6.3 நடைச்சிறப்பு
 

உரைநடை சிறப்பாக அமைய வேண்டுமானால் ஒரு சொல்லைத்
திரும்பத் திரும்ப எழுதாமல் சொற்களின் உருவத்தை மாற்ற
வேண்டும் ; புதிய சொற்களை உருவாக்க வேண்டும் ; பாரதி கூறியது
போல, சொல் புதியதாக இருக்க வேண்டும்; அச்சொல் உணர்த்தும்
பொருளும் புதியதாக இருக்க வேண்டும்.
 

தமிழில் ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்கள் உள்ளன.
 

‘சொன்னான்’ என்னும் சொல்லை
 

சொன்னான் -
 

(1)

செப்பினான்

(2)

அறைந்தான்

(3)

கூறினான்

(4)

உரைத்தான்

(5)

பகர்ந்தான்

(6)

பறைந்தான்

(7)

கழறினான்

(8)

இயம்பினான்

(9)

விளம்பினான்

(10)

நவின்றான்

(11)

ஓதினான்

(12)

சாற்றினான்

(13)
 

புகன்றான்

என்றும் அவர் பயன்படுத்துவார்.
 

தமிழ் மரபுக்குச் சிறிதும் ஊறு நேராமல் மேலைநாட்டு
மொழிகளின் உரைநடையைப் பின்பற்றி எழுதுவதிலே திரு.வி.க.
அவர்களுக்கு இணையாக அவரையே கூறலாம்.
 

இவர் எழுதிய முருகன் அல்லது அழகு என்ற நூலில்
 

“வானத்தின் அழகை என்னவென்று வர்ணிப்பது?”
 

“ஞாயிற்றின் ஒளியை என்னவென்று நவில்வது?”
 

“திங்களின் நிலவை என்னவென்று செப்புவது?”
 

“மின்னலை என்னவென்று கூறுவது?”
 

“கரிய காற்றின் காட்சியை எப்படி எடுத்துக் காட்டுவது?”
 

“கைநீட்டும் அலைகடலின் கவினை (அழகு) எங்ஙனம் கூறுவது?”
 

“என்னே ! அண்டத்தின் அழகு” என்கிறார். இச் சிறுபகுதியில்
திரு.வி.க.வின் தமிழ் யாழ்ஒலிபோல இசைக்கின்றது.


6.3.1 தொடர்கள்

 

திரு.வி.க.வின் தொடர்கள் எளிமை வாய்ந்தன ; இனிமை
வாய்ந்தன ; தெளிவு காட்டுவன. அவர்தம் தொடர்கள் முறையாக,
ஆற்றொழுக்காகத் தொடர்ந்து பின்னிப் பிணைந்து பொருள் தருவன.
ஒன்றோடொன்று இயைபு கொண்டமைவன. அறிமுகம், விளக்கம்,
முடிப்பு ஆகிய பண்பில் தலைசிறந்து நிற்பன. “நாவலில் புறமனம்
ஈடுபடும், ஈடுண்ட அம்மனம் புலன்களின் தொடக்கத்தினின்றும்
விடுதலையடைவதாகாது. விடுதலைக்கு ஆழ்ந்த பொருளைக் கொண்ட
அரிய நூல்களில் நெஞ்சம் படிதல் வேண்டும். அப்படிவு,
புறமனத்தைப் புலன்களின் தொடக்கினின்று விடுவித்துப் புறமனத்தை
விளங்கச் செய்யும். ஒழுக்கம் கால்கொள்ளுமிடம் அகமனமே.
இந்நுட்பம் உணர்ந்தே சான்றோர் காவிய ஓவியங்களைத் தந்தனர்
போலும்” (பக்-656, திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்) எனத்
தொடரும் வரிகளில் இவ்வமைப்பைக் காணலாம்.
 

அவர்தம் தொடர்கள் ஓர் எழுவாயைக் கொண்ட பல
வினைகளைக் காட்டுவன. ஆயின் பல வினைகளும் பல
தொடர்கள் போன்றே அரைப்புள்ளிகளுடன் நடமிட்டு ஒரு
துள்ளலைக் கூட்டி எழுவாய்க்கும் இயைபைக் காட்ட வல்லன.
 

