4.4 உ.வே.சா. வின் உரைநடை நூல்கள் |
இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில்
பாரதியார் புதிய
தமிழ் உரைநடை மறுமலர்ச்சிக்கு
வித்திட்டார். எங்கும் தமிழ்,
எதிலும் தமிழ் என்ற நிலை
உருவாக வேண்டும் என்று
பாரதியார்,
உ.வே.சா. போன்றோர் அயராது பாடுபட்டனர். |
“தமிழ்
வசனநடை இப்போதுதான் பிறந்து பல
வருஷம்
ஆகவில்லை...
ஆதலால் இப்போதே
வசனம் உலகத்தில்
எந்த
பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி
முயற்சி
செய்ய வேண்டும்” |
என்ற கருத்துடைய பாரதியார் உரைநடை நூல்களையும் எழுதத்
தொடங்கினார். |
பாரதியாரைப்
போலவே நினைவு மஞ்சரி என்னும்
நூலின் முதல்பாக முன்னுரையில் உரைநடையின் எளிமை பற்றியும், அக்கால மக்களின் விருப்பம் பற்றியும்
உ.வே.சா. வும் பின்வருமாறு கூறியுள்ளார். |
“காலத்திற்கும்
நாகரீகத்துக்கும் பழக்க வழக்கங்களுக்கும்
ஏற்ப ஜனங்களுடைய
கருத்துக்களும் விருப்பங்களும்
மாறிவருகின்றன,,, செய்யுளைக்காட்டிலும்
வசனம் மூலமாக
ஜனங்கள் விஷயங்களை மிகவும்
சுலபமாகத் தெரிந்து
கொள்ள இயல்வது தான்” |
என்று
குறிப்பிட்டுள்ளதிலிருந்து அவர்கால இலக்கிய
நடையையும்,
மக்களின் விருப்பத்தையும், உரைநடையின் வளர்ச்சியையும்
அறிந்து கொள்ள முடிகிறது. காலத்தின்
தேவைக்கேற்ப உரைநடை அமைய வேண்டிய திறம் குறித்து உ.வே.சா. சிந்தித்திருக்கிறார். |
4.4.1 கட்டுரை நூல்கள்
|
எளிய
தமிழில் பொருளைத் தெளிவாகவும் நயம்
பொருந்தவும்,
புலப்படுத்தும் ஒரே நோக்குடன் இவர் உரைநடை நூல்களை இயற்றினார். உ.வே.சா., சிறந்த கட்டுரையாசிரியர், அவர் எழுதிய கட்டுரைகள்
நல்லுரைக்கோவை (4 பாகங்கள்), நினைவு மஞ்சரி
(2 பாகங்கள்), நான் கண்டதும்
கேட்டதும் எனும் நூல்களாக
வெளிவந்தன, புதியதும் பழையதும், மணிமேகலை கதைச்சுருக்கம்,
புத்தசரிதம், திருக்குறளும் திருவள்ளுவரும்,
மத்தியார்ச்சுன
மான்மியம் என்பன அவர் எழுதிய பிற கட்டுரை நூல்கள். மேலும் சில செய்திகளைக்
கூட்டிக் கதைகள் போல எழுதியுள்ளார். அவற்றுள் நடந்தவைகளும் அவர் கேட்டவைகளும் எனப் பல திறத்தன உள. இவர் தம் வாழ்க்கையில் நிகழ்ந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளைப்
பிறரும் அறிந்து மகிழும் வண்ணம் சுவைபட எழுதியுள்ளார். சிறந்த குருபக்தி, சுவாமி இருக்கிறார், மாம்பழப்பாட்டு போன்ற
கட்டுரைகள் நகைச்சுவை தோன்ற எழுதப்பட்டனவாகும். என்ன
வேண்டும்? சங்கராபரணம் நரசையர், அவன் போய்விட்டான்
போன்ற கட்டுரைகள் படித்து இன்புறத்தக்கன. முத்தமிழ் சாராத
வேறு பொதுவான
செய்திகளையும் உ.வே.சா. எழுதியுள்ளார். |
4.4.2 வரலாற்று நூல்கள்
|
ஐயர்
எழுதிய உரைநடை நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம்.
வாழ்க்கை வரலாறுகள் ஒருவகை; மற்றொருவகை ஏடுதேடிய வரலாறுகள்.
வாழ்க்கை வரலாற்று நூல்கள் மொத்தம் ஏழு. அவை: |
(1) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம்- பகுதி-1 |
(2) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம்- பகுதி-2 |
(3) மகாவைத்தியநாதையர், |
(4) கனம் கிருஷ்ணையர், |
(5) கோபால கிருஷ்ண பாரதியார், |
(6) என் சரித்திரம், |
(7) வித்துவான் தியாகராசச்
செட்டியார் |
தனித்தனியே
சிலருடைய வரலாறுகள் நூல்வடிவில் எழுதியதையன்றிக்
கட்டுரை வடிவிலும் பலருடைய
வரலாறுகளை எழுதியுள்ளார்.
