4.1 உ.வே.சா. வின் தமிழ் வாழ்வு
|
உ.வே.சாமிநாதையர் தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு அருகிலுள்ள உத்தமதானபுரத்தில் 19.2.1855 இல் பிறந்தார்; தந்தை வேங்கட சுப்பையர்;
தாய் சரசுவதி அம்மாள்; இயற்பெயர் வேங்கடநாதன்.
திருவாவடுதுறையில் ஆசிரியர் இட்ட பெயர்
சாமிநாதன். தந்தையே முதல் தமிழாசான்; அவர் நிகண்டு, சதகம்
போன்ற கருவிநூல்கள் கற்பித்தார்.
திண்ணைப் பள்ளியில் பயின்று முடித்த
உ.வே.சா. விற்குத் தமிழில்
சுவையுண்டாக்கித் தமிழ் விதை விதைத்த முதற் குரு அரியலூர் சடகோப ஐயங்கார். தமிழ் நூற் பரப்பைக் காட்டிப்
பன்னூல் பயிலும் பேரார்வமூட்டியவர் குன்னம் சிதம்பரம் பிள்ளை. அரியலூர் சடகோபையங்கார் இசையுடன் தமிழறிவையும் உ.வே.சா. அவர்களுக்கு ஊட்டினார். சிதம்பரம் பிள்ளையிடம்
திருக்குறள் போன்ற
நூல்களைப் பயின்றார்.
அங்கிருந்து கார்குடி சென்று கஸ்தூரி ஐயங்காரிடம்
நன்னூல் போன்ற
இலக்கண நூல்களின் நுட்பங்களை அறிந்தார், தம்
தந்தையாருக்கு உதவியாக இசைக்கதையில் ஈடுபட்ட இவர், தனித்து
இராமாயணம்,
நந்தன் சரித்திரம் போன்ற இசைக்கதைகளை நடத்தினார். செங்கணம் விருத்தாசல
ரெட்டியாரிடம் காரிகை கற்றார். உ.வே.சா. அவர்களின் தமிழார்வத்தையும் அறிவையும் கண்ட அவர், “நாங்களெல்லாம் மேட்டு நிலத்தில் மழையினால் ஊறுகின்ற கிணறுகள்; என்றும் பொய்யாமல் ஓடுகின்ற காவிரி போன்றவர்
அவர்;
அவரிடம் போய்ப்படிப்பது தான் சிறந்தது”
என்று மகாவித்துவான் மீனாட்சி
சுந்தரம் பிள்ளையவர்களிடம் இவரை ஆற்றுப்படுத்தினார். |
1870 இல் உ.வே.சா. மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரம்
பிள்ளையவர்களிடம் தமிழ் கற்கச் சேர்ந்தார். குருகுல முறையில்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் ஐந்து ஆண்டுகள்
கற்றார். படித்தது கொண்டும், மகாவித்து வானை நாடிவரும் அறிஞர்,
கலைஞர், வடமொழி விற்பன்னர்களைக் கண்டு கேட்டுப் பழகியதாலும்
மிகச் சிறந்த அனுபவச் செல்வங்களைப் பெற்றுச் சிறந்தார். தம்
ஆசிரியரின் அன்பும் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆதரவும்
இவரது வாழ்வில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தின. 1.2.1876-இல்
பிள்ளையவர்கள் மறைந்த பின் அப்போது திருவாவடுதுறை மடத்தின்
தலைவராக விளங்கிய ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் நான்காண்டுக்காலம்
இவருக்குத் தமிழ்க் கல்வி ஊட்டினார். பின்னர்த் தமிழறிஞர்
சி. தியாகராசச் செட்டியாரின் உதவியால் 16.2.1880-இல் கும்பகோணம்
கல்லூரியில் தமிழாசிரியராகப் பணி ஏற்றார். கும்பகோணத்தில்
1893-ஆம் ஆண்டுவரை இருந்த உ.வே.சா., சென்னை
மாநிலக்கல்லூரியில் பணிபுரியச் சென்றார். 1919-ஆம் ஆண்டு
அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், பதிப்புப்
பணியிலிருந்தும் பாடங் கற்பித்தலிலிருந்தும் ஓய்வு பெறாது 1924-இல்
(சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக) ஸ்ரீ மீனாட்சி தமிழ்க்
கல்லூரியின் முதல்வராக மூன்றாண்டு பணியாற்றி 1927-இல் ஓய்வு
பெற்றார். இதன்பின் முழுநேரப் பதிப்பாசிரியராக இருந்து
பல்வேறுதுறை நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.
