5.1 மறைமலையடிகளார் வாழ்க்கை |
1876-இல்
நாகப்பட்டினத்திலுள்ள காடம்பாடியில்
அடிகளார் தோன்றினார். அத்திருத்தலத்து இறைவன் பெயரான வேதாசலம் என்பதையே பெற்றோர் அவருக்குச்
சூட்டி மகிழ்ந்தனர். வேதாசலம் அவர்களின் அன்னை பெயர் சின்னம்மையார். தந்தையார்
பெயர் சொக்கநாதப் பிள்ளை. அடிகளார் இளமையிலேயே கல்வியிலும் ஒழுக்கத்திலும்
சிறந்தவராக விளங்கினார். பன்னிரண்டாம் அகவையில் தந்தையை இழந்த அடிகளார்,
ஒன்பதாம் வகுப்பு வரைதான் கற்றார். |
5.1.1 தமிழ்க் கல்வி
|
தமிழ்
நூல்களைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அடிகளாருக்கு இயற்கையாக எழுந்தது. நாகப்பட்டினத்தில் வெ.நாராயணசாமிப் பிள்ளை என்பார் புத்தகக்கடை வைத்திருந்தார். தமிழ்ப் பெரும் பேராசிரியராக விளங்கிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் இவர் முறையாகத் தமிழ் கற்றவர். நாராயணசாமிப் பிள்ளை புத்தக விற்பனையோடு தமிழ் கற்பிக்கும் பணியையும்
செய்து வந்தார். இவரிடம்
தொல்காப்பியம்,
இறையனார் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்களையும், தருக்க
நூல்களையும் முறையாகக் கற்றுச் சிறந்த அறிவு பெற்றார் அடிகளார். |
5.1.2 அடிகளாரின் படைப்புகள்
|
1898 முதல்
சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பித்தார். அடிகளாரின் விளக்கவுரைகள் செறிவானவை. அவற்றின் இடையிடையே நகைச்சுவையும் உலகியல் மேற்கோள்களும் நிறைய இடம்பெறுவதுண்டு. அடிகளார்
காலத்தில் காரைக்காலில் நடந்து வந்த திராவிட
மஞ்சரி, பாஸ்கர ஞானோதயம் என்னுங் கிழமைத்தாள்களுக்கும், நாகப்பட்டினத்திலேயே நடைபெற்று
வந்த நாகை நீலலோசனி என்னும் கிழமைத்தாளுக்கும் பல கட்டுரைகளை எழுதினார்.
ஞானசாகரம் என்னும் திங்களிதழ் அடிகளாரின் முயற்சியால் 1902ஆம் ஆண்டு முதல் வெளிவந்தது. நூல் எழுதுதல், நூலாராய்தல், எழுதிய நூல்களை அச்சிட்டு வெளியிடுதல் போன்ற பல துறைகளில் அடிகளார் தமிழுக்குச் செய்துள்ள தொண்டுகள் அளப்பரியன. அடிகளார் அரிய ஆங்கில நூல்களை ஆராய்ந்துள்ளார். கல்வி,
உய்த்துணர்வு, சொல்வன்மை இம்மூன்றும் வாய்க்கப் பெற்றிருந்தார். 1903ஆம் ஆண்டு மாணவர்களின் வேண்டுகோளின்படி,
பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆகிய இரு நூல்களுக்கும் ஆராய்ச்சியுரை எழுதி வெளியிட்டார். |
செய்யுள், புதினம், நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு,
ஆராய்ச்சி போன்ற பல துறைகளிலும் அடிகளார் நூல்களைப்
படைத்துள்ளார். திருவொற்றியூர்
முருகன் மும்மணிக்கோவை, சோமசுந்தரக்
காஞ்சியாக்கம் முதலியன அடிகளார்
இயற்றிய செய்யுள்
நூல்களாகும். சிந்தனைக்
கட்டுரைகள், அறிவுரைக் கொத்து,
சிறுவர்க்கான செந்தமிழ், முற்காலப்
பிற்காலத் தமிழ்ப்
புலவோர், இந்தி பொது
மொழியா? போன்ற கட்டுரை
நூல்களையும் அடிகளார் எழுதியுள்ளார். குமுதவல்லி
அல்லது
நாகநாட்டரசி, கோகிலாம்பாள்
கடிதங்கள் முதலியன
அடிகளாரின் புதின நூல்களாகும்.
