3.7 பாரதியாரின் உரைநடைக் கூறுகள்

உரைநடை வகையினை ஆராய்ந்த திறனாய்வாளர்கள் பொதுவாக
அதன் கூறுகளை ஒன்பது வகையாகப் பகுத்துள்ளனர். இவற்றுள்
சிலவற்றைப் பிறிதொன்றனுள்ளும் அடக்கிக் காணலாம். சான்றாகத்
தருக்க முறையும், திறனாய்வு முறையும் மிக நெருங்கிய
தொடர்புடையனவாகும். பாரதியின் உரைநடைத் தமிழை ஆராய்ந்து
பார்த்தால் இவ்வெல்லா வகையான கூறுகளும் அவர்தம் எழுத்தில்
மிளிர்வதை உணரலாம். அவற்றுள் இன்றியமையாத சில
உரைநெறிகளில் அவர்தம் தனித்தன்மை புலனாவதைக் காண்போம்.


3.7.1 தருக்க முறை

 

ஒருவர் தம் கருத்தைச் சொல்லும் போது பிறர் அதனை ஏற்குமாறு
காரண காரியங்களை வகைப்படுத்திக் காட்டி அறிவியல் பூர்வமாக
விளக்குதல் இவ்வகையினதாகும். இத்தகைய விவாத முறையினை
முன்னையோர் அளவை நூல் வகையில் அடக்கினர்.
 

பாரதியின் கட்டுரைகளில் தம் கருத்திற்காக வாதிடும் போது
இவ்வழகிய நடைத்திறன் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது.
பெண் ஆணுக்கு அடிமையாக இருத்தலைப் பற்றிய உரையாடல்
சந்திரத் தீவு எனும் கட்டுரையில் வருகின்றது. ‘பெண்களை ஏன்
அடிமையாக்க வேண்டும்?’ என்னும் வினாவினை, சந்திரத்தீவின்
மந்திரியாகிய ராஜகோவிந்தன் கேட்கின்றான். அதற்கு ராஜா
கங்காபுத்திரன் பின்வருமாறு மறுமொழி சொல்லுகின்றான்.
 

பெண் சரீர பலத்தில் ஆணைக் காட்டிலும் குறைந்தவள்.
அவளாலே ஸ்வாதீனமாக வாழ முடியாது. தனிவழி
நடக்கையிலே துஷ்டர் வந்து கொடுமை செய்தால் தன்னைக்
காத்துக் கொள்ள வலியில்லாதவள். குழந்தை ஸம்ரக்ஷணம்
முதலிய அவசியங்களாலே உழுது பயிரிட்டுத் தொழில் புரிந்து
ஜீவனம் செய்வதில் இயற்கையிலே பெண்ணுக்குப் பல
தடைகள் ஏற்படுகின்றன. அப்போது அவள் ஆஹார
நிமித்தமாக ஆணைச் சார்ந்து நிற்றல் அவசியமாகிறது. பிறன்
கைச் சோற்றை எதிர்பார்த்தால் அவனுக்கடிமைப்படாமல்
தீருமா? என்றான்.
 

ஆனால் இதனை மறுத்து சுதாமன் பதிலிறுக்கும் போது
பாரதியாரின் கருத்துகளில் தருக்கமுறை சுடர் விடுவது தெளிவாகும்.
 

பெண்கள் உழவு முதலிய தொழில் அனைத்திலும் ஆண்
மக்களுக்குச் சமமான திறமை காட்டுகிறார்கள். மேலும், அவர்களுக்கு
ஆண்மக்கள் சம்பாத்யம் பண்ணிப் போடாமல் அவர்கள் சம்பாதித்து
ஆண்மக்களுக்குச் சோறு போடும் நாடுகளிலேகூட, ஆண்மக்கள்
பெண் மக்களை அடிமை நிலையிலேதான் வைத்திருக்கிறார்கள். சரீர
பலத்தில் ஸ்திரீகள் ஆண்களைவிட இயற்கையில் குறைந்தவர்கள்
என்பது மாத்திரம் மெய். இது மனிதருக்கு மட்டுமன்று எல்லா
ஜந்துக்களும் அப்படியே.... பலங்குறைந்த உயிரை பலம் மிகுந்த உயிர்
துன்பப் படுத்தலாம் என்ற விதி சகல பிராணிகளிடையேயும்
காணப்படுகிறது. மனிதர் அதை எல்லையில்லாமல் செய்கிறார்கள்
என்னும் கூற்றில் ஆணுக்குப் பெண் அடிமையாய் விளங்குகிற
காரணத்தைத் தருக்க நெறி மூலம் விளக்குகின்றார்.