எழுத்துத்துறையிலும் தீவிரமாக ஈடுபட்ட உ.வே.சா 964
கவிதைகளையும் எழுதியுள்ளார். அவருடைய தமிழ்ப்பணியைப்
பாராட்டிச் சென்னைப் பல்கலைக்கழகம் மகாமகோபாத்யாயர்
என்னும் பட்டத்தை அளித்துப் பாராட்டியது.
|
4.1.1
பதிப்பாளர்
|
உ.வே.சா. பதிப்பித்த முதல் நூல் வேணுவனலிங்க
விலாசச் சிறப்பு
(1878), பத்துப்பாட்டு 1, எட்டுத்தொகை
நூல்கள் 5, காப்பியங்கள்
5, புராணங்கள் 15, தக்கயாகப்பரணி
(1930), பாசவதைப்பரணி
(1993),
ஆகிய இருபரணிகள், திருமயிலை திரிபந்தாதி
(1930), சங்கர
நயினார்
கோயில் அந்தாதி (1934), திருமயிலை யமக அந்தாதி
(1936) ஆகிய மூன்று அந்தாதிகள்,
சிவசிவ வெண்பா (1938)
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா
(1939). திருக்குற்றாலச்
சிலேடை வெண்பா (1940) ஆகிய மூன்று வெண்பா நூல்கள்,
ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
பிரபந்தத்திரட்டு (1910),
சிவக்கொழுந்து
தேசிகர் பிரபந்தத்திரட்டு
(1932),
ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் பிரபந்தத்
திரட்டு (1939), ஆகிய
நான்கு பிரபந்தத்திரட்டு, குறவஞ்சி 2, உலா 10, பிற பிரபந்தங்கள் 9,
இலக்கணம் 3, ஆகியன. 87 ஆண்டுகள் வாழ்ந்த அவர்
வழங்கியது
87 நூல்கள்.
|
21.10.1880
சேலம் இராமசுவாமி
முதலியாரைக் கண்டு
சீவகசிந்தாமணியைப் பற்றி
உரையாடிய பின்னர்த்
தமிழில்
சிற்றிலக்கியங்கள் தவிர வேறு இலக்கியங்களும் இருக்கின்றன
என உணர்ந்தார். முதலியார் கொடுத்த ஊக்கத்தாலும் உ.வே.சா.வின் ஜைன நண்பர்கள் கொடுத்த விளக்கங்களாலும், நண்பர்களின் உதவியாலும், இடைவிடா
ஆராய்ச்சியாலும்
1887-இல் சீவகசிந்தாமணியைப்
பதிப்பித்து வெளியிட்டார். |
இந்நூல்
வெளிவரும் முன்னரே வேணுவனலிங்க விலாசச் சிறப்பு
(1878). திருக்குடந்தைப்புராணம்(1883),
மத்தியார்ச்சுன மான்மியம்(1885)
ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஆயினும் சீவகசிந்தாமணிப்
பதிப்பே இவரை ஒரு பதிப்பாசிரியர் என உலகுக்கு அறிமுகமாக்கியது.