“விழா கழக அளவில் நிற்கவில்லை. அதைக் கடந்து
பெருகி வெள்ளமாகியது. விழாவைக் கொண்டாடத்
தொழிற் சங்கங்கள் புறப்பட்டன ; மாதர் சங்கங்கள்
புறப்பட்டன. சமயச் சபைகள் விரைந்தன ; கல்விக்
கழகங்கள்     விரைந்தன. பள்ளிகள்     வீறின !
கல்லூரிகள் வீறின ! பத்திரிகைகள் பறந்தன. நூலகங்கள்
நுழைந்தன. சிறைகள் எழுந்தன ; நகரசபைகள் கிளம்பின ;
மூலை முடுக்குகளும் முயன்றன.” (பக்-971)
 

எனவரும் தொடர்களில் நாம் இன்னோரன்ன பண்புகளைக் காணலாம்.
 

ஆயின், அவர் செயப்பாட்டு வினையிலேயே சில தொடர்களை
அமைத்திருப்பதையும் காணமுடிகிறது?
 

“நமது தேச நலத்தின் பொருட்டுக் காங்கிரஸ் என்றோர்
அமைப்பு அறிஞர்களால் காணப்பட்டது.” (தமிழ்ச்சோலை,
பக்-90)
 

“இம்முறையும் அத்தொண்டாற்றுமாறு கேட்கப் பட்டேன்.”
(பக்.154)
 

“சாமிநாத     ஐயர்     தேசபக்தன்     நிலையத்தில் ஒருநாள் காணப்பட்டனர்.” (வாழ்க்கைக் குறிப்புகள், பக்-162)
 

இவ்வகைத் தொடர்களால் துள்ளல் குறைவதோடு, நடையோட்டம்
தடைப்படுதல்     போல் தோன்றுகிறதல்லவா? ஆயின்
இவ்வகையமைப்பில் ஒரு மிடுக்கிருப்பதை அவர் உணர்ந்திருக்கலாம்.
 

இதழியல் தொடர்கள்
 

திரு.வி.க. தம் உரைநடையில் பயன்படுத்தும் தொடர்கள்,
குறிப்பாகத் தலைப்புகள் சிறுமையும், நுண்மையும், பொருளாழமும்
கொண்ட விமரிசனத் தன்மை கொண்டவைகளாகக் காணப்பெறும்.
சிறப்பாக, அவர் பயின்ற பத்திரிகைத் துறையில் அவர் நிகழ்த்திய பல
புரட்சிகளில் இதுவும் ஒன்றாகும். செய்திக்குரிய தலைப்பை
நேர்பொருளில் வழங்காது செய்தியைப் பற்றிய விமரிசனப்
போக்கில், உணர்வைத் தட்டி எழுப்பும் வண்ணம் வழங்கியமை ஒரு
புது முயற்சி யன்றோ? இது தேசபக்தனுக்கும் நவசக்திக்கும் முன்
தோன்றிய சுதேசமித்திரனில் காணப்படாத ஒன்று.
 

மணி ஐயர் காலமான செய்தியை, “மணிமரஞ் சாய்ந்தது”
(12-12-1924) என்றும், சித்தரஞ்சன தாஸ் இறந்த செய்தியை,
“கற்பகத்தை இழந்தோம்” (7-8-1925) என்றும், காணப் பெறுகின்ற
தலைப்புக்களே இதற்குச் சான்றாகும்.
 

பத்திரிகைத் துறையில் அவர் உருவாக்கிய மற்றொரு சிறப்பு,
உரைநடையில் தமிழ்ச் சொற்களையே பெரும்பாலும்
கையாண்டமையாகும். பல அரசியல் சொற்களையும், பிற துறைச்
சொற்களையும் தமிழ்ப்படுத்தி அவற்றை முறையாகப் பயன்படுத்தினார்.
இது குறித்துப் பொதுப்பார்வையிலும் கண்டோம். தமிழால் எத்துணை
நுண்ணிய கருத்தையும் காட்ட முடியும் என்பதையும் ஓரளவுக்கு
வெற்றியோடு நிறுவியவர் அவர். தொடர்ந்து வரும் நடையில்
பிறமொழிச் சொற்கள் இடம்பெறும்போது ஓட்டம் தடைப்படுதல்
இயல்பு. துள்ளல் மாறுவது தவிர்க்க முடியாதது.
 

