அமையும் வருணனையில் நாம் பொருளைக்
காண்பதில்லை.     உள்ளத்தால்     உணர்கிறோம்.     பின்வரும்
வருணனைகளை ஒப்பு நோக்கிக் காண்க.
 

“கிழக்கே பார்த்தான் ஒன்றுமில்லை. மேற்கே பார்த்தான்.
கண்ணெட்டிய தொலைவரை, அடைத்த கடைகள்,
வெறிச்சிட்ட தெருவீதி, வெள்ளை மெழுகியது மாதிரி,
வெயில் கானல் ஜ்வாலை விட்டு ஓவென்று கொளுத்துகிறது.
பட்டப்பகல் வேளையில் சாலைக்கடைவீதியை இப்படிக்
காண்பது அபூர்வம். எலெக்ட்ரிக் கம்பிகளில் காக்கைகள்
அங்கிங்காக அமர்ந்திருக்கின்றன. பூக்கடை ஓரத்துக்
குப்பைக் குவியல்களில் நாலைந்து தொட்டிப் பயல்கள்
எதையோ கிளறிக் கொண்டிருக்கிறார்கள். ஓடை ஓரமாக
ஒரு நாய் ஓடிப்போகிறது. பிளஷர் கார் போகிறது.
டிரான்ஸ்போர்ட் பஸ் ஒன்றையும்     காணவில்லை.
சக்கரத்திற்கு டயர்போட்ட கட்டை வண்டிகள், அங்கிங்காக
வெறுமனே கிடக்கின்றன. சரக்கு இறக்க முடியாத பென்ஸ்
லாரியொன்று தார்ப்பாயை மூடிக்கொண்டு வேகமாகப்
போயிற்று. கப்பென்று புழுதி புகையாக இறைத்தது.”
 

மேலே குறிப்பிட்ட பகுதி ஆ.மாதவனின் பறிமுதல் என்ற நாவலில்
இடம் பெற்றுள்ளது. இவ்வருணனையில் காட்சியை உள்ளவாறே
அறிவிக்கும் முயற்சி தெரிகிறது. நோக்குவோன் பொருளோடு ஒன்றிக்
கலந்து விடவில்லை.
 

நிலைநோக்கு வார்ப்பு வருணனை
 

நோக்குவோன் ஏதோ ஒரு நிலைத்த இடத்தில் இருந்து கொண்டு
தன் பார்வையை மட்டும் மெல்ல மெல்ல முற்கூறியவாறு ஓட்டி,
பார்வையில் பட்டவற்றையெல்லாம் வருணிப்பது ஒரு முறை. இதனை
நிலைநோக்கு வார்ப்பு வருணனை எனலாம்.
 

இராஜம் கிருஷ்ணனின் வளைக்கரம் என்ற நாவலின் ஒரு பகுதி
பின்வருமாறு :
 

“அந்த வீட்டின் முன்னறை அது. நான்கு பழைய
இரும்புக்கம்பி நாற்காலிகளின் நடுவே ஒரு வட்டமேஜை.
வட்ட மேஜைமீது வட்ட வட்டமாக ரோஜாப்பூக்களைப்
பின்னி இணைத்த லேசு விரிப்பு, வீட்டுப் பெண்மணிகளின்
கைத்திறனைக் காட்டுகிறது. கள்ளிப்பெட்டி அலமாரிகள்
இரண்டு எதிரும் புதிருமாகச் சுவர்களில் காட்சி தருகின்றன.
அவற்றில் புத்தகங்கள் மராத்தியிலும்,     ஆங்கிலத்திலும்,
போர்த்துகீசியத்திலும் தென்படுகின்றன. சுவரோரமாக ஒரு
பழைய கடைசல் பிடித்த மரமேசையில் ஆசிரியர் வீடு
என்பதைப் பறைசாற்றிக் கொண்டு     அடுக்கடுக்காக
நோட்டுக்கள் வீற்றிருக்கின்றன, இவை தவிர வெள்ளை
மங்கிய சுவர்களில் அங்கு வருபவரின் கண்ணைக்
கவருபவை வலை அட்டையில் பூநூல் வேலை செய்த
சித்திரங்கள்தாம். யானை     ஒன்று சிவலிங்கத்துக்குப்
பூச்சூட்டுகிறது. ஒரு     சித்திரத்தில்     குன்றொன்றில்
துளசியம்மன் எழுந்தருளியிருக்கிறாள். மற்றொரு படத்தில்
ஒரு பெரிய மாளிகை காணப்பெறுகிறது.     ஜிகினாக்
கொடிகளாலும் பொட்டுக்களாலும் அழகுறத் தைக்கப் பெற்ற
கருநீல வெல்வெட் பின்னணியில் குழலூதும் கண்ணன்
ராதையுடன் காட்சி தருகிறான். ஆர்மோனியத்தில் இசை
எழுப்பிய விரல்களே இந்தப் படங்களையெல்லாம்
உருவாக்கியிருக்குமோ என்று எண்ணிக் கொண்டே ஒரு
நாற்காலியில், ரகோத்தமரின் முன் மாதவன் அமர்ந்து
கொள்கிறான்.”
 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வருணனையில் மாதவன் என்பான்
அறையின் ஓரிடத்தில் நின்று கொண்டே பார்வையை மட்டும்
ஓட்டுகிறான். எழுதும் ஆசிரியை மாதவனின் நோக்கு நிலையில்
கண்டே, ஒவ்வொன்றையும் வருணிக்கிறார். இவ்வருணனையைப்
படிக்கும் நிலையில் நோக்குவோரின் இருப்புநிலையை நாம் சூசகமாக
உணர்ந்து கொள்கிறோம்.
 

