6.1 திரு.வி.க.வின் வாழ்க்கையும் கல்வியும்

தமிழ் இளைஞர் முதல் முதியோர் வரையுள்ள யாவர்
நெஞ்சங்களிலும் வாழும் பெரியவர் இவர். இவரை அன்போடு
திரு.வி.க. என அழைப்பர். இவர் தமிழ்நாட்டுக்கும், தமிழ்மொழிக்கும்
எண்ணிலடங்காத் தொண்டுகள் செய்துள்ளார். இவர் செங்கற்பட்டு
மாவட்டம் துள்ளம் என்னும் ஊரில் 1883ஆம் ஆண்டு பிறந்தவர்.
இவருடைய பெற்றோர் விருத்தாசல முதலியார், சின்னம்மாள்.
எனினும் இவர்தம் முன்னோர் திருவாரூரைச் சேர்ந்தவராதலின் ‘திரு’
என்ற அடைமொழியைத் தம் பெயருக்கு முன்னால் அமைத்துக்
கொண்டார். முதலில் தந்தையிடமே திண்ணைப் பள்ளியிலும், பிறகு
வெஸ்லி கலாசாலையிலும் பயின்றார்.
 

இவருடைய தமிழாசான் யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை.
தனியே தம் ஆசானிடம் புராணங்களையும், யாப்பிலக்கணத்தையும்;
மயிலை மகாவித்வான் தணிகாசல முதலியாரிடம் திருவருட்பயன்,
சிவப்பிரகாசம், சிவஞானபோதம்
போன்ற நூல்களையும்
வடமொழியையும் கற்றார். பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதங்களும்,
மருவூர்க் கணேச சாஸ்திரிகளிடம் சிவகீதையும், நீலகண்ட பாடியமும்,
அப்துல்     கரீமிடம்     திருக்குர்ஆனும் கற்றார். ஜஸ்டிஸ்
சர்.டி.சதாசிவராவ் தொடர்பால் ஆங்கில அறிவும் பெற்றார். சான்றோர்
பேசுமிடம் எங்கணும் சென்று கேள்விச் செல்வத்தைப் பெருக்கியும்,
பல்திற நூல்களை விடாது பயின்று அறிவை விசாலப்படுத்தியும்
வந்தார். அந்நாளைப் பெருமக்கள் பெசன்ட் அம்மையார்,
மறைமலையடிகள் போன்றோர் தொடர்பும் இவரை உயர்த்தியது.
இவ்விதமாகப் பெற்ற ஊற்றமே இவரை ஏற்றம் பெறச் செய்தது.
வெஸ்லி கலாசாலையிலும், பள்ளியிலும் தமிழாசிரியராகத் திகழ்ந்தார்.
 

1917-இல் பெசன்டையும் அவரது இரு கண்களான அருண்டேல்,
வாடியாவையும் கைது செய்தது அரசு. உடனே அரசியலில் ஈடுபட்டு,
தேசபக்தன் இதழாசிரியராகி, வேகமிக்க தமிழ் எழுத்தால் மக்களைச்
சிந்திக்கவும் சீறி எழவும் தூண்டினார். அடக்குமுறையை எதிர்த்து
கோகலே மண்டபத்தில் திவான் பகதூர் கேசவப் பிள்ளை
தலைமையில் திராவிடரும் காங்கிரசும் என்ற தலைப்பில் பேசினார்.
இதுவே இவரது அரசியல் கன்னிப் பேச்சு.
 

சென்னையில் மகாசன சங்கம் தோன்றியது. அதன் தஞ்சை
மாநாட்டில் ‘இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ என்ற
தீர்மானத்தைக் கொணர்ந்தார். இந்த மொழிப் புரட்சி காரணமாக
அவரைப் புரட்சி வீரர் எனப் புகழ்ந்தனர். அம்மாநாடு ஈரோட்டில்
கூடியபோது பெரியார் ஈ.வே.ரா தொடர்பு ஏற்பட்டது. சாது
அச்சுக்கூடம் நிறுவி நவசக்தி வார இதழை 20-10-1920-இல்
தொடங்கினார். தேசபக்திக் கனலை மூட்டினார். தமிழார்வத்தைப்
பொங்கச் செய்தார். 1940வரை 20 ஆண்டுகள் அப்பத்திரிகையை
நடத்தினார்.     இந்தியாவிலேயே     முதன்முதல்     1918-இல்
சென்னையில்தான் தொழிற்சங்கம் ஏற்பட்டது. அதில் சுந்தரனாரின்
பங்கு பெரிது. போலீஸ் சங்கம், அச்சகத் தொழிலாளர் சங்கம்,
இரயில்வே தொழிலாளர் சங்கம் தோன்றக் காரணமானார்.
அரசியலிலும் தொழிலாளரியக்கத்திலும் இவரது பெரும் பகுதி
வாழ்க்கை கழிந்தது. 9-7-1926-இல் அரசியலைத் துறந்தார். இவரது
அரசியல் குரு திலகர்.
 

சமயத் தொண்டின் நிலையமாக நிலவுவது இவர் தோற்றிய
பாலசுப்பிரமணிய பக்த ஜனசபை. மாதர் சங்கம், கைம்மைப்
பெண்கள் கழகம், கணிகையர் நலம் கருதும் நாகபாசத்தார்
சங்கம்
முதலியவை தோன்றச் செய்தார். இளமை மணம் ஒழிக்க
வந்த சாரதா மசோதாவுக்கு எழுத்தாலும் பேச்சாலும் ஊக்கம் தந்தார்.
இவர் பணிகட்கெல்லாம் மகுடமாக அமைவது தமிழ்ப்பணி.


6.1.1 திரு.வி.க.வின் படைப்புகள்

இவர் நடத்திய இரண்டு இதழ்கள் தேசபக்தன், நவசக்தி
ஆகியன. இயற்றிய நூல்கள் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்,
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, முருகன் அல்லது அழகு, சைவத்
திறவு, தமிழ்த்தென்றல்
(சொற்பொழிவுகள்), தமிழ்ச் சோலை
(பத்திரிகைத் தலையங்கங்கள்), மேடைத் தமிழ் (மேடைப்
பேச்சுகள்), அருள்வேட்டல் (செய்யுள் நூல்) ஆகியவை. இவரது
உரைநடை சின்னஞ்சிறு தொடர்கள், வினாவிடை, வியங்கோள்,
வியப்புத் தொடர்கள், அடுக்குத் தொடர்கள், புதுச்சொல்லாக்கம்,
உவமை, உருவகம் போன்றவற்றைக் கொண்டு தனித்தன்மையும்
எளிமையும் கொண்டு விளங்குகிறது. புதிய உரைநடையின் தந்தை
என்றும் தமிழ் மேடைப் பேச்சின் தந்தை என்றும் இவர் போற்றப்
பெறுகிறார். பொதுமைக் கருத்துகளையும் காலத்துக்கு ஏற்ற புதுமைக்
கருத்துகளையும், தமிழ்நாட்டில் தென்றலாய் அள்ளித் தெளித்தார்.
தமிழாசிரியராய் இருந்து பத்திரிகை ஆசிரியராய்ப் புகழ் பெற்று,
அரசியல் தலைவராய் விளங்கி, தொழிலாளர் தலைவராய்ச்
சிறப்புற்றுப் படிப்படியாய் வளர்ச்சி கண்டவர்.
 

திரு.வி.க. ஐம்பது அரிய நூல்களை எழுதியுள்ளார். "பேச்சுப்
பெரும்புயலாகவும், எழுத்து எரிமலையாகவும், செய்தித்தாள்
சிற்பியாகவும் ஒளிர்ந்தார். அவர் தமிழ்நாட்டுக் காந்தியாகவும்,
தமிழுக்கும்     தமிழ்     எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும்,
தொழிலாளர்களுக்குத் தாயாகவும் விளங்கினார்" என்று கல்கி
பாராட்டியுள்ளார்.


6.1.2 சாதனையும் போதனையும்

திரு.வி.க. ஒரு சகாப்தம் ; பல்கலைக் கழகம், மூன்றெழுத்துச்
சான்றோர், ஆன்ற எழுத்தாளர், அருவிப் பேச்சாளர், தேர்ந்த
சிந்தனையாளர், பண்பார்ந்த பத்திரிகையாளர், உரையாசிரியர்,
மொழிபெயர்ப்பாளர், கவிஞர், இறைத்திருப்பணியும் தமிழ்ப்
பொற்பணியும் நாட்டு நற்பணியும் ஆற்றிய நல்லார். தமிழ் முனிவர்,
தனக்கென வாழாப் பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சம்
உடையவர். எல்லார்க்கும் எழுத்துநடை வேறு, பேச்சுநடை வேறு.
இந்த இருவேறு நடையையும் ஒன்றாக்கிப் புதியதோர் நடை
படைத்தவர். வாழ்வையே பேச்சும் எழுத்துமாக ஆக்கிக் கொண்டவர்
இவர். இதனால்தான் படித்த அறிவாளிகளும் ஏடறியாத்
தொழிலாளிகளும் இவரால் ஒருசேரக் கவரப்பட்டனர். அடிக்கன்று
வாழையாகத் தோன்றிய கல்கியும் மு.வரதராசனாரும் இவருக்கு
வாரிசுகளாவர். அதனால்தான் கல்யாண சுந்தரனாரின் முதல்
ஈரெழுத்தையும் தன் பெயரின் முதலெழுத்தையும் கல்+கி = கல்கி என
வைத்துக் கொண்டார் இரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி). தாம் நடத்திய
ஏடுகளில் திரு.வி.க. காந்தியடிகளின் ஆங்கிலத்தை அழகும் ஆழமும்
குறையாது அப்படியே பெயர்த்துள்ளார். காந்தி இவரைப்
‘பெயர்ப்பாளர்’ என்றே அழைப்பார். இவரது நூற்றாண்டு விழாவினை
1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு தஞ்சையில்
கொண்டாடியது.


6.1.3 தன் வரலாறு

தன் வரலாற்றில் இவரது ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ ஒருமைல் கல்.
அது புதுவகை இலக்கியத்திற்குப் புத்தொளி தந்தது. பிரயாணம் என்ற
சொல்லுக்குச் ‘செலவு’ எனும் சொல்லைப் பயன்படுத்தி நிலவச் செய்த
பெருமையர். திரு.வி.க., திரு.வி.க. தமிழ் என்று அழைக்கும்
வண்ணம் புதுவகை நடையினைத் தோற்றுவித்தவர். தம் வாழ்க்கை
நிகழ்ச்சிகளை, அனுபவங்களை, கலந்து கொண்ட இயக்கங்களை,
சந்தித்த மனிதர்களைப் பற்றி 800-க்கு அதிகமான பக்கங்களில்
வாழ்க்கைக் குறிப்புக்களாகத் தொகுத்துத் தந்துள்ளார். தோற்றுவாய்,
சோதிடம், குழந்தைமை, பள்ளிப்படிப்பு, பிள்ளைமை, கல்வி எனப்
பதினாறு அத்தியாயங்களில் வாழ்க்கைக் குறிப்புக்களைத் தந்துள்ளார்.
‘நல்லன கொண்டும், தீயன விலக்கியும் மற்றவர் வாழ்வதற்கு என்
வாழ்க்கைக் குறிப்புகள் ஓரளவிலாதல் துணைபுரியும் என்னும்
நம்பிக்கை இதை எழுதுமாறு உந்தியது’ - இதுதான் திரு.வி.க.வின்
நோக்கம்.