வடமொழியில் காளிதாசர் எழுதிய
சாகுந்தலத்தை
மொழிபெயர்த்து அடிகளார் சாகுந்தல
நாடகம்
என்று பெயரிட்டுள்ளார். அம்பிகாபதி
அமராவதி என்ற நாடக
நூலையும் அடிகளார் எழுதியுள்ளார். |
அடிகளாரின்
ஆராய்ச்சி நூல்களை இலக்கிய ஆராய்ச்சி,
கால வரலாற்று ஆராய்ச்சி,
வாழ்வியல் ஆராய்ச்சி என்ற மூன்று பிரிவுகளாகப்
பாகுபடுத்தலாம். பண்டைக்காலத்
தமிழரும்
ஆரியரும், மாணிக்க வாசகர் வரலாறும் காலமும், முற்காலப்
பிற்காலத் தமிழ்ப் புலவோர்,
சோமசுந்தர நாயகர் வரலாறு
முதலியன அடிகளாரின் கால வரலாற்றை
உணர்த்தும் அடிகளாரின்
ஆய்வு நூல்களாகும். பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்,
வளோண் நாகரிகம், மக்கள் நூறாண்டு
வாழ்வது எப்படி?
என்பன வாழ்வியல் ஆய்வு
நூல்களாக விளங்குகின்றன.
வாழ்வியல் ஆராய்ச்சி நூல்களில் சமயத் தொடர்புடைய
நூல்கள் சைவ சித்தாந்த ஞானபோதம்,
சாதி
வேற்றுமையும் போலிச்
சைவரும், கடவுள் நிலைக்கு
மாறான கொள்கைகள்
சைவமாகா, பழந்தமிழர் கொள்கையே சைவ
சமயம், தமிழர்
மதம் முதலியனவாகும். வாழ்வியல் ஆய்வு
நூல்களிலே மரணத்தின்
பின் மனிதர் நிலை, யோகநித்திரை
அல்லது அறிதுயில்,
தொலைவிலுணர்தல்
என்னும் மறைபொருளுணர்ச்சி.
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி முதலிய
நான்கு நூல்களும்
மறைபொருளியலை உணர்த்தும் நூல்கள் ஆகும். |
சைவம், தமிழ் இரண்டையும் தம் இரு கண்களாகக் கருதியவர் அடிகளார். ஏனைய சமய உண்மைகளோடு சைவ சித்தாந்த உண்மைகளையும்
ஒப்பு நோக்கி அடிகளார்
ஆராய்ந்தார். இவ்வாராய்ச்சியின்
முடிவாக, சைவ
சித்தாந்தமும் செயல்முறை யறிவும் என்ற ஆங்கில நூலை எழுதினார். இந்நூல் அடிகளாரின் ஆழ்ந்த சிவநெறிப்
பற்றினை விளக்குவதாகும். 1911-இல் தமிழாசிரியர் பணியிலிருந்து
விலகிய அடிகளார் சைவ சித்தாந்தப் பணியிலும் நூல்களை எழுதுவதிலும் தம்மை
முழுதும் ஈடுபடுத்திக் கொண்டார். இல்லறத்திலிருந்து
காவியுடுத்துத் துறவு பூண்டு சுவாமி வேதாசலம் ஆயினார்.
1911-இல் பொது நிலைக் கழகம் என
ஒன்றைத் தோற்றுவித்துச் சாதி வேறுபாடில்லாமல் பொது மக்களுக்குக் கடவுட் பற்றும் சமயப் பற்றும்
உண்டாக்கும் சொற்பொழிவுகள் நடத்தினார். திருமுருகன்
அச்சுக்கூடம் என ஒன்றைத் தொடங்கிப் பல நூல்களை
வெளியிட்டார். |
5.1.3 தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
|
சங்க
காலத்திற்குப் பின் தனித்தமிழ்
வழக்கொழிந்திருந்தது. இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழ்
வழக்கினை உயிர்ப்பித்தவர் அடிகளாரேயாவர். உரிய தமிழ்ச் சொற்கள் இருக்க வடமொழிச் சொற்களைக் கலந்து அக்காலத்தில் எழுதினர். அவ்வாறு
எழுதித் தம்மை இருமொழிப் புலமை உடையவர்
போன்று காட்டிக் கொண்டனர். இதனால் தமிழ் மொழியின்
வளர்ச்சியில் தடை ஏற்பட்டது. இச்சூழலில் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. |
1916-ஆம்
ஆண்டு அடிகளார் தம் வீட்டுத் தோட்டத்தில் மகள்
நீலாம்பிகையம்மையாருடன் உலாவிக் கொண்டிருக்கும் போது,
இராமலிங்க வள்ளலார் அருளிச் செய்த
திருவருட்பாவில், |
பெற்ற தாய் தனை மகமறந்தாலும் பிள்ளையைப் |
பெறும்தாய்
மறந்தாலும் |
உற்ற
தேகத்தை உயிர் மறந்தாலும் |
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . |
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . |
நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச் |
சிவாயத்தை நான் மறவேனே
|
என்ற
பாட்டைப் பாடினார். பிறகு தம்
மகளிடம் “இப்பாட்டில் உள்ள ‘தேகம்’ என்ற வடசொல்லை நீக்கி அவ்விடத்தில் யாக்கை என்ற
தமிழ்ச்சொல் இருக்குமானால்
செய்யுளின்
ஓசையின்பம் இன்னும் இனிமையாக இருக்கும்” என்றார்.