சில வேளைகளில் நோக்குவோன் நிலையாக ஓரிடத்தில்
இல்லாமல் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இயங்கிக் கொண்டே
வருணிக்கலாம். இவ்வாறான வருணனையை இயங்குநிலை வார்ப்பு
(pattern from moving point) என்பர்.
 

சார்வுநிலை வருணனை
 

பார்க்கப்படும் பொருள் ஒன்றானாலும் பார்ப்போன் ஆர்வநிலை
காரணமாக, சார்வுநிலை காரணமாகக் காட்சி வேறுபடுகிறது. இங்ஙனம்
நோக்குவோனின் குறிக்கோளுக்கு ஏற்ப அமையும் வருணனையைச்
சார்வுநிலை வருணனை அல்லது ஆர்வநிலை வருணனை எனலாம்.
 

மேலே குறிப்பிட்டுள்ள வருணனைக்குப் பின்வரும் உரைநடைப்
பகுதி பொருத்தமாக உள்ளது.
 

“இக்கோயில் (தஞ்சைப் பெரிய கோயில்) சிவகங்கைச் சிறு
கோட்டைக்குள் உள்ளது. முதற்கோபுரம் கடந்ததும்
இராசராசன் கட்டிய மற்றொரு அகன்ற கோபுரம் உண்டு.
உள்நுழைந்ததும், கருங்கல் செங்கற்களால் பரப்பப்பெற்ற
சுமார் 500 அடி நீளமும் 250 அடி அகலமும் உள்ள ஒரு
பரந்த போர்வை போன்ற வெளிமுன் மேடை இருக்கின்றது.
அதன் மீது ஒரே கல்லாலான நந்தியும் அதனைப்
பாதுகாக்கக் கட்டிய நாயக்கர் மண்டபமும் உள்ளன.
எதிரில் இறைவன் கோவில் விமானமும் அடுத்து அம்மன்
திருக்கோவிலும் உள. உட்கோயில் இறையறை, அர்த்த
மண்டபம், மகா மண்டபம் தியாகராசர் சந்நிதியுள்ள தாபன
மண்டபம், நர்த்தன மண்டபம், வாத்திய மண்டபம் என்ற
ஆறு பகுதிகளை உடையது. கோவிலிலுள்ள ஏழு
வாயில்களிலும் 18 அடி உயரமும், 8 அடி அகலமும்
உள்ள 14 வாயிற்காவலர் சிலைகள் உள.”
 

இந்தச் சார்வு நிலை வருணனை டாக்டர் மா. இராசமாணிக்கனார்
எழுதிய ‘சோழர் வரலாறு’ என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
 

வருணனையை அமைக்கும் நிலையில் அனுபவம் குறைந்த
ஆசிரியர்கள் ஏராளமான பெயரடைச் சொற்களைப் (adjectives)
பெய்து எழுதுவர். பெயரடைகளை எவ்வண்ணம் பயன்படுத்துகிறோம்
என்பதே முக்கியம் ஆகும்.