அன்னி பெசன்ட் அம்மையாரை ‘அன்னை வசந்தை' என்றும்,
Certificate - தகுதித்தாள்; Culture - மனிதம்; Evolution - கூர்தல்
அறம் என்று மொழிபெயர்த்தவர் அவர். ஆயின், சில இடங்களில்
சாதாரணச் சொற்களையும் மொழிமாற்றம் செய்யாது விட்டமை
புதுமையாய்த் தோன்றுகிறது.
 

‘எளிமையான நடையிலே எழுதுகின்றேன். தொழிலாளரையும் என்
எழுத்து சென்று சேர வேண்டும்’ என்றெல்லாம் பேசியும் எழுதியும்
வந்தவர் அவர். ஆயின் சில இடங்களில் காணப்பெறும்
கடுஞ்சொற்களை - கடுக்கும், பிறங்கப் பிறங்க, பாங்கர், மன்பதை,
கடாவிடை, காண்டகு, கால்வது போன்ற பல சொற்களை
நீக்கியிருப்பின் நீரோட்ட நடை எளிமையில் ஏற்படும் சிறு சிறு
தடைகளையும் சுழிகளையும் தவிர்த்திருக்க முடியும் எனலாம்.
 

திருக்குறள் விரிவுரை, பெரியபுராணக் குறிப்புரை போன்ற
நூல்களில் இடைக்கால உரையாசிரியர்கள் பயன்படுத்திய சொற்களான
என்னை, கொள்க, என்க, என்பது போன்ற சொல் முடிவுகளைக்
காண்கிறோம். அங்கே இவை மொழி ஓட்டத்தைத் தடை செய்வதாகக்
காண முடியவில்லை. ஆயின் பிறநூல்களில் அது தடை செய்தல்
காண்கிறோம்.


6.3.2 உரைநடையில் கவிதைப் பண்பு

 

உரைநடையில் கவிதைப் பண்பு கலப்பதும் கவிதையில்
உரைநடைத்     தாக்கம் அமைவதும் தவிர்க்க முடியாத
மொழிப்பண்பாகும். திரு.வி.க.வின் உரைநடை வீறு கொண்டது,
எழுச்சி ஊட்டுவது, இனிமை ஊட்டுவது, இப்பண்புகளைப்
போலவே, சொல்லினிமை, காட்சியினிமை கொண்ட கவிதைப்
பண்பையும் சில இடங்களில் காட்டுகின்றது.
 

“என்னை வைவோர் மீதும் எனக்கு முனிவு தோன்றவில்லை.
கனிவே தோன்றுகிறது” (பக்-964, திரு.வி.க. வாழ்க்கைக்
குறிப்புகள்)
 

எனவரும் இடத்தில் எதுகை, மோனை போன்ற சொல்லாட்சியைக்
காண்கிறோம்.
 

“வழிப்போக்கரைக் கொடிகளிற் குலவும் வெற்றிலைக் கால்கள்
வாழ்த்தும் ; வாழைகள் பழங்களைத் தாங்கிக் கைகளை
நீட்டி அழைக்கும். மாமரங்கள் காய் கனிகளை ஏந்தி
இறைஞ்சும் ; தென்னைகள் காய்களைச் சுமந்து இளநீர் பருக
வாரும் வாரும் என்று தலையாட்டும். கரும்புகள் அருந்துக
அருந்துக என்று சாறு பொழியும்; ஆலும் அரசும் வேம்பும்
ஆங்காங்கே குடை பிடித்து நிற்கும். செஞ்சாலிக் கதிர்கள்
சாமரை இரட்டும். பொய்கைப் பூக்கள் கண்ணுக்கு
விருந்தாகும்.”
 

