3.6 பாரதியாரின் கடித இலக்கிய நடை

கடிதம் எழுதும் கலை தமிழ் இலக்கிய மரபிற்குப் புதுமையன்று.
சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய மடல்
முன்னோடியாக விளங்குகிறது. பாரதி தன் படைப்புகளைக்
கற்பனையில் அமைந்த கடித இலக்கிய வடிவில் தரவில்லை.
தன்னுடைய மனைவிக்குக் காசியிலிருந்து கடிதம் எழுதுகின்றார்.
 

"நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப்
படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன் என்று எழுதி,
கவலைப்படும் நேரத்திற்கும் கூடத் தமிழ் மருந்தாகும் என்பதை
நுட்பமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பரலி சு. நெல்லையப்பருக்குக்
கடிதம் எழுதும் போது அவருடைய தமிழுணர்ச்சி வீறுகொள்கின்றது.
 

‘தம்பி, நான் ஏது செய்வேனடா ! தமிழைவிட மற்றொரு
பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்த முண்டாகிறது. . . தமிழ்நாடு வாழ்க என்றெழுது. தமிழ்நாட்டில்
நோய்கள் தீர்க என்றெழுது. தமிழ்நாட்டில்      வீதிதோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் மலிக என்றெழுது, அந்தத் தமிழ்ப்
பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க
என்றெழுது’.
 

என்றெல்லாம் நெல்லையப்பரிடம் உணர்ச்சி நடை பொலிய
வேண்டுகின்றார். தமிழும் தமிழ்நாட்டு மக்களும் தமிழ்க் கல்வியைப்
பெறவேண்டும் என்னும் அவருடைய அவா இக்கடித நடையால்
புலனாகும்.
 

ஐரோப்பியரிடம் காட்டும் அடிமைத் தனத்தை ‘ஐரோப்பிய பூஜை’
என்னும் சொல்லால் குறிப்பார். ‘முடம்படும் தினம்’, ‘மூத்த
பொய்மைகள்’, ‘பொங்கி வரும் பெருநிலவு’, ‘பெட்டைப் புலம்பல்’
முதலாய தொடர்கள் அவர்தம் கவிதைக்கும் உரைநடைக்கும் வாய்த்த
அருஞ்சொற்களாகும். மொழி ஆளும் திறம் குறித்து அவரே நன்கு
சிந்தித்ததால் இத்தகைய சொல்லாட்சிகள் அவருடைய மொழிநடையில்
அமைந்தன எனலாம். அது குறித்து அவரே ‘வேதரிஷிகளின்
கவிதையில்’ நடையின் தெளிவுக்குரிய கூறுகளைக் கூறுவார். சொல்ல
வந்த பொருளை, நேரே சொல்வது ; பொருளைத் திரித்து மாறுபடச்
சொல்லாமலிருப்பது ;     அவசியமில்லாத     அடைமொழிகளைச்
சேர்க்காமலிருப்பது, உலகத்தார்க்குப் பொருள் விளங்கும்படி
எழுதுவது ; மனமறிந்த உண்மையை அச்சமின்றி உள்ளவாறே
சொல்வது என்பன பாரதியின் மொழித்திறன் கொள்கைகளாகும்.
இவை அனைத்துக்கும் இலக்கியமாகவே பாரதியின் கட்டுரைகள்
விளங்குகின்றன.