2.4 எடுத்துரை உரைநடை |
கதை
சொல்லும் எல்லா நூல்களும் இவ்வகையில் அடங்கும்.
வேறு எந்த வகையான
உரைநடையையும்விட மக்கள் விரும்பிப்
படிப்பது இதுவே. வெறும் நிகழ்ச்சிகளை
ஒன்றன்மேல் ஒன்றாய்
அடுக்கிக்காட்டி அச்சத்தையும் புதிரையும்
ஊட்டும் துப்பறியும்கதை
முதல், பாத்திரப் படைப்பில் சிறந்து
நிற்கும் இலக்கியத் தகவுடைய
புனைகதை இலக்கியம் வரை எல்லாமே எடுத்துரை
உரைநடையில் அமைந்தவையே.
வாழ்க்கை வரலாறு, நாட்டு வரலாறு போன்றன இவ்வகையில் அடங்கும். |
ஒரு
செயல் பற்றியோ, வாழ்வின் இயக்கம் பற்றியோ விவரிப்பது எடுத்துரை
உரைநடை (Narrative prose) . ‘என்ன நடந்தது?’
என்னும் வினாவுக்கு இது விடை தரும். சற்றே எளிமைப்படுத்திக் கூறினால்
எடுத்துரை உரைநடை என்பது கதை கூறும் உரைநடையே
ஆகும். |
வருணனைக்கும்
எடுத்துரைத்தலுக்கும் வேறுபாடு உண்டு. ஒரு பொருள் குறித்த
தருணத்தில் எவ்வாறு காட்சி தருகிறது என்று காட்டும் வகையில்
எழுதப்படுவது வருணனை. அது வரையப்பட்ட உருவப்படம் போன்றது.
‘கிளிக்’கென எடுக்கப்பட்ட புகைப்படக்காட்சி போன்றது. தன்னளவில் இயக்கமின்றி நிற்பது. எடுத்துரை என்பதோ ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படத்தை ஒத்தது. மாறிக் கொண்டே இருக்கும் இயக்கநிலையைச் சித்திரிப்பது. எடுத்துரை உரைநடை கதையைப் பற்றிச் சொல்வதன்று ; கதையையே சொல்வது. |
எடுத்துரையில்
இரு வார்ப்புகள் உண்டு. நடந்த நிகழ்ச்சிகளை
அவை எவ்வண்ணம்
நிகழ்ந்தனவோ அதே வரிசையில் நிரல்படச்
சொல்வது ஒருமுறை. நிகழ்ச்சிகளின் வரிசை முறையைச் சற்றே முன்
பின்னாக மாற்றி எழுதுவது மற்றொரு முறை. |
எடுத்துரை
உரைநடை நிகழ்ச்சிகளை நிஜ அனுபவ உலகமாய்ப் படைக்க வேண்டியிருப்பதால் உணர்ச்சி
மயமான கட்டங்களை நாடகப் போக்கில் நேரே காண்பது போல் சித்திரித்துச் செல்லும்.
பின்வரும் காட்சியைக் காண்க. |
“தன்னை
நோக்கி வந்த மாதவனை ஜெயின் அப்படியே
சிறிது நேரம்
உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். பிறகு
பெரியதாகச் சிரிக்க ஆரம்பித்தார். |
நீ
ஒரு பசுங்கொம்பு... போரில் முதிர்ந்த காளையுடன்
உன்னால் போரிட முடியுமா?... அம்மா உன்னைப் பால்
சாப்பிடக் கூப்பிடுகிறாள்... போ... போ.” |
அகர்வால்
மாதவனை ஒதுங்கி இருக்கும்படி சைகை
செய்தான். |
மாதவனுக்கு
ஒன்றுமே புரியவில்லை. இவருக்குத்
தன்மேல் ஏன் இவ்வளவு கோபம்?