என வரும் இடத்தில் இயற்கைக் காட்சியில் கற்பனைக் காட்சியைக்
கலந்தூட்டும் கவிதைப் பண்பைக் காணலாம்.
 

“அட்லன் தோட்டம் என்ற சிறு வனம் காட்டைக் கடுக்கும்.
அவ்வனம் இராயப்பேட்டைக்குப் பொதுவுடைமையாகப்
பயன்பட்டது. அதில் அத்தி, விளா, மா, நெல்லி, நாகை,
கிச்சலி, இலந்தை, இலுப்பை, புளியம், புரசை, புன்கு,
முள்முருக்கு, கொன்றை, மகிழம், அசோகு, புன்னை,
நுணா, ஆல், அரசு, வேம்பு, பனை, மூங்கில் முதலிய
மரங்கள் விரிந்து பரந்து அடர்ந்து ஓங்கி வெய்யோனுடன்
பொருதும். பெருங்களா, காரை, நொச்சி, ஆமணக்கு,
எருக்கு, வட்டத்தாரை முதலிய செடிகள் பரவி மரங்களை
நோக்கும். சிறுகளா, சங்கம், கள்ளி, கண்ணி, மருட்டி,
படர்காரை முதலிய தூறுகளையும் பிணித்துப் பின்னிப்
படர்ந்து இறுமாந்து கிடக்கும். முண்டகம், கண்டகம்,
முள்ளி, ஆடாதொடா, ஆடுதின்னாப் பாளை, செருப்படை,
தூதுவளை, தும்பை, துழாய், சுண்டை, நாயுருவி, நாக்கடு,
ஊமத்தை, கற்றாழை, கொடிவேள், கண்டங்கத்திரி,
அவுரி முதலிய மூலிகைகள் மருத்துவஞ் செய்யும்.”
(திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், பக் - 81, 83)
 

எனத் தொடரும் அவரது இராயப்பேட்டை வருணனை கவிதையின்
முழுச்சாயலைப் புலப்படுத்துதல் காணலாம். கபிலரின் குறிஞ்சிப்
பாட்டும், களவியலின் தலைவி நிற்கும் காட்சி வருணனையும்,
இளங்கோவின்     பேரியாற்று     வருணனையும் இக்காட்சியில்
கலந்திருப்பதை நாம் நினைந்து மகிழலாம். இயற்கைக் காட்சிகள்
வரும் சில இடங்களைக் கண்டு அவர் தரும் நடை ஜான்ஸன்
நடையோடும், நச்சினார்க்கினியர் நடையோடும் ஒத்திருத்தலைச் சிலர்
அவரிடமே கூறியுள்ளனர் என்பதையும் நாம் அறிகிறோம்.
 

குறியீடுகள்
 

சொற்கள்      புலப்படுத்தும்,     புலப்படுத்த     வேண்டிய
உணர்வுகளுக்கேற்பத் தொடர்களில் நிறுத்தற் குறியீடுகளையும்,
உணர்ச்சிக் குறியீடுகளையும் பயன்படுத்துதல் வேண்டும். ஆறுமுக
நாவலர் இவ்வுண்மையைப் பழக்கிக் காட்டினார். தம் உரைநடையில்
மொழியுணர்வைப் புலப்படுத்தினார் அவர். ஆயின், அவ்வறிமுகத்தில்
முழு வெற்றி கண்டவர் திரு.வி.க.வே எனலாம். ஆறுமுக நாவலர்
கேள்விக்குறி,     காற்புள்ளி,     முற்றுப்புள்ளி     ஆகியவற்றைப்
பயன்படுத்துகின்றார். காற்புள்ளியைவிட, அரைப்புள்ளியை மிகுதியும்
கையாள்கிறார். வியப்புக் குறியை மிகுதியாகப் பயன்படுத்தவில்லை.
ஆயின் திரு.வி.க. வியப்புக்குறியையும், காற்புள்ளி போலவே
சரளமாகப் பயன்படுத்துகிறார். ஒரே சொல் இரண்டாம் முறையும்
மூன்றாம் முறையும் அடுக்கி வரும்போது சில இடங்களில் வியப்புக்
குறியைக் கூட்டிக் கொண்டே போகின்றார். சில இடங்களில் கூட்டாது
ஒன்றை மட்டுமே பயன்படுத்துகின்றார்.
 

