3.2 பாரதியாரின் உரைநடைக் கொள்கை
 

கவிதையின் நுணுக்கங்களையெல்லாம் உணர்த்தும் உரையாகவே
இடைக்காலத்தில் வசனம் பயன்பட்டது. சென்ற இரு நூற்றாண்டுகளாக
வசனம் இலக்கியமாகப் படைக்கப்பட்டு, உலக இலக்கியங்களில்
தனக்குரிய இடத்தை அடைய முயன்று வருகிறது.
 

“உள்ளத்திலே நேர்மையும் தைரியமுமிருந்தால் கை பிறகு
தானாகவே நேரான எழுத்து எழுதும். தைரியம்
இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டிமாடு போல
ஓரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும்; வாலைப்பிடித்து
எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது. வசன நடை,
கம்பர், கவிதைக்குச் சொல்லியது போலவே தெளிவு,
ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக இருக்க
வேண்டும்... உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக்
கொண்டால், கை நேரான தமிழ்நடை யெழுதும்”
 

உள்ளக்கருத்தை மாற்றியோ, திரித்தோ சொல்லும் பொழுது
நடையில் தெளிவில்லாமல் போய்விடுகிறது.
 

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்

வாக்கினிலே ஒளியுண்டாகும்

என்பது பாரதியார் வாக்கு. இந்த உண்மை ஒளியே உள்ளத்தின்
இருளாகிய குழப்பங்களையும் கலக்கங்களையும் தெளிவித்து விடுகிறது.
இத்தகைய தெளிந்த தூய ஒளி மிகுந்த உள்ளத்திலிருந்து பிறக்கும்
இலக்கியத்திலும் இதே பண்புகள் சுடர்விடுகின்றன. அவை
ஆசிரியரின் தனித்தன்மையை ஏற்று வெளிவருகின்றன.
 

சொல்ல வந்த பொருளை நேரே சொல்வது ; பொருளைத் திரித்து
மாறுபடச் சொல்லாமலிருப்பது; அவசியமில்லாத அடைமொழிகளைச்
சேர்க்காமலிருப்பது; உலகத்தார்க்குப் பொருள் விளங்கும்படி
எழுதுவது; மனமறிந்த உண்மையை அச்சமின்றி உள்ளவாறே
சொல்வது. இவை யாவும் நடையின் தெளிவுக்கு இலக்கிய ஆசிரியன்
உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் என்று பாரதி
காட்டுகின்றார். ஆகவே, பேசுவது போல எழுதும் பொழுது நடையில்
தெளிவு ஏற்படுவதோடு, எளிமையும் உண்மையும் சேர்வதால், வசன
இலக்கியம் முழுமையும் அழகும் உடையதாகிறது.