3.7.2 வருணனை முறை

 

ஒரு பொருளையோ அல்லது காட்சியையோ வருணித்துக் காட்டும்
போது இந்நடையின் தனிநிலை புலனாகின்றது. புலன்களால்
உணர்வனவற்றை அல்லது புலன்களின் வாயிலாக உணரும்
புறக்காட்சிகளைச் சொற்களில் மொழிபெயர்த்துக் காட்டுவதே இவ்வகை
வருணனை எனலாம். பாரதியின் சிதம்பரம் என்ற கட்டுரையினை
இவ்வருணனை முறைக்குரிய சான்றாகக் கொள்ளலாம்.
 

“காலை பத்து மணி இருக்கும். நான் ஸ்நானம் செய்து பூஜை
முடித்து, பழம் தின்று, பால் குடித்து, வெற்றிலை போட்டு,
மேனிலத்திற்கு வந்து நாற்காலியின்மேல் உட்கார்ந்து கொண்டு இன்ன
காரியம் செய்வதென்று தெரியாமல் வானத்தைப் பார்த்துக்
கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு எதிரே வானம் தெரிகிறது. இளவெயில்
அடிக்கிறது. வெயிற்பட்ட மேகம் பகற் சந்திரன் நிறங்கொண்டு
முதலையைப் போலும் ஏரிக்கரையைப் போலும், நானாவிதமாகப்
படுத்துக்கிடக்கிறது. எதிர்வீட்டில் குடி இல்லை. அதற்குப் பக்கத்து
வீட்டிலிருந்து சங்கீத ஓசை வருகின்றது. வீதியிலிருந்து குழந்தைகளின்
சப்தம் கேட்கிறது. . . வீதியில் ஒருவன் உஹு கும் என்று
தொண்டையை லேசாக்கி இருமித் திருத்திக் கொள்ளும் சப்தம், ...
‘அரிசி, அரிசி’ என்று விற்றுக் கொண்டு போகிற ஒலி இப்படிப்
பலவிதமான ஒலிகள் ஒன்றன்பின் மற்றொன்றாக வந்து செவியில்
படுகின்றன. இந்த ஒலிகளையெல்லாம் பாட்டாக்கி இயற்கைத்
தெய்வத்தின் மஹாமௌனத்தைச் சுருதியாக்கி என்று மனம்
அனுபவித்துக் கொண்டு இருந்தது.”
 

பாரதியின் இவ்வருணனையால் காலைக் காட்சி நம் மனக்கண்முன்
விரிகின்றது. அங்கு ஒலிக்கின்ற ஒலிகள் நம் செவிக்குள்ளும் ஒலித்தது
போன்ற ஓர் உணர்வு நம் முன்னே பிறக்கின்றது. கேட்போரின்
உணர்ச்சிகளைத்     தூண்டவல்லதாக இவ்வருணனைத் திறம்
அமைந்துள்ளதை உணரலாம். புறச்சூழலை நம் மனத்துள் எழுப்பும்
அரிய திறம் இந்நடையால் தெளிவுறும்.


3.7.3 நாடக முறை

செய்திகளைப் புலப்படுத்தக் கட்டுரையின் இடையிடையே நாடக
மாந்தர்கள் உரையாடுவது போலவே சில காட்சிகளை அமைத்துள்ளார்
பாரதியார். ‘கொட்டையசாமி’யில் இவ்வுத்தியைக் கையாளுகிறார்.
ஜமீன்தாருக்கும் கொட்டையசாமிக்கும் இடையே நடக்கும் உரையாடல்
நாடக மரபிலேயே அமைந்துள்ளது. காட்சியை விவரிப்பது போல
முதலில் ஜமீன்தாரின் தோற்றத்தை நம் கண்முன் கொண்டுவந்து
நிறுத்துகிறார்.
 