இப்பதிப்பினை, சேலம் இராமசாமி முதலியார், பூண்டிஅரங்கநாத
முதலியார், சுப்பிரமணிய தேசிகர். தியாகராசச் செட்டியார், கொழும்பு
குமாரசுவாமி முதலியார் போன்றார் பலர் பாராட்டினார்கள். இப்பாராட்டுக்கள் தந்த ஊக்கத்தால் பல்வேறு இலக்கியங்களைப்
பதிப்பிக்க வேண்டும் எனும் ஆர்வம் இவருள் எழுந்தது. |
1889-ஆம் ஆண்டு பத்துப்பாட்டினை வெளியிட்டார்.
பின்னர்ச் சிலப்பதிகாரத்தினை
மிக விரிவாக ஆராய்ந்து
1892இல்
வெளியிட்டார். பைபிளில் கண்ட ஒப்புமையகராதி முறையில்
புறநானூற்றை ஆராய்ந்து 1894-இல் பதிப்பித்தார்.
அவ்வாறே
மணிமேகலையை 1898-இல் வெளியிட்டார்.
|
4.1.2 பேச்சாளர்
|
உ.வே.சா.
கருத்துச் செறிவோடு நகைச்சுவை இழையோடப்
பேச
வல்லவர் என அவருடைய
மாணவர்களான கி.வா. ஜகந்நாதன் அவர்களும்,
தண்டபாணி தேசிகர் அவர்களும், உ.வே.சா.வின் பேரரான க. சுப்பிரமணியன்
அவர்களும் கூறியுள்ளனர். அவர்
சென்னைப்
பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவு ’சங்ககாலத்
தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது. |
4.1.3 நல்லாசிரியர்
|
“இவர்
பாடம் சொல்லும் போது கடின பதங்களுக்கு மட்டும்
பொருள் சொல்லுவார். கற்பனைகளை
இன்றியமையாத
இடங்களில் விளக்கிக் காட்டுவார்.
இன்ன கருத்துகளை
ஒழுங்காக மனத்தில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுவார்
- பாடம் சொல்லும் நூல்களில் உரைகளில் மேற்கோளாக
வரும் செய்யுள்களுக்குப் பொருள் கூறுவார். புலவர்களைப்
பற்றிய வரலாறுகளை அடிக்கடி சொல்லுவார்” |
என்று தம் ஆசிரியர் மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
மாணவர்களுக்குத் தமிழ் நூல்களைப் பாடம் சொல்லும் முறை பற்றித்
தெளிவாய் இவர் கூறுவது
குறிப்பிடத்தக்கது. தம் ஆசிரியரின்
வழியிலேயே கும்பகோணத்திலும் சென்னை மாநிலக்கல்லூரியிலும்
மிகச்சிறந்த தமிழ்ப்போராசிரியராகத் திகழ்ந்தார் இக்காலத்தில்
கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் உணர வேண்டிய
கருத்துகள் அதில் அடங்கியிருப்பதை அறியலாம். |
4.1.4 உரையாசிரியர்
|
உ,வே.சா.பதிப்பித்தனவும்
உரை எழுதி வெளியிட்டனவுமாகிய
நூல்களில் தனித்தனிச் சொற்களை இவர் சுவைபெற எடுத்துக் கூறி விளக்கம் தந்திருக்கிறார். அவர் சில நூல்களுக்கு அரிய உரை எழுதியுள்ளார்.
மணிமேகலைக்கும், குறுந்தொகைக்கும்
அவர் இயற்றிய உரைகள் அவரை ஒரு சிறந்த உரையாசிரியராக உலகுக்குக்
காட்டுகின்றன. மணிமேகலைக்கும்
பல இடங்களில் பதவுரையும்
இடையிடையே சில அடிகளின்
பொருட்சுருக்கத்தையும் காதை
இறுதியில் ஒரே சொற்றொடரில், பெரும்பாலும்
மூலநூல் சொற்களைக்
கொண்டே, அக்காதையின் பொருட் சுருக்கத்தையும் தந்துள்ளார். |