மேலும், "பிற மொழிச் சொற்கள் வழங்கி வருவதால் தமிழ்ச் சொற்கள் மறைந்து விடுகின்றன” என்றார். உடனே நீலாம்பிகையார் தந்தையிடம்,
"நாம் இனி அயன் மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலே பேசுதல் வேண்டும். அதற்கான முயற்சிகளைக் கைவிடாது செய்தல்
வேண்டும்" என்று ஆர்வமுடன் கூறினார். தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றத்திற்குக் காரணமானவர்
நீலாம்பிகையம்மையாரேயாவர்.
தனித்தமிழ் இயக்கம்
1916-இல் ஏற்பட்டது. |
5.1.4 பெயர் மாற்றம்
|
மகளின்
அன்பும் அறிவும் கலந்த வேண்டுகோளை ஏற்று, சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலையடிகள் என்று
மாற்றி வைத்துக் கொண்டார். அது முதல் அடிகளார், தனித்தமிழ் எழுதலாயினார். சொற்கள் தனித்தமிழில் கிடைக்காத போது புதிய சொற்களைத் தமிழில் உண்டாக்கி
எழுதினார். ஞானசாகரம் என்ற தம் திங்கள் வெளியீட்டிற்கு
அறிவுக்கடல் என்றும், சமரச
சன்மார்க்க நிலையத்தைப் பொதுநிலைக்
கழகம் என்றும் பெயர் மாற்றம் செய்தார். அடிகளாரும் அவர் மகளும் இவ்வாறு தனித்தமிழ் இயக்கங்கண்டது மட்டுமன்றி அதனை வளர்க்கும் பணியிலும் ஈடுபட்டனர். |
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என்ற கொள்கையுடைய
அடிகளார் இறை வழிபாடு, திருமணம்
முதலிய சடங்குகளும்
தமிழ்மொழியிலேயே நடைபெற வேண்டும்
என்று விரும்பினார். தமிழுக்கும் தமிழினத்திற்கும் வந்த தீங்குகளை
நீக்கவே அடிகளார் தனித்தமிழ்
இயக்கத்தைத் தோற்றுவித்தார் என்பதை அறிய முடிகிறது. இதனால் தனித்தமிழ்
இயக்கத்தின் தந்தை எனவும் போற்றப்படுகிறார். இசைப்புலமையுடைய அடிகளார் தம்
மகள் நீலாம்பிகைக்குத் தாமே
இசையையும் கற்பித்தார். |
5.1.5 மறைமலையடிகள் நூல்நிலையம்
|
அடிகளார்
பெரும்பொருள் செலவிட்டு
அரிதில் தேடிய நாலாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை, தம்
இறுதி விருப்ப ஆவணத்தின்படி தமிழ் மக்களின் பொது உடைமையாக்கிச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரிடம் ஒப்புவித்துச் சென்றார். அக்கழகத்தார் தாம் ஈட்டிய
பொருளைக் கொண்டு பல நூற்றுக்கணக்கான அரிய நூல்களையும் சேர்த்து, அடிகளார் பெயரால் மறைமலை
அடிகள் நூல்நிலையம் என ஒரு நூல்நிலையத்தைச் சென்னையில் சிறந்த முறையில் தமிழ் மக்கள் பயன்துய்க்குமாறு நடத்தி வருகின்றனர். |