பலாச் சுளைகளைப் போல் மஞ்சளாகக் கொழுக்கென்ற உடம்பும்
பரந்த மார்பும், விரிந்த கண்களும், தலையில் ஜரிகைப்பட்டுத்
துண்டும், கைநிறைய வைர மோதிரங்களும், தங்கப் பொடிடப்பியும்,
தங்கப்பூண்     கட்டிய     பிரம்புமாக     இந்த     ஜமீன்தார்
ஆனித்திருவிழாவின்போது... கல்யாண ஜமுக்காளத்தில் பட்டுத்
தலையணைகளின் மீது சாய்ந்து கொண்டு... அப்பொழுது
கன்னங்கரேலென்ற நிறமும், மலர்போலத் திறந்த அழகிய இளைய
முகமும் நெருப்புப் பொறி பறக்கும் கண்களுமாக இருபத்தைந்து
வயதுடைய இளைஞன் ஒருவன் வந்து தோன்றினான். இவன் பெயர்
கொட்டைய நாயக்கன். இருவருக்குமிடையே உரையாடல் தொடர்கிறது.
 

ஜமீன்தார் : ‘வாடா, கொட்டையா’
 

கொட்டையா : ‘சாமி, புத்தி’
 

ஜமீன்தார் : ‘காவி வேஷ்டி உடுத்திக்கொண்டிருக்கிறாயே

     என்ன விஷயம்?’
 

கொட்டையனிடமிருந்து மறுமொழி இல்லை.
 

ஜமீன்தார் : ‘சந்நியாசம் வாங்கிக் கொண்டாயா?’
 

கொட்டையன்: ஆமாம்
 

இவ்வாறே இவர்கள் உரையாடல் நாடக முறையில் தொடர்கின்றது.
கட்டுரையினிடையே இவ்வாறு நாடக முறையில் எழுதுகின்ற
இயல்பினைப் பாரதி எழுத்துகள் பலவற்றிலும் காணலாம்.


3.7.4 எடுத்துரை முறை

 

உரைநடைத் திறனாய்வாளர்கள் அனைவரும் இம்முறையைக்
கதை கூறும் உரைநடை முறை என்பர். தமிழ் உரைநடையில்
பேரளவினதாக     விளங்குவது இம்முறையே யாகும். ஒரு
செயல்பற்றியோ, வாழ்வின் இயக்கம் பற்றியோ விவரிப்பது
எடுத்துரை உரைநடையாகும். பாரதியின் உரைநடைப் படைப்புகளுள்
சந்திரத் தீவு, மலையாளத்துக் கதை, டிண்டிம சாஸ்திரியின்
கதை
, கொட்டையசாமி, ஸ்வர்ணகுமாரி முதலாயின எடுத்துரை
உரைநடை வகையைச் சார்ந்தனவாகும்.
 

சொல்லப்படும் நிகழ்ச்சிகளைக் காரண காரிய இயைபுகளோடும்
தொடக்கம், உச்சம், வீழ்ச்சி ஆகிய சிறுகதைப் பண்புகளோடும்
பாரதியார் இப்படைப்புகளில் அமைத்துக் காட்டுகின்றார். அடிமை
வாழ்வின் தன்மையை ஓநாயும் வீட்டு நாயும் பகுதியில் கதை
கூறுவது போல அமைத்திருக்கும் நெறி இவ்வகை நடைக்குச்
சிறந்த எடுத்துக்காட்டாகும்.
 

ஓநாயும் வீட்டு நாயும்

தென் இந்தியாவிலுள்ள மன்னார் கடற்கரையை யடுத்து ஒரு
பெருங்காடு இருக்கிறது. அக்காட்டிற்கும் அதைச் சுற்றியிருந்த அநேக
கிராமங்களுக்கும் அதிபதியாய் ஒரு பாளையக்காரர் இருந்தார். அவர்
பெயர் உக்கிரசேனப் பாண்டியன். அவர் யுத்தப் பிரியர். அவர் புலி,
கரடி, யானை, சிம்மம் முதலான காட்டு மிருகங்களை
வேட்டையாடுவதில் வல்லவர். பல வகையான வேட்டை நாய்கள்
அவரிடத்தில் இருந்தன. அதிகாலையில் ஒரு நாள் அவர்
வேட்டைக்குப் புறப்பட்டார். தான் மிகுந்த அன்பு பாராட்டி வளர்த்து
வந்த ‘பகதூர்’ என்ற ஒரு நாயைத் தன் கூடக்கூட்டிக் கொண்டு
சென்றார். அந்த நாயானது வெகுகாலமாய்க் காட்டிலே இருந்த
படியால் அந்தக் காட்டில் யதேச்சையாய்ச் சுற்றித் திரிய சமயம்
வாய்த்தவுடனே     ஆனந்த     பரவசப்பட்டுக் கண்ட கண்ட
விடத்திற்கெல்லாம் ஓடியது. அன்று ஒரு ஓநாய் தன் வழியில்
குறுக்கிட்ட பகதூரைப் பார்த்து அதிசயப்பட்டு அத்துடன் சம்பாஷிக்க
விருப்பங் கொண்டது.
 

