5.2 மறைமலையடிகளாரின் மேடைத் தமிழ்நடை
 

மறைமலையடிகளார் தமிழ்ப் பெருங்கடல்; முதுபெரும் புலவர்;
தமிழக மறுமலர்ச்சியின் விடிவெள்ளி; கன்னல் குரல்தனில் பேசிக்
கேட்போர்க்கெல்லாம் காதினிக்கக் கருத்தினிக்க வைத்த செம்மல்.
இவரது செறிவுமிகு செந்தமிழ்ச் சொற்பொழிவுகள் அந்நடைக்கு
எடுத்துக்காட்டாகும். சொற்பொழிவின் நெறியில் அந்நாளில் ஒப்பவர்
பிறரின்றி உயர்ந்தோங்கி நின்றார். மறைமலையடிகளார், தாம் நிகழ்த்த
விரும்பும் சொற்பொழிவின் பொருளை நன்கு எண்ணி அது பற்றிக்
கூறவிரும்பும் கருத்துகளை முறைப்படத் தொகுத்தும் வகுத்தும்
எழுதிக் கொள்வது வழக்கம். அவையே பின்பு நூல் வடிவில்
வெளிவரும் என்பர் ஒளவை.சு.துரைசாமி பிள்ளை அவர்கள். பழைய
பாடல்களுக்குப் புதுமையான பொருள் விளக்கம் அடிகளாரின்
பேச்சில் வெளிப்படும். மேடைத் தமிழ் வளர்ச்சிக்குக் காரணமாகவும்
வழிகாட்டியாகவும் விளங்கியவர் அடிகளார். இவரது
சொற்பொழிவுகளுக்கு இடையே பாடல்களும் இசைக் கருவிகளுடன்
பாடப்படும். இது புராண விளக்க முறையின் (கதாகாலட்சேபத்தின்)
எச்சமாக இருக்கலாம். தமிழில் பேச வந்த இளைஞர்களுக்கு இவர்
முன்னோடியாகத் திகழ்ந்தார்.
 

“மறைமலையடிகளின் சொற்பொழிவின்பத்தில் மூழ்கிவிட்டேன்.
அவர் இனிய பேச்சொலிகள் என் இரண்டு செவிகளிலும்
இன்ப முழக்கஞ் செய்கின்றன.”
 

எனத் தமிழ்த் தாத்தா டாக்டர். உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.