புதுக்கோட்டையில் திவானாக
இருந்த சேஷையா சாஸ்திரியார்,
பேராசிரியர் பூண்டி அரங்கநாத
முதலியார், இசைப்புலவர் ஆனை
ஐயா, சுப்பிரமணிய பாரதியார் முதலிய பலரைப்பற்றியும்
கட்டுரைகள்
எழுதியுள்ளார். |
4.4.3 நூல்களின் சுவைத்திறம்
|
எந்த
நிகழ்ச்சியைக் கூறினாலும் அதைப் படிப்பவர்
மனத்தில் பதியும்படி சுவையுடன் விரித்தெழுதுவது சாமிநாதையர் இயல்பு. இவரது உரைநடை நூல்களில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் இதைக் காணலாம். |
“தெளிவான
நடையில் எல்லோருக்கும் விளங்கும்
சொற்களைப் பெய்து உயிரோவியத்தைப்
போலத் தாம்
கூறுவதை எழுதும் ஆற்றல் ஐயருக்கு
இருந்தது. சிறிய
வகுப்பில் படிக்கும் பிள்ளை முதல் பெரும்புலவர்
வரையில்
அவருடைய கட்டுரைகளைப் படித்து மகிழலாம். அவரவர்கள்
தகுதிக்கு ஏற்றபடி அவற்றின் சுவையை உணரலாம்” |
என்று
அவர் மாணவர் கி.வா. ஜகந்நாதன்
பாராட்டியுள்ளார்.
மேலும் எஸ்.டி. காசிராசன் என்பவர், |
“பாட்டியற்றும்
வன்மை, உரை காணும் திறம், உரைநடை
எழுதும் ஓட்டம், கேட்பவர் உளங்கொள
எடுத்துரைக்கும்
பேச்சாற்றல், நகைச்சுவை ஆகிய இவை ஒருங்கே அமைந்து
விளங்கியமை அவர் தம் பலதிறத் தொண்டுகளுக்கும்
அணிக்கு அணி செய்வது போல் விளங்கா நின்றன” |
என்று பாராட்டியுள்ளார். |
4.4.4 கவித்துவத் தலைப்பு
|
உரைநடை
நூல்களில் தாம் எழுதியுள்ள கட்டுரைகளுக்கு
இவர்
அருமையான தலைப்புகள் இடுவார். அத்தலைப்புகளே
செய்தியின் சுவையைக் கூட்டும்; கட்டுரையைப் படிக்கத் தூண்டும். சுவடிகளைப் பதிப்பிப்பதற்காக இவர் ஏடு தேடிப் பல ஊர்களுக்கும் செல்வதுண்டு. அவ்வாறு
சென்று தேடிவரும்
பொழுது. பத்துப்பாட்டுச் சுவடியின்
ஒரு பகுதியான முல்லைப்பாட்டு அடங்கிய
ஏடொன்று கிடைத்தது.
அது கிடைத்த போது இவர்
அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே
இல்லை. நிலவு ஒளி வீசும் இரவில் அது கிடைத்ததால், ‘நிலவில்
மலர்ந்த முல்லை’ என்ற அருமையான தலைப்பிட்டுக் கலைமகள்
மாத
இதழில் விரிவாக எழுதினார். நல்லுரைக்கோவை இரண்டாம்
பாகத்தில் அது இடம் பெற்று நூலாய் வெளிவந்தது.
அந்நிகழ்ச்சியைச்
சுவைபடக் கூறுவதைக் காணலாம். |
“என்
நண்பர்களுடன் நான் ஆகாரம் செய்து கொண்ட
வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன், நிலா ஒளி
நன்றாக வீசியது. அப்போது லட்சுமணக்
கவிராயர் மிகவும்
வேகமாக நாங்கள் இருந்த இடம் வந்து ‘இந்தப் புத்தகத்தைப்
பாருங்கள். இந்த ஒன்றுதான் என்
மாமனாரிடம் உள்ளது.
பார்த்துவிட்டுத் திருப்பியனுப்பி
விடுவதாக வாங்கி
வந்திருக்கிறேன்’ என்று ஒரு
சுவடியைக் கொடுத்தார்.
எனக்கிருந்த ஆவலினாலும் வேகத்தினாலும்
நிலா
வெளிச்சத்திலேயே அதைப் பிரித்துப் பார்த்தேன்.
சட்டென்று ‘முல்லைப்பாட்டு’ என்ற
பெயர் என் கண்ணிற்பட்டது.
அப்போது எனக்கு உண்டான
சந்தோஷத்திற்கு எல்லை
இல்லை. திருமுருகாற்றுப்படை
முதல் ஏழு பாட்டுக்கள்
வரிசையாக இருந்தன”. |
முல்லைப்பாட்டு
கிடைத்த மகிழ்ச்சியையும், அவருடைய கவித்துவப்
பண்பையும் ‘நிலவில் மலர்ந்த
முல்லை’ என்ற தலைப்பு
வெளிப்படுத்துகிறது. |