ஓநாய்

;
பகதூர் உமது கழுத்தில் அவ்வளவு பெரிய தடம் படக் காரணமென்ன?

பகதூர்
(வீட்டுநாய் )
 

;
ஓ, அது ஒன்றுமில்லை. எனக்குக் கழுத்தில் தங்கப்பட்டை போட்டிருந்தது. அதன் தடம் தெரியலாம்.

ஓநாய்
 

;
அந்தப் பொன் பதக்கம் எங்கே? நீர் ஏன் அதைப் போட்டுக் கொண்டு வரவில்லை?

பகதூர்
 

;
என்னை வெள்ளிச் சங்கிலியால் கட்டும்
பொழுதுதான் அதை என் கழுத்தில் போடுவார்கள்

ஓநாய்
 

;

உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா? நீ ஒரு
அடிமையாய்     இருந்தும்     மெத்த
ஜம்பமாய்ப் பேசினாய் ; நான் சுதந்திரப்
பிரியன். எனக்கு எஜமானனும் இல்லை,
சங்கிலியும் இல்லை. கஷ்ட வாழ்வாய்
இருப்பினும் நான் சர்வ சுதந்திரன்.
யதேச்சையாய் எங்கும் செல்வேன்,
எதையும் தின்பேன்,     எதையும்
செய்வேன், எவரோடும் சேர்வேன்...
இவ்வார்த்தைகளைக் கேட்ட பகதூர்
வெட்கமடைந்து திரும்பிப் பாராமல் ஓடிப்
போய்விட்டது.


3.7.5 எள்ளல் நடை

நகைச்சுவையோடு, அதே சமயத்தில் குற்றம் நெஞ்சைச் சுடுமாறு
கூறுவதை இவ்வகையினுள் அடக்கலாம். குறை காணும் போக்கினைச்
சுவையுணர்வோடு தருவது எள்ளல் நடை (Satirical) என்பர்.
வஞ்சப் புகழ்ச்சி. அங்கதம் முதலாயின இதற்கு இணை எனலாம்.
நகைத்திறத்தோடு குற்றங்காணும் இயல்பு பொதிந்த உரையினைப்
பாரதியார் மிக நுட்பமாகக் கையாள்வது குறிப்பிடத்தக்கது.
நகைச்சுவை தரும் நடையினையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி
எள்ளல் திறத்தினைச் சமூக உணர்வோடு காணும் நெறிகள் பாரதியின்
கட்டுரைகளில் காணக்கிடக்கின்றன. நையாண்டி உணர்ச்சியினை
இவ்வகை நடைகளில் காணலாம். தமிழ் நாட்டிலே அப்பொழுது
விளங்கி வந்த இசைச் சூழலைப் பாரதியார் தனக்கேயுரிய நடையில்
எள்ளல் ததும்ப விவரிக்கின்றார்.
 

“நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே
வருகிறேன். பாட்டுக்கச்சேரி தொடங்குகிறது. வித்வான்
‘வாதாபி கணபதிம்’ என்று ஆரம்பஞ் செய்கிறார். ‘ராமநீ
சமான மெவரு’ , ‘மரியாத காதுரா’, ‘வரமுலொச்சி.. . .’
ஐயையோ, ஐயையோ, ஒரே கதை எந்த ஜில்லாவுக்குப் போ,
எந்த கிராமத்திற்குப் போ, எந்த வித்வான் வந்தாலும்
இதே      கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு
இரும்புக்காதாக இருப்பதால் திரும்பத் திரும்ப ஏழெட்டுப்
பாடல்களை     வருஷக்     கணக்காகக் கேட்டுக்
கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள     தேசங்களில்
இந்தத்      துன்பத்தைப்     பொறுத்துக் கொண்டிருக்க
மாட்டார்கள்.”
 

இப்பகுதியில்     தமிழிசையை விரும்பாத தமிழர்களையும்
அவர்களுக்குச் செவியின்பம் நுகரத் தெரியாத நிலையினையும்
நுட்பமாகக் காட்டுவார் பாரதி.