பூமாவைச் சேர்ந்த
எல்லோருமே அவர் எதிரிகளா? திடீரென்று அவனுக்குப்
பூமாவின்மேல் ஆத்திரமாக வந்தது.
இவர் இப்படி
இருப்பதற்கு இவள்தான் காரணம் !
அவன் ஜெயினின்
மனைவியை நோக்கினான். அவள் முகத்தில் எந்த விதமான
உணர்ச்சியும் இல்லாமல்,
ஆடாமல் அசையாமல்
கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். |
ஜெயின்
ஆப்பிள் நறுக்குவதற்காகப்
பக்கத்தில்
வைத்திருந்த கத்தியை மாதவனிடம்
விட்டெறிந்தார்.
அவன் இதை எதிர்பார்க்கவில்லை.
உடனே அவர்
அகர்வால் பையிலிருந்த பேனாவை எடுத்துக்
கொண்டார்.
பேனாவைக் கத்தி போல் கழற்றினார். |
“கீழே
வைத்திருக்கும் கத்தியை எடு. . . சண்டைக்குத்
தயாரா?” என்று கேட்டுக் கொண்டே கட்டிலிலிருந்து கீழே
இறங்கினார். |
மாதவன் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தான். |
இப்பகுதி
இந்திரா பார்த்தசாரதியின் திரைகளுக்கு
அப்பால்
என்ற
பகுதியிலுள்ள உரைநடையாகும். இக்கதையில்
வரும் ஜெயின் ‘ஸீஷோப்
ரென்யா’ (Schizophrenia) என்னும் மனவியாதியால் பீடிக்கப்பட்டவர்.
அடங்கி ஒடுங்கி இருந்த அவரது அமுக்கப்பட்ட மனோவிகாரங்கள்
பீறிட்டெழுந்த நிலையில் தன்னைப் பிறருக்குக் காட்டிக்
கொள்ள எண்ணித் தாறுமாறாக
நடந்து கொள்கிறார்.
அவரது இப்போதைய
அவல
நிலையைக் காட்சியாகச்
சித்திரித்தால்தான் படிப்போரின்
மனத்தில் அவர்பால் இரக்கத்தை
எழுப்ப முடியும். |
எடுத்துரை
உரைநடை ஏனைய உரைநடை வகையும் கலந்தே
வரும் தன்மையுடையது. ஒரே செய்தியை விளக்க உரைநடையாகவும்
எழுதலாம் ; எடுத்துரை
உரைநடையாகவும் எழுதலாம். கீழே
காட்டியிருக்கும் பகுதியை ஒப்பிட்டுக் காண்க. ஓர் உழவன் தனக்கேற்பட்ட பொருளாதாரச் சிக்கலால் தன்னிடமிருந்த நிலத்தைப் பக்கத்துத்தெருவிலுள்ள
பணக்காரனிடத்தில் விற்று
விட்டான்
என்பதே சொல்லப்படும் செய்தி. |
“அவர்
ஓர் ஏழை விவசாயி. பெயர் வடிவேலுத்தேவர். தன் மூத்த பிள்ளையின்
திருமணத்திற்காகக் கடனாக வாங்கியிருந்த இரண்டாயிரம் ரூபாயைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவர் சிரமப்பட்டார். கடன் கொடுத்தவர் நெருக்கினார். எனவே, தன் பிதுரார்ஜித
சொத்தாக இருந்த இரண்டுமா நிலத்தை விற்று விடலாம் என்று முடிவு செய்தார். அடுத்த தெருக்காரர் ஒருவரிடம் விலை பேசி விற்றுக் கடனை அடைத்தார்.” |
இது
விளக்க உரைநடை. ஒரு செய்தியை விளக்கிச் சொல்வதோடு இதன்
பணி முடிந்து விடுகிறது. இதே செய்தியை எடுத்துரை
உரைநடை எப்படிச் சொல்லும் தெரியுமா? |
“வடிவேலுத்தேவருக்கு
என்ன செய்வதென்றே தெரியவில்லை.
கவலையால்
உருத்தெரியாது இளைத்து விட்டார். கடன்காரர்கள் எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்ற பயமே அவரைத் தடுமாறச் செய்தது.
எது எப்படி இருந்தாலும் போன வருஷம் மூத்த மகனின் கல்யாணத்திற்காக
வாங்கியிருந்த ரூபாய் இரண்டாயிரத்தையும் நான்கு நாட்களில்
செலுத்தியாக வேண்டும். ‘கணக்கைத் தீர்த்துடுங்க, இல்லே, கோர்ட்டுப்படி
ஏறுறதின்னாலும் ஏறுங்க...’ என்று செட்டியார் எச்சரித்துவிட்டுப் போய்விட்டார். |
துண்டை உதறித்
தோளில் போட்டுக் கொண்ட தேவர் திண்ணையை விட்டு எழுந்தார். அவர் மானஸ்தர். இத்தனை வருஷம் எப்படியோ
வாழ்ந்துட்டு இந்த வயதுக்கு
மேலே கோர்ட்படி
ஏறுவதா?. . . |
வீட்டுக்கு
எதிரே இருந்த இரு துண்டு நிலம் அவர் பார்வையில்
பட்டது. |
தந்தையின்
வழியாக வந்த பிதுரார்ஜித சொத்து அது. இருபோகம் விளையும். நல்ல மண். பொன் போட்டால் பொன்னை எடுக்கலாம் என்று ஊரில் பேசுவார்கள். |
‘நிலத்தை
விற்றுத்தான் கடனை அடைக்க
வேண்டும்’ என்ற முடிவுக்குத் தேவர் வந்துவிட்டார்.
வேறு வழி. . . ? அப்போது தான் உலகநாதம்
அங்கு வந்தார். பக்கத்துத்
தெருக்காரர். அவருக்கு புகையிலை வியாபாரம். உலகநாதம் ஒரு
மாதிரியானவர். ‘ஊரை அடிச்சி உலையிலே
போடறவன்’ என்கிற பேர் அவர் தலையெடுத்த காலத்திலிருந்தே அவருக்கு
உண்டு. நிலம் வாங்குவதற்கு என்று பணத்தை மடியில் கட்டிக்கொண்டு
வேறு யார் அலைகிறார்கள்? அவரை விட்டால் வேறு ஆளில்லை. |
உலகநாதத்தைப்
பார்த்ததும் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல் தேவர் மகிழ்ந்தார். மெல்ல விஷயத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டார். மீனே வலிய வந்து அலகில் மாட்டிக் கொள்ளும் போது கொக்கு சும்மா விடுமா? |
பேச்சு சீக்கிரமே முடிந்து விட்டது. |
அடுத்த வாரமே ரிஜிஸ்ட்ரேஷனை வைத்துக்
கொள்ளலாம் என்ற
முடிவுக்கு இருவரும் வந்தனர். |
இரண்டு
மா நிலமும் இரண்டாயிரம் ரூபாயாக மாறி
வடிவேலுத்தேவரின் கையை நிறைத்தது.” |
எடுத்துரை உரைநடை
செய்தியை வாளாசொல்லாமல், அந்த நிகழ்ச்சி நம் முன்னே நடப்பது போலச் சித்திரிக்கிறது. முன்னே கண்ட விளக்க உரைநடையில் செய்தியை மட்டுமே அறிந்தோம். இதிலோ செய்தி மட்டுமன்றி,
அதன் விளைவான அனுபவமும் நமக்குக் கிட்டுகிறது.
எடுத்துரை உரைநடையில் நாம் பெறுகிற மிகப்பெரிய இலாபம்
இந்த அனுபவமே. அனுபவங்களை யாராவது இழக்க விரும்புவார்களா? இவ்வாறு எடுத்துரை உரைநடை அமைந்துள்ளது. |