“தமிழின் தொன்மையும் தன்மையும் என்னே ! என்னே !!”
(தமிழ்ச்சோலை, பக்-5)
 

“அவர் ஆன்மா சாந்திநிலை பெறுக என வாழ்த்துகிறோம்.
சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!” (தமிழ்ச்சோலை, பக்-356)
 

இவ்வாறு அடுக்கி வரும் சொற்களுக்கேற்பக் குறிகளையும்
அடுக்குகிறார். ஆயின்,
 

“இவ்வளவுக்குங் காரணர் யாவர்? கற்றோர் ! கற்றோர் !” (பக்-167)
 

“ஆறறிவுடைய மனிதனோ? வெட்கம் ! வெட்கம் !” (பக்-231)
 

போன்ற இடங்களில் சொற்கள் அடுக்கிய போதும் குறிகள் அடுக்கம்
பெறவில்லை. இதேபோன்று, வியப்புக்குறி இடம்பெற வேண்டாத
இடத்துப் பெய்துள்ளமை, இடம்பெற வேண்டிய இடத்துக் கேள்விக்
குறியைப்     பெய்துள்ளமை, இவ்விரண்டையும்      விடுத்து,
அரைப்புள்ளியையும் முற்றுப் புள்ளியையும் பெய்துள்ளமை ஆகிய
போக்கை அவர்தம் நடையில் காணலாம்.
 

“இயற்கை அன்னையினுடையதா? மகனுடையதா?

நேயர்களே ! உன்னுங்கள் !” - (பக்-231)
 

உன்னுங்கள் எனவரும் சொல்லில் வியப்புக்குறிக்கு என்ன வேலை?


6.3.3 உரைநடையில் நகை

திரு.வி.க.வின் உரைநடையில் சீரிய கருத்துகளே இடம் பெற்றன.
எனவே, நகைச்சுவை, எள்ளல் சுவை போன்றவற்றை அவரிடம்
காணுதல் அருமை, எனினும் அவரது உரைநடையில் சிலவிடத்து
அவை இடம் பெற்றிருத்தலை நாம் கண்டு சுவைக்கலாம்.
 

“இலங்கைச் செலவு” என்னுந் தலைப்பை நோக்கியதும்
சிலர்
 

இலங்கைக்குச் சென்று திரும்பியதற்கு நேர்ந்த செலவு
போலும் என்று நினைக்கலாம்” (தமிழ்ச்சோலை, பக்-57)
 

எனத் தொடரும் இடத்திலும், “இயந்திரந்தீட்டி ஈந்த அரிசியை
வீட்டுப் பெண்மணிகள் நன்றாகக் கழுவுகின்றார்கள் நன்றாக
வேகவைத்துக் கஞ்சி வடிக்கிறார்கள். யாண்டாயினும் சிறிது சத்து
மருந்து போல் ஒட்டிக் கொண்டிருந்தாலும் அரிசியைக் கழுவுவதாலும்
கஞ்சியை வடித்தலாலும் அச்சிறு சத்தும் ஒழிகிறது” (தமிழ்ச்சோலை,
பக்-201) எனத் தொடரும் இடத்திலும் அவர்தம் எள்ளலும் நகையும்
சிந்தனையைக் கிளறும் வண்ணம் அமைந்திருத்தல் காணலாம்.
 

இளங்கோவிடமும், உரையாசிரியர்களிடமும், கல்வெட்டுக்களிலும்
கிறித்தவர்களிடமும் தவழ்ந்து நடந்த உரைநடை, ஆறுமுக நாவலர்
போன்றோரிடத்து வளர்ந்த உரைநடை, திரு.வி.க. அவர்களிடம்
சீர்மை பெற்று மலர்ந்தது எனலாம். அவர்தம் உரைநடை
வடிவம் பழமைக்கும் இன்றைய புதுமைக்கும் சிறந்த உரம்
வாய்ந்த பாலமாய் விளங்கியது என அறிந்து